தற்போது நடந்து கொண்டிருப்பது இரண்டாவது சுதந்திரப் போராட்டம்!

-சாவித்திரி கண்ணன்

ஒரு மிகப் பெரிய வரலாற்று எழுச்சியில் வட இந்தியா குலுங்குகிறது. அங்கே உக்கிரமான போராட்டங்களின் உச்சத்தை நாளும் பார்க்கிறோம். இதோ பக்கத்து மாநிலத்தில் பெங்களுரும் சிலிர்த்து களம் கண்டுள்ளது. கேரள சட்டமன்றத்தில் ஞானேஷ்குமாரை நீக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. ஆனால், தமிழ்நாடு மட்டும் இதில் மிகவும் பின் தங்கியுள்ளது. நாம் நம்மை மறுபரிசீலனை செய்ய  வேண்டிய காலமிது;

தமிழகத்தின் பிரதான மூன்று மாநிலக் கட்சிகளான திமுக, அதிமுக, தவெக ஆகிய மூன்றும் முடங்கி கிடக்கின்றன. அவமானம்!

தில்லியில்  கடுமையான அடக்குமுறைகளைக் கடந்து இளம் தலைமுறை வீறு கொண்டு போராடுகிறது. பல மோசமான தாக்குதல்களை எதிர் கொள்கிறார்கள், இளைஞர்களும், அரசியல் தலைவர்களும்! இவற்றை  பார்க்கையில் சிலிர்க்கிறது. நெஞ்சம் நெகிழ்கிறது.

தேர்தல் கமிஷனுக்கு எதிரான போராட்டத்தில் கட்சி மாச்சரியங்களை மறந்து பலதரப்பட்ட கட்சிகளும் அங்கு ஒன்று திரண்டு போராடும் காட்சிகள் ஒரு மிகப் பெரிய வரலாற்று நிகழ்வு காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம் என்ற உணர்வைத் தருகிறது.

இது வரை பல சந்தர்ப்பங்களில் தேர்தல் கமிஷனை அனுசரித்தும், அரவணைத்தும், பாதுகாப்பு தந்தும் உச்சநீதிமன்றம் பேசியுள்ளது, தீர்ப்பளித்துள்ளது.

செத்துப் போனவர்கள் என்று  தேர்தல் கமிஷனால் சொல்லப்பட்ட சிலரை உயிருடன் அழைத்துச் சென்று சுயராஜ்யா கட்சித் தலைவர் யோகேந்திர யாதவ் உச்ச நீதிமன்றத்தில் நிறுத்திய போதும் கூட, நீதிமன்றம் தேர்தல் கமிஷனிடம் கடுமை காட்டவில்லை.

”வெளிநாட்டிலிருந்து ஊடுருவியர்கள் என்று சொல்லி பல லட்சம் பேரை நீக்கி உள்ளீர்கள். நல்லது. அதற்கான ஆவணங்களை சமர்ப்பியுங்கள்” என்று உச்ச நீதிமன்றம் கேட்டவுடன் ஜகா வாங்கி ‘கப்சிப்’ ஆனதே தேர்தல் கமிஷன், அப்போது கூட உச்ச நீதிமன்றம் உக்கிரம் காட்டவில்லை.

ஆனால், இனியும் அப்படி நடந்து கொண்டால் தேர்தல் கமிஷனுக்கு எதிரான கோபம் உச்ச நீதிமன்றத்திற்கு எதிரான கோபமாகவும்  வளர்வதற்கு வாய்ப்புள்ளது என்பதை நீதிபதிகள் நன்குணரத்  தொடங்கியுள்ளனர்.

அதன் விளைவே நேற்று அமைதி வழியில் போராடும் உரிமைகளை மறுக்கக்  கூடாது. ஜனநாயக செயல்பாடுகள் சுமூகமாக நடைபெறுவது அவசியம் என்று கூறி இருப்பதும், எதிர்கட்சிகளை சந்திக்க மறுத்தாலும், ”எதிர்கட்சிகள் வழக்கு தொடுக்கலாம். விசாரிக்கப்படும்’’ என தலைமை நீதிபதி பச்சை கொடி காட்டியதுமாகும்.

இதோ இன்றைய  தினம் (அக்டோபர் 13, 2026) ரபேல் விமானம் வாங்கியதில் நடந்த ஊழல்களை சொன்ன ராகுல் காந்தி மீதான பாஜக பிரமுகரின் அவதூறு வழக்கிற்கு உச்ச நீதிமன்றம் தடை கொடுத்துள்ளது.  அரசியல் விவகாரங்களை களத்தில் எதிர்கொள்ள வேண்டியது அந்தந்த கட்சிகளின் வேலையாகும். இது போன்ற வழக்குகளை இனி நீதிமன்றம் விசாரிக்காது என்று ஒரு கொள்கை முடிவெடுத்தால்  தான் பாஜக, திமுக போன்ற கட்சிகளுக்கு மக்கள் தீர்ப்பெழுத முடியும். அரசியல் கட்சித் தலைவர்களின் யோக்கியதை என்னென்பது மக்களுக்கு தெரியும். அவரவர்களின் மானம் என்பது அவரவர்களின் நடத்தை, பேச்சுக்களில் வெளிப்பட்ட பிறகு அதை மறுக்கவோ, காப்பாற்றவோ வேண்டிய  அவசியம் நீதிமன்றத்திற்கு இல்லை.

நேற்றைய தினம் தில்லி விஞ்ஞான் பவனில் நடை பெற்ற நிகழ்வில், ”இந்தியத் தலைமை நீதிபதி அலுவலகம் ஒவ்வொரு நிமிஷமும் அக்னி பரிட்சையை எதிர்கொள்கிறது…” என தேசிய மனித உரிமை ஆணைய நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் சொன்னதும், அதற்கு பதில் சொல்லும் விதமாக தலைமை நிதிபதி சூர்யகாந்த், ”மக்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கு அரசு என்ன செய்ய வேண்டும் என்பது தான் தற்போதைய அரசமைப்பு சட்டத்தின் முக்கிய கேள்வியாகும்” என்று உரைத்ததும் நீதிபதிகள் மக்கள் பக்கம் நிற்க ஆயுத்தமாகிவிட்டார்கள் என்பதற்கான அறிகுறியாகும்.

மணிப்பூரிலும், ஜார்கண்டிலும், நாகலாந்திலும் நடைபெறும் பல கொடூர மனித உரிமை மீறல்களுக்கு பெரிதாக  எதிர்வினையாற்ற மறுத்தவரான தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் நீதிபதி வெ.ராமசுப்பிரமணியனுக்குமே கூட தற்போது ஏதோ லேசாக மனசாட்சி உறுத்த ஆரம்பித்துள்ளது வரவேற்கத்தக்க மாற்றமே!

இது போன்ற உச்ச பதவிகளை எட்ட ஆளும் தரப்பு காட்டிய அனுசரணைக்காக எத்தனை காலம் தான் நீதிபதிகளும் தங்கள் மனசாட்சியை அடகு வைக்க முடியும்? தங்களுடைய பிள்ளைகளையொத்த இளம் தலைமுறையினர் தேசத்தின் ஆன்மாவான தேர்தல் கமிஷனை மீட்க களம் கண்டு அடி உதைபடும் போது, இவர்கள் இன்னும் எவ்வளவு காலம் தான் மெளனிக்க முடியும்?

தற்போதைய போராட்டங்கள், ‘ஏதோ இரண்டாம் சுதந்திரப் போராட்டம் தொடங்கிவிட்டதோ..’ என்ற உணர்வைத் தான் தோற்றுவிக்கிறது. இந்தச் சூழலில் தமிழக அரசியல் கட்சிகள் போராட்டங்களை முன்னெடுக்காமல் தற்காப்பு அரசியலையே தலையான கொள்கையாக கொண்டுள்ளது  அவலமானதாகும். இந்த நிலை தொடர்ந்தால் வரலாறு நம்மை மன்னிக்காது.

உச்ச நீதிமன்றத்தை நோக்கிய பேரணி

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது இங்கு உண்மையிலேயே மக்கள் எழுச்சியை ஏற்படுத்திய  வ.உ.சிதம்பரனாரும், சுப்பிரணிய சிவாவும், மகாகவி பாரதியாரும்  போதுமான முக்கியத்துவம் பெறாமல் புறக்கணிக்கப்பட்டனர். ..என்பதை பார்த்தோம். அப்போது விடுதலை போராட்டத்திற்கு பஞ்சாப்  தான் அளப்பரிய தியாகங்களை செய்தது. அப்போது பிரிட்டிஷ் அரசு மூர்க்கமாக பஞ்சாபியர்களை எதிர்கொண்ட போது அம்பேத்கார்  எழுதியதை அவரது தொகுப்பில் படிக்க நேர்ந்த போது நான் அதிர்ந்தேன். ”பிரிட்டிஷ் ஆட்சியாளர்களே, பஞ்சாபியர்களை நீங்கள் தமிழர்களை போல எண்ணிவிடாதீர்கள். அடக்க நினைத்தால் திமிருவார்கள். இன்னும் வீறு கொண்டு போராடுவார்கள்” என்றெழுதி இருந்தார்.

இங்கு நாம் வ.உ.சி யின் வாரிசாக, பாரதியின் பரம்பரையாக, சுப்பிமணிய சிவாவின் வழித் தோன்றல்களாக  நம்மை வரித்துக் கொள்ளாத வரை,  என்றும் தமிழினத்திற்கு மீட்சியில்லை. ஆம், இது இரண்டாவது சுதந்திரப் போராட்டம். மதவெறியர்களிடம் இருந்தும் நாட்டை சூறையாடுபவர்களிடம் இருந்தும் மக்களுக்கு  விடுதலை வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

₹
Personal Info

Donation Total: ₹1,000.00 One Time