மூன்று நாட்டின் தேர்தல்கள் சொல்லும் முக்கிய செய்திகள் என்ன?

-ச.அருணாச்சலம்

பிரேசலில் லூலா டா சில்வாவின் வெற்றி அமெரிக்காவை அதிர வைத்துள்ளது. செர்பியாவில் மாணவர்கள் தேர்தல் களத்தில் வெற்றியை ஈட்டியுள்ளது இந்தியாவிற்கு நம்பிக்கை அளிக்கிறது. இஸ்ரேலில் போர் வெறியன், உலக மகா கொலைகாரன் நெதன்யாகு வெற்றி கிடைக்குமா? என வெலவெலத்து போயுள்ளார். சர்வதேச அரசியலில் இந்த மூன்று நாட்டு தேர்தல்களும் எப்படி முக்கியத்துவம் பெறுகின்றன என்பதான ஒரு அலசல்;

பிரேசில் அதிபர் தேர்தலில் தோல்வியின் விளிம்பிலிருந்த அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா அக்டோபர்-25,2026 அன்று நடந்த இரண்டாவது சுற்று தேர்தலில் 6 கோடியே 40 லட்சம் வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார் .

அமெரிக்க ஆதரவாளராக களம் இறங்கிய வலதுசாரி வேட்பாளரான ஃபிளேவியோ போல்சொனொராவை 44 லட்சம் வாக்குகள் வித்மியாசத்தில் லூலா தோற்கடித்தார்.

பிரேசில் நாட்டின் முன்னாள் அதிபரும், ஆட்சி கவிழ்ப்பு குற்றத்தில் தண்டனை பெற்ற கைதியுமான ஜெய்ர் போல்சனாரோவின் புதல்வனான ஃப்ளேவியோ தீவிர அமெரிக்க ஆதரவாளர் மட்டுமின்றி இஸ்ரேலின் இனப் படுகொலையை ஆதரித்து குரல் கொடுப்பவர். இத்தகைய போல்சொனோரா பிரேசில் அதிபர் தேர்தலில் ஆட்சியிலிருக்கும் லூலாவை எதிர்த்து போட்டியிட்டார். ஃப்ளேவியோ போல்சொனோரா முதல் சுற்றில் அதிபர் லூலாவை விட அதிகம் வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார். ஆனால் பதிவான வாக்குகளில் 50% க்கும் குறைவாக வாக்குகளை பெற்றதால் வெற்றி தோல்வியை தீர்மானிக்க அந்நாட்டு அரசியல் சட்டப்படி இறுதி சுற்று தேர்தல் அக்டோபர்-25 நடைபெற்றது.

இதில் எண்பது வயது நிரம்பிய லூலா ஏழை எளிய மக்களின் குறிப்பாக பெண்கள் மற்றும் முதியவர்களின் வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார் . முதல் சுற்றில் 45 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்ற லூலா இறுதி சுற்றில் 51.7 % வாக்குகளை பெற்று வெற்றிவாகை சூடினார்.

’’பிரேசில் எந்த நாட்டிற்கும் கொல்லைப்புறமல்ல’’ என்று முழங்கிய லூலா, தேர்தலில் வெற்றி பெற்றது, லூலாவின் பிரிக்ஸ் கூட்டமைப்பு கொள்கைக்கும், பல்முனை உலக கொள்கைக்கும் , இஸ்ரேலின் மனிதப்படுகொலையை எதிர்ப்பிற்கும் கிடைத்த வெற்றியாக ஊடகங்கள் கணிக்கின்றன. அமெரிக்க அதிபரின் அச்சுறுத்தலுக்கும், ஆதிக்க கொள்கைகளுக்கும் ஈடு கொடுத்து லூலா நின்றதால், இன்றும் நின்று கொண்டிருப்பதால் அமெரிக்க துருவத்தில் டிரம்ப் நிலைநாட்ட விரும்பும் மன்றோ கொள்கையை  எதிர்த்து நிற்கும் தலைவராக லூலா விளங்குகிறார் .

லூலா நான்காவது முறையாக அடைந்த வெற்றி அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்த்த அசாதாரண வெற்றி என பத்திரிக்கையாளர்கள் கணிக்கின்றனர். டெக் ஜெயண்ட்ஸ் என அழைக்கப்படும் மெட்டா( வாட்ஸ் ஆப், இன்ஸ்டா,

போஸ் புக்) போன்ற டிஜிட்டல் ஆயுதங்களின் மூலம் மக்களின் வாழ்வை சூறையாடும் சிலிக்கான் வேலி தொழில்நுட்ப பிரபுக்களை எதிர்த்து, அவர்களின் பிரச்சார பலத்தை முறியடித்து, அவர்கள் ஏற்படுத்திய தடைகளை தகர்த்தெறிந்து லூலா இந்த வெற்றியை சாதித்துள்ளதற்கு பிரேசில் நாட்டு இளைஞர்களும் புதிய தலைமுறை தொழிலாளர்களும் மிக முக்கியமான பங்கினை அளித்துள்ளனர்.

இதை உணர்ந்துள்ள லூலா , “ உங்களது -இளைஞர்களது- குரல் என்செவிகளை எட்டியது. இனி வரும் நாட்களில், அனைவருக்கும் மருத்துவ வசதி, பொது பல்கலைகழகங்களை அதிகரித்தல், தேசீய செயற்கை நுண்ணறிவு

திட்டத்தை வளர்த்தல், டிஜிட்டல் மற்றும் ஆக்கபூர்வமான பொருளாதாரத்தை வளர்த்தல் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவோம்” என்று பலத்த கரவொலிகளுக்கு நடுவே சூளுரைத்துள்ளார்.

 

ஆனால் வெற்றிக் களிப்பில் இருக்கும் லூலாவிற்கும், பிரேசில் நாட்டிற்கும் சவால்கள் அமெரிக்காவின் பொருளாதார தடைகளின் மூலம் வரப்போகிறது. நான்காவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றிருக்கும் லூலாவிற்கு முட்டுக்கட்டை போட பிரேசிலின் நாடாளுமன்ற மேலவையில் (செனட் சபையில்) 48/81 இடங்களையும் , கீழவையில் (காங்கிரஸ்) மொத்த இடங்கள் 512 ல் 303 இடங்களை பெற்றுள்ள வலதுசாரிகள் உறுதியாக உள்ளனர். லூலா கொண்டுவரும் எந்த சீர்திருத்தமும், சட்ட மாறுதலும் வலதுசாரிகளின் இரும்புச் சுவர்களை தகர்த்தே முன்னேற வேண்டும்.

இரண்டாவதாக, தோல்வியை தழுவியுள்ள போல்சொனாரோ இந்த வெற்றி செல்லாது எனபுறப்பட்டிருக்கிறார்.

டிரம்ப்பின் மேலாதிக்க கொள்கைக்கு எதிராக பிரேசிலின் இயற்கைவளங்களை பாதுகாப்பதற்காக அமெரிக்கா வற்புறுத்தும் அடிமை ஒப்பந்தங்களில் லூலா கையெழுத்திட மறுப்பதால் – பிரேசிலின் எண்ணெய்கிணறுகளை தனியாருக்கு தாரைவார்க்க லூலா மறுப்பதால் – அமெரிக்கா, பிரேசிலின் மீது பொருளாதார தடைகளை(sanctions) கொண்டு வருவது உறுதி” என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

எனவே, பிரேசில் முன்னெப்போதைக் காட்டிலும் பிரிக்ஸ் நாடுகளுடன் வர்த்தகத்தை வளர்த்துக் கொள்வதும், அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்த்து சீனா ரஷ்யா மற்றும் ஈரான் போன்ற நாடுகளுடன் கைகோர்ப்பதால் உலக வர்த்தகத்தில் டாலரின் பங்கை தவிர்த்து,  மாற்றுச் செலாவணியை வளர்தெடுக்கலாம்.

பிரேசிலின் பிற்போக்கு பெரு முதலாளிகளின் கட்சியான லிபரல் கட்சியின் தலைவராக உள்ள ஃபிளேவியோ, தந்தையை போன்றே எதேச்சதிகாரிகளை ஆதரித்து, ஜனநாயகத்தை குறை கூறுபவர், இஸ்ரேலின் இனவெறி கொள்கையான ஜியோனிசத்தின் ஆதரவாளர், பாலத்தீனர்களின் உரிமைகளை மறுக்கும் கிறித்துவ ஜியோனிசக் கோட்பாட்டை பின்பற்றுபவர். பிரேசிலின் இயற்கை வளங்களை (எண்ணெய் வளம் மற்றும் அரியவகை கனிம இருப்புகள்) அமெரிக்க முதலாளிகளுக்கு திறந்துவிடப்பட வேண்டும் என்ற கொள்கையை உடையவர், அமெரிக்காவின் ஆதிக்கத்தை பிரேசில் எதிர்ப்பதோ, பிரிக்ஸ் கூட்டமைப்பில் பங்கு பெறுவதையோ விரும்பாதவர். ஆக அனைத்து எதிர்மறை கொள்கைகளை கொண்டிருப்பவர்  தற்போது தோற்கடிக்கப்பட்டுள்ளதை உலகெங்கிலுமுள்ள ஜனநாயக சக்திகள், ஒற்றை ஆதிக்கத்தை எதிர்க்கும் நாடுகள், பிரேசில் நாட்டிலுள்ள உழைக்கும் மக்கள் ஆகிய அனைவரும் ஒட்டுமொத்தமாக வரவேற்கின்றனர்.

பிரேசிலின் பல நகரங்களில் மேயர்களாக உள்ளவர்கள் எதிர்கட்சியை சேர்ந்தவர்களாக இருப்பதால் பேருந்து போக்குவரத்துகளை மதியம் முதலே ரத்து செய்து லூலாவின் வெற்றியை தடுக்க முயன்றனர். ஆனால், உச்சநீதி மன்றம் தலையிட்டு வாக்களிக்கும் நேரத்தை இரண்டு மணி கூட்டி வாக்களிக்க அனுமதி அளித்ததால் பெருவாரியான மக்கள் வாக்களிக்க முடிந்தது ஒரு சிறப்பாகும்.

லூலாவின் வெற்றி என்பது , லத்தீன் அமெரிக்காவில் அதிபர் டிரம்பின் பாதுகாப்பு கொள்கை தோல்வியடைந்துள்ளதையே காட்டுகிறது என்று பிரேசில் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். பிரேசிலில் லூலா அடைந்த வெற்றியை , ஜனநாயகத்தை போற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் பலவும்- மெக்சிகோ, பனாமா, சிலி, பராகுவே – வரவேற்றுள்ளன.

நெதன்யாகுவிற்கு வாழ்த்து சொல்லியுள்ள பிரதமர் மோடி லூலாவின் வெற்றியை பற்றி இன்னும் வாய் திறக்கவில்லை. மோடியின் நண்பர் டிரம்ப் கோவித்துக் கொள்வாரோ.. என்ற பயமாயிருக்கலாம்.

சிலிர்த்தெழுந்த செர்பியா!

இதை போன்றே  யுகோஸ்லாவியாவில் இருந்து பிரிந்து, இன்று தனி நாடாக விளங்கும் செர்பியாவில் அக்டோபர்-27,2026 அன்று நடந்த நாடாளுமன்ற தேர்தலில் , முப்பது ஆண்டுகளாக ஆட்சி பொறுப்பில் இருந்த அலெக்சாண்டர் வூசிக்கை வீழ்த்தி மாணவர்கள் கூட்டமைப்பு மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளது.

2024-ல் நோவிசாட் ரயில் நிலையத்தில் நடந்த மேம்பாலம் நொறுங்கி விழுந்த விபத்தில் 16 பேர் மரணமடைந்ததை தொடர்ந்து கிளம்பிய போராட்டங்கள், வூசிக் ஆட்சியின் அலங்கோலத்தை எதிர்த்து, ஊழலை எதிர்த்து, மக்கள் நலன்கள் புறக்கணிக்கப்பட்டதை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். பெரிய பேரணிகளை நடத்தினர். மக்கள் திரளில் செர்பியாவே குலுங்கியது.

இரண்டு ஆண்டுகளில் மாணவர் தலைமையிலான இவ்வியக்கம் பரந்து விரிந்து பதினான்கு ஆண்டுகளாக பதவியில் இருக்கும் வூசிக்கின் ஆட்சிக்கு முடிவு கட்டியுள்ளது. 70% மக்கள் வாக்களித்துள்ள இந்த தேர்தலில் மாணவர்கள் கூட்டமைப்பு பேராசிரியர் இலியா ஸ்டான்கோவிக்’ வழி நடத்தலில் ஒரு சில மாணவப் பிரதிநிதிகளை தவிர, பல்வேறு துறை நிபுணர்களும், விளையாட்டு வீரர்களும் , கைவினைஞர்களும், விவசாயிகளும் வேட்பாளர்களாக தேர்தல் களமிறங்கி வெற்றியை ஈட்டியுள்ளனர்.

இந்த வெற்றி, பயத்திற்கு எதிரான வெற்றி , இது மக்களின் வெற்றி என மாணவர் தலைவர் ஒருவர் குறிப்பிட்டார். இத் தொடக்கம் நல்ல தொடக்கமாக அமையும் என்று நம்புவோம்.

இழுபறியாகுமா இஸ்ரேலிய தேர்தல்!

இவ்விரண்டு தேர்தல்களின் முடிவுகள் ஜனநாயக சக்திகளுக்கு ஆக்கத்தையும், ஊக்கத்தையும் கொடுத்தது போல், இஸ்ரேலில் அக்டோபர்-28 ல் ( இன்று) நடக்கும் தேர்தலில் வெற்றி பெறும் சக்தியினால் ஜனநாயகத்திற்கு ஊக்கம் கிடைக்குமா?

மனித படுகொலை முடிவுக்கு வருமா? நிரந்தர யுத்தவெறி நிலைப்பாடு தோற்கடிக்கப்படுமா? எனப் பல கேள்விகளை  எழுப்புகிறது இஸ்ரேல் நாட்டில் நடக்கும் இஸ்ரேலிய நாடாளுமன்றம் தேர்தல் .

எழுபத்தி மூன்று லட்சம் வாக்காளர்களை கொண்ட இஸ்ரேலில் , 120 தொகுதிகளை கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்திற்கு இன்று (அக்.27) தேர்தல் நடைபெறுகிறது. அங்கு மக்கள் கட்சிகளுக்கு தான் வாக்களிப்பார்கள், வேட்பாளர்களுக்கு அல்ல.

இஸ்ரேலிய வரலாற்றில் அதிக ஆண்டுகள் பிரதமராக இருந்த பெஞ்சமின் நெத்தன்யாகு தனது லிக்குட் கட்சி மற்றும் சில தீவிரவாத குழுக்களுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் இறங்கியுள்ளார். ஊழல் புகார்கள் பல இருந்தும் நீதிமன்றத்தில் இன்னும் ஜகா வாங்கும் நெத்தன்யாகுவை எதிர்த்து யஷார் கட்சி முன்னாள் இஸ்ரேலிய ராணுவத் தளபதி காடி ஐசன்கோட். தலைமையில் ஒரு கூட்டணியாக களம் இறங்கி உள்ளனர்.

நான்கு ஆண்டுகளை ஆயுளாக கொண்ட நாடாளுமன்றத்தில் ஒரு கட்சி நுழைய 3.25% வாக்குகளை பெற்றிருக்க வேண்டும். அக்டோபர் 27ல் நடக்கும் இந்த தேர்தல் காசாவில் இஸ்ரேல் நடத்திய மனித படுகொலைக்கு பிறகு, லெபனானை இஸ்ரேல் ஆக்கிரமித்த பிறகு, ஈரான் மீது அமெரிக்காவுடன் இணைந்து போர் தொடுத்த பிறகு நடக்கும் தேர்தலாகும். நெத்தன்யாகு மீண்டும் ஆட்சியில் அமர இத்தேர்தலில் போட்டியிடுகிறார்.

யாரெல்லாம் வாக்காளர்கள்?

இத்தேர்தலில் இஸ்ரேலில் வசிக்கும் அனைவரும் வாக்களிக்க முடியுமா?

யூத வகுப்பை சேர்ந்த இஸ்ரேலியர்(jewish Israelis), இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பாலத்தீன மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் (Occupied West Bank and East Jerusalem) பகுதிகளில் வந்து குடியேறிய யூதர்கள் ஆகியோர் இத்தேர்தலில் வாக்களிக்க உரிமை உண்டு. இத்துடன் இஸ்ரேலிய குடியுரிமை பெற்ற பாலத்தீனர்களுக்கும் வாக்களிக்க அனுமதி உண்டு.

மேற்கு கரையிலும், கிழக்கு ஜெருசலேத்திலும் வாழந்துவரும் பாலத்தீனர்களுக்கு வாக்குரிமை கிடையாது.

அது போன்றே காசா பகுதியில் உள்ள பாலத்தீனர்களுக்கும் வாக்குரிமை கிடையாது.

வெளிநாடுகளில் உள்ள இஸ்ரேலியர்களுக்கும் வாக்குரிமை இல்லை.

காசா பகுதியில் வாழும் 30 லட்சம் பாலத்தீனிய மக்களுக்கு வாக்குரிமை கிடையாது.

இஸ்ரேலின் மேற்கு கரையில் வாழும் ஓட்டுரிமையற்ற பாலஸ்தீனர்கள்.

அது போன்று இஸ்ரேல் வசம் உள்ள மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் பகுதிகளில் காலங்காலமாக வாழ்ந்துவரும் பாலத்தீனர்களுக்கும் வாக்குரிமை கிடையாது.

ஆனால் அதே பகுதிகளில் வாழும் வந்தேறிகளான யூதர்களுக்கு வாக்குரிமை உண்டு.

இதை தவிர்த்த பிற பகுதிகளில் வாழும் இஸ்ரேலிய குடியுரிமை பெற்ற பாலத்தீனர்களுக்கு

வாக்குரிமை உண்டு (citizenship not residency). இவ்வகையினர் மிகவும் சொற்பமானவர்களே ஆவர் (சுமார் எட்டு லட்சம் பேர்).

தேர்தலின் முக்கிய பிரச்சினைகள் தான் என்ன?

#  மூன்றாண்டுகளு்கு முன்னர் 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பினர் நடத்திய அதிரடி தாக்குதலில் சுமார் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர், 250 நபர்கள் பிணை கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். பிணை கைதிகளையும் இஸ்ரேல் பிடித்து வைத்துள்ள பாலத்தீனர்களையும் பேச்சுவார்த்தை மூலம் பறிமாற்றம் செய்ய ஹமாஸ் முன் வந்தாலும், இஸ்ரேல் அதை புறந்தள்ளி, பழிவாங்கும் எண்ணத்துடன் 74,000 பாலத்தீனர்களை – அவர்களில் பெரும்பாலோர் பெண்களும், சிறுவர்களுமே – கொன்று மனித படுகொலை செய்தது ஏன்? என்பது மனிதாபிமானம் உள்ள மக்களின் ஆதங்கமாகும்.

இத்துடன் இஸ்ரேல் ராணுவத்தில் பணி புரிவதிலிருந்து தீவிர யூத மதப்பிரிவுகளுக்கு  நெதன்யாகு விலக்கு அளித்ததும்,  இஸ்ரேல் நீதி மன்றங்களின் அதிகாரத்தை குறைப்பதன் மூலம் சர்வாதிகாரியாக நினைத்ததும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெத்தன்யாகு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து அவை வழக்குகளாக மாறிய பின்னர் உச்சநீதி மன்றம் ஆட்சியாளர்களை மற்றவர்களை போல நடத்தக்கூடாது என நெத்தன்யாகு உச்சநீதிமன்ற அதிகாரங்களை குறைக்க சட்டங்களை திருத்தியதை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி செய்தது கவனத்திற்குரியதாகும்.

# போரும் , பாதுகாப்பும் குறித்த சர்ச்சை

இஸ்ரேலியர்கள் சண்டையை தவிர்த்தலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட

பாலத்தீனர்களுக்கு – காசா, மேற்கு கரை மற்றும் லெபனானில் – கொடுக்கப்படும் சலுகைகளுக்கு எதிர்ப்பு காட்டுவதில் முனைப்பாக உள்ளனர். நெத்தன்யாகு முழுமையான வெற்றியே இலக்கு என்ற போதிலும் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இன்னும் வீழ்த்தப்பட இயலாத நிதர்சனம்.

# இஸ்ரேலில் நிலவும் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம்

நாடாளுமன்றத்தில் 61 இடங்களை வென்றவரே ஆட்சி அமைக்க முடியும் . இஸ்ரேலில் இதுவரை எந்த ஒரு கட்சியும் தனித்து 61 இடங்களை வென்றதில்லை. எப்பொழுதும் இழுபறிதான்.

தேர்தல் முடிவுகள் வந்த 14 நாட்களுக்குள் யார் மற்ற கட்சிகளுடன் இணைந்து 61 இடங்களை வசப்படுத்துகின்றாரோ – அப்படியான தலைவரே- ஆட்சியில் அமர முடியும்.

லிக்குட் கட்சியில் பெஞ்சமின் நெத்தன்யாகுவும் , எதிர்வரிசையில் யஷார் கட்சி தலைவரான் காடி ஐசன்கோட் என்ற முன்னாள் இஸ்ரேல் ராணுவ தலைமை தளபதியும் அத்தகைய போட்டியில் உள்ளனர்.

இரு கூட்டணிகளுமே பாலத்தீன பிரச்சினைகளில் – ஏற்கனவே இஸ்ரேல் நாடு ஒத்துக்கொண்ட ஒரு தேசம் இரு அரசு என்ற -ஏற்றுக்கொண்ட கொள்கையை அமல் செய்வதில் முனைப்பு காட்டவில்லை.

இரு கூட்டணிகளுமே பாலத்தீன மக்களை சம உரிமையுள்ள மனிதர்களாகவோ , அவர்களுக்கு தேச உரிமை உண்டு என்பதையோ கருத்தில் கொண்டுள்ளதாக தெரியவில்லை.

நிரந்தர யுத்தம், யூதர்களுக்கு பாதுகாப்பு என்ற பிரச்சாரத்தில் மயங்கி கிடக்கும் இஸ்ரேலிய மக்களில் பெரும்பான்மையினருக்கு, இஸ்ரேல் அரசு, அரபு மக்களுக்கும் யூதர்களுக்கும் பொதுவான அரசாக (Arab Palestinians and Jewish Israelis) சக வாழ்வின் அடிப்படையில் இயங்க வேண்டும் என்ற புரிதல் இல்லை. தொடர்ந்து யுத்தம் செய்வதன் மூலம் அமைதி நிலை நாட்டபட முடியுமா? என்ற கேள்விக்கு யூதர்கள் விசேடமானவர்கள் , இது யூதர்களுக்கென விதிக்கப்பட்ட பூமி அவர்கள் மட்டுமே ஆளப்பிறந்தவர்கள் என்ற இனவெறியுணர்வை வெளிப்படுத்துகின்னர்.

மிகவும் சிறுபான்மையினராக உள்ள பாலத்தீன இஸ்ரேலியர்களை பிரதிநிதிப்படுத்தும் ஐக்கிய அரபு பட்டியல் கட்சி (United Arabs List) யுடன் இணைந்து எதிர்கட்சி கூட்டணி போட்டியிடுகிறது. ஆனாலும், நெத்தன்யாகு, யூத ஆதிக்கத்திற்கு ஆபத்து, யூத ஆளுமைக்கு அரபு மக்களிடமிருந்து ஆபத்து, நிரந்தர போர்களின் மூலமாகவே யூத ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியும்.ஆகவே, இந்த போரை பாதியில்  கைவிடாமல் இருக்க தன்னை ஆதரிக்குமாறு பிரச்சாரம் செய்து வருகிறார் .

இஸ்ரேலிய தேர்தலில் இரு அணிகளும் இழு பறி நிலையில் இருப்பதாக கடைசி தகவல்கள் கூறுகின்றன. இந்த தேர்தல் இஸ்ரேலின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதைவிட நெத்தன்யாகுவின் எதிர்காலத்தை இத்தேர்தல் தீர்பானிக்கும் என்பது உறுதி.

ச.அருணாச்சலம்

 

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

₹
Personal Info

Donation Total: ₹1,000.00 One Time