பல்லாண்டு சிறைக் கொடுமையில் முஸ்லீம்கள்..!

-பீட்டர் துரைராஜ்

இஸ்லாமியர்கள்  என்றாலே  காவல்துறையும், உளவுத்துறையும், நீதிமன்றங்களும், சிறைத்துறையும், அரசு நிறுவனங்களும் எதிர்மறை சிந்தனையோடு பிரச்சினையை  அணுகுகின்றன. இதனை பொதுமக்களுக்கு விளக்க வேண்டிய ஊடகங்களும் பாராமுகமாக இருக்கின்றன.போதாக்குறைக்கு சினிமாக்கள் வேறு படுமோசமாக சித்தரிக்கின்றன..! ஆனால், அனைத்து மக்களுக்குமான பொது நீதி என்ற மனிதநேய அணுகுமுறையோடு நாம் இஸ்லாமிய சிறைவாசிகளின் நிலைமைகளை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

தமிழக அரசு 10 ஆண்டுகள் தண்டனை கழித்திட்ட  ஆயுள் சிறைவாசிகளை பொதுமன்னிப்பில்  முன்விடுதலை செய்ய விதித்த தகுதிகள் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும்  தங்களுக்கும் இருப்பதால்  தங்களையும் விடுதலை செய்ய உத்தரவிடக் கோரி சுமார் 12 முஸ்லீம் சிறைவாசிகள் ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தார்கள். இவர்களின் மனுக்களை பரிசீலனை செய்ய கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசு இவர்களை விடுதலை செய்யவில்லை. விடுதலை மறுப்பிற்கான நியாயமான காரணம் சொல்லப்படவில்லை.

“ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எழுவரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்தது. இதே கரிசனத்தை  தமிழக அரசு 36  இசுலாமிய சிறைவாசிகளுக்கும் ஏன் செய்ய மறுக்கிறது? ” என்கிறார் முஸ்லிம் சிறைவாசிகளுக்காக சட்டரீதியான பணிகளை செய்து வரும் முகமது பாசித்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கு 1998 ஆண்டு நடந்தது. அதில் தண்டிக்கப்பட்ட 17 பேர் வாழ்நாள் சிறைவாசிகளாக   23 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்கள். குண்டு வெடிப்பிற்கு முன்பே பல்வேறு வழக்குகளில் 19 பேர் இன்னமும் சிறைகளில் உள்ளனர்.1991,1996, 1997 என பல்வேறு சமயங்களில் போடப்பட்ட பல்வேறு   முதல் தகவல் அறிக்கைகளின்  அடிப்படையில் தண்டிக்கப்பட்ட வாழ்நாள் சிறைவாசிகளின்  விடுதலையை  அரசு மறுக்கிறது. இதில் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பவர்களும் உண்டு. இது குறித்து எதிர்கட்சிகள் கூட பேச மறுக்கின்றன.

2018 ல் 1500 கைதிகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமன்னிப்பில் முன்  விடுதலை செய்தார். அந்தப் பட்டியலில் கூட  இவர்கள் இல்லை. அரசு  மனிதாபிமானத்தோடு இந்தப் பிரச்சினையை  அணுக வேண்டும். தருமபுரியில் கல்லூரி மாணவிகள் எரித்துக் கொல்லப்பட்ட பஸ் எரிப்பு வழக்கு, மேலவளவு முருகேசனை கொலை செய்தவர்களுக்குக்  கூட அரசு தயவு காட்டியது” என்றார் பாசித்.

கோவைக் குண்டுவெடிப்பை மையமாக வைத்து “மௌனத்தின் சாட்சியங்கள்” என்ற நாவலை எழுதியவர் சம்சுதீன் ஹீரா. திருப்பூரைச் சார்ந்த இவரிடம் இசுலாமிய சிறைவாசிகள் விடுதலைக்கு தடையாக இருப்பது எது என்று கேட்டோம்.” அவர்கள் இசுலாமிய மதத்தில் இருக்கிறார்கள்  என்ற ஒன்றைத் தவிர வேறு எதுவும் தடையாக இல்லை. கோவைக் கலவரத்தை நான்  நேரடியாக பார்க்கவில்லை. ஆனால் கோவை அரசு பொது  மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த இசுலாமிய இளைஞன் உட்கார்ந்த நிலையிலேயே வைக்கப்பட்டு எரிக்கப்பட்டான். அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவில்லை. அதைப் பார்த்து நிலை குலைந்து போனேன். இது குறித்து எந்த ஊடகமும் எழுதவில்லை. அந்த வேதனையால்  உந்தப்பட்டுதான்  ‘மௌனத்தின் சாட்சியங்கள்’ நாவலை எழுதினேன். மற்ற சிறைவாசிகளுக்கு உரிய உரிமைகளைக் கூட இசுலாமிய சிறைவாசிகளுக்கு வழங்க மறுக்கிறார்கள். பரோல் விவகாரங்களில் கூட பாரபட்சம் காட்டுகிறார்கள்! இது மாதிரி கெடுபிடிகள் மற்ற சிறைவாசிகளுக்கு  கிடையாது. இந்த  மனநிலைதான் கைதிகளின் நியாயமான விடுதலையைத் தடுக்கிறது ” என்கிறார் சம்சுதீன் ஹீரா.

” இளைஞர்களைத் தூண்டிவிட்டவர்கள் தப்பித்து விட்டார்கள். ஆனால் பாதிக்கப்பட்டது பெரும்பாலும் அப்பாவி இளைஞர்கள்தான். ஆனால் இவர்கள் விடுதலை குறித்து இப்போது இசுலாமிய இயக்கங்கள் கூட பேசுவதில்லை. எத்தனை பேர் சிறையில் இருக்கிறார்கள். எத்தனை ஆண்டுகளாக இருக்கிறார்கள் என்ற விபரம் கூட அவர்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. ஆனால் இளைஞர்கள் தவறாக வழிநடத்தப் படுகிறார்கள்  என்று  அப்போது கண்டித்த முஸ்லிம் லீக் கட்சிதான்,  எங்கள் விடுதலைக்காக கலைஞரிடம் பேசியது. 2011 ல் திமுக ஆட்சிக்கு வந்திருந்தால் 14 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்தவர்களை கலைஞர் விடுவித்து இருப்பார், என நினைக்கிறேன். என்கிறார் பாசித்.

இது குறித்து பத்திரிக்கைகள் எழுதாதது ஏன்?’’ என்று மூத்த பத்திரிகையாளரான கவிதா முரளிதரனைக் கேட்ட போது  ” இருபது ஆண்டுகளுக்கும் மேலாக 36 சிறைவாசிகள் இருப்பது நீங்கள் சொல்லிதான் எனக்கு தெரியவருகிறது. மனித உரிமை குறித்தும், மக்கள் நோக்கிலும் செய்திகள் வெளியிடுவதை ஊடகங்கள் எப்போதோ நிறுத்திவிட்டன. விளம்பரங்களை நம்பி;  பெருநிறுவனங்களைச் சார்ந்துதான் பெரும்பாலும்  ஊடகங்கள் இயங்குகின்றன. சிறைவாசிகள் பிரச்சினையை மனித உரிமையாக  அரசியல் கட்சிகள் பேசுவதில்லை. மாற்று ஊடகங்களுக்கும்  (alternative media) இது குறித்து விழிப்புணர்வு இல்லை” என்கிறார்.

சிறைவாசிகளின் வயது, சிறையில் அவர்களின் நடத்தை, வயோதிகம், உடல்நிலை, குடும்பச் சூழல் ஆகியவைகளைப் பொறுத்து கைதிகளை  பத்து,பன்னிரண்டாண்டு சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரக்கு உண்டு. ஆனால் மாநில அரசு தன் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது.

உதாரணமாக 1996 ல் நாகூரில் நடந்த  ஒரு கொலையில் நான்கு பேர் தண்டனை பெற்றார்கள்.14 ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு தான் ஒரு மைனர் என்று நிரூபித்து சம்சுதீன் என்பவர் விடுதலை ஆனார். இன்னொருவர் 2018ல் எடப்பாடி பழனிச்சாமி அரசு சுமார் 1500 கைதிகளை விடுதலை செய்த உத்தரவு தனக்கும் பொருந்தும் என உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சென்ற ஆண்டு விடுதலையானார். அதே வழக்கில் உள்ள  மூன்றாமவர் அக்கிம்,  2018 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த விடுதலையில் தனக்கு விடுவிக்க வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார்.அவரை விடுவிக்கச் சொல்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனால் அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது,  இவரின் மனுவை பரிசீலனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அரசு பரிசீலனை செய்து விடுதலைக்கு இவர் தகுதியில்லை எனக் கூறி ரத்து செய்து விட்டது. அக்கீம் 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்.

இதேபோன்று நான்கு பேர் தண்டனை பெற்ற இன்னொரு வழக்கில் முதல் எதிரி உடல்நலகுறைவால் சிகிச்சைக்காக பரோலில் இருக்கிறார். மூன்றாவது எதிரியாக  இருந்தவர் ஜப்ரு, 2008 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு திமுக அரசு ஆயுள் சிறைவாசிகளை முன்விடுதலை செய்த உத்தரவு இவருக்கும் பொருந்தும் என இவர் சகோதரி ஐகோர்ட்டில் மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் இவரை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டது. ஆனால் சிறை அதிகாரிகள் சில மாதங்களாக அதை அமலாக்கவில்லை. சிறையை பார்வையிட வந்த மாநில உரிமை ஆணையத் தலைவரிடம் முறையிட்டார். அவர் சிறை அதிகாரிகளை கண்டித்து, நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்தாவிட்டால் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என  சொல்லியும் வெளியில் விடவில்லை. மீண்டும் மனித உரிமை ஆணையருக்கு கடிதம் எழுதுகிறார். அதன் பிறகு சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்கிறது. காலம் கடந்த மேல்முறையீடு என்று உச்ச நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய ஜப்ரு வெளியே வந்தார். அப்பப்பா…எவ்வளவு தடைகள்..?

திருத்துவது( Revenge), வஞ்சம் தீர்ப்பது (Retribution), குற்றம் நடைபெறாமல் தடுப்பது (Deterence)  என்ற கோட்பாடுகளின் அடிப்படையில்  தண்டனை விதிக்கப்படுகிறது.

“மேலை நாடுகளிலும், ஆந்திரா போன்ற பிற மாநிலங்களிலும் சிறைவாசிகளின் உரிமைகளைப் பார்ப்பதற்கென்றே தனியான அரசு சாரா நிறுவனங்களும், அமைப்புகளும் உள்ளன. சிறைவாசிகளின் விடுதலை குறித்து இசுலாமியர் பேசுவதற்கே பயந்து  இருந்த காலம் உண்டு. சிறையிலிருந்துவெளி வந்த மூன்று இளைஞர்கள் மூலம்தான்  இசுலாமிய சிறைவாசிகள் குறித்து நிலை வெளியில் தெரிந்தது. இடதுசாரி கட்சிகளைச் சார்ந்த சிறுபான்மை அமைப்புகள் இசுலாமிய சிறைவாசிகளின்  விடுதலை குறித்து சில கூட்டங்கள் நடத்தினார்கள்; பிறகு அதை அவர்கள் விட்டுவிட்டார்கள். கடலூர் சிறையில் 35 ஆண்டுகளாக இருக்கும் சிறைவாசிகள் (மற்ற மத த்தினர்) உண்டு; இதில் பெண்களும் உண்டு. வெளியே போனால் செல்வதற்கு யாரும் உறவினர்கள் இல்லை என்பதால் சிறையிலேயே  இருக்கிறார்கள். சிறைவாசிகளுக்கான  தனியான அமைப்பை தமிழ்நாட்டில் உருவாக்க வேண்டும் ” என்றார் மனித உரிமை ஆர்வலரான பேராசிரியர் அ.மார்க்ஸ்.

பத்து ஆண்டுகளுக்கு  மேலாக சிறையில் இருக்கும் அனைவரையும் எந்தவித பாகுபாடும் காட்டாமல்  தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். இதனை  அரசியல் கட்சிகள் தமது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட வேண்டும் !

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time