ஜகதல பிரதாபன் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!

-சாவித்திரி கண்ணன்

அன்பில் மகேஸ் எப்படி கைதானார்? அவர் மீதான குற்றசாட்டுகள் என்னென்ன? அவற்றுக்கான ஆவணங்கள், ஆதாரங்கள் கிடைத்தனவா? இதில் யார்? யார் சம்பந்தப்பட்டுள்ளனர்? அன்பில் மகேஸ் விவகாரத்தில் திமுக தலைமை என்ன முடிவெடுக்கும்..?  ஆளுனர்  அனுமதி மறுப்பாரா?

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன் இன்று காலையில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து அவர் கைதாகியுள்ளார்.

இந்தச் சூழலில், சென்னை அமைந்தகரையில் உள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட  அன்பில் மகேஸ், வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தினர்.

தமிழ் நாடு தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பின் இளங்கோவன் சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் புகார் அளித்ததின் அடிப்படையில் ஏற்கனவே அன்பில் மகேஷிடம் பல மணி நேர விசாரணையும், அவரது வீட்டில் கடந்த மாதம் (செப்டம்பர் 18 ஆம் தேதி) ரெய்டும் நடந்தன. இதில் நிறைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அன்பில் மகேஸ் வீட்டில் ரெய்டு

சென்னை உயர் நீதிமன்றத்தில் செப்டம்பர் 10ஆம் தேதி மத்திய குற்றப் பிரிவு போலீசார் தெரிவித்த தகவலில்  இந்த வழக்கு தொடர்பாக இது வரை தனியார் பள்ளிகள் 177 புகார்கள்  தந்துள்ளன.

# தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் நிரந்தர அங்கீகாரத்திற்கு லஞ்சம்

# பள்ளி தர உயர்வு செய்வதற்கு லஞ்சம்

# DTCP அனுமதிக்கு லஞ்சம்.

# பள்ளி அங்கீகாரத்தை புதுப்பித்தலுக்கு லஞ்சம்..

என ஒவ்வொரு அரசு அனுமதிகளைப் பெறுவதற்கும் உரிய ஆட்களை வைத்து வசூல் வேட்டை நடத்தியுள்ளார் அன்பில் மகேஸ்!

அரசகுமார் கைது

இந்த விவகாரத்தில் ஏற்கனவே சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து, இவ் வழக்கில் தொடர்புடைய பி.டி.அரசகுமாரை  நான்கு மாதங்களுக்கு முன்பே கடந்த ஜூன் 27ஆம் தேதி போலீசார் கைது செய்தனர் என்பது கவனத்திற்கு உரியது. அரசகுமார் நடத்தப்பட்ட விசாரணையில் செல்பேசி உரையாடல்கள், ஆவணங்கள், வங்கிப் பரிவர்த்தனை விவரங்கள், கைபேசி பதிவுகள் உள்ளிட்டவற்றால் முறைகேடுகள் ஊர்ஜிதமாகியுள்ளன.  அரசு அதிகாரிகளும் இதற்கு உதவியுள்ளனர். அரசகுமாருக்கும் , அன்பில் மகேஷ்க்கும் இதைல் உதவிய முத்துக்குமார் என்பவர் தலைமறைவானத்தில் போலீசார் அவரை தேடி வருகின்றனர். இதில் பதற்ற மடைந்த முத்துக்குமார் குடும்பத்தாரிடம், ”முத்துகுமார் பாதுகாப்பாக இருக்கிறார். நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் பயப்பட வேண்டாம்” என அன்பில் மகேஷ் கூறியதாக, நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்தனர். ஆக, ‘முத்துக்குமார் கைதானால் நடந்த அனைத்தையும் சொல்லி விடுவார் என்பதால் தான் அன்பில் மகேஷ் இவ்வாறு செய்துள்ளார். இவரை வெளியில் விட்டால் சாட்சிகளை கலைத்து விடுவார்’ என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முத்துக்குமாரின் வண்டி ஓட்டுனர் சுரேஷ் என்பவர் தன்னிச்சையாக வெளியிட்ட ஆடியோக்கள் மூலம் கட்டுக்கட்டாக பணம் அன்பில் மகேஷ் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அவர் மனைவியிடம் தரப்பட்டது அம்பலப்பட்டுள்ளது. அந்த வகையில் சுமார் 420 கோடிகள் வசூலிக்கப்பட்டுள்ளதாம். இதில் அரசகுமாருக்கு 50 கோடிகள், முத்துக்குமாருக்கு 20 கோடிகள் போக மீதி அன்பில் மகேஷ் வசம் தரப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த வண்டி ஓட்டுனரின் தாய் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கையில் அவர் தன் தாயின் மருத்துவ அறுவை சிகிச்சைக்கு அன்பில் மகேஷின் மனைவியிடம் ஒன்றரை லட்சம் உதவி கேட்க, அதில் அவர் ஆத்திரப்பட்டு அவரை விரட்டியடித்து வேலையில் இருந்து நீக்க உத்திரவிட, அந்த ஏழை ஓட்டுனர் இந்த உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளார். இது காவல்துறைக்கு பேருதவியாகிவிட்டது. அவர் மூலம் எங்கெங்கு எப்படியெப்படியெல்லாம் வசூல் வேட்டை நடந்தன என்ற விபரங்களை போட்டு வாங்கி விட்டனர்.

அமைச்சர் கல்வி நிறுவனங்களிடம் கறார் காட்டி வசூலிக்கும் பணத்தை அவர்கள் மாணவர்களின் பெற்றோர்களை கசக்கி பிழிந்து வசூலித்து தான் தர முடியும். ஏற்கனவேயான கல்வி கட்டணங்களை கட்ட சிரமப்படும் பெற்றோர்களிடம் மேலும் கொஞ்சம் கல்வி கட்டணத்தை அதிகப்படுத்தி தான் அமைச்சருக்கும், தரகர்களுக்கும் பணம் தருவார்கள் தனியார் பள்ளிகள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த புதிய ஆட்சியில், ”எதற்காகவும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் பணம் தரத் தேவையில்லை” என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசினார். அப்போதே தனியார் பள்ளி நிர்வாகங்கள் சென்ற ஆட்சியில் தாங்கள் கோடி, கோடியாக லஞ்சம் தந்ததாக குறிப்பிட்டது அனைவருக்கும் ஞாபகம் இருக்கலாம்.

அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால் இப்படியான நிலைமை சாத்தியப்பட்டு இருக்காது. முதலமைச்சர் விஜய், ”நாங்கள் மக்கள் பணத்தை தொட மாட்டோம். தொட்டவர்களை விட மாட்டோம்” என அடிக்கடி சொல்லி வந்தார். ”வெறும் பேச்சில் என்ன இருக்கிறது? ஐந்து மாதங்கள் ஆகின்றன.. செயலில் காட்ட வேண்டுமல்லவா?” என்ற கேள்வி மக்களிடம் இருந்து எழுந்தது.

இன்றைக்கு நீதிமன்றம் முன் ஜாமீன் தர மறுத்ததையடுத்து தான் தவெக அரசு துணிந்து கைது செய்துள்ளது.

ஆனால், உச்ச நீதிமன்றத்தில் அன்பில் மகேஸ் செல்வாக்கான வழக்கறிஞர்களை வைத்து வாதாடுவார். அப்போது ”கவர்னரிடம் அனுமதி இல்லாமல் முன்னாள் அமைச்சரை கைது செய்தது தவறு” என்ற வாதங்கள் வைக்கப்பட்டு விடுதலையாகவும் வாய்ப்புண்டு.

அன்பில் மகேஸ் கைதாகி சென்ற போது!

மத்திய ஆட்சியாளர்கள் ஊழலில் ஈடுபடும் மாநில அரசியல்வாதிகளை  தங்களிடம் மண்டியிட வைப்பதற்காகவே தங்கள் ஏஜெண்டான கவர்னருக்கு இத்தகைய அதிகாரத்தை தந்து வைத்துள்ளனர். ஆக, அன்பில் மகேஸை காப்பாற்ற வேண்டும் என்றால், திமுக தலைமைக்கு மத்திய பாஜக தலைமை மறைமுகமாக சில நிர்பந்தங்கள் தர வாய்ப்புள்ளது.

அதே சமயம் அன்பில் மகேஸ் விவகாரத்தில் அவர் பார்டி பண்ட் என்ற பெயரில் வசூல் செய்து விட்டு கட்சித் தலைக்கு உரிய வகையில் அதை ஒப்படைக்காமல் ஏமாற்றியுள்ளதாக பேச்சு அடிபடுகிறது. மேலும் தேர்தல் செலவுக்கே கட்சித் தலைமையிடம் ரூ 40 கோடிகள் வாங்கியுள்ளார்.

இத்துடன் தனியார் பள்ளி ஆசிரியைகள் சிலருக்கும் இவர் பாலியல் தொல்லை தந்துள்ளார் என்பதும் காவல் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆக, அன்பில் மகேஸ் விவகாரத்தில் அப்பட்டமாக பல உண்மைகள் வெளிவந்த சூழலில் திமுக தலைமை அன்பில் மகேஸ் விவகாரத்தில் வழக்கம் போல கண்டண அறிக்கை வெளியிட்ட போதிலும், அதிகாரபூர்வமாக என்ன செய்யப் போகிறது என்பது தெரியவில்லை.

கைது செய்யப்பட்ட நிலையிலும் வாகனத்தில் சிரித்த முகத்தோடு தான் அன்பில் மகேஸ் பயணப்பட்டார். அரசியல்வாதிகளிடம் காணப்படும் இந்த அசாத்திய துணிச்சல் மலைக்க வைக்கிறது!

சாவித்திரி கண்ணன்

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

₹
Personal Info

Donation Total: ₹1,000.00 One Time