எல்லா கட்சிகளிலும் உழைப்பவர்கள் உழைத்து ஓடாக தேய்வதும், ஒரு சிலர் எந்த உழைப்புமின்றி உச்ச நிலையிலேயே உலா வருவதும் இருக்கின்றது. பாஜகவில் இதற்கு நிதர்சனமான உதாரணம் எல்.முருகன். இவர் முக்கியத்துவம் பெற்றதும், தற்போது விலக நேர்ந்ததும் இன்றைய திரைமறைவு அரசியலின் அவலத்திற்கும், சந்தர்ப்பவாத சாகச அரசியலுக்கும் சான்றாகும்;
கட்சியில் சேர்ந்து கால் நூற்றாண்டு ஆகியும் ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட போட்டியிட்டு வெற்றி பெற முடியாதவர்!
தரப்பட்ட எந்தப் பதவியிலும், பொறுப்புகளிலும் எதையும் சாதித்திராதவர்!
ஒழுக்கக் கேடான நடத்தைகளில் உச்சகட்ட பெயரை சம்பாதித்திருப்பவர்!
இப்படிப்பட்ட எல்.முருகன் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் பெற்றதும், மத்திய அமைச்சரவையில் தொடர்ந்து இடம் பெற்றதும் தமிழகத்தில் பாஜக எவ்வளவு தோல்விகரமான அரசியலை செய்து கொண்டிருக்கிறது என்பதற்கான அத்தாட்சியாகும்.
‘எங்க அப்பன் குதிருக்குள் இல்லை’ என்ற கதையாக நான் விலகவில்லை, வெளியேற்றப்பட்டேன் என்பதை தன்னுடைய ஐந்து பக்க விளக்க கடிதம் மூலம் அம்பலப்பட்டுக் கொண்டார், எல்.முருகன்.
25 வருடமாக கட்சியில் இருக்கும் முருகன் தன்னை பற்றி இப்போது சொல்ல வேண்டிய அவசியமென்ன? மோடியை விதந்தோதி விலக வேண்டிய காரணம் என்ன? தமிழகத்தில் இன்னின்னாருக்கெல்லாம் இன்னின்ன பதவி கொடுத்திருக்கிறீர்கள்.. என பட்டியல் போடுவானேன்? கடைசியில் கட்சித் தலைவராகவாவது ஆக்கிடுங்க, கைவிட்டுராதீங்க என புலம்பி இருக்கிறார்.
மத்திய இணை அமைச்சர் பொறுப்புகளிலிருந்து என்னை விடுவிக்கவும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியைத் துறக்க அனுமதிக்கவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறாராம். இதன் மூலம் தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்துவதற்காக முழுநேரமும் பணியாற்ற விரும்புகிறாராம்! தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்துக்கும், ஒவ்வொரு தெருவுக்கும் செல்ல விரும்புகிறாராம்! மக்களை நேரில் சந்தித்து, கட்சித் தொண்டர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறாராம்!
அடடா! சபாஷ்! இதை தமிழக பாஜக தலைவராக இருந்த காலத்தில் செய்து நிரூபித்து இருக்கலாமே. அதை செய்யாமல் ’’ஐயோ எனக்கு பனிஷ்மெண்ட் தந்துவிடாதீர்கள், பதவி கொடுத்து காப்பாற்றுங்கள்” என தற்போது மன்றாட வேண்டிய அவசியம் தான் என்ன?

இவரை பதவி விலகச் சொல்லி ஜனவரி மாதத்தில் இருந்து பாஜக மேலிடம் அழுத்தம் தந்து கொண்டிருக்கிறது என்பது அகில இந்திய அளவில் அனைத்து அரசியல் பார்வையாளர்களுக்கும் தெரிந்த விஷயம் தானே. …!
2011 ராசிபுரம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு படு தோல்வியுற்றார். ஆனால், அவர் 2014 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய அரசுக்கான நிலை ஆலோசகராக ஆனார். இது போதாது என்று 2017 முதல் 2019 வரை இவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராக பதவி வகித்தார். இந்த காலகட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் மீதான தாக்குதல்கள், கொடுமைகள் ஆகிய அனைத்திலும் பாதிப்பு ஏற்படுத்திய செல்வாக்கானவர்களை காப்பாற்றி கட்சிக்கு பெரும் சேவகம் செய்தார். இப்படி தான் சார்ந்த சமூகத்திற்கே துணிந்து அநீதிகளை அரங்கேற்றியதற்கு பரிசாக பாஜகவின் தமிழக தலைவர் பதவி கிடைத்தது.
ஆனால், 2020-ல் பாஜக தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டு வெறும் ஒன்றே கால் வருடத்தில் பதவி போனது. இந்த காலகட்டத்தில் பாஜகவுக்கு பாலியல் ஜல்சா பார்டி என்ற பெயரை உருவாக்கிய கீர்த்திக்கு உரியவராக அந்தக் கட்சியினராலேயே சொல்லப்படுகிறார், எல்.முருகன். இந்த குறுகிய காலகட்டத்தில் சினிமாவில் இருந்து அதிகமானவர்களை கட்சியில் சேர்த்த முருகனின் நோக்கங்களுக்கு பின்னணியிலும் பாலியல் நோக்கங்களே பிரதானமாக இருந்ததாக பேச்சு அடிபட்டது. சொந்தக் கட்சி சமாச்சாரங்களாச்சே வெளியில் வர வேண்டாம் என்று எவ்வளவு தான் பொறுப்பது என்ற முன் விளக்கமிட்டு அப்போது பாஜகவின் ஊதுகுழல் பத்திரிகையான தினமலர் நாளிதழிலேயே அரை பக்கத்திற்கு முருகனின் திருவிளையாடல்கள் கட்சியை எந்த சீரழிவு நிலைக்கு கொண்டு போய்க் கொண்டுள்ளது என எழுதினார்கள்!
ஆக தலைவராக இருந்த காலகட்டத்தில் கூட 2021-ல் தாராபுரத்தில் தான் போட்டியிட்ட தொகுதியில் பரிதாபகரமான தோல்வியை தழுவினார் எல்.முருகன். இப்படியாக நான்கு முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்றும் கூட ஜெயிக்க முடியாத முருகனுக்கு பாஜக வழங்கிய பரிசு மத்திய அமைச்சர். அதுவும் மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை, மீன்வளம், கால் நடை மற்றும் பால்வளத்துறை என்று நான்கு துறைகளுக்கு இணை அமைச்சர் பதவி தந்தனர். மாநிலங்களவை வழியாக இந்தப் பதவியில் இருக்கும் போதே 2024 நீலகிரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு அதிலும் தோல்வி. கடைசியாக 2026 அவினாசி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அதிலும் தோல்வி.
தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட அருந்ததி சமூகத்து எல். முருகன் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்த போது, திமுகவுடன் திரைமறைவில் நெருக்கம் பாராட்டினார்.

உதயநிதியின் மகன் இன்பநிதியால் தயாரிக்கப்பட்ட பராசக்தி படத்தில் இந்தி எதிர்ப்பு அரசியல் வரலாற்றை சொல்கிறேன் என்ற போர்வையில் காங்கிரஸ் கட்சி மீதான வெறுப்பை ஆழமாக விதைக்கும் வண்ணம் படம் தயாரானதற்கும், இதற்கு பாராட்டாக அந்த படத்தில் நடித்த நடிகர்களை, கலைஞர்களை டெல்லியில் தன் வீட்டிற்கு அழைத்து பிரதமர் மோடியுடன் விருந்துண்ண வைத்ததிலும் முருகன் பங்களிப்பு இருந்ததை சொல்லலாம். அடுத்து விஜய் நடித்த ஜனநாயகன் படத்தை தேர்தலுக்கு முன்னால் ரிலீஸ் ஆகாமல் நிறுத்தி வைத்ததிலும், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் என்ற வகையில் செயல்பட்டவர் முருகன் என்பதும் பரவலான பேச்சாக உள்ளது.
அவ்வளவு ஏன்? சமீபத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த ஜெயிலர்-2 படத்தில் அளவுக்கு அதிகமான கொடூர வன்முறை காட்சிகள் இருந்ததால், அந்த படத்திற்கு சென்சார் ‘A’ சான்றிதழைத் தான் தர முடியும் என மத்திய தணிக்கை வாரியம் கறார் காட்டிய போது குழந்தைகளோடு குடும்பமாக பார்ப்பதற்கு சென்சாரின் ‘A’ சான்றிதழ் தடையாகிவிடும் என்பதால், கலாநிதியின் சன் பிக்சர்ஸ்க்கு ‘U/A 16+’ சான்றிதழை பெற்றுத் தந்தாராம், எல்.முருகன்.
ஆக, கொடுக்கப்பட்ட எந்த பொறுப்பிலும் சோபிக்கவில்லை, எந்த தேர்தலிலும் வெற்றி பெறவில்லை என்றாலும், மேலிடத்தின் கட்டளைக்கு ஏற்ப அந்தந்த சூழலுக்கு ஏற்ற அரசியல் தரகு வேலைகளை முருகன் சரியாக செய்திருக்கிறார் என்பதே முருகன் விவகாரத்தை கூட்டிக் கழித்து பார்த்தால் நமக்கு கிடைக்கும் விடையாகவுள்ளது.

ஏற்கனவே அதிமுக, திமுகவை தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துவிட்ட பாஜக, தற்போது ஆட்சியில் உள்ள தவெகவை மெல்ல,மெல்ல தன் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொண்டு வருகிறது. அதற்கு முருகன் முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது என்று நினைத்தார்களோ, என்னவோ!
நான்கு துறைகளின் இணை அமைச்சர் பதவி முருகனுக்கு தரப்பட்டதால் இந்தியாவுக்கோ, தமிழகத்துக்கோ கடுகளவு நன்மையோ, முன்னேற்றமோ எதுமில்லை. பெர்மாமன்ஸ் என்று பார்த்தால் ஜீரோ தான். இவரது உதவியாளர் கவியரசு என்பவர் மூலம் பல அத்துமீறல்களை செய்து அம்பலப்பட்டுள்ளார் முருகன். கூடவே பாலிவுட்டின் ஒரு பெரிய பெண் நட்சத்திரத்திற்கு தவறான நோக்கத்துடன் குறுஞ்செய்தி அனுப்பியதால் அவர் பாஜக தலைமைக்கு புகார் தந்ததாக பரவலாக பல பத்திரிகைகளில் வந்துள்ளது.
ஆனால், தமிழகத்தில் பாஜகவின் திரைமறைவு அரசியலுக்கு இப்படிப்பட்ட நபர்களே தேவைப்படுகிறார்கள். டெல்லி பாஜகவின் அரசியல் தமிழக பாஜகவினருக்கே புரியாத புதிராக உள்ளது.
இன்றைய கேடுகெட்ட சந்தர்ப்பவாத அரசியலை, அறமற்ற அதிகார வெறி அரசியலை, மாநிலக் கட்சிகள் அனைத்தையும் மண்டியிட வைக்கும் டெல்லியின் எதேச்சதிகார அரசியலை உணர்ந்து தெளிவோம்.
சாவித்திரி கண்ணன்























தூக்கி எறியப்பட்ட தமிழிசை..என்ன காரணம்
CPR எப்போது குப்பை தொட்டிக்கு போக உள்ளார்