சிறைச்சாலைக்குள் மலர்ந்த எழுத்தாளர்கள்!

-சாவித்திரி கண்ணன்

ஐ.ஏ.எஸ் அதிகாரியாக, தலைமை செயலாளராக அறியப்பட்டவரான இறையன்பு, ஒரு தீவிர எழுத்தாளர் மற்றும் சமூக செயற்பட்டாளர் என்பது தான் அவரது தனித்துவம்! சமீபத்தில் கடலூர் மத்திய சிறைச்சாலைக்குள் தங்களுக்குள் மறைந்திருந்த 81 படைப்பாளிகளை அவர் கண்டெடுத்து அவர்களின் நூல்களை வெளிக் கொண்டு வந்துள்ளார்! இது எப்படி சாத்தியமாயிற்று?

இறையன்பு எழுத்தை ஒரு தவமாக கொண்டவர். அதனால் தான் முழு நேர எழுத்தாளர்களை விடவும் 150 புத்தகங்களுக்கும் அதிகமாக எழுதிக் குவித்துள்ளார். வாழ்க்கையை திட்டமிட்டு கடமைக்கு முக்கியத்துவம் தருவதில் அவரை இன்னொருவர் விஞ்ச முடியாது. அதிகாலை 4 மணி தொடங்கி இரவு 10 மணி வரை முறையான திட்டமிடல்களுடன் அவர் செயல்படுவதால் எண்ணியவற்றை எல்லாம் செவ்வனே செய்துவிடுகிறார்! அவரிடம் எதிர்மறை சிந்தனைகளே இருக்காது. எல்லாவற்றிலும் நேர்மறை சிந்தனையாளர். இதனால் தான் அவரால் ஏகப்பட்ட சமூகப் பணிகளை வெற்றிகரமாக செய்ய முடிகிறது.

ஒருவர் எழுத்தாளராக இருப்பது எளிது. ஆனால், பல எழுத்தாளர்களை வளர்த்தெடுப்பது அரிது. எனக்குத் தெரிந்து சுந்தர ராமசாமி அவர்களும், ஜெயந்தன் அவர்களும் தான் சக மனிதர்களிடம் உள்ள எழுத்தாற்றலை கண்டறிந்து பல எழுத்தாளர்கள் உருவாக தூண்டுகோளாக இருந்துள்ளனர்.

ஆனால், இவர்களுக்கும் ஒருபடி மேலாக, எழுத்தாளர்களை உருவாக்குவதில் இறையன்பு அசத்தலான சாதனைகளை செய்து வருகிறார்…என்பதை நம்ப முடியாத ஆச்சரியத்தோடு பார்க்கிறேன்.

உள்ளபடியே ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு எழுத்தாளன் ஒளிந்து கொண்டுள்ளான்.  பல வாழ்க்கை அனுபவங்கள், ரசனைகள் சொல்லப்டாதவையாக, எழுதப்படாதவையாக அவனுள், அவளுள் கிடக்கின்றன. அதை வெளிப்பட வைப்பதும் ஒரு கலையே. அதில் வெற்றி கிடைக்க சம்பந்தப்பட்ட புதுப் படைப்பாளிகளுடன் ஒரு தொடர் உரையாடலை சாத்தியப்படுத்த வேண்டும். அவர்களை எழுத வைப்பதோடு அதை வாசித்து, விமர்சித்து, வழிகாட்டி, செம்மைப்படுத்த வேண்டும். இதற்கு நம் நேரத்தையும், காதுகளையும் தரத் தயாராக இருக்க வேண்டும். அத்துடன் சகிப்புத் தன்மையும் மிக முக்கியம். இவை அனைத்தும் இறையன்பு அவர்களிடம் தாரளமாக உள்ளன.

இப்படித்தான் கண்ணகி நகரில் ஏற்கனவே முதல் தலைமுறை கற்றல் மையத்தை உருவாக்கி மாணவர்களை எழுதத் தூண்டி 50 புதிய படைப்பாளிகளை அவர்களின் புத்தகத்தை அச்சிட்டுத் தந்து படைப்புகளுடன் அறிமுகப்படுத்தியுள்ளார் இறையன்பு. அவை தற்போது நியூ செஞ்சூரி புத்தக நிறுவனத்தில் விற்பனையாகிக் கொண்டுள்ளது.

அதன் அடுத்த கட்டமாக தற்போது கடலூர் மத்திய சிறையில் ‘சிறைக்குள் முளைத்த சிறகுகள்’ என்ற பெயரில் 81 கைதிகளை எழுத வைத்து 85 நூல்களை கொண்டு வந்துள்ளார், இறையன்பு. அவருக்கு உறுதுணையாக சுமார் ஆறு மாத காலம் இந்தப் படைப்பாளிகளின் படைப்புகளை படித்தும், விவாதித்தும், பிழை திருத்தியுமாக ‘எழுதுக’ என்ற பெயரிலான ஒரு இயக்கமே செயல்பட்டுள்ளது. இதனை நடைமுறையில் சாத்தியப்படுத்த கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆதித்தியா செந்தில் குமாரும், நியு செஞ்சுரி புத்தக நிறுவனத் தலைவர் சந்தானமும் கை கொடுத்துள்ளனர்.

புத்தகத் தலைப்புகளை பார்க்கும் போதே சிலிர்க்கிறது..!

சொல்ல மறந்த கதை, நெருடல், ஏன் வேண்டும் உரிமை? காகிதப் பூக்கள், முன் போதை பின்விளைவு, சிறைச் சாரல், ஒன்றுமில்லை, தேன் குடிக்காத கரடி, கறை படிந்த சட்டையும், கசங்கிய வாழ்க்கையும், குல தெய்வம், அபிமன்யுவின் அம்பு..இப்படியாக உள்ளன.

உண்மையில் இந்த முயற்சி ஒருவரை எழுத்தாளராக்கும் முயற்சி மாத்திரமன்று. தன்னை ஒருவன் இந்த உலகத்திற்கு யார் எனப் பிரகடனப்படுத்தும் முயற்சியாகும். ஒரு எழுத்தாக்கத்தின் உருவாக்கத்தில் ஒருவன் தன் சுயத்தை தானாகக் கண்டடையும் பிராசஸும் நடந்து விடுகிறது என்ற வகையில், புற விடுதலை கிடைக்கும் முன்பே அந்த கைதிகளுக்கு அகவிடுதலை கிடைத்து விடுகிறது என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

பொதுவாக ஒரு சில பெரிய எழுத்தாளர்களிடம் ஒரு பெரிய கர்வ உணர்வு இருக்கும். அவர்கள் தன்னைத் தவிர வேறு யாருமே சிறந்த எழுத்தாளனே இல்லை என்று கருதும் போக்கை பார்க்க முடியும். ஆனால், பெரிய எழுத்தாளரான இறையன்புவோ எல்லா மனிதர்களுக்குள்ளுமே எழுதப்படாத பல நூல்கள் மறைந்துள்ளன. அதுவும் குரல் இல்லாதவர்களான சிறைவாசிகளுக்குள் சொல்லப்படாத குமுறல்கள், துரோகத்தை சந்தித்த அனுபவங்கள், ஏமாற்றப்பட்ட நிகழ்வுகள், ஷண நேரக் கோபத்தால் சிறைக்குள் வர நேர்ந்தமை..என்று சொல்லப்படாத அனுபவங்கள் அனேகம் இருக்கும்…என்பதை உய்த்தறிந்து சிறைக் கைதிகளை எழுத்தாளர்களாக்கி உள்ளார். இறையன்புவின் முன்னெடுப்பு ஈடு இணையற்றது.

சாவித்திரி கண்ணன்

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

₹
Personal Info

Donation Total: ₹1,000.00 One Time