கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு சிறப்பு கட்டுரை
திரைப்படங்களில் பெண் பாடுவதாக அமைந்த பாடல்களில் எல்லாம் கண்ணதாசன் பெண்ணாகவே அவதாரம் எடுத்து தன் அனுபவத்தை சொல்கிறாரோ.. என்று திகைக்க வைக்கும் வண்ணம் பாடல் வரிகள் இருக்கின்றன. ..! பெண்களால் மட்டுமே உணர முடிந்த பெண் மனதின் நுட்பங்களை தன் பாடல் வரிகளில் கண்ணதாசன் சொல்லிய பாங்கு வியக்க வைக்கின்றன;
தமிழ்ப் புலமை, சொல்லாற்றல், கவி நயம் ஆகியவை பொதுவானவை! அவற்றை பயிற்சியுடைவரகள் எவரும் முயன்றால் அடையலாம். ஆனால், மனிதர்களின் மகிழ்ச்சியை, துன்பத்தை, தவிப்பை, இயலாமையை, காதல் உள்ளத்தை, பிரிவின் துயரத்தை அவரவர் உள்ளத்திற்குள் ஊடுருவி அறிந்துணர்ந்து கவிபாடும் ஆற்றல் கண்ணதாசனுக்கு சாத்தியமானது போல இது வரையிலும் யாருக்கும் சாத்தியப்படவில்லை.
அதிலும் குறிப்பாக பெண்களின் உளவியலை இவ்வளவு ஆழமாக ஊடுருவி உணர முடியுமா? என்று மலைக்க வைக்கின்றன. கண்ணதாசன் பாடல்களில் வெளிப்படும் பெண் மனம். பெண்கள் பாடுவது போன்ற பாடல்களில் கூடு வீட்டு கூடு பாய்ந்து பெண்ணாகவே மாறி இந்தப் பாடல்களை கண்ணதாசன் வடித்திருப்பரோ.. என்று நான் வியந்த பாடல்கள் பல;
பெண் மனதின் ரகசியங்களைக் கூட எவ்வளவு அழகாக வெளிப்படுத்தியுள்ளார் கவியரசர், இந்தப் பாடலில்!
என்ன தான் ரகசியமோ இதயத்திலே
நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே..
விழி பார்க்கச் சொன்னாலும்
மனம் பேசச் சொல்லாது
மனம் பேசச் சொன்னாலும்
வாய் வார்த்தை வராது
அச்சம் பாதி, ஆசை பாதி
பெண்படும் பாடு
என்று காதலைச் சொல்லத் தவிப்பவள், பின்னர் ஆனது ஆகட்டும் என மனம்விட்டு பாடுகிறாள்;
பேரழகிருந்தென்ன,
ஓர் ரசிகன் இல்லாமல்
தேன் நிறைந்திருந்தென்ன,
பொன் வண்டு வராமல்
என்ன பெண்மை என்ன மென்மை
இன்பம் இல்லாமல்..!

# காதலை வார்த்தைகளில் வெளிப்படுத்தாமல் தன் செயல்களின் வழியே புரிய வைக்க்கும் ஒரு பெண் என்னெவெல்லாம் செய்வாள் என்பதை கவியரசர் விவரிக்கிறார், பாருங்கள்;
ஒரு பக்கம் பாக்குறா, ஒரு கண்ண சாய்க்குறா,
அவ உதட்ட கடிச்சிக்கிட்டு மெதுவாக சிரிக்கிறா சிரிக்கிறா சிரிக்கிறா….!
ஆடையை திருத்துறா, அள்ளி அள்ளி சொருகுறா
அரகுறை வார்த்தை சொல்லி பாதியை முழுங்குறா
பின்னலை முன்ன விட்டு பின்னி பின்னி காட்டுறா,
பின்னாலே தூக்கி விட்டு கையாலே இழுக்குறா!
பூப்போல காலெடுத்து பூமியை அளக்குறா,
பொட்டுன்னு துள்ளி துள்ளி சிட்டாக பறக்குறா,
நிலையிலே கையை வச்சி நிக்குறா நிமிருறா,
நிறுத்தி மூச்சி விட்டு நெஞ்சை தாலாட்டுறா..!
காலாலே நிலத்துலே -கோலம் போட்டு காட்டுறா
கம்பி போட்ட ஜன்னலிலே கன்னத்தை தேய்க்குறா
கண்களை மூடி, மூடி ஜாடை கொஞ்சம் காட்டுறா
கறந்த பாலை நான் கொடுத்தா – கையை தொட்டு வாங்குறா..-என் கையை தொட்டு வாங்குறா…!
# துணை இல்லாமல் காதலுக்கு ஏங்கும் ஒரு பெண் பாடுவதாக ஒரு பாடல்;
நிலவில்லா வானம், நீரில்லா மேகம்
பேசாத பெண்மை, பாடாத உண்மை
கண்ணை மெல்ல மூடும், தன்னை எண்ணி வாடும்
பெண்ணைப் பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும்?
பிரிவுற்ற காதல் கணவனை மீண்டும் சேரக் காத்திருக்கும் ஒரு மனைவியின் மன நிலையை துல்லியமாக படம் பிடித்து காட்டிய பாடல்;
காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா?
கண்ணில் நிறைந்த கணவைன் மார்பில்
கண்ணீர் கடலில் குளிக்கவா?
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது
அழுதால் கொஞ்சம் நிம்மதி!
பேச மறந்து சிலையாய் நின்றால்..,
பேச மறந்து சிலையாய் நின்றால்…, அது தான் தெய்வத்தின் சன்னதி
அது தான் காதல் சன்னதி.
பெண்ணாகப் பிறந்த ஒருவளின் வாழ்க்கை கல்யாணத்தில் தான் கெளரவம் பெறுகிறது. அவள் வாழும் வாழ்க்கை முறைமையில் தான் முழுமை பெறுகிறது. தன் காதல் கைகூடி திருமணத்தில் முடிய வேண்டும் என்று ஏங்கும் ஒரு பெண்ணின் மனவோட்டமாக கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடல் திருமணத்திற்கு ஏங்கும் பெண்குலத்தின் மனச்சான்றாக விளங்கவல்லதாகும்;
கையோடு கை சேர்க்கும் காலங்களே
கல்யாண சங்கீதம் பாடுங்களேன்
பெண் வாழ்வில் செல்வாக்கு தன்மானமே
தன்மானம் தான் காக்கும் கல்யாணமே
நான் கண்ணீரை வெல்லும் – ஒரு
பெண்ணாக வேண்டும்.
நான் பொன்னோடு, பொட்டோடு தாயாக வேண்டும்.
பிள்ளையாடிவர செல்வம் கோடி பெறும் நல்ல காலம் வருக
உள்ளம் போல இனி ஒன்று சேர்ந்துவிட தெய்வம் காவல் தருக.
இதே போல மிக இளம் வயத்தில் வயதிலேயே திருமணமாகி, காணாமல் போன கணவன் இறந்துவிட்டதாக கருதி விதவையாக வாழ நேர்ந்த ஒரு பெண்ணின் ஏக்கத்தை வெளிப்படுத்துகிறது இந்தப் பாடல். நிராசையாகிப் போன தன் வாழ்வை எண்ணி ஒரு இளம் பெண் பாடுவதான இந்தப் பாடல் பெண் உளவியலை சொல்கின்ற கண்ணதாசன் பாடல்களில் ஒரு மணிமகுடமாகும்.

மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி..
இன்பம் சில நாள், துன்பம் சில நாள்
என்றவர் யார் தோழி?
இன்பம் கனவில், துன்பம் எதிரில்
காண்பது ஏன் தோழி?
காண்பது ஏன் தோழி?
ஆ..ஆ..ஆ..ஆஆ…
என்று தன் வாழ்க்கையை சொல்லிவிட்டு தன் கனவை விவரிக்கிறாள் அவள்,
மணமுடித்தவர் போல் அருகினிலே ஓர்
வடிவு கண்டேன் தோழி!
மங்கை என் கையில் குங்குமம் தந்தார்
மாலையிட்டார் தோழி!
வழி மறந்தேனோ? வந்தவர் நெஞ்சில்
சாய்ந்து விட்டேன் தோழி!
அவர் மறவேன் மறவேன் என்றார்
உடனே மறந்து விட்டார் தோழி!
மறந்து விட்டார் தோழி…
பறந்து விட்டார் தோழி!
ஆ..ஆ..ஆ..ஆஆ..
கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன்
கணவர் என்றார் தோழி!
கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும்
பிரிந்தது ஏன் தோழி?
இளமை எல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சில காலம்!
தெளிவும் அறியாது முடிவும் தெரியாது
மயங்குது எதிர் காலம்…
மயங்குது எதிர் காலம்!
இந்தப் பாடல் கல் நெஞ்சங்களையும் கரைக்க வல்லதாகும். கண்களில் கண்ணீர் வராமல் இந்தப் பாடலை கேட்க முடியாது. எப்படி விதவையான ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை கனவிலேயே வாழ்ந்து கழிகிறது என உருக்கமாக தன் பாடலிலேயே அவள் உள்ளத்தை காட்சிப்படுத்தியுள்ளார், கவிஞர்.

நெஞ்சிருக்கும் வரை திரைப்படத்தில் தன் மனைவி மீது சந்தேகம் கொள்கிறான் கணவன். இல்லை என் மீது அனாவசியமாக சந்தேகப்படாதே நான் உனக்காகவே வாழ்கிறேன்…என்பதை கணவனுக்கு உணர்த்த வேண்டிய தவிப்பில் மனைவி பாடுவதாக அமைந்த இந்தப் பாடல் தன் கணவன் மீதான மனைவியின் காதலை மிக வலுவாகச் சொல்கிறது.
எங்கே நீயோ, நானும் அங்கே உன்னோடு
அதைத் தானே கொண்டு வந்தேன் நான் என்னோடு – என் கண்ணோடு!
வாசலிலே உன் காலடி ஓசை கேட்டிருப்பேன்
வந்தவுடன் உன் ஆசை முகத்தைப் பார்த்திருப்பேன்
கண்ணில் நீரைக் காணாமல்
கவலை ஏதும் கூறாமல்
என்னை எண்ணி வாழாமல்
உனக்கென நான் வாழ்வேன்
காலம் வரும் என் கனவுகள் எல்லாம் கனிந்து வரும்
காத்திருப்பேன் என் பாதையில் தெய்வம் இணைந்து விடும்
காதல் என்றால் சேயாவேன்
கருணை என்றால் தாயாவேன்
கண்ணா உந்தன் நிழலாவேன்
உனக்கென நான் வாழ்வேன்
ஓரு பெண்ணின் உண்மையான காதல் மனதின் உன்னதத்தை இதைவிட யாரால் சொல்ல இயலும்?
இறுதியாக நாம் பார்க்க இருப்பது பல துன்பங்களை அனுபவித்து, பல தடைகளை மீறி தனக்கான ஒரு வாழ்வை அமைத்துக் கொள்ள துடிக்கும் ஒரு பெண்ணின் காதல் பொங்கி பிரவாகமெடுக்கும் மனவோட்டத்தை மிக வீரியமாக வெளிப்படுத்துகிறது.
காற்றுக்கென்ன வேலி…கடலுக்கென்ன மூடி?
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது…
மங்கை உள்ளம் பொங்கும் போது விலங்குகள் ஏது?
நான் வானிலே…. மேகமாய்… பாடுவேன் பாடல் ஒன்று
நான் பூமியில்… தோகைபோல்…. ஆடுவேன் ஆடல் ஒன்று
கன்றுக்குட்டி துள்ளும்போது, காலில் என்ன கட்டுப்பாடு?
காலம் என்னை வாழ்த்தும்போது, ஆசைக்கென்ன தட்டுப்பாடு?
தேர் கொண்டு வா… தென்றலே… இன்று நான் என்னைக் கண்டேன்!
சீர் கொண்டு வா… சொந்தமே… இன்றுதான் பெண்மை கொண்டேன்!
தடைகளை மீறி காதலிக்கும் காதல் பெண்களின் தேசிய கீதமாகவே இந்தப் பாடலை கருதலாம். அந்த அளவுக்கு பெண்மை மனம் காதல் மகிழ்ச்சியில் கரைபுரண்டோடுகிறது.
இது போல கண்ணதாசன் பாடல்களை நூற்றுக்கணக்கில் உதாரணம் காட்டலாம். அந்த அளவுக்கு எழுதி குவித்துள்ளார், கவியரசர். இங்கே சொல்லப்பட்டவை சில உதாரணங்களே. பெண்ணின் இதயத் துடிப்பை, அதில் ஆழப் புதைந்திருக்கும் ஆழ் மன ஆசைகளை, காதலை, வலிகளை, ஏக்கங்களை தன் பாடல்களில் மிக அழகாகப் படம் பிடித்துள்ள கண்ணதாசன் ஒர் அபூர்வப் பிறவி என்பதில் சந்தேகமேயில்லை.
சாவித்திரி கண்ணன்




















Though Kannadasan wrote many vulgar songs people appreciate him for his imagination. This privilege is not there for women artists. Take away the cinema background from film songs and they will cease to be poetic.