பிரதமர் மோடி இந்தியாவில் இருப்பதைவிட அயல் நாடுகளில் தான் அதிகமாக இருக்கிறார். அந்த அளவுக்கு அயல் நாட்டுப் பயணங்களை அடிக்கடி மேற்கொள்கிறார். ஆனால், இதே நாட்டில் மாநிலங்களின் முதல்வர்கள் வெளிநாடு செல்வது என்றால், ஏகப்பட்ட கெடுபிடிகள், தடைகள்! ஒன்றிய அரசுக்கு ஏன் இந்த ஒவ்வாமை? பஞ்சாப் முதல்வருக்கு ஏற்பட்ட அவமானம் நம்மை பதற வைக்கிறது; எழுதுகிறார், நீதிபதி ஹரிபரந்தாமன்
அதென்னவோ தெரியவில்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் முதல்வர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுப்பது என்பது ஒரு தொடர் வழக்கமாக நடைபெறுகிறது.
தற்போது பஞ்சாப் மாநிலத்தை ஆட்சி செய்கின்ற ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் பகவந்த் மான் வெளிநாடு செல்வதற்கு முயற்சித்த போதெல்லாம் முட்டுக் கட்டை போட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளது பாஜக அரசு. இந்த வகையில் இது வரை நான்கு முறை அனுமதி கோரிய போதும், ஒன்றிய அரசு ஒவ்வொரு முறையும் அனுமதி வழங்க மறுத்துவிட்டது.
இந்திய ஹாக்கி அணி பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஆகஸ்ட் 2024-இல் விளையாடுவதை காண்பதற்காக அனுமதி கோரி இருந்தார். அந்த அணியில் சீக்கியர்கள் தான் மிகப் பெரிய அளவில் இருக்கிறார்கள் என்பதால், அவர்களின் முதலமைச்சர் என்ற வகையில் அவர் அங்கு சென்று அந்த விளையாட்டுப் போட்டியை பார்க்க ஆசைப்பட்டது ஒரு இயல்பான விருப்பமே. அந்த விளையாட்டு வீரர்களுக்குமே தங்கள் முதலமைச்சர் வருவது உற்சாகம் தந்திருக்கும். ஆனால் ஒன்றிய அரசு அவர் பிரான்ஸ் நாடு செல்வதற்கான அனுமதியை மறுத்துவிட்டது.
2026 ஜனவரியில் பிரிட்டன் மற்றும் இஸ்ரேலுக்கு சென்று பஞ்சாப் மாநிலத்திற்கு முதலீட்டை கொண்டு வருதற்கான திட்டத்தை பஞ்சாப் மாநில அரசு வைத்திருந்தது .அதற்கான பயணத்தை பஞ்சாப் முதல்வர் திட்டமிட்டு இருந்தார். ஆனால், ஒன்றிய அரசு இந்த பயண அனுமதியையும் வழங்கவில்லை. ஒரு வகையில் இது பஞ்சாப்பின் பொருளாதார வளர்ச்சிக்கு எதிரான ஒன்றிய அரசின் முட்டுக் கட்டையாகவும் பார்க்கப்படுகிறது.

அதே போல, பிப்ரவரி 2026 இல் நெதர்லாந்து மற்றும் செக் குடியரசுக்கு சென்று முதலீட்டை கொண்டு வருவதற்கான பயணத்தையும் பஞ்சாப் முதல்வர் மேற் கொள்ள இந்திய ஒன்றிய அரசிடம் அனுமதி வேண்டினார், அதற்கும் இசைவளிக்கவில்லை.
அடுத்து செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2026-இன் போது ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுகளில் இந்திய ஹாக்கி அணியின் விளையாட்டை பார்ப்பதற்காக செல்வதற்கான அனுமதியும் பஞ்சாப் முதல்வருக்கு அளிக்கவில்லை ஒன்றிய அரசு.
கடைசியாத தற்போது இந்த அக்டோபர் 2026 இல் பிரான்ஸ் நாட்டின் பாரீஸில் நடைபெற்ற உணவு கண்காட்சியில் கலந்து கொள்ள பஞ்சாப் முதல்வரும் மற்றும் அரசின் அதிகாரிகள் சிலரும் அடங்கிய குழுவினரின் விண்ணப்பமும் ஏற்கப்படவில்லை, ஒன்றிய அரசால்!
அந்த உணவு கண்காட்சி உணவு சம்பந்தமான தொழிலில் உலக அளவில் ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் வியாபாரிகள், உணவு உற்பத்தியாளர்கள், பேக்கேஜ் உணவு தயாரிப்பவர்கள் சூப்பர் மார்க்கெட் முதலாளிகள் என பலரும் கலந்து கொள்ளும் நிகழ்வு. உணவு தொழில் சம்பந்தமாக பஞ்சாப் மாநிலம் பயன்பெற வேண்டும் என்பதற்காக பஞ்சாப் மாநில அரசு இந்த கண்காட்சியில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்திருந்தது.
கடந்த நான்கு முறை போல அல்லாமல் இந்த முறை பஞ்சாப் மாநில அரசு, பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. ‘ஒன்றிய அரசு ஒரு தலைபட்சமாக அனுமதி மறுப்பது சட்டத்தை மதிக்காத போக்கு’ என்றும், ‘கூட்டாட்சிக் கோட்பாடுகளுக்கு எதிரானது’ என்றும் குறிப்பிட்டு, ‘பஞ்சாப் முதல்வர் பயணம் செய்ய வகை செய்ய வேண்டும்’ என்றும் கோரியது அந்த வழக்கு.

”பிரான்ஸ் செல்வதற்கு பஞ்சாப் முதல்வருக்கு அனுமதி மறுத்த ஒன்றிய அரசின் அணுகுமுறையானது எதிர்கட்சி ஆட்சி செய்யும் முதல்வர்களை பாரபட்சமாக பார்ப்பதை காட்டுகிறது” என எச்சரித்து உடனே வெளியுறவுத் துறை அமைச்சகம் அனுமதி வழங்க உத்திரவிட்டது, பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம்.
இதன் அடிப்படையில் பிரான்சுக்கு மாநில அரசின் குழுவுடன் சென்றார், பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான்.
கண்காட்சி முடிந்து திரும்புகையில், டெல்லி விமான நிலையத்தில் 3 மணி நேரம் முடக்கி வைக்கப்பட்டார் பஞ்சாப் முதல்வர். அதற்குப்பின் முதல் அமைச்சர் பகவந்த் மான் அறிவிக்கப்படாத பொருட்களை கொண்டு வந்ததாக கூறி ரூபாய் 50,000 அபராதம் விதித்தது, ஒன்றிய அரசின் சுங்கத்துறை.

இந்தியாவின் ஒரு சாதாரண குடிமகன் கூட எளிதில் வெளிநாடு செல்ல முடிந்த ஒரு காலகட்டத்தில், மிகப் பெரும் தொழில் அதிபர்கள் அம்பானி, அதானி தொடங்கி, சாதாரண சிறு தொழில் அதிபர்கள் கூட வெளி நாட்டிற்கு சென்று முதலீடு செய்ய முடிந்த ஒரு சூழலில், இந்தியாவின் மா நில முதல்வர்களின் பயணத்திற்கு இவ்வளவு கெடுபிடிகளும், தடைகளும் ஒன்றிய அரசு செய்வானேன்?
பஞ்சாப் முதல்வர் மட்டுமல்ல. டெல்லியின் முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், மேற்கு வங்கத்தின் முதல்வராக இருந்த மம்தா பானர்ஜிக்கும், கேரளத்தின் முதல்வராக இருந்த பினராயி விஜயனுக்கும் தெலுங்கானாவின் முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கும் வெளிநாடு செல்ல அனுமதி மறுத்துள்ளது, பாஜக ஒன்றிய அரசு.

ஆனால், காங்கிரசும் இதற்கு முன்னர் பாஜக அரசு போன்று போன்றே நடந்துள்ளது. 2011 ஆம் ஆண்டில் ஜார்க்கண்டில் முதல்வராக இருந்த பாஜகவை சேர்ந்த அர்ஜுன் முண்டா விற்கு தாய்லாந்து தலைநகர் பேங்க் ஆப் செல்வதற்கு அனுமதி மறுத்தது காங்கிரஸ் அரசு. இந்திய பொறியியல் கண்காட்சிக்கு அவரும் அவருடைய குழுவும் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
எதிர்க்கட்சி முதல்வருக்கு மட்டுமல்ல தன் கட்சி முதல்வர் தருண் கோகாய் அவர்களுக்கும் 2012ல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் செல்வதற்கு அனுமதி மறுத்தது காங்கிரஸ் அரசு. தரும் கோகாயின் பல வெளிநாட்டு பயணங்களுக்கு அனுமதி அளித்த காங்கிரஸ் அரசு 2012 இல் அனுமதி மறுத்தது.
இதற்கு முன்னர், பஞ்சாப் மாநிலத்தின் சட்ட சபையை கூட்டுவதற்கு மறுத்தார் கவர்னர். உச்ச நீதிமன்றம் சென்று வழக்கு போட்ட பின்னரே, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சட்டசபை கூட்டப்பட்டது.
எனவே ஒரு மாநிலத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை ஒன்றிய அரசு. இது அந்த முதல்வருக்கு இழைக்கப்படும் அவமரியாதை அல்ல. அதற்கு மாறாக, இது அந்த மாநில மக்களுக்கு இழைக்கப்படும் அவமரியாதை.
குறிப்பாக எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் முதல்வர்கள் என்றால் அனுமதி மறுப்பு என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. விதிவிலக்காக தமிழகத்தை பொறுத்த வரை இங்கு இது வரையிலான முதல்வர்களுக்கும், இன்றைய முதல்வருக்கும் இது போன்ற தடைகள் விதிக்கப்பட்டதில்லை. இது நம் தமிழக முதல்வர்கள் மத்திய அரசுக்கு மிக இணக்கமாக இருந்திருக்கிறார்கள் என்பதாகக் கூட இருக்கலாம்.
எப்படிப் பார்த்தாலும் ஒவ்வொரு மாநில முதல்வர்களும் அந்தந்த மாநில மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆட்சித் தலைவர்களாகும். பாஜக அரசின் பாரபட்ச அணுகுமுறைகள் எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களின் முதல்வர்கள், ஒன்றிய அரசின் அடிமைகளா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
ஹரிபரந்தாமன்

மேனாள் நீதிபதி
சென்னை உயர் நீதிமன்றம்























Leave a Reply