நகரமயமாக்கம் என்பது கிராமங்களை நரகமயமாக்கிக் கொண்டுள்ளது. தொழில் மயமாக்கம் என்பது விவசாயத்தை வேரோடு அழித்து, வட இந்திய இளைஞர்களுக்கு வரவேற்பு தந்து கொண்டுள்ளது. உருவாக்கப்படும் சிப்காட்களில் 80 % வட இந்தியர்கள் வேலை பெறுகின்றனர். இதில் எளிய மக்களிடையே ஏற்பட்டுள்ள கடும் கொந்தளிப்பு ஆட்சியாளர்களை எட்டுவதே இல்லை;
‘தொழில் மயமாக்கம்’, ‘நகரமயமாக்கம்’ என்பதை வளர்ச்சிக்கான அடையாளமாகவும், விவசாயத்தையும், கால் நடை வளர்ப்பையும், இயற்கை வளங்களையும் அதற்காக பலியிடலாம் என்றும் அதிகாரமட்டத்தில் ஒரு எண்ணப் போக்கு மிக ஆழமாக உள்ளது. இதன் விளைவாக எளிய கிராம மக்களின் குரல்கள் எட்டுவதேயில்லை, எந்த ஆட்சியாளர்களுக்கும்;
ஒரு நாட்டில் மக்கள் வளமாக வாழ மக்கள் வயிற்றுக்கு சோறிடும் நிலங்களும், நீர் நிலைகளும், கால் நடைச் செல்வங்களும்,மேய்ச்சல் நிலங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால், ‘தொழில் வளர்ச்சி தான் முதன்மையானது’ என்ற போக்கில் தொடர்ந்து விவசாய விளை நிலங்களையும், நீர் நிலைகளையும் அழித்துச் செல்கின்றன நமது அரசுகள்!
விவசாயப் பாதுகாப்பு, தொழிற் வளர்ச்சி இரண்டையும் சம நிலையில் வைத்து ஒன்றுக்கு ஒன்று எதிரானதாக இல்லாமல் பேண வேண்டும் என்ற அணுகுமுறை ஏனோ எந்த ஆட்சியாளர்களுக்கும் இருப்பதில்லை. ‘கார்ப்பரேட்களின் கட்டளைகளை கண்ணை மூடிக் கொண்டு நிறைவேற்றித் தருவது ஒன்றே தங்கள் தலையாய கடமை’ என அதிகார வர்க்கம் நினைத்து செயல்பட்டுக் கொண்டுள்ளது.
அந்த வகையில், ‘இந்தியாவிலேயே நகரமயமாக்கம், தொழில்மயமாக்கம் என்பதில் நம்பர் ஒன் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது’ என்பதை சிலர் பெருமையாக நினைக்கலாம். ஆனால், இதன் விளைவாக தமிழ்நாடு தன் வேளாண்மை பரப்பையும், நீர் நிலைகளையும், இயற்கை வளங்களையும், விவசாயம் சார்ந்த சிறு தொழில்களையும், பறி கொடுப்பதோடு இவற்றை இழந்த மக்கள் சொந்த நாட்டிலேயே நில உரிமைகளற்ற அகதிகளாக்கப்பட்டு வருகின்றனர் என்பது தான் வேதனையிலும், வேதனை!
தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட அம்பத்தூர், கிண்டி, விருதுநகர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, காட்பாடி போன்ற இடங்களில் தொழிற்பேட்டைகளை உருவாக்கி தொழிற் வளர்ச்சிக்கு வித்திட்டார். அதன் பிறகு கருணாநிதி 1972 முதல் சிப்காட் ( தமிழ்நாடு தொழில் முன்னேற்றக் கழகம்) தொடங்கி பல இடங்களில் சிப்காட் உருவாக காரணமானார். 1990 களுக்கு மேல் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு தந்து வரிவிலக்கு, மின்சார சலுகை, தொழிற்சங்க சட்டங்களில் இருந்து விலக்கு போன்ற பல சலுகைகள் தரப்பட்டன.
கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்துக்காக கடந்த திமுக ஆட்சியில் கடலூர் மாவட்டத்தின் தியாகவல்லி, நொச்சிக்காடு, குடிகாடு உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 450 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முயற்சித்த போது அன்றைக்கு விவசாயிகள் கொந்தளித்தனர், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தற்போது ஆட்சி மாறியதும் ‘சிப்காட் விரிவாக்கம்’ என்பதை ‘கடலூர் சிப்காட் தொழில்பூங்கா’ என மாற்றி, விவசாய நிலங்களை கையகபடுத்தும் முயற்சியில் தவெக அரசு இறங்கியுள்ளது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போர்க்கோலம் பூண்டுள்ளனர். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி, அக்டோபர்15,2026 அன்று 4 கி.மீ தொலைவுக்கு கருப்புக்கொடி பேரணி நடத்தினர்.

சிவகங்கை அருகே 1,600 ஏக்கரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க 12 கிராமங்களின் விவசாயிகள் மட்டுமின்றி திமுக, அதிமுக,கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், 10,000 பேரை திரட்டி பேராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் வேம்பங்குடி பகுதியிலும், காளையார்கோவில் அருகே பால்குளம் பகுதியிலும் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க தவெக அரசு மொத்தம் 550 ஏக்கர் நிலம் கையகப்படுத்த முயற்சிப்பது விவசாயிகளை சொல்லொண்ணா வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இந்த கிராமங்களில் 3,000 ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. இப்பகுதிகளின் பிரதான தொழிலே விவசாயம் தான். விளைநிலங்களை கையகப்படுத்தினால், இந்த மக்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாகிவிடுவர்.

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவின் பூதமங்கலம், வஞ்சி நகரம், கொடுக்கம்பட்டி உள்ளிட்ட 18 கிராமங்களில் சுமார் 278 ஏக்கர் நிலத்தை சிப்காட்டாக்க கடந்த ஆட்சியில் எடுக்கப்பட்டு வந்த நடவடிக்கைகளை சென்ற இரண்டு ஆண்டுகளாக எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர். தங்கள் மேய்ச்சல் நிலமாகவும் வழிபாட்டுத் தளங்களை கொண்டுள்ளதும், பல அரிய தொல்லியல் சின்னங்களை கொண்டிருப்பதுமான இந்த நிலப்பரப்பை சிப்காட்டாக மாற்றக் கூடாது என அந்த மக்கள் எதிர்க்கிறார்கள். ஆனால், தவெக ஆட்சியிலும் மக்களின் வேண்டுகோளுக்கு ஆட்சியாளர்களோ, அதிகாரிகளோ சிறிதும் செவிமடுப்பதாக இல்லை.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வேம்பூர், மேலக்கரந்தை, கீழக்கரந்தை பகுதிகளில் சுமார் 2,700 ஏக்கர் மானாவாரி விவசாய நிலங்களை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன.
இதில் ஒரு சில ஆறுதல் செய்திகள் என்னவென்றால், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வாழப்பட்டி பகுதியில் சிப்காட் நிலம் எடுக்க வலுவான எதிர்ப்பு நிலவியதற்கு மதிப்பளித்து தவெக அரசு சிப்காட் திட்டத்தை லத்துவாடிக்கு மாற்றியுள்ளது. அதே போல திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா விவசாயிகள் தங்கள் வளமான விவசாய நிலத்தை சிப்காட்டிற்கு தூக்க வேண்டாம் என்று திமுக ஆட்சியில் மூன்றாண்டுகளாக தீவிரமாக தொடர் போராட்டங்கள் நடத்தி வந்த போது அவர்களை ஆட்சியாளர்கள் திரும்பி பார்க்காமல் குண்டர் சட்டத்தில் விவசாயிகளை கைது செய்து நில எடுப்பை முன்னெடுத்தனர். ஆனால், ஆட்சி மாறியவுடன் அத் திட்டம் கைவிடப்பட்டு விவசாயிகள் வயிற்றில் பால் வார்த்தது தவெக அரசு.
ஆனால், ஒரு நன்மையை செய்துவிட்டு தற்போது அதைவிடப் பெரிய தீமையை தவெக அரசு செய்வதாக திருவண்ணாமலை மாவட்ட மக்கள் கொந்தளிக்கிறார்கள். திருவண்ணாமலை ஏற்கனவே மாநகராட்சி ஆக்கப்பட்டுவிட்டது. தற்போது அந்த மாநகராட்சியை விரிவாக்குகிறோம் என்ற பெயரில் 18 கிராம பஞ்சாயத்துக்களை மாநகராட்சிக்குள் இணைக்கிறார்கள்!

இதன் மூலம் இந்த கிராம பஞ்சாயத்தின் விளை நிலங்கள் விலை நிலங்களாக மாறி விவசாயப் பேரழிவுகளே நடக்கின்றன. இனி இந்த 18 கிராம பஞ்சாயத்துகளில் 100 நாட்கள் வேலை திட்டம் ரத்தாகும். கிராம மக்களுக்கு அந்த வேலை பறிபோவதோடு, வீட்டு வரி, குடிநீர் வரி, புதிய குடி நீர் குழாய் இணைப்பு ஆகியவை பன்மடங்காக உயரும். ஆகவே இந்த விரிவாக்கம் வேண்டாம் என்றே அத்தனை கிராம பஞ்சாயத்துக்களும் போர்கோலம் கொண்டுள்ளன.
அதே சமயம் இது சென்ற ஆட்சியிலேயே எடுக்கப்பட்ட முடிவு தான். சென்ற ஐந்தாண்டு திமுக ஆட்சி முழுமையும் புதிய மாநகராட்சிகள் எக்கச்சக்கமாக உருவாக்கப்பட்டன. அத்துடன் பேரூராட்சிகளெல்லாம் நகராட்சிகளாக மாற்றப்பட்டன. மேலும் பல மா நகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. அப்போது முதலே மாநகராட்சியுடனும், நகராட்சியுடனும் இணைக்கப்பட்ட கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இது மத்திய பாஜக அரசு தொடர்ந்து இந்தியா முழுமையும் செய்து கொண்டு வரும் முன்னெடுப்பாகும். மிகச் சமீபத்தில் சென்னை வந்திருந்த பிரதமர் மோடி பேசுகையில், ”தமிழ்நாட்டின் நகர்ப்புற மேம்பாடு நமது பிரதான முதன்மையாகும். நகரமயமாக்கல் என்பது ஒரு சவால் அல்ல, மாறாக அது ஒரு வாய்ப்பு என்பதை நாம் எப்போதும் கருதி வந்திருக்கிறோம்’’ என்று நகரமயமாக்களை சிலாகித்து பேசி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மக்களிடம் கலந்து பேசாமல், மக்களின் விருப்பத்திற்கு எதிராக தொடர்ந்து ஆட்சியாளர்கள் இந்த நகரமயமாக்களோடு இணைந்த வகையில் சிப்காட்டிற்கான நில எடுப்பு என்ற அஸ்திரத்தையும் விவசாய பெருங்குடிகளின் மீது திணிக்கிறார்கள்.
2011-2021 வரையிலான அதிமுக ஆட்சியில் ஏழு சிப்காட்கள் உருவாகின என்றால், அடுத்த 2021-2026 வரை காலகட்ட திமுக ஆட்சியில் முப்பது சிப்காட்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. இதனால், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சிப்காட் நில எடுப்பை எதிர்த்த விவசாயிகளின் போராட்டங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் இருந்தன. அதுவே தற்போதும் அட்சரம் பிசகாமல் தொடர்கிறது. அன்று திமுக அரசு மீது மக்களுக்கு ஏற்பட்ட கோபம் தற்போது தவெக அரசை நோக்கித் திரும்பியுள்ளது. இப்படி உருவாக்கப்படும் சிப்காட்டில் 80 சதவிகித வேலை வாய்ப்புகளை புலம் பெயர்ந்து வரும் வட இந்தியர்களே நிறைவு செய்யும் நிலை உள்ள போதிலும், இதை தமிழக ஆட்சியாளர்கள் மக்கள் போராட்டங்களை பொருட்படுத்தாமல் நிறைவேற்றி வருகின்றனர். எனில் தமிழ் நிலத்திற்கும், மக்களுக்கும் எதிரான இந்த தீவிர தொழில்மயமாக்கம் யாருக்காக?
இந்த நகரமயமாக்கம் என்பது ஏதோ மக்கள் நலன் கருதிய முன்னெடுப்புகள் அல்ல. இவை விவசாயத்தின் மீதும், விவசாயம் சார்ந்த சிறு தொழில்கள் மீதும், எளிய மக்கள் மீதும் எல்லாவற்றுக்கும் மேல் இயற்கையின் மீதும் தொடுக்கப்பட்ட போராகும்.
சாவித்திரி கண்ணன்
























Leave a Reply