கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டு சிறப்புக் கட்டுரை; 2
தமிழ்த் தாய் பெற்றெடுத்த தவப் புதல்வராம் கண்ணதாசனோடு நாள் தோறும் பேசிப் பழகும் அரிய வாய்ப்பு என் பத்திரிகை பணியினால் வாய்த்தது நான் பெற்ற பெரும் பாக்கியம் என்று தான் சொல்வேன். பெருந்தலைவர் காமராஜர் வழிகாட்டலில் அன்று காங்கிரஸ் நாளிதழாக வெளியான நவ சக்தியில் நான் செய்தி ஆசிரியராக இருந்த போது கவிஞருடன் நட்பு துளிர்த்தது;
அந்த காலகட்டத்தில் கவிஞர் ‘கண்ணதாசன் கடிதம்’ என்ற பகுதி நாள்தோறும் கண்ணதாசன் எண்ணவோட்டமாக நவசக்தியில் வெளிவரும். அதை வாங்கி படிப்பதற்காகவே பல்லாயிரம் பேர் ஆவலோடு அந்த செய்தி தாளை அன்று வாங்கினார்கள். அப்படி கண்ணதாசன் எழுதிய அரசியல் கட்டுரைகள் எல்லாம் தினசரி நவசக்தி அலுவலகத்திற்கே வந்து அவர் சொல்லச் சொல்ல நான் எழுதியவை என்பதில் எப்போதும் எனக்கொரு பெருமிதம் உண்டு.
கவிஞர் கண்ணதாசன் சுமார் ஆறரை மணியளவில் அலுவலகம் வந்தார் என்றால், சுமார் இரண்டு மணி நேரம் அலுவலகமே கலகலப்பாகிவிடும். அன்றாட அரசியல் நடப்புகள் குறித்து எங்களிடையே அரட்டை அடித்த வண்ணம் இருப்பார். அப்போது அவர் செலவில் எங்கள் அனைவருக்குமே நொறுக்குத் தீனிகள் வாங்கித் தந்து தானும் உண்டு, அனைவரையும் உண்ண வைத்து மகிழ்வார்.
இப்படியே அரட்டை கச்சேரி போய்க் கொண்டிருக்கும் போது திடீரென்று ”என் இனிய நண்பர்களே…” என்று ஆரம்பித்து மளமளவென்று கடிதக் கட்டுரையை ஒரு வசனக் கவிதை நடையில் சொல்வார். எளிமையான சொற்கள், வசீகரமான எழுத்து நடை, அதிரடி தாக்குதல்கள்..என்று சொல்லி முடிப்பார். அவர் சொல்லும் வேகத்திற்கு வேறு யாராலும் எழுத முடியாது. நான் சுருக்கெழுத்து தெரிந்து இருந்ததால் ஒரு சொல்லைக் கூட தவறவிடாமல் எழுதிவிடுவேன். இதனால் கவிஞருக்கு என்னை மிகவும் பிடித்துப் போய்விட்டது.
சில சமயம் அவர் அரசியல் எதிரிகளை கடுமையாக தாக்கி இருப்பார். குறிப்பாக அன்றைய முதல்வர் கருணாநிதியை வெளுத்து வாங்கிவிடுவார். கவிஞர் போன பின்பு எங்கள் பத்திரிகை எம்.டி தாமோதரன் அதை வாசிக்கச் சொல்லி கேட்பார். மிகக் கடுமையான வார்த்தைகள் அதில் இருப்பதை கேட்டவுடன், ”இது சட்ட சிக்கலை உருவாக்கும், அந்த ஒரு வார்த்தையை தவிர்க்கலாமே எடுத்து விடுங்கள்” என்பார். நானும் எடுத்துவிடுவேன்.

அடுத்த நாள் காலை கவிஞரிடம் இருந்து எனக்கு போன் வரும். ”ஏன் அந்த வார்த்தையை எடுத்தீர்கள்?” என்பார். பிறகு, அவரே ”உங்க சேட்டன் ( எம்.டி அவர்கள் ஒரு மலையாளி) சொன்னாராக்கும்..” என்று சொல்லி சிரிப்பார். அவ்வளவு வேகமாக சொல்லிச் சென்ற கவிஞர் தான் சொல்லிய அந்த ஒற்றை வார்த்தையைக் கூட மறக்காமல் எப்படி நினைவில் வைத்து கேட்கிறார்? என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். இதே போல கால் நூற்றாண்டுக்கு முன்பு அவர் படித்த செய்யுளைக் கூட அட்சரம் பிசகாமல் நினைவில் வைத்து சட்டென்று சமயம் வரும் போது மேற்கோள் காட்டுவார். அவரது ஞாபக சக்தி என்னை பல நேரங்களில் பிரமிக்க வைத்துள்ளது.
கவிஞருடைய கவிதைகள், திரைப்பட பாடல்கள் அனைத்துமே சாகா வரம் பெற்றவை! மகாகவி பாரதியாருக்கு பிறகு தமிழ்ச் சமூகம் கண்ட மாபெரும் கவிஞர் கண்ணதாசன் தான்! அந்த வகையில் ‘நம் காலத்தின் மகாகவி கண்ணதாசன்’ என்று சொல்ல நான் சிறிதும் அஞ்சமாட்டேன்.
ஆடு மேய்த்துக் கொண்டிருந்த காளிதாசன் காளியின் அருளால் மகாகவியானார். எப்படியோ சுற்றித் திரிந்த வால்மீகி முனிவர்களுக்கெல்லாம் முனிவரானார். இவர்களைப் போன்றே கிருஷ்ண பரமாத்மாவின் அருள் அவர் அறியாமலேயே குடி கொண்டது. ஆரம்பத்தில் அந்த தெய்வ சக்தியை அவர் உணர்ந்தாரோ, இல்லையோ காலம் அவருக்கு உணர்த்திவிட்டது.
ஒரு காலத்தில் திமுகவின் நாத்திகப் பிரச்சாரம் இளைஞர்களை எல்லாம் ஈர்த்தது. என்னையும் கூட அப்படித்தான். நான் பள்ளியிலும் பின்னர் கல்லூரியிலும் படித்த போது கடவுள் பக்தி உள்ளவனாக இருந்தாலும் திமுகவினால் ஈர்க்கப்பட்டதென்னவோ உண்மை. அப்போதும் கூட பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, நெடுஞ்செழியன் இவர்களையெல்லாம் விட கவிஞர் கண்ணதாசன் பேச்சுக்களே என்னை மிகவும் ஈர்த்தது.
நாம் தெய்வத்தை பார்க்காமலேயே தெய்வ பக்தனாக பயபக்தியோடு கடவுளை வணங்குவது போல கவிஞர் கண்ணதாசனை நேரில் பார்க்காமலேயே நான் அவரது ரசிகனாக- பக்தனாக மாறினேன். ‘அவரை எப்போது சந்திப்போம், பேசுவோம்’ என ஏங்கிக் கொண்டிருந்தேன். எனது ஆசை நிராசையாகிவிடுமோ என்றெல்லாம் கூட எண்ணியதுண்டு.
ஆனால், அந்தப் பேராசை – கனவு – ஆவல் எல்லாம் நிறைவேறும் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. சினிமாவில் முன்னேற வேண்டும் என்ற வெறியோடு கோவையில் இருந்து சென்னை வந்த எனக்கு பத்திரிகை துறை தான் கை நீட்டி வரவேற்றது.
ஈ.வே.கி சம்பத்தும், கண்ணதாசனும் திமுகவில் இருந்து வெளியேறி தமிழ் தேசிய கட்சி தொடங்கிய போது ஆ.எஸ்.பாண்டியன் தமிழ் தேசிய கட்சிக்கு ஆதரவாக ‘விடிவெள்ளி’ என்ற பத்திரிக்கையை நடத்தி வந்தார். அதில் நான் தலைமை நிருபராக பணியாற்றிய போது கவிஞரும், சம்பத்தும் பேசும் பொதுக் கூட்டங்களுக்கு சென்று அவர்களின் பேச்சை குறிப்பெடுத்து விடிவெள்ளியில் எழுதுவது வழக்கம்.

ஒருமுறை சம்பத் வராததால் கவிஞர் கண்ணதாசன் மட்டுமே சிறப்பு பேச்சாளராக உரையாற்றினார். அவரது பேச்சை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே குறிப்பெடுத்து நான் எழுதிய செய்தி அடுத்த நாள் விடிவெள்ளியில் வந்ததைப் பார்த்ததும் கவிஞர் பெரு மகிழ்ச்சி அடைந்தார். அன்றே ராயப்பேட்டையில் உள்ள விடிவெள்ளி அலுவலகம் வந்து ஆசிரியர் ஆர்.எஸ்.பாண்டியனிடம் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது தான் நான் கவிஞரை முதன் முதலாக மிக நெருக்கமாகப் பார்த்தேன்.. என்னை கவிஞருக்கு அறிமுகப்படுத்தினார் ஆர்.எஸ்.பாண்டியன். உடனே கவிஞர் என் முதுகில் தட்டி பாராட்டினார். எனக்கு உள்ளங்கால் முதல் தலை உச்சி வரை குளிர்ந்தது. ”இறைவா என் கனவை நிறைவேற்றிவிட்டாய்” என்று நெஞ்சம் நெகிழ இறைவனுக்கு நன்றி கூறினேன்.
அதே சமயம் எனக்கும், கவிஞருக்கும் நெருக்கமான நட்பும், பாசமும் ஏற்பட்டது நவசக்தி நாளிதழ் மூலம் தான். பெருந்தலைவர் காமராஜரால் தொடங்கப்பட்ட நவசக்தி காங்கிரஸ் பேரியக்கத்தின் போர்வாளாக பீடு நடை போட்டது.
சம்பத் தலைமையிலான தமிழ் தேசிய காங்கிரஸ் இந்திய தேசிய காங்கிரஸுடன் இணைந்த பின்னர் நவசக்தியில் கவிஞர் தினமும் மாலையில் நவசக்தி அலுவலகம் வந்து எங்களுடன் உற்சாகமாக உரையாடி கண்ணதாசன் கடிதம் எழுதிய காலகட்டம் என் வாழ்க்கையில் மிக இனிமையான காலகட்டமாகும். முதல் பக்கத்தில் வெளியாகும் கண்ணதாசன் கடிதத்தை வாசிக்கவென்றே அந்த நாட்களில் பலர் செய்தி தாள் வாங்கும் கடைகளுக்கு வந்து காத்திருந்து வாங்கிச் செல்வார்கள்!
கவிஞர் சொல்லச் சொல்ல நான் சரளமாக எழுதிச் செல்லச்,செல்ல கட்டுரை மலர்ந்துவிடும். ”என் வேகத்து நீ நன்றாக ஈடு கொடுக்கிறாய்” என அடிக்கடி கவிஞர் என்னை பாராட்டுவார். எங்கள் நட்பு நாளடைவில் நெருக்கமான பொழுது தன் அந்தரங்கங்களைக் கூட மனம் திறந்து என்னிடம் பேசியுள்ளார். இதற்காகவே என்னை கடற்கரைக்கு அழைத்துச் செல்வார். எதற்கும் விரைவில் உணர்ச்சிவசப்படுவது கவிஞர்களின் இயல்பல்லவா…? சில சமயம் அவரது பேச்சில் விரக்தி வெளிப்படும். இந்த பேச்செல்லாம் அவரது அரசியல் வாழ்க்கை சம்பந்தப்பட்டது தான். நான் அவருக்கு சமாதானம் சொல்வேன்.

காங்கிரஸ் இரண்டாக பிரிந்த நேரம் கவிஞர் சம்பத்திற்காக இந்திரா காங்கிரசில் சேர்ந்துவிட்டார். நான் காமராஜரோடு இருந்துவிட்டேன். சிறிது காலம் எங்களிடையே இடைவெளி ஏற்பட்டது. பிறகு கவிஞர் மீண்டும் ஸ்தாபன காங்கிரசில் சேர்ந்துவிட்டார்.
”ஏன் போனீர்கள்? இப்போது மீண்டும் ஏன் வந்தீர்கள்?” என்று கவிஞரிடம் உரிமையோடு கேட்டேன். ”அட போய்யா! எத்தனை நாளைக்கு வெறும் மைதானத்தை பார்த்துப் பேசுவது? காமராஜரிடம் தான் மக்கள் இருக்கிறார்கள். அதனால் வந்துவிட்டேன்” என்றார்.
கவிஞர் மீண்டும் சேர்ந்தவுடன் பெருந்தலைவர் காமராஜர் தன் வீட்டுக்கு கவிஞரை அழைத்துப் பேசினார். இந்திரா காங்கிரசில் கவிஞருக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை சொன்னார் கவிஞர்.
உடனே பெருந்தலைவர், ”கவிஞரே விடுங்க, இனி என்ன குழப்பம்? நான் இருக்கேன். காட்டுக்கு ராஜா சிங்கம் என்றால், பாட்டுக்கு ராஜா நீங்க தான்னு நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன். கவலைப்படாதீங்க..பார்த்துப்போம்” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
காமராஜரும், இந்திரா காந்தியும் ஒருவழியாக சமாதானமாகி, புதுச்சேரி தேர்தல் பிரச்சாரத்திற்கு இந்திரகாந்தி வருகை தந்தார். இந்திராவின் வருகை பற்றி குறிப்பிட்டு, ”நவசக்தி முதல் பக்கத்தில் வெளியிட ஒரு கவிதை வேண்டும்” என்று கேட்பதற்காக கவிஞரை பார்க்க சென்று இருந்தேன். இரவு 11 மணி வரை பேசி விட்டு கவிதை தராமல் வீட்டுக்கு சென்று விட்டார்.

நானும் வருத்ததுடன் அலுவலகம் வந்துவிட்டேன். சிறிது நேரத்தில் நள்ளிரவு தொடங்க இருக்கும் அந்த நேரத்தில் தொலைபேசியில் கவிஞர் அழைத்தார். ”கருணாநிதி கவிதை கேட்டீங்க இல்லே, மறந்தே போச்சு. இப்ப எழுதிக்கீங்க” எனத் தொலைபேசியிலேயே கவிதையை சொல்லிவிட்டார். மறு நாள் அந்தக் கவிதையை படித்துவிட்டு காமராஜரே கவிஞரை பாராட்டினார்.
நான் சுதேசமித்திரனில் செய்தி ஆசிரியராக பணியாற்றிய போது அப்போதைய அதன் உரிமையாளர் ஜான் தாமஸ் என்னை அழைத்து, ”கவிஞரை நமது பேப்பரில் கட்டுரை எழுதச் சொல்ல முடியுமா?” என்றார்.
”கவிஞரைக் கேட்டுப் பார்க்கிறேன் சார்” என்றேன்.
உடனே அவர் உற்சாகமாகி, ”அப்படியே குமுதத்திற்கும் வாரா வாரம் ஒரு கட்டுரைத் தொடர் எழுதச் சொல்லுங்க” என்றார்.
அவர் சொல்லியபடியே நானும் கவிஞரை கேட்ட வகையில் குமுதம் வார இதழில், ‘இந்த வாரம் சந்தித்தேன்’ என்ற தொடரை அடுத்த வாரமே தொடங்கி கவிஞர் வாரா வாரம் எழுதினார். இந்தத் தொடர் நீண்ட மாதங்களாக வந்தது. இதில் என்னை ஒருமுறை ‘என் அருமை நண்பர் கருணாநிதி’ எனப் பாராட்டி இருப்பார்.
குமுதம் கட்டுரை உடனே தொடங்கப்பட்டுவிட்டது சுதேசமித்திரனில் தினமும் ‘கண்ணதாசன் கடிதம்’ பகுதியை ஆரம்பிக்கவில்லை. ஆகவே அதை நான் நினைவுபடுத்தினேன். அப்போது உடனிருந்த நண்பர் இராம.கண்ணப்பன் உடனே குறுக்கிட்டு, ”அதெல்லாம் எழுதமாட்டார்” என்று கூறிவிட்டார். நான் வருத்ததுடன் திரும்பிவிட்டேன். ஆனால், மறு நாளே கவிஞர் என்னை அழைத்து, நேரில் வரச் சொன்னார். ”நான் எழுதுகிறேன். முதலில் ஒரு அறிவிப்பு வெளியிடுங்கள்” என்றார். அதன்படியே சுதேசமித்திரனில் எனக்காகவே கட்டுரை எழுதினார். ஒரு நாள் மூப்பனார் பற்றி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதை நான் வெளியிடவில்லை. ”ஏன் என் கட்டுரையை பிரசுரிக்கவில்லை?” எனக் கோபமாக கேட்டார்.

அதற்கு நான், ”மூப்பனார் இன்னும் ஓரிரு நாளில் அகில இந்திய பொதுச் செயலாளர் ஆகப் போகிறார். அதனால் தான்” என்றேன்.
”அதெல்லாம் ஆகவே மாட்டார். கட்டுரையை பிரசுரி, பார்க்கலாம்” என்றார். கட்டுரையை வெளியிடத் தயாரான நேரம் போன் செய்து, ”போட வேண்டாம். நீ சொன்னது நடந்துவிட்டது” என்றார். இப்படி எனக்கும், கவிஞருக்கும் இடையில் காதலும், மோதலும் அடிக்கடி நடந்ததுண்டு.
காலனுக்கு கவிஞர் மீது என்ன கோபமோ? அமெரிக்கா சென்றும் கூட விடாமல் துரத்திச் சென்று கூட்டிச் சென்றுவிட்டான்.
கண்ணதாசன் சம காலத்தில் வாழ்ந்தவர், நம்மில் பலருடன் நெருங்கி பழகியவர், சில நேரங்களில் அவர் எடுத்த அரசியல் நிலைபாடுகள்..இவையெல்லாம் அவரை ஒரு சராசரி மனிதராகக் கூட எண்ணத் தோன்றும். ஆனால், இவற்றையெல்லாம் கடந்து அவரிடம் ஒரு அசாதாரண சக்தி – தெய்வ சக்தி – இருந்தது. அவருக்குள் இருந்த இந்த பேராற்றல் அவருக்கே தெரியாமல் கூட இருந்திருக்க கூடும். ஆனால், அவரிடம் ஒரு தெய்வீக சக்தி இருந்ததை என்னால் உணர முடிந்தது.
கவிஞர் இந்த பூவலகை விட்டுச் சென்றாலும் அவரது கவிதைகளும், திரைப்படப் பாடல்களும் நாள்தோறும் ஒலித்துக் கொண்டே தான் இருக்கின்றன. தமிழ் உள்ளளவும் கவிஞரின் இரவா புகழ் நின்று நிலைத்திருக்கும். இந்த மாபெரும் கவிஞனிடம், பழகியதும், பேசியதும் நான் செய்த பாக்கியமே!
சோ.கருணாநிதி

மூத்த பத்திரிகையாளர்
நவசக்தி மற்றும் சுதேசமித்திரன் நாளிதழ்களின் செய்தி ஆசிரியர்( ஓய்வு)






















Leave a Reply