‘சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் பக்தர்கள் தேவாரம் பாடலாம். இதற்கு அனுமதியளித்த அறநிலையத் துறையின் உத்தரவு செல்லும்’ என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஆனந்தக் கண்ணீரை வரவழைக்கிறது! எத்தனை ஆண்டுப் போராட்டங்கள், அவமானங்களுக்கு பிறகு ஒரு தீர்வு கிடைத்துள்ளது. ஆனால், இதை அமல்படுத்துவது பெரும் சவாலாகும்;
நீதிமன்றத் தீர்ப்புகளை தீட்சிதர்கள் எந்தக் காலத்தில் மதித்துள்ளனர்? உடனே மேல் முறையீடு, நீதிமன்ற லாபி, வருஷக்கணக்கில் இழுத்தடிப்பு செய்வது, கடைசியில் உச்ச நீதிமன்றத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு தள்ளுபடியாவது இது தான் கடந்த கால வரலாறாகும்.
ஆனால், தற்போது ஓய்வு பெற்ற இரு நீதிபதிகளோடு ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி, அற நிலையத் துறை சார்ந்த ஒரு உறுப்பினர், தீட்சிதர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு உறுப்பினர் என ஐவர் குழுவை இரு நீதிபதிகள் அமர்வு அறிவித்து, இவர்களுக்கான செலவை அறநிலையத் துறை ஏற்கும் எனக் கூறியுள்ளது சிறப்பான அம்சமாகும். இதை தீட்சிதர்கள் சிதைக்காமல் இருந்தால் நல்லது.
தீட்சிதர்களின் பொறுப்பில் இருக்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடந்து கொண்டிருக்கும் சீரழிவுகள் குறித்து நீதிமன்றம் தன் கடும் அதிருப்திகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். சில ஊடகங்களை தவிர்த்து, பல தினசரி ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் இதனை மறைத்து செய்தி போட்டுள்ளனர்.
நீதிமன்றத்தின் அவதானிப்பும், அதிருப்திகளும்!
# சிதம்பரம் கோவிலை தீட்சிதர்கள் வணிக வளாகமாக மாற்றி உள்ளனர்.
# சிதைந்த சிற்பங்கள், பொலிவிழந்த ஓவியங்கள், சிதிலமடைந்த பாரம்பரியக் கட்டுமானங்கள்.. கோவிலை தீட்சிதர்கள் படுமோசமாக பராமரிக்கிறார்கள்!
# கோயிலுக்குள் முறையான திட்டமிடலின்றி புதிய கட்டுமானங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பது கோயில் சொத்துகள் முறைகேடாக நிர்வகிக்கப்பட்டிருப்பதைத் தெளிவாகக் காட்டுகிறது
# 12 ஆண்டுகளுக்கு மேலாக தங்கள் முழுக் கட்டுப்பாட்டில் கோவிலை வைத்துள்ள தீட்சிதர்கள் முழுமையான, உண்மையான வருமானத்தை காட்ட மறுப்பது உறுதியாகிறது.
# கோவிலில் பக்தர்கள் இறைவனை சுதந்திரமாக தரிசித்து வழிபடுவதற்கான தடைகளை அகற்றி, வருமானத்தை ஒழுங்குபடுத்த நீதிமன்றம் ஐவர் கொண்ட கமிட்டியை அமைக்கிறது.
நீதிமன்றத்தின் அவதானிப்பு அத்தனையும் அப்பட்டமான உண்மைகளே. சிதம்பரம் கோவிலை தீட்சிதர்கள் தங்கள் வருமானத்திற்கான வியாபாரக் களமாகத் தான் பார்க்கிறார்களேயன்றி, அது பல கோடி சிவ பக்தர்கள் பயபக்தியுடன் வணங்கிச் செல்லும் ஆன்மீகத் தளமாகவே அங்கீகரிக்கவில்லை.

சுமார் 300 தீட்சிதக் குடும்பங்களை உள்ளடக்கிய சுமார் 1,500 குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட இந்த குடும்பத்தினரில் பெண்கள், குழந்தைகளை தவிர்த்த ஏறத்தாழ 450 தீட்சிதர்கள் இந்தக் கோவிலை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
இந்தக் கோவில் மேற்படி தீட்சிதக் குடும்பங்களின் வாழ்க்கைக்கான பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்கிறது என்பதை நாம் பிழையாகப் பார்க்கவில்லை. ஆனால், இதை வெறும் பிழைப்புக்கான களமாக – ஆன்மீகத் தொண்டாக அவர்கள் ஒரு சிறிதும் உணராமல் – எல்லாவற்றிலும் பணம், பணம் எனப் பேயாய் உழல்வது தான் சங்கடமாக உள்ளது. பொதுவாக சிதம்பரம் போன்ற பிரபல கோவில்களில் வருமானத்திற்கு பஞ்சமில்லை. அது தானாகவே கொட்டும். பக்தி என்று வந்துவிட்டால் பக்தர்கள் பணத்தை பார்ப்பதில்லை. அவர்களே அள்ளித் தருகிறார்கள். அத்துடன் திருப்தி படத் தயாராயில்லை இந்த தீட்சிதர்கள் என்பது தான் நமது வருத்தமே!
சிதம்பரம் கோவிலை தமிழ்நாடு அரசின் அறநிலையத் துறை பொறுப்பில் எடுத்தபோது ஆண்டு வருமானமாக ரூ 3.25 கோடி வந்தது, ஆனால், தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருந்த போது காட்டப்பட்ட ஆண்டு வருமான கணக்கு வெறும் ரூ 2 லட்சங்கள் தாம்…!
உண்மையில் தீட்சிதர்கள் இங்கே வரும் பக்தர்களை வாடிக்கையாளர்களாகவே பார்க்கிறார்கள். பணக்கார பக்தர்களை பலமாக கவனிப்பார்கள். ஏழை பக்தர்களை ஏளனத்துடன் நடத்துவார்கள். பக்தர்கள் யாரும் அங்கே சென்று நிம்மதியாக ஆண்டவனை வணங்க முடியாத வகையில், அந்த பூஜைக்கு இவ்வளவு பணம், இந்த பூஜைக்கு இவ்வளவு பணம். இதை செய்தால் இன்ன பலன், அதை செய்தால் அதைவிடப் பலன் என்று பட்டியல் வாசித்து பணம் பிடுங்குவார்கள். கண்களில் பார்க்கும் இடங்களில் எல்லாம் அன்னதானத்துக்கான உணவுப் பட்டியலை எழுதி, தீட்சிதர்கள் பெயரில் நன்கொடை கோரும் விளம்பரப் பலகைகள் வைத்துள்ளனர்.
எனவே, அவர்கள் நீதிமன்றத்தில் ஆண்டுக்கு ரூ 2 லட்சம் மட்டுமே வருமானம் என்றதை, நாள் ஒன்றுக்கான வருமானம் என நாம் புரிந்து கொள்வது கூட பிழையாகாது. அதுவும் ஆருத்ரா தரிசனம் போன்ற விசேட நாட்களில் பண மழை தான் அவர்கள் காட்டில்!

சிதம்பரம் கோவில் தீட்சிதர்களின் குடும்ப சொத்தா?
எட்டாம் நூற்றாண்டில் சிதம்பரம் வேளாண்குடிகளால் சிறிய அளவில் எழுப்பப்பட்ட சிதம்பரம் நடராஜர் கோவிலின் பிரம்மாண்ட உருவாக்கத்தில் பிற்காலச் சோழர்கள், பாண்டிய மன்னர் , விஜய நகர பேரசு எனப் பலர் பங்களித்துள்ளனர். அந்த காலகட்டத்தில் இந்த தீட்சிதர்கள் கேரளாவில் இருந்து வந்து சேர்ந்தார்கள். பிறகு அவர்கள் மெல்ல, மெல்ல கோவிலை ஆக்கிரமித்துக் கொண்டனர். அப்பர், சுந்தரர், சம்பந்தர் மாணிக்கவாசகரால் தமிழில் பாடப்பட்ட இந்த திருத்தளத்தை மாற்றி வேதவழிச் சடங்குகளையே விதிமுறையாக்கிவிட்டனர்.
அந்தக் காலம் தொடங்கி சுமார் 12 நூற்றாண்களாக தீட்சிதர்களின் ஆதிக்கம் தான்! கனகசபையில் என காலங்காலமாக பாடி வந்த தேவாரம், திருவாசகத்திற்கு தடைகள், சிவனடியார்களுக்கு அவமானங்கள் என சமீப காலமாக எப்போதும் இங்கு பதட்டம் தான்!
தற்போதும் குழந்தை திருமணங்களை நடத்துகிறார்கள்! நீதிமன்ற தீர்ப்புகளை நிராகரித்துள்ளார்கள். ஆணவம், அத்துமீறல் அவர்களின் பண்பாடாகவே உள்ளது. எத்தனை எப்.ஐ.ஆர் போட்டாலும், அவர்களை கைது செய்ய முடியாது. எல்லா ஆட்சிகளிலும் இது தான் நிலைமை!
இரண்டாண்டுகளுக்கு முன்பு உயர்நீதிமன்ற நீதிபதி முருகன் ஒரு வழக்கில், ’’கடவுளுக்கும் மேலானாவர்களா நீங்கள்? தீட்சிதர்களுக்கு ஆணவம் நல்லதல்ல, பக்தர்கள் வரும் வரையில் தான் அது கோவில். பக்தர்கள் வராவிட்டால் கோவிலே பாழாகிவிடும்’’ என்றார்.
நடராஜரை வழிபட வந்த சிவபக்தன் நந்தனை தீயீற்க்கு இரையாக்கிவிட்டு,” நந்தன் ஜோதியில் கலந்தான்” என நாடகமாடி நம்ப வைத்த தீட்சிதர்கள் இன்னும் மாறவில்லை. மாற்றம் ஏற்பட்டால் மக்கள் அவர்களை கொண்டாடுவார்கள்! ஆனால், இனியும் மாறாவிட்டால் கஷ்டம் தான்!
பொதுவாக நீதிமன்றத் தீர்ப்பை தீட்சிதர்கள் மதிக்கமாட்டார்கள். பார்ப்போம், என்ன நடக்கிறது என்பதை!
சாவித்திரி கண்ணன்
























தீட்சிதர்கள் அராஜகம் உண்மை ஆனால் அறநிலையதுறை வசம் உள்ள கோவில்களில் நாத்திக அரசியல்வாதிகள் சுருட்டுவதை யார் அம்பலப்படுத்துகிறார்கள்? பள்ளிவாசல் சர்ச் போல இந்து கோவில்களும் நிர்வகிக்கப்படவேண்டும்செக்குலர் கட்சிகள் பதுங்குவது ஏன்