தெவிட்டாத கானங்கள் தந்த தேனிசைத் தென்றல் தேவா..!

-சாவித்திரி கண்ணன்

இளையராஜாவும், ஏ.ஆர்.ரகுமானும் கோலோச்சிய காலகட்டத்தில் அவர்களை விஞ்சி தேவாவின் கொடி பறந்த காலம் 1990 களாகும்.  தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாதவர், அணுகுவதற்கு எளியவர், பாடல் வரிகளுக்கு உயிர் தந்தவர் நாட்டுப்புறப் பாடல்கள் தொடங்கி நகர்புறத்து கானா வரை, குத்துப் பாடல்கள் தொடங்கி பக்தி பாடல்கள் வரை அவரது பாடல்கள் ஒரு அலசல்;

தேவாவின் சிறப்பம்சம் என்னவென்றால், இரைச்சல் இசையைத் தவிர்த்து, பாடல் வரிகளில் உள்ள அர்த்தங்களுக்கு அழகு சேர்க்கக் கூடிய இன்னிசையைத் தந்தவர். சாதனைகள் செய்த நிலையிலும் சாமானியனாக வாழ்ந்தவர். ஆன்மீகப் பாடல்கள் அதிகம் தந்த போதிலும் தன்னை சாமியாராகக் காட்டிக் கொள்ளாதவர்.

ராமராஜன் படங்கள் என்றால், அது இளையராஜா தான் என்று இருந்த காலகட்டத்தில் 1989 ஆம் ஆண்டு மனசுக்கேத்த மகராசா படம் மூலம் – குறிப்பாக  ”ஆத்துமேட்டு தோப்புக்குள்ளே’’ போன்ற நாட்டுப்புறப் பாடல்கள் தந்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார், தேவா.

1990 ல் வந்த அவரது அடுத்த படம் பிரசாந்த் அறிமுகமான வைகாசி பொறந்தாச்சு. அதன் பாடல்கள் எல்லாமே பிரபலமாயின. பரவாயில்லையே புது இசை அமைப்பாளர் பின்னி இருக்காரே..என்று பேச வைத்தார்.

இளையராஜா திரையுலகில் பேராதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் – அவரது அணுகு முறைகளால் மன உளைச்சலுக்கு ஆளான – இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் அவர்கள் 1992-ல் அவர் தயாரித்த அண்ணாமலை படத்திற்கு தேவாவை இசை அமைக்க வைத்தார்.

திரை நடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி என்றால், திரைசையில் சூப்பர் ஸ்டாராக அன்று திகழ்ந்த இசைஞானி இளையராஜா தான் இசை அமைப்பாளர் என தயாரிப்பாளர்கள் இளையராஜா கால்ஷீட்டுக்காக தவம் கிடந்த சூழலில், தேவாவின் அண்ணாமலைப் படப் பாடல்கள் படு பிரபலமாகின.

”வந்தேண்டா பால்காரன்…” என்று ரஜினிக்குத் தான் பாடல் எழுதினானும், இளையராஜாவால் புறக்கணிக்கப்பட்ட வைரமுத்துவும் தன் மீள் வருகையை – ‘தமிழ் திரையிசைக்கு பால் வார்க்க’ வந்து விட்டதாக தேவாவின் இசையில் அறிவித்தார், எனலாம்.

இதன் பிறகு தேவா- வைரமுத்து இணைவில் தமிழ் திரை இசையின் பொற்காலம் 1990 கள் முழுக்க கொடிகட்டிப் பறந்தது. வைரமுத்துவின் வளமான தமிழுக்கு தேவாவின் இசை சிறந்த களம் அமைத்து தந்ததைப் போல தேவாவின் இசைக்கு வைர முத்துவின் வரிகள் சகா வரம் பெற்ற பாடல்களை நிலை பெறச் செய்தன எனலாம்.

ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் பாட்ஷா படத்திற்கு இளையராஜாவிடம் சம்பளத்தை கொஞ்சம் குறைக்க சொல்லி வைத்த வேண்டுகோள் மறுக்கப்பட்டதையடுத்து வேறு வழியில்லாமல் தேவாவை நாடினார், தயாரிப்பாளர். அந்த பாட்ஷா படப் பாடல்கள் ஒரு வரலாற்று வெற்றியாகிவிட்டது.

வைரமுத்து எழுதிய நான் ஆட்டோகாரன், ஸ்டைலு ஸ்டைலு தான், ரா,ரா, ராமையா.. உள்ளிட்ட அனைத்து பாடல்களும் தேவா இசையில் செம பிரபலமானது.

சேரன் இயக்கத்தில் வந்த பொற்காலம் படத்தில் ”தஞ்சாவூரு மண்ணெடுத்து தாமிரபரணி தண்ணியெடுத்து”, வெற்றி கொடி படத்தில் ”கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு” பாடல்களும் மறக்க முடியாதவை!

மணிரத்தினம் தயாரிப்பில், வசந்த் இயக்கத்தில் வெளியான நேருக்கு நேர் படத்தில் தேவா- வைரமுத்து இணைவில் அனைத்து பாடல்களும் தேனிசையாயின!

”எங்கெங்கே, எங்கெங்கே..” பாடலில் ஆஷா போஸ்லேயின் இனிமையான குரலும், வித்தியாசமான டுயூனும் புதிய அனுபவத்தை தமிழ் இசைக்கு தந்தது.

அவள் வருவாளா.. அவள் வருவாளா என்று ஹரிஹரனும், சாகுல் ஹமீதும் சேர்ந்து கலக்கிய துள்ளல் பாடல் அன்றைய காதலிக்கும் இளைஞர்களின் தேசிய கீதமானது.

”மனம் விரும்புதே உன்னை..” என்ற ஹரிணியின் பாடல்  பாடல் மயக்கம் தந்தது.

கவிப் பேரரசு வைரமுத்துவின் ஒரு இளம்பெண்ணின் காதல் உள்ளத்தை வெளிப்படுத்தும் வரிகளுக்கு உயிர்ப்பான மெட்டு தந்து இசை மழை பொழிந்திருப்பார் தேவா!

”அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த் தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது….!”

”புயல் வந்து போனதொரு வனமாய் ஆனதடா என் உள்ளம்,

என் நெஞ்சில் உன் கரம் வைத்தால், என் நிலைமை அது சொல்லும்…”

”சட்டென்று சலனம் வருமென்று ஜாதகத்தில் சொல்லலையே

நெஞ்சோடு காதல் வருமென்று நேற்று வரை நம்பலையே..”

போன்ற வரிகள் அற்புதம்

தேவாவுக்கு தேனிசைத் தென்றல் என்று மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் சூட்டிய பெயர் சாலப் பொருத்தமானது.

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய்- ஜோதிகா நடிப்பில் வந்த குஷி, அஜித்- சிம்ரன் நடிப்பில் வந்த வாலி ஆகிய இரு படங்களுக்கும் தேவா- வைரமுத்து இணை பல புகழ்பெற்ற பாடல்களை தந்தது!

ஆஸ்திரேலியப் பாராளுமன்றத்தில் தேவாவின் இசை சாதனைகளை போற்றி, அவரை அவைத் தலைவர் இருக்கையில் அமர்த்தி, செங்கோல் வழங்கினர்.

”ஒரு பொண்ணு ஒன்னு நான் பார்த்தேன்”

”கட்டிப்புடி கட்டிபுடிட்டா, கண்ணாளா”

”மேகம் கருக்குது, மின்னல் அடிக்குது”

”ஏப்ரல் மாதத்தில் என் ஜன்னல் ஓரத்தில்”

”ஓ சோனா ஐ லவ் யூ, லவ் யூடா”

”நிலவைக் கொண்டு வா”

இப்படி திரையில் மெல்லிசையில் தேனிசையை தந்து கொண்டே, சென்னை வாழ் எளிய பாமர மக்களின் கீதமான கானா பாடல்களுக்கு ஒரு மிகப் பெரிய அந்தஸ்த்தை உருவாக்கி திரையில் உலவவிட்டவர் தேவா!

”கவலைப்படாதே சகோதாரா..”

”சலோமியா…”

”கந்தன் இருக்குமிடம் கந்த கோட்டம்”

”உதயம் தியேட்டரிலே என் இதயத்தை”

”அண்ணா நகர் கோபாலு…”

”மீனாட்சி, மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சி”

இப்படி பல பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியவையாகும்.

திரை இசையில் வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பு தேவா ஏராளமான பக்தி பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். குறிப்பாக எல்.ஆர்.ஈஸ்வரி குரலில் 108 அம்மன் பாடல்கள், எம்.பாலமுரளி கிருஷ்ணா, திருப்பத்தூரான் குரலில் அஞ்சநேயர் கீதாஞ்சலி, சீர்காலி கோவிந்த ராஜன் குரலில் கணபதி கானம், பித்துக்குளி முருகதாஸ், மனோ குரலில் ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா, வீரமணி தாசன், சித்திரா குரலில் நலம் தரும் நவதுர்கா போன்ற பக்தி இசை பாடல்கள் பலவற்றை படைத்துள்ளார். கள்ளழகர் படத்தில் அவர் இசை அமைத்த வாராரு, வாராரு கள்ளழகர் வாராரு பாடல் ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் ஆற்றில் அழகர் இறங்கும் வைபவத்தில் பாடப்படுகிறது.

இளையராஜாவின் குருவான தன்ராஜ் மாஸ்டரின் தான் தேவாவும் மேற்கத்திய இசையை கற்றுள்ளார். தென்மேற்கு தமிழகத்தின் கிராமத்து தெம்மாங்கு கேட்டு வளர்ந்து சாதித்தவர் இளையராஜா என்றால், வட தமிழகத்தின் ஆற்காட்டில் பிறந்து, சென்னையின் கானா இசையில் கரைந்து, மேலெழுந்து திரை இசையை தேனிசையாக்கியவர் தேவா. வாய்ப்புகள் குறைந்த நிலையிலும் தன்னுடைய புகழ்பெற்ற பாடல்களை கட்டணமின்றி யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற தேவா, எளிதில் அணுகக் கூடியவாராகவும் இருந்தார்.

சாவித்திரி கண்ணன்

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

₹
Personal Info

Donation Total: ₹1,000.00 One Time