புரட்சிக்கு தயாராகும் இளம் தலைமுறை! பயத்தில் பாஜக!

-சாவித்திரி கண்ணன்

அரசு நிர்வாகத்தையே கிரிமினல் மயமாக்கிக் கொண்டுள்ளனர் மத்திய ஆட்சியாளர்கள்! நீதிமன்றங்களுக்கு நிர்பந்தம் தருகிறார்கள்! தேர்தல் கமிஷனை திருட்டு கமிஷனாக்கிவிட்டனர். காவல் துறைக்குள் மதவெறி உணர்வை புகுத்தி வருகின்றனர். பொறுத்துப் பார்த்த இளம் தலைமுறை பொங்கி எழுந்துவிட்டது! அடக்குமுறைகளை கையாண்ட பாஜக அரசு அரண்டு போயுள்ளது;

சுதந்திர இந்தியா தற்போது பிற்போக்கு சக்திகளின் கையில் பிணைக் கைதியாக உள்ளது!

‘தேர்தலை நேர்மையாக எதிர்கொள்ளமாட்டோம். எங்களை ஆதரிக்காதவர்களை எல்லாம் வாக்காளர்கள் லிஸ்டில் இருந்து வெளியேற்றுவோம்’ என்றால் எப்படி?

தேர்தல் கமிஷனரை தேர்ந்தெடுக்கும் குழுவில் இருந்து நீதிபதியையே நீக்கியது எதற்காக? உலகத்தின் ‘நம்பர் ஒன் அக்யூஸ்ட்டை’ தேர்தல் ஆணையராக்கும் சூழ்ச்சி அங்கு தான் தொடங்கியது!

வாக்காளர் படிவத்தை சிக்கலான கேள்விகளால் உருவாக்கியது ஒரு சூது. அந்த சூதின் வழியே இருப்பவர்களை உயிரற்றவர்களாகவும், இல்லாதவர்களை வாக்காளர்களாகவும் மாற்றியது உச்சகட்ட சூழ்ச்சி!

”அந்நிய நாட்டில் இருந்து வந்தவர்களை நீக்குகிறோம்” என கப்சா விட்டு, உச்ச நீதிமன்றம் ஆதாரம் கேட்டதும் கப்சிப் ஆனது அயோக்கியத்தனம்.

13 கோடி சொச்சம் பேரை நீக்கியது குறித்து கேள்வி மேல் கேள்வி கேட்டதும், தவறாக நீக்கப்பட்டவர்கள் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என சாதாரணமாக கடந்து போனது சகிக்க முடியாத குற்றம். தவறுதலாக நீக்கவில்லை, உள் நோக்கத்தோடு தான் இந்த தில்லு முல்லுகளை அரங்கேற்றி வருகிறீர்கள். ”பதவி விலகுங்கள், விசாரணையை எதிர் கொள்ளுங்கள்” என்றால், ”அவரை விசாரிக்கவோ, தண்டிக்கவோ முடியாதபடிக்கு சட்டம் கொண்டு வந்துவிட்டோமே…” என்கிறீர்கள்!

ஆக, குற்றம் கண்டுபிடிக்கப்படும் போது தண்டிக்கப்படுவோம் என்பதை முன்கூட்டியே யூகித்து தற்காப்பு செய்து கொள்ளும் அளவுக்கு சிந்தித்து திட்டமிட்டே அட்டூழியங்கள் அனைத்தையும் அரங்கேற்றி உள்ளீர்கள்!

‘பாதிக்கப்பட்டவர்கள் போராடவில்லை’ என்கிறீர்கள். பாதிக்கப்பட்டவர்கள்  சேர்வதால் மட்டுமே ஒரு போராட்டம் வலுப்பெறும். அதே சமயம் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே போராட்டம் நடத்த வேண்டும் என்பது சக மனிதர்களை அலட்சியப்படுத்துவதாகும். பாதிக்கப்பட்டவர்களுக்காக நல்லவர்கள், கருணையுள்ளவர்கள் பேசத் தான் செய்வார்கள். இது தான் இயற்கை.

இந்த யதார்த்தங்களை மறுதலித்து தங்களது சுயநலத்தை துறந்து– ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக – போராட வருபவர்களை – அதிலும் படிக்கும் மாணவர்களையும், பொது நல நோக்கத்திற்கான இளைஞர்களையும் சமூக விரோதிகளாக சித்தரிக்கிறீர்களே.. இது அடுக்குமா?

இவர்கள் நம் குழந்தைகள் அல்லவா? நம் நாட்டின் ரத்த நாளங்கள் அல்லவா? சொந்த மக்களையே துன்புறுத்துகிறீர்களே…! இந்துவெறி அமைப்பு இளைஞர்களை, ஆர்.எஸ்.எஸ்காரர்களை களத்தில் இறக்கி இளைஞர்களை தாக்குகிறீர்களே..! சட்டம், ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய ஆட்சியாளர்களே சமூக விரோத போக்கை கொண்டிருப்பது சகிக்க முடியாத பேரவலம்!

போராடும் இளைஞர்களிடம், யுவதிகளிடம், ”நீ எந்த மதம்?” என்ற கேள்வியை காவல்துறையினர் ஏன் கேட்கிறார்கள்? இந்த 12 ஆண்டு கால பாஜக ஆட்சி  காவல் துறையையே மதவெறி அமைப்பாக மாற்றிவிட்டுள்ளது எவ்வளவு பெரிய பேராபத்து!

எல்லா போராட்டங்களையும் ‘தேச விரோத சக்திகள்’ என்று முத்திரை குத்தும் நீங்கள் மனிதகுல விரோதிகள் அல்லவா?

ஓராண்டு காலம் தலை நகர் டெல்லியில் தொடர்ந்து போராடிய விவசாயிகள் மீது எவ்வளவு அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டீர்கள்? அந்த போராட்டக் களத்தில் 800 விவசாயிகள் தங்கள் இன்னுயிரை இழந்தார்களே…! அதற்கு பிறகு தானே விவசாயத்தை அழிக்கும் கார்ப்பரேட்களுக்கு ஆதரவான சட்டங்களை வாபஸ் வாங்கினீர்கள்!

நீட் (NEET) தேர்வு என்றும் குயிட் (CUET)  தேர்வு என்றும் பணம் பறிக்கும் தேர்வு முறைகளை அறிமுகப்படுத்தியது ஒரு கொடுமை என்றால், அந்த தேர்வையும் நேர்மையாக நடத்த மாட்டோம் என்று சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டு NTA எனப்படும் தகிடுதத்த தனியார் தேர்வு முகமை மூலம் நடத்துவீர்கள் என்றால், மாணவர்கள் போராடாமல் என்ன செய்வார்கள்?

போராடுபவர்களை நசுக்க வேண்டும். கரப்பான் பூச்சிகளை அழிக்க வேண்டும், மென்மையான போக்கை அரசாங்கம் கடைபிடிக்கக் கூடாது என சில பார்ப்பன பத்திரிகைகள் எழுதி வருகின்றன.

நசுக்க, ஒடுக்க, அடக்க, முடக்க என்று எத்தனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? டெல்லியில் ஓடும் அனைத்து மெட்ரோ ரயில்களை மட்டுமா நிறுத்தினீர்கள்…? வெளி மாநிலங்களில் இருந்து ரயில்களையும் நிறுத்தினீர்கள்! உள்ளுர் பேருந்துகளை முற்றிலுமாக முடக்கினீர்கள். மக்கள் தங்கள் சொந்த வாகனத்தில் வரவும் தடை போட்டீர்கள். கடை வீதிகளில் நடமாடியவர்களையும் கலவரக்காரர்கள் என தூக்கி சென்றது காவல்துறை. இப்படியாக 40,000 போலீஸ்காரர்களையும், துணை ராணுவப் படைகளையும் இறக்கி நசுக்கத் தான் பார்த்தீர்கள்! முடிந்ததா? முடியவில்லையே!

இந்த இளைஞர்களின் பெற்றோர்களும், உறவினர்களும், இந்த சமூகமும் இந்த அரசாங்கத்தை ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள். சொந்த மண்ணின் மைந்தர்களை – இளம் தலைமுறையை – அந்நிய நாட்டின் கைக் கூலிகள் என்கிறீர்களே!

இந்த நாட்டின் பிரதமரே அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அடிமையாக வலம் வருவதை மக்கள் பார்த்துக் கொண்டு தான் உள்ளார்கள். எப்ஸ்டீன் பைலில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங்கும், பிரதமர் மோடியும் அம்பலப்பட்ட பிறகும் பதவியில் தொடரலாமா?

பிரான்சில் நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களை கண்டு பிரதமரும், உள்துறை அமைச்சரும் பீதி அடைவது ஏன்?

நேப்பால் போராட்டங்களை நினைக்கையில் உங்கள் நெஞ்சு பதறுகிறதே ஏன்?

இலங்கையில் நடந்த போராட்டங்களைக் கண்டதில் இருந்து உங்கள் இதயம் படபடத்துக் கொண்டிருந்ததல்லவா?

அக்கிரம ஆட்சியாளர்கள் என்றேனும் ஒரு நாள் நாட்டின் அஞ்சா நெஞ்சம் படைத்த இளம் தலைமுறையால் தூக்கி எறியப்படுவார்கள், விரட்டி அடிக்கப்படுவார்கள் என்பதை உங்கள் உள்ளுணர்வு சொல்லி உறுத்திக் கொண்டே இருக்கிறதல்லவா?

திருந்தவே முடியாதவர்கள்  ஒரு போதும் வருந்தவும் மாட்டார்கள்! எதை ஒருவர் விதைக்கிறாரோ, அதை அவர் அறுவடை செய்யத் தான் வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

₹
Personal Info

Donation Total: ₹1,000.00 One Time