கண்ணதாசன் ஒரு அனுபவச் சுரங்கம்!

-'மனிதத் தேனீ' சொக்கலிங்கம்

கண்ணதாசன் நூற்றாண்டு சிறப்பு கட்டுரை;

கண்ணதாசன் என்ற பெயரை உச்சரிக்கும் போதே உற்சாகம் பீறிட்டு வரும். காரணம், குழந்தை மனதுக்கு சொந்தக்காரரான அவரது கவி ஆளுமை! அவர் வாழும் வரை தமிழ் அவரிடத்தில் கட்டுண்டு கிடந்தது. அவர் வாழ்விற்கு பிறகு தமிழ் அவர் பெயரை உச்சரித்துக் கொண்டிருக்கிறது. அவரது அனுபவங்களே ஆயிரமாயிரம் பாடல்களாக மலர்ந்தன. அவை கேட்போரின் அனுபவங்களை மீட்டுத் தந்தன;

சிவகங்கை மாவட்டத்தின் சிறுகூடல் பட்டியில் 1927ஆம் ஆண்டு ஜுன் மாதம் 24ஆம் நாள் சிறகை விரித்து, சிகாகோ மண்ணில் (17.10.1981) வாழ்வை முடித்துக் கொண்டவர். எட்டாவது வகுப்பு வரை மட்டுமே படித்தவர். ஆனால் பிறருக்கு எட்டாதக் கருத்துக்களைக் கொட்டியவர். பிறந்தபோது முத்து (முத்தையா) என்று பெயர் தாங்கியவர்.

“பத்து வயதானதொரு பாலகன் உன் சன்னதியில்
பாடியதும் நினைவில் இலையோ
முத்து என இட்ட பெயர் முத்தாக வேண்டுமென
முறையீடு செய்ததிலையோ!
தமிழில் ஒரு கவிமகனை சிறுகூடல் பட்டிதனில்
தந்த மலையரசித் தாயே!

என மலையரசி கோயிலில் கவிதை வடித்தவர். அப்போது அவர் வயது பத்து.

அவர் உட்கார்ந்து எழுதிய கல்மேடை இப்போதும் சிறுகூடல்பட்டியில் உள்ளது. அதில் உட்கார்ந்து பலரும் அவரை நினைத்து வழிபட்டு வருவது வழக்கம். நானும் உட்கார்ந்து வழிபட்டிருக்கிறேன்.

அவர் கண்ணதாசன் பெயர் தாங்கியதே ஒரு சுவையான சம்பவத்தின் மூலம் தான். வேலை கேட்டு ஒரு பத்திரிகை அலுவலகத்துக்குச் சென்றார். அந்த அலுவலகத்தில், கவிஞரிடம் இதற்கு முன்பு ஏதாவது இதழ்களில் எழுதியிருக்கிறீர்களா? எனக் கேட்க “ஆமாம்” என்றார் கவிஞர். ”என்ன பெயரில் எழுதுகிறீர்கள்?” என அடுத்த கேள்வி சட்டெனக் கேட்கப்பட கொஞ்சமும் தயக்கமில்லாமல் “கண்ணதாசன் என்ற பெயரில் எழுதுகிறேன்” என்றார். அப்போது “தாசன்” பெயரைச் சேர்த்து சொல்வது வழக்கமாக இருந்த காலம். பின்னர் பெயருடன் எழுத்தும் அவர் வசப்பட்டது.

‘மாட்டுவண்டி’ போகமுடியாத ஊருக்குள் கூட கவியரசு கண்ணதாசனின் ‘பாட்டு வண்டி’ பயணித்தது. செப்டம்பர் 14, 1978 நெற்குப்பை என்ற செட்டி நாட்டில் ஊரிலுள்ள சுப்பிரமணியசாமி கோவில் குடமுழுக்கு விழா மலரை அச்சிட்டவன் என்ற முறையில் அவரருகில் அமரும் வாய்ப்புப் பெற்றேன். 120 நிமிடங்கள் பேசினார். மூன்று முறை எழுந்து சென்று சிறுநீர் கழித்து விட்டு வந்தவர், “நான் செய்த தவறுகளின் விளைவு இது” என்றார்.  மடை திறந்த வெள்ளமென வரும் மக்கள் கூட்டத்தை தனது ஆன்மீகப் பேச்சால் கட்டிப் போட்ட  எங்கள் நகரத்தார் என்றாலும், இந்த நாட்டுக்கே உரியவர் அவர்.

கண்ணதாசன் மதி நுட்பமிக்கவர்.  பல்வேறு பொது மேடைகளில் அவர் பேசியதெல்லாம் தற்போதும் என் நெஞ்சில் பசுமையாக உள்ளது!

மக்கள் கேள்விகளுக்கு சாதுர்யமாகவும், மதிநுட்பத்தோடும், சமயோசிதத்தோடும் பதில் சொல்லும் ஆற்றலைப் பெற்றவர் கவியரசர். அது கேட்பவர்களை வியப்பில் ஆழ்த்தும். ஆழ்ந்து யோசிக்க வைக்கும். அதற்கு சில உதாரணங்களைச் சொல்ல வேண்டுமானால்…

“இறைவன் படைப்பில் தங்களை அதிசயிக்க வைத்தது எது?” என்ற கேள்வி அவரிடம் கேட்கப்படுகிறது. அதற்கு அவர், “ஒரு துளி விந்து ஆயிரக்கணக்கான நரம்புகளையும், எலும்புகளையும் கொண்ட குழந்தையாவது அதியசமல்லவா?” என்கிறார்.


”அரசியல் மேடைக்கும், இலக்கிய மேடைக்கும் என்ன வித்தியாசம்?” என அவரிடம் கேள்வி எழுப்பிய போது, “அரசியல் மேடை மனிதனை முட்டாளாக்குவதற்காகப் போடப்படுவது. இலக்கிய மேடை முட்டாள்தனத்தை தெளிய வைப்பதற்காகப் போடப்படுவது” என்கிறார். அவர் அரசியலில் இருந்தாலும், இந்த பதில் அவரின் உண்மைத்தனத்துக்கு உரைகல்.

தந்தை மகனிடம், ”மீன்கள் தண்ணீரில் வாழ்வது அதிசயமாகத் தெரியவில்லையா?” என்கிறார். அதற்கு மகன் தந்தையிடம், ”அந்தத் தண்ணீரிலே அவை கொதித்து குழம்பாகிறதே” என்றான். இது தான் பகுத்தறிவு என்பதை கவியரசு நமக்கு சொல்கிறார்.

”உங்கள் புத்தகத்தைப் படிப்பவர்களுக்கு நீங்கள் சொல்லும் புத்திமதி என்ன?” என்ற கேள்விக்கு, “புத்தகங்களிலுள்ள கருத்துக்களைப் பின்பற்றுங்கள். அதன் ஆசிரியரைப் பின்பற்றாதீர்கள்” என போட்டு உடைக்கிறார். இதனைச் சொல்ல துணிச்சல் வேண்டும். இதற்கும் ஒரு படி மேலே சென்று “எப்படி வாழக்கூடாது என்பதற்கு எனது வாழ்க்கையின் முற்பகுதியையும் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு காந்தியடிகளின் சுயசரிதையும் உங்களுக்கு வழிகாட்டும்” என்று வனவாசத்தில் சொன்னவர் கவியரசர்.

“பொன்னம்மாள் சமையல் என்றால் பூமியெல்லாம் வாசம்  வரும். கொத்துமல்லி சட்னியும் கோவைக்காய் பொரியலுமாய் அள்ளி அள்ளி வைப்பாள். அருகிருந்து பார்த்திருப்பாள். செவி பழுது ஆனாலும் சேவை சிறப்பால் என் கவி பழுது ஆகாமல் காத்துவரும் ராஜாத்தி” என மனைவியை அவர் சிலாகித்தது மனைவியின் மீதான பிடித்தத்துக்குச் சான்று.

1944-ஆம் ஆண்டுக்கும் 1981-க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் 4,000 கவிதைகளையும் 5,000த்திற்கும் அதிகமான திரைப்படப் பாடல்களையும் எழுதியிருக்கிறார். கண்ணதாசனின் சொல்லாட்சிக்கு சான்றாக அமைந்த திரைப்படப் பாடல்கள் ஏராளம். சங்ககால தமிழ் இலக்கியத்தின் கற்பனைச் செறிவும், சொல்லாட்சியும் பாமரனைச் சென்றடையும் வகையில் திரைப்படப் பாடல்களில் அவற்றைப் புகுத்தியவர்.

பாட்டு என்பது இசையும் கவிதையும் சேர்ந்த கலவை. திரைப்படப் பாடல்கள் என்பவை படம் பார்ப்பவர்களை கதா பாத்திரங்களுடன் உணர்வுபூர்வமாக ஒன்றிணைக்க வேண்டும். கவிஞர் எழுதிய பாடல்கள் பல இந்தப் பணியை அற்புதமாகச் செய்தன!

பட்டினத்தார், பத்திரிகிரியார் போன்றோரின் வரலாற்றை எழுதியதால் அவர்களுடைய தத்துவங்களின் பிரதிபலிப்பு கவிஞரின் பாடல்களில் வெளிப்பட்டது. தத்துவ ஞானிகள் கூறிய விஷயங்களை எளிமையாக்கி பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் பாடல்களில் புகுத்திய சாதனை கவிஞருக்கே உரித்தானது.

தன் பேச்சின் வாயிலாக ஒலிநாடா கேட்கும் ஆர்வத்தை விதைத்தவர் கவியரசு கண்ணதாசன்.“அர்த்தமுள்ள இந்துமத”த்தை கண்ணதாசன் குரலில் தம்புரா பின்னணியில் கேட்டுப் பாருங்கள். அவரது குரலும், தம்புராவும் மனதுக்கு நிம்மதி அளிக்கும். உலகமே உங்கள் வசப்பட்டது போல உணர்வீர்கள்.

கண்ணதாசன் மொத்தம் இருநூற்று எழுபது நூல்களை எழுதியிருக்கிறார்!

இதில் அவர் எழுதிய புத்தகங்கள் மீண்டும் மீண்டும் மறுபதிப்பாகி வருவது அவர் எழுத்தின் ஆளுமைக்கு அடையாளமாகும்.

இதில் கண்ணதாசன் என்றதும், நமக்கு உடனே நினைவுக்கு வரக் கூடியதான அவரது அர்த்தமுள்ள இந்துமதம் ( 10 பாகங்கள்) தான் தமிழ்ப் பதிப்பகச் சூழலில் நூற்றுக்கணக்கான பதிப்புகளைக் கடந்து மூன்றாம் தலைமுறைத் தமிழர்களால் வாசிக்கப்படும் மிகச் சிறந்த நூலாக இருக்கிறது. அடுத்தாக வனவாசம் நாற்பது பதிப்புகளையும் மனவாசம் முப்பது பதிப்புகளையும் கண்டு தமிழ் புத்தக வரலாற்றின் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. ‘வனவாசம், மனவாசம்’ நூல்களை படிக்கும் போது இவ்வளவு நேர்மையாக ஒருவர் தனது சுயசரிதையை ரத்தமும், சதையுமாக ஒளிவு மறைவின்றி எடுத்து வைக்க முடியுமா..? என்று மலைப்பே ஏற்படுகிறது.!

அதே சமயம் கண்ணதாசனை இந்து மத அடையாளத்துக்குள் மட்டும் அடைத்துவிட முடியாது. மதங்கள் வேண்டுமானால் வேறுவேறாக இருக்கலாம், ஆனால் இறைவனை நினைத்து உருகும் ஆன்மிகம் என்பது ஒன்றுதான் என்பதை அவர் படைத்த ‘இயேசு காவியம்’ படிக்கும் எவரும் உணர முடியும். ஏசுகாவியம் எழுதுவதற்காக குற்றாலத்தில் அருட்தந்தை தம்புராஜ் அவர்களுடன் இருந்தபோது தினமும் காலையில் குளித்து நெற்றி நிறைய விபூதி பூசிய பின்னர் “ஏசு காவியம்” எழுதத் தயாராகிவிடுவார். பகல் முழுவதும் எழுத்துப் பணி தொடரும். மாலையில் அவர் மது அருந்துவார் என்பதை உணர்ந்த அருட்தந்தை “தேவையெனில் மது அருந்தி ஓய்வெடுங்கள்” என்றார். அதற்கு கவிஞர், இந்தப் பணி முடியும் வரை மது அருந்தமாட்டேன். இது உலக மக்களின் உயர்ந்த நூல் என்பதை என் மனம் சொல்கிறது என்றார். உடனிருந்தவர்கள் நெகிழ்ந்து போனார்கள்.

1977 தேர்தலில் எம்.ஜி.ஆர். வெற்றி பெற்று, தமிழக முதல்வரானார். அவர் கண்ணதாசனை 28-3-1978-ல் ‘அரசவைக் கவிஞர்’ ஆக நியமித்தார். கண்ணதாசன் பேராற்றல் மீது அன்றைய முதல்வர் எம் ஜி ஆர் கொண்ட ஈடுபாட்டின் வெளிப்பாடு  அவர் தமிழக அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டதாகும். அப்போது எம்.ஜி.ஆரை சந்தித்த கவிஞர், ஆமா.. நீங்க எந்தக் கட்சி? எனக் கேட்டாராம். எம்.ஜி.ஆர்.வெலவெலத்துப் போனார். அண்ணா தி.மு.க. என்றாராம். உடனே கவிஞர், அண்ணா, தி.மு.க.வைச் சேர்ந்தவர் எனத் தெரியும். நீங்கள் எந்தக் கட்சி எனக் கேட்கிறேன் என்றாராம். கவிஞரின் சொல்விளையாட்டைப் புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர். எனது கட்சியின் பெயர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று சொன்னவுடன் “அப்படிச்  சொல்லுங்கள்” என கவிஞர் சொல்ல சிரிப்பு அந்த இடத்தை நிரப்பியது என்பார்கள்!

ஒரு கவியரங்கில் பத்து பேர் கவிதை வாசித்தார்கள். அவர்களின் பாடலுக்கு கரவொலி கிடைக்கவில்லை. அதிலும் ஒருவர் வாசித்த கவிதைக்கு கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. காரணம், கவிஞர் கவிதை வாசிக்க வேண்டும் எனக் கூட்டம் காத்திருந்ததுதான். கடைசியில் கவிஞர் கவிதை வாசித்தார். கைத்தட்டல் அடங்க நேரமாயிற்று. கவிஞர் சொன்னார். “யார் கவிதை வாசித்த போது நீங்கள் கூச்சலிட்டீர்களோ அவர் வாசித்தது என் கவிதையாகும். தற்போது நான் வாசித்த கவிதை அவருடையதாகும். புகழ் பெற்றவர் என்பதற்காக கைத்தட்டல் என்பது நல்ல மரபல்ல. நீங்கள் கவிதையை ரசிக்கவில்லை. வாசித்த நபரின் புகழைப் பார்க்கிறீர்கள். இது நல்ல பண்பல்ல” என்றார், கூட்டம் அமைதியாக ஆனது.

கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் என்ற பெயரால் 1988 முதல் மாநகர் மதுரையில் நாங்கள் தொடர்ந்து நற்பணிகள் ஆற்றி வருவதை இந்த மாநகர் அனைவரும் அறிவர்.  கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத்தின் மூலம் ஆண்டு முழுவதும் இலக்கிய சமூகப் பணிகளையும் விழாக்களையும் தமிழ் உணர்வோடும், தேசப் பற்றோடும் நடத்தி வருகிறோம்.  இந்தப் பணிகளுக்காக நாங்கள் யாரிடமும் நன்கொடை வசூலித்ததுமில்லை. வசூல் வேட்டையாடியதுமில்லை. கண்ணதாசன் பெயரால் புகழ் பெற்றோம் என்பதை சொல்லியாக வேண்டும். எங்களது முதல் கூட்டம் 1988-ல் தமிழருவி மணியன் பேசிய கண்ணதாசன் கவிதைகள் ஒரு கண்ணோட்டம் என்ற ஒலி நாடா வெளியீட்டு விழா, மூவாயிரம் பேர் பங்கேற்ற இலக்கியத் திருவிழாவாக கோலாகலமாக நடந்தது!

கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது. 84 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இம்மணிமண்டபம் 1981-ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, 1990ல் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1992ல் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இரண்டு தளங்களைக் கொண்ட இம்மணிமண்டபத்தில் கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேல்தளத்தில் அரங்கமும், கீழ்தளத்தில் 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

பக்குவம் என்ற தலைப்பில் கவியரசர் பேசியது நினைவுகூரத்தக்கது;

‘மனப்பக்குவம்’ என்பது அனுபவங்கள் முற்றிப் பழுத்த நிலை. அந்த நிலையில் எதையுமே ‘இல்லை’ என்று மறுக்கின்ற எண்ணம் வராது.
‘இருக்கக் கூடும்’ என்றே சொல்லத் தோன்றும்.

எனது நண்பரும் முன்னாள் அமைச்சருமான தோழர் நெடுஞ்செழியன் அவர்கள், ஒரு கட்டுரையில் “நாஸ்திகன் தன் கொள்கையில் தெளிவாகவே இருக்கிறான்” என்றும், “ஆஸ்திகன் தான் தடுமாறுகிறான்” என்றும், “கடவுள் இல்லை என்பதை நாஸ்திகன் உறுதியாகச் சொல்லுகிறான்” என்றும், “உண்டு என்பதற்கு ஆஸ்திகன் ஒழுங்காக விளக்கம் தர முடியவில்லை” என்றும் எழுதியிருக்கிறார்.

நல்லது.

‘இல்லை’ என்று சொல்பவனுக்கு எந்தப் புத்தியும் தேவையில்லை. எதைக் கேட்டாலும் ‘இல்லை’ என்று சொல்ல முட்டாளாலும் முடியும். ஆனால் ‘உண்டு’ என்று சொல்பவனுக்குத்தான் அதை நிலைநாட்டப் போதுமான அறிவு தேவைப்படும்.
“பூமிக்குக் கீழே என்ன இருக்கிறது” என்று கேட்டால் எதுவுமே இல்லை, என்று குழந்தைகூடப் பதில் சொல்லிவிட முடியும்.
ஆனால், “அடியிலே நீர்; அதன் கீழே நெருப்பு” என்று சொல்ல விஞ்ஞான அறிவு வேண்டும்.
பாத்திரம் செய்பவனுக்குப் பல நாள் வேலை; போட்டு உடைப்பவனுக்கு ஒரு நாள் வேலை.
நாஸ்திகன் எப்போதுமே தெளிவாக இருக்க முடியும்.

காரணம், எதைக் கேட்டாலும் எந்திரம் போல் ‘இல்லை இல்லை’ என்று மட்டுமே அவன் பதில் சொல்லப் போகிறான்.

ஆஸ்திகன், பிரபஞ்சத்தின் தோற்றம் முதல் இயக்கம் வரையில் கண்டுபிடிக்க முயலுகிறான். ஜனனம், மரணம் இரண்டையும் அவன் தான் ஆராய்கிறான்.

ஆனால், விஞ்ஞானமும் அறியாமல், மெய்ஞ்ஞானமும் அறியாமல், அஞ்ஞானத்தைக் கொண்டு உழலும் நாஸ்திகனுக்கு, ’எல்லாம் இயற்கையாக நடக்கின்றன’ என்று சொல்லத் தெரிகிறதே தவிர, அந்த இயற்கை என்பது என்னவென்று சொல்லத் தெரியவில்லை.

பக்குவ நிலைக்கும், பக்குவமற்ற நிலைக்கும் வேறுபாடு இதுதான்.

‘கடவுளே இல்லை’ என்று வாதாடியவன் எவனும் ‘எனக்கு மரணமே இல்லை’ என்று வாதாட முடியவில்லையே! ‘மரணம்’ என்று உணரப்படும்போதே சிலருக்குப் பக்குவம் வருகிறது. எனக்குத் தெரிந்த மிகப் பெரிய நாஸ்திகர் கூட தமது அந்திம காலத்தில் யார் கொடுத்த விபூதிகளையும் பூசிக் கொண்டார்கள்.

மரணத்தின் பின் எங்கே போகப் போகிறோம்? என்று நிச்சயமாகத் தெரியும் வரை ஈசுவரன் ஒருவன் இருப்பது உறுதி.
நன்கு பக்குவப்பட்டவர்கள், தம் வாழ்நாளிலேயே காணமுடிகிறது.

இப்போதெல்லாம், ‘போலித்தனம் எது? பொய் எது?’ என்பதைக் கண்டுகொள்ளக்கூடிய தெளிவு எனக்கு வந்து விட்டது.
காரணம், வயது மட்டுமல்ல, பக்குவம்.

என் முன்னால் ஒரு வாதியையும், பிரதிவாதியையும் கொண்டு வந்து நிறுத்தி, ‘யார் நிரபராதி?’ என்று சொல்லச் சொன்னால், அவர்களது வாக்குமூலங்கள் இல்லாமலேயே, நான் அவர்களைக் கண்டுபிடிப்பேன்.

என்னுடைய தீர்க்கதரிசனத்துக்கு முதல் அடிப்படை அறிவல்ல; அனுபவம்.
தலைப்பை மீண்டும் நினைவுபடுத்தினால், அதன் பெயரே ‘பக்குவம்’.

பக்குவமாய் வாழுங்கள்; வாழ்வதன் பயனை உணருங்கள்;
வாழ்வின் பலனை அனுபவியுங்கள்’’

இவை தாம் கண்ணதாசன் நமக்கு சொல்லிச் சென்ற ஞானம்!

‘மனிதத் தேனீ’ சொக்கலிங்கம்

நிறுவனர், கண்ணதாசன் நற்பணி மன்றம்

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

₹
Personal Info

Donation Total: ₹1,000.00 One Time