ஆடம்பரத்தின் உச்சத்தை வர்ணிப்பதா?
ஆரிய முறைப்படி திருமணச் சடங்குகள் சமஸ்கிருத மந்திரங்களில் நடந்ததை சொல்வதா?
திராவிட இயக்கம் திசைமாறிப் பயணித்துக் கொண்டிருப்பதற்கு சாட்சியாகத் திகழும் திருமணம் என்பதா?
‘மொத்தத்தில் திராவிட இயக்க சித்தாந்தத்திற்கு எதிர் நிலையில் திருமணம் நடைபெற்றது’ என ஒற்றை வரியில் விளக்கிடவா..?
ஒரு நூற்றாண்டுக்குள் எவ்வளவு தலைகீழ் மாற்றங்கள்!
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் பேத்தி செந்தாமரை திருமணம் தற்போது பெரும் பேசுபடு பொருளாகியுள்ளது.
பார்ப்பனர்களைக் கொண்டு சடங்குகள் செய்து, சமஸ்கிருத மந்திரங்கள் ஓத நடத்துவதை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பெரியார் சுயமரியாதை திருமணங்களை அறிமுகப்படுத்திய ஆண்டு 1928.
அந்த திருமணத்திற்கு சட்டபூர்வமான அங்கீகாரத்தை அண்ணா ஏற்படுத்திய ஆண்டு 1968.
பெரியார், அறிஞர் அண்ணா மட்டுமல்ல, பல திராவிட இயக்க முன்னோடிகளும் தமிழ் அறிஞர்களான கி.ஆ.பெ.விசுவநாதன், அண்ணல் தங்கோ, தேவ நேயபாவாணர், பாவலேறு பெருஞ்சித்தனார்… போன்றவர்களும் அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கில் தமிழ் மரபு வழி திருமணங்களை திருக்குறளை சொல்லி நடத்தி வைத்துள்ளனர்.
பல நூறு சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைத்தவர் இனமானப் பேராசிரியர் என அழைக்கப்பட்ட அன்பழகன். அவர் சுயமரியாதை திருமணங்களில் பேசுவதை கேட்கும் எவருக்குமே நாமும் இதே வழிமுறையில் நம் திருமணத்தை நடத்த வேண்டும் என்ற உத்வேகம் ஏற்படும். இதன் பொருட்டே பேராசிரியர் அன்பழகன், ‘தமிழர் திருமணமும் இனமானமும்’ என்ற நூலை எழுதினார்!

சங்க காலத்தில் திருமணம் எவ்விதம் நடந்தன? எப்போது வைதீக திருமணங்கள் புகுந்தன? அவை எப்படி தமிழர் மரபுகளுக்கு எதிராக உள்ளன? பார்ப்பனர்கள் திருமணங்களில் ஓதும் சமஸ்கிருத மந்திரங்கள் எத்தகையை ஆபாச பொருள் கொண்டுள்ளன..? என்பதை பேராசிரியர் மிகத் தெளிவாக இந்த நூலில் விவரித்துள்ளார். இத்துடன் தமிழ் இனத்தின் தனித்துவத்தை மீட்க தமிழர் திருமணம் எவ்விதம் நடக்க வேண்டும் என்பதையும் விளக்கி இருப்பார். இந்த நூலை படித்தவர்கள் பார்ப்பனர்களை அழைத்து திருமணம் செய்யமாட்டார்கள்.
ஒருமுறை கட்சித் தொண்டர் ஒருவரின் திருமணத்திற்கு மண்டப வாசலில் நுழைந்த பேராசிரியர் அந்த திருமணத்தில் சமஸ்கிருத மந்திரங்கள் ஒலிப்பதை கேட்டு அதிர்ச்சியடைந்து, அப்படியே திரும்பிவிட்டார் என்ற பேச்சு அந்தக் காலத்தில் பிரசித்தமானது.
தமிழரின் வேத நூலாம் திருக்குறள், சங்க நூல்களாம் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம், திருமூலர் திருமந்திரம், மணிவாசகர் திருவாசகம், அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் எழுதிய தேவாரம், தமிழ் மணக்கும் ஆழ்வார்களின் பாசுரங்கள், அருணகிரியார், தாயுமானவர், இராமலிங்க அடிகளார், மகாகவி பாரதியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்..ஆகியோரின் கவிதைகள் கருவூலங்களாக குவிந்திருக்கும் தமிழ் மொழியில் திருமணங்களை நடத்துவதற்கென்ன பஞ்சம் ஏற்பட்டுவிட்டது?..என மேடைதோறும் முழங்கி, தமிழ் மரபு திருமணங்கள் நடந்த தமிழ் நாட்டில் தற்போது அறிஞர் அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்ட திமுகவின் பொதுச் செயலாளர் வீட்டுத் திருமணமே பார்ப்பனர்களை அழைத்து சமஸ்கிருத மந்திரங்கள் ஓத நடத்தப்படுவது எவ்வளவு பெரிய வீழ்ச்சி!
கடவுள் நம்பிக்கை பிழையல்ல. ஆன்மீக பெரியார்கள் குன்றக்குடி அடிகளார், கிருபானந்த வாரியார்.. போன்றவர்களை அழைத்து திருமணங்கள் நடத்தப்பட்டதை யாரும் பழித்ததில்லை.
ஆனால், பார்ப்பனர்களை அழைத்து பெரும் செலவில் நெய்யையும், தேனையும், இன்னும் தானியங்களையும் தீக்கு இரைத்து செய்யும் சடங்குகளை தவிர்க்க பாடுபட்ட ஒரு நூற்றாண்டு கால உழைப்பை துச்சமாக கருதும் தைரியம் துரைமுருகனுக்கு எப்படி வந்தது?

தற்போது பல திராவிட இயக்க சிந்தனையாளர்கள், தமிழ் அறிஞர்கள் துரைமுருகன் இல்லத் திருமணத்தை வருத்தமுடன் விமர்சித்துள்ளனர்.
ஆனால், 2021 தேர்தலுக்கு முன்பு திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெற்றி பெறுவதற்காக கோவில், கோவிலாக சென்று பார்ப்பன அர்ச்சகர்களை வைத்து யாகம், வேள்வி நடத்தினார் அவரது மனைவி துர்கா அம்மையார். துர்கா அம்மையார் தனிப்பட்ட முறையில் கோவில் சென்று இறைவனை வழிபடுவது பிழையல்ல. ஆனால் மக்கள் ஓட்டு போட்டு வெற்றி பெற வேண்டிய ஒரு ஜனநாயக ரீதியான தேர்தல் வெற்றிக்கு பார்ப்பனர்களின் மந்திரங்கள் கை கொடுக்கும் என அவர் நம்பி திமுக வெற்றி பெற யாகம் செய்வதை எப்படி ஏற்பது? கொள்கை வழி வந்த ஒரு திராவிட அரசியல் இயக்கத் தலைவரின் மனைவியாக அவர் இதை செய்வது பெரும் வீழ்ச்சியல்லவா?
தேர்தல் வெற்றிக்கு பிறகு பார்ப்பன அர்ச்சகர்கள் புடை சூழ வந்து முதல்மைச்சர் ஸ்டாலின் இல்லத்திற்கே வேத மந்திரங்களை ஓதி மாலை, மரியாதை செய்தனரே அப்போது இந்த திராவிட இயக்க முன்னோடிகள் அமைதியாக வாய் மூடி மெளனித்து இருந்தார்களே?
இது மட்டுமா? சனாதனத்தை இழிவுபடுத்திவிட்டார் உதயநிதி. ஆகவே பரிகாரம் செய்தால் தான் அவர் முதல்வராவதற்கான தடை நீங்கும் என துர்கா அம்மையார் பிரபல வைணவ ஜீயர்கள் மூவரை தன் இல்லம் அழைத்து காலைக் கழுவிவிட்டு…இதற்கு மேல் சொல்ல விரும்பவில்லை. இதையும் பெரியாரிஸ்டுகள் விமர்சிக்கவில்லை. தலைமையே தவறு செய்தாலும் அங்கு விமர்சிக்கும் ஜனநாயகம் இருந்தால் தானே ஒரு இயக்கம் நேர் பாதையில் பயணிக்கும்…?
முதலமைச்சரின் மருமகன் சபரீசன் அவர்கள் திருச்செந்தூரில் சத்ரு சம்ஹார யாகம் நடத்தினாரே.., அதை யாரும் அன்று இது போல கண்டிக்கவில்லையே?

இவற்றையெல்லாம் மெளனமாக அங்கீகரித்த ஸ்டாலின், தன் ஆட்சி காலத்தில் பார்ப்பன அர்ச்சகர்களுக்கு அளப்பரிய சலுகைகளை அள்ளி வழங்கி அவர்களை மட்டும் தன் ஆட்சி காலம் முழுமையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டு – மற்ற ஊழியர்களின் போராட்டங்களை ஒடுக்கினாரே – அப்போதெல்லாம் வாய் திறக்காதவர்கள் தற்போது பேசுகிறார்கள்!
தற்போது கூட துரைமுருகனை மென்மையாக கேள்வி கேட்ப்பவர்கள், அதைவிட மென்மையாகக் கூட இதற்கெல்லாம் வழிவகுத்த ஸ்டாலினை கேள்விக்கு உட்படுத்தாமல் அமைதி காப்பதை எவ்விதம் புரிந்து கொள்வது?
அவ்வளவு ஏன்? பாஜகவிற்கு போட்டி அரசியலாக முத்தமிழ் மாநாடு என்ற பெயரில் முதலமைச்சர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும் வேல் தூக்கி அரசியல் செய்தார்களே..! பெரியாரிஸ்டுகள் வேடிக்கை பார்த்தார்களே!

‘மேடைதோறும் சமஸ்கிருதத்தை செத்த மொழி என்றோமே, சனாதானத்தை கடுமையாகச் சாடினோமே.. இன்று நம் இல்ல விழாவில் இவற்றை கடைபிடிக்கிறோமே..இந்த சமூகம் நம்மை இழிவாக பார்க்குமே’ என்ற குற்றவுணர்ச்சி கூட துரைமுருகனுக்கு இல்லையே?
இப்படி சனாதானத்திடம் சரண்டரானது ஒரு புறம், மறுபுறம் அதி ஆடம்பரத் திருமண படாடோபங்கள் மிகவும் அருவறுக்கத்தக்கவை அல்லவா…?
அம்பானி குடும்பத்தை போல பல கோடி ரூபாய் மதிப்பிலான வைர மற்றும் மரகத நகைகள் காட்சிப்படுத்தப்பட்ட பிரம்மாண்ட நிச்சயதார்த்தத்தையும், சுமார் ரு100 கோடிக்கும் மேல் மதிப்பிலான - மணமக்களுக்குப் பரிசளிக்கப்பட்ட – விமரிசையான வைர நெக்லஸ், ஒட்டியாணம், வளையல்கள் மற்றும் தட்டுகளை என்னென்பது?

வி.வி.ஐபிகளுக்கு வழங்கப்பட்ட இந்தத் திருமணத்திற்கான ஆடம்பர அழைப்பிதழின் மதிப்பு ரூ 25,000 என்று சொல்லப்படுகிறது. மயில் தோகை விரிப்பது போன்ற வடிவமைப்பு, தங்க விநாயகர் சிலை மற்றும் விலை உயர்ந்த இனிப்பு ரகங்களுடன் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட இந்த அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது அனைவருக்கும் நினைவிருக்கும். இந்த திருமணத்தில் உலக நாடுகளின் விசேச உணவு வகைகள் பல பரிமாறப்பட்டனவாம். அத்தனை வகை பெயர் சொல்ல முடியாத பதார்த்தங்கள் பரிமாறப்பட்டனவாம்!
துரைமுருகன் அவர்களே, உங்கள் குடும்ப பின்னணி என்ன? எத்தகைய ஏழ்மை நிலையில் இருந்து வந்தவரல்லவா நீங்கள்? பொது வாழ்வில் உள்ள ஒருவரின் இல்லத் திருமணத்தில் இவ்வளவு ஆடம்பரங்கள் அடுக்குமா? இதன் மூலம் மக்களுக்கு உங்களின் சமூக அந்தஸ்த்து உயரமானது என நீங்கள் காட்ட விரும்பி இருக்கலாம்.
ஆனால், உண்மையிலேயே இந்த திருமண ஆடம்பரத்தால் உங்க மதிப்பு அதல பாதாளத்திற்கு தான் போய்விட்டது. இலட்சோப லட்சம் ஏழைத் தொண்டர்களைக் கொண்ட உங்க கட்சிக்காரர்களே உங்களை இனி தங்களில் ஒருவராக எண்ண முடியாமல் சம்பவம் செய்து விட்டீர்கள்!
சாவித்திரி கண்ணன்
























தரைமுருகனின் போலி திராவிடம் பற்றி பறைசாற்றிய அறத்திற்கு நன்றி
பேரா அய் இளங்கோவன் வேலூர்
Reason for DMK downfall is written clearly