அண்ணாமலையின் பாஜக எதிர்ப்புக்கு பின்னணி என்ன?

-சாவித்திரி கண்ணன்

‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்று ‘சிவனை வணங்கவும் கூட அவன் அருள் இருந்தால் தான் முடியும்’ என்பார், மாணிக்கவாசகர்! உண்மையிலேயே பாஜகவை எதிர்க்கும் அண்ணாமலைக்கும் இது பொருந்தும். காலம் அறிந்து, சூழல்களை அவதானித்து சரியான திட்டமிடலோடு,  திராவிடமும், தமிழ் தேசியமும் கலந்து அரசியல் தந்திரோபாயங்களை செய்கிறார் அண்ணாமலை! 

தற்போது திராவிடம் பாதி, தமிழ் தேசியம் பாதி என்று பக்கா திட்டமிடலோடு அரசியல் களம் கண்டூள்ளார் அண்ணாமலை. இதன் மூலம் இங்குள்ள திராவிட கட்சிகள், தமிழ் தேசிய இயக்கங்களுக்கு உண்மையான மாற்றாக தன்னை நிறுவப் பார்க்கிறார், அண்ணாமலை.

திராவிட அரசியல் கட்சிகளின் செல்வாக்கு சரிந்து கொண்டுள்ளது. தமிழ் தேசியம் பேசிய சீமானின் மீதான தமிழ் மக்களின் நம்பகத்தன்மை சரிந்துள்ளது.  கருத்தாழமற்ற விஜய்யின் கவர்ச்சி அரசியல் எப்போது வேண்டுமானாலும் கலைந்து போகலாம். ஆகவே இந்தச் சூழலுக்கு தன்னை தகவமைத்துக் கொண்டு புது வேடம் தரித்து வந்துள்ளார் அண்ணாமலை!

உண்மையில் அண்ணாமலை சூப்பராக பேசி இருக்கிறார்!

இந்த அளவுக்கு இறங்கி பாஜகவை கார்னர் செய்து கேட்க, தமிழகத்தின் மூன்று பிரதான மாநிலக் கட்சித் தலைவர்களும் தயார் இல்லாத நிலையில், அந்த வெற்றிடத்தில் சுலபமாக தன்னை நிறுவ முயற்சிக்கிறார், அண்ணாமலை!

தமிழ்நாட்டில் அரசியலில் எடுபட வேண்டும் என்றால், பாஜக எதிர்ப்பு பிரதானம். மோடியை எதிர்க்க வேண்டியது முக்கியம். இந்தி எதிர்ப்பும், தமிழ் ஆதரவு நிலையும் தவிர்க்க முடியாதது. இந்த சூத்திரத்தை சிறப்பாக கையாளுபவர் தமிழக மக்களால் கொண்டாடப்படுவார்!

ஆகவே தான் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி, தனி கட்சி கண்டு தனி ஆவர்த்தனம் செய்கிறார்!

எடப்பாடி பழனிச்சாமி பாஜக தலைமைமையை எதிர்த்து இவ்வளவு துணிச்சலாக ஒரு போதும் பேச மாட்டார்.

ஆட்சியில் இருக்கும் விஜய்யும் பாஜக விஷயத்தில் இன்னொரு பழனிச்சாமி பாதையையே பின்பற்றுகிறார்.

ஸ்டாலின் சற்று அளவோடு பாஜக எதிர்ப்பை பேசுவார். அதே சமயம் டெல்லியிலோ, தமிழகத்திலோ பாஜகவை எதிர்த்து திமுகவால் போராட முடியாத சூழலைப் பார்க்கிறோம்.

அண்ணாமலையின் பேச்சு எனக்கு 2021க்கு முன்பு எதிர்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் அவர்களை நினைவுபடுத்தியது. அப்போதேல்லாம் பாஜகவுக்கு எதிரான ஸ்டாலின் அறிக்கை தீப்பொறியென இருக்கும். பாஜகவுக்கு எதிரான திமுகவின் போராட்டங்களும் வீரியமாக இருந்தன. இந்த காரணத்திற்காகவே நான் அப்போதெல்லாம் பாஜகவை எதிர்க்க திமுக ஒன்றே தீர்வு என நம்பி எழுதினேன். ஸ்டாலினின் அந்த அறிக்கைகளும், திமுகவின் வீரிய போராட்டங்களும் தான் திமுகவை 2021 தமிழ்நாட்டின் அரியணையில் ஏற்றின.

துரதிர்ஷ்டவசமாக அந்த திமுகவும், அந்த ஸ்டாலினும் இன்றைக்கு இல்லை.

இன்றைக்கு அண்ணாமலையின் பேச்சு பாஜகவினரையே பதற வைத்துள்ளது. அதைத் தான் அண்ணாமலையும் எதிர்பார்த்தார். ஏனென்றால், தமிழ் நாட்டில் ஒரு அரசியல் தலைவருக்கான மரியாதை என்பது பாஜகவால் அவர் எதிர்க்கப்படும் போது தான் உருவாகிறது.

ஆகவே தான் அண்ணாமலை தன்னை பாஜகவுக்கு எதிரானவனாக நிறுவுகிறார்.

”என்னை பாஜகவின் பி டீம் என்றும், தமிழகத்துக்கு அனுப்பப்பட்ட ‘துரந்தர்’ என்றும் சிலர் சொல்லி வந்தனர். இப்போது என் மீது பாஜகவினரே தாக்குதல் நடத்துவதால், இனி அப்படிச் சொல்ல முடியாது அல்லவா..?” என்று அண்ணாமலை தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை தன் அறிக்கையில் பாஜகவுக்கு சில கேள்விகளும், காங்கிரசுக்கு சில கேள்விகளும் வைத்துள்ளார்.

அதிருக்கட்டும், அண்ணாமலையிடம் தமிழக மக்கள் மனதில் உள்ள சில கேள்விகளை நான் கேட்கிறேன். இவற்றுக்கு அவர் பதில் சொல்வாரா…?

# பாஜகவின் கொள்கை எதிரியாக தற்போது வெளிப்பட்டு வரும் நீங்கள், பாஜகவில் இருந்து விலகும் முன்பு டெல்லி சென்று சில நாட்கள் காத்திருந்து மோடியையும், அமித்ஷாவையும் பார்த்து பவ்யமாக அவர்களை சமாதானப்படுத்தி, ஒரு சமரசத்தை உருவாக்கிவிட்டு வெளியேறியது ஏன்?

# கடந்த காலங்களில் திராவிட இயக்கங்களை பற்றியும், அதன் உன்னதத் தலைவர்களான பெரியார், அண்ணா போன்றவர்கள் பற்றியும் வைத்த இழிவான விமர்சனங்களுக்கு வருத்தம் தெரிவிக்கும் நேர்மை உண்டா உங்களிடம்?

# ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்த நீங்கள் அரசியலில் அடி எடுத்து வைத்த போது இருந்த உங்கள் சொத்தின் மதிப்பு என்ன? இன்றைக்கு உங்கள் சொத்தின் மதிப்பு என்ன? பல நூறு கோடிகளுக்கு எப்படி அதிபதியானீர்கள்? ஒரு எளிமையான விவசாயக் குடும்பத்தில் பிறந்த உங்களுக்கு இவ்வளவு சொத்துக்கள் சேர்ந்த விஷயத்தை பொருட்படுத்தாமல் பாஜக தலைமை உங்களை ஏன் விட்டு வைத்துள்ளது?

# தமிழக பாஜக தலைவராக இருந்த காலகட்டத்தில் திமுக பைல்ஸ் என்று  திமுக அமைச்சர்கள், எம்.பிக்கள் ஆகியோர்  சொத்து விபரங்களை அம்பலப்படுத்த போவதாக சொல்லி ஓரளவு சொல்லிய நிலையில் திடீரென்று அமைதியானது ஏன்?

#  தமிழக பாஜக தலைவர் என்ற ஹோதாவில் ஊழல் செய்த திமுக முக்கியஸ்தர்களிடம் இருந்து நீங்கள் கல்லா கட்டியது பற்றி உங்க கட்சிக்காரர்களே மேலிடத்திற்கு அம்பலப்படுத்தி போட்டு கொடுத்ததினால் தான் நீங்கள் பாஜகவில் இருந்து விலகியதாக சொல்லப்படுவது உண்மையா?

# இந்தியா முழுமைக்குமான பல பிசினஸ்களை பல பினாமிகளை வைத்து செயல்படவும், லாபம் ஈட்டவும் இன்றைக்கும் பாஜகவை ஆளும் மாநில முதல்வர்களின் ஒத்துழைப்பை நீங்கள் பெற முடிவது எப்படி?

# பாஜகவை எதிர்ப்பது போல பேசும் அண்ணாமலையே, இந்தியாவிற்கு ஆர்.எஸ்.எஸ் தான் பேராபத்து. அது ஒரு கொலைகாரக் கூட்டம் எனப் பேசும் தைரியம் உமக்குண்டா?

# பாஜக எதிர்ப்பு என்ற பாசாங்கு அரசியல் பலிபீடத்திற்கு தமிழக மக்கள் என்ன பலியாடுகள் என நினைத்தீர்களா..?

ஒருபோதும் அனுமதியோம்!

அண்ணாமலை ஒரு அக்மார்க் பித்தலாட்டக்காரர். ‘வேறவரைக் காட்டிலும் அண்ணாமலையே ஆபத்தானவர்’ என என்னைப் போன்றோர்  ஓயாமல் உரக்க உம்மை அம்பலப்படுத்துவோம்.

சாவித்திரி கண்ணன்

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

₹
Personal Info

Donation Total: ₹1,000.00 One Time