நவசக்தி, அலை ஓசை, கடிதம்.. போன்ற நாளேடுகளில் நாள் தோறும் கவியரசர் கண்ணதாசன் எழுதிய கடிதங்களும், கட்டுரைகளும் காங்கிரஸ் தொண்டர்களிடையே ஏற்படுத்திய தாக்கங்களும், எழுச்சியும் வார்த்தைகளில் வடிக்க முடியாதவை. நெஞ்சை அள்ளும் அந்த எழுத்துக்கள் காமராஜர் கரங்களுக்கு வலுசேர்த்து, காங்கிரசை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சென்றதெல்லாம் ஒரு பொற்காலம்;
1961 -இல் தி.மு.க.விலிருந்து வெளியேறிய ‘சொல்லின் செல்வர்’ ஈ.வெ.கி.சம்பத், நேருவின் மறைவுக்குப்பிறகு, தமது ‘தமிழ் தேசியக் கட்சி’யைக் காங்கிரசோடு இணைத்தபோது, காங்கிரஸ் மேடை முன்பைவிடப் பலமடங்கு பலனடைந்தது.
காங்கிரஸ் தோல்விக்குப்பிறகு, தேசிய மேடைகளில் எழுச்சி ஏற்படுத்திய பெருமை மூவரையே சாரும். சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத், கவிஞர் கண்ணதாசன், சிறுகதை மன்னன் ஜெயகாந்தன் ஆகியோர்தான் அம்மூவர். இவர்களது பேச்சாற்றலாலும் எழுத்தாற்றலாலும் காமராஜர் தலைமைக்கு ஈர்க்கப்பட்டவர்கள் ஆயிரமாயிரம் இளைஞர்கள். காங்கிரஸ் மேடையில் எழுச்சியை ஏற்படுத்தி, காமராஜர் தலைமைக்குப் பெருமையும் தமிழக காங்கிரசுக்கு வலிமையையும் ஏற்படுத்திய பெருமை அந்த மூவருக்கும் உண்டு.
கவியரசர் கண்ணதாசன் காங்கிரஸுடனான அரசியல் செயல்பாட்டின் காரணமாக திரைப்படத்துறையில் அன்று எம்.ஜி.ஆரின் படங்களில் பாடல் எழுதுகிற வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்த போது அவற்றையெல்லாம் கண்ணதாசன் பொருட்படுத்தாமல் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். அக்காலக்கட்டங்களில் அலை ஓசை நாளேட்டில் எம்.ஜி.ஆரைப் பற்றி கண்ணதாசன் அனல் பறக்க எழுதிய தொடர் விமர்சன கட்டுரைகள் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. பிற்காலத்தில் உள்ளும், புறமும் என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்தது. இந்நூலின் மூலமாக எம்.ஜி.ஆரின் கோபத்திற்கும், விரோதத்திற்கும் கண்ணதாசன் ஆளானார். அதனால், திரைப்பட வாய்ப்புகள் கடுமையாக பாதித்த போதும் அதைப் பற்றியெல்லாம் கொஞ்சம்கூட கவலைப்படாமல் பெருந்தலைவர் காமராஜர் தலைமையில் மக்களை அணி திரட்டும் போர்ப்படை தளபதியாக கவியரசர் கண்ணதாசன் செயல்பட்டார்.
கவியரசு கண்ணதாசன் தொடக்கத்தில் 1968 இல் கடிதம் என்கிற தமது நாளேட்டில் இனிய நண்பர்களே, என்று தொடங்கி அன்பன் கண்ணதாசன் என்ற கடித பாணியில் நாள்தோறும் எழுதினார். இந்த கடிதத்திற்காகவே அக்காலக் கட்டத்தில் 75,000 கடிதம் நாளேடு பிரதிகள் விற்பனையானது. அந்தளவிற்கு காங்கிரஸ் கட்சியினரிடையே கடிதம் நாளேடு மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, அதை மாலையில் வாங்கிப் படிப்பது என்பது அன்றாட கடமைகளில் ஒன்றாக மாறியது.
கவியரசு கண்ணதாசனின் எழுத்துகள் நவசக்தி நாளேட்டை மாபெரும் சக்தியாக, பீரங்கி சக்தியாக விளங்கச் செய்தது. காங்கிரஸ் தொண்டர்களுக்கு கவியரசரின் எழுத்துக்கள் கற்கண்டு. காங்கிரசை எதிர்ப்போர்களுக்கோ அதுவொரு அணுகுண்டு. காங்கிரஸ் கட்சி சார்பான மாநாடுகள், அறப்போராட்டங்கள், கடற்கரை கூட்டங்கள் போன்றனவாகட்டும், பெருந்தலைவர் பிறந்தநாள் போன்ற நிகழ்ச்சிகளாகட்டும், காங்கிரஸ் கட்சி நடத்தி வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளின் அருமைப் பெருமைகளை, அரசியல் முக்கியத்துவத்தை கவியரசர் விளக்கி எழுதுவார்.
நிகழ்ச்சிகள் நடைபெறும் பல தினங்களுக்கு முன்பிருந்தே நவசக்தி இதழின் கடைசி பக்கம் முழுவதும், ‘அலை அலையாக வருக … அணி அணியாக வருக … ‘ என்று விவிலிய (பைபிள்) பாணியில், கவிதைநடைச் சொல்லோவியங்களை, உணர்ச்சி கொப்பளிக்கும் வீரம் செரிந்த கட்டுரைகளாக கடித வடிவில் நாள்தோறும் கவியரசு கண்ணதாசன் எழுதுவார். லட்சோபலட்ச மக்களை தமது அழகு பொங்கும் தமிழால், பேனா முனையாலே கண்ணதாசன் ஒன்று திரட்டி விடுவார். நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்ததும், நன்றி நவிலும் கட்டுரையாக, முத்தாய்ப்பாக எழுதுவார். ‘நவசக்தி அழைத்தது, நாடே திரண்டது’ என்று மகுடம் சூட்டுவார்.

அரசியல் உலகிலும், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியிலும், ‘நவசக்தி அழைத்தது, நாடே திரண்டது’ என்னும் வாக்கியம், ஒரு மந்திரச் சொல் போல் ஒவ்வொருவரும் உச்சரிப்பார்கள். அந்த வாக்கியம் அனைவரது உள்ளத்திலும் பொன்னெழுத்துக்களாய் பசுமரத்தாணி போல் பதிந்து விடும்.
1968 ஆகஸ்ட் 1 அன்று, சென்னையில் நடந்த ஆகஸ்ட் அறப்போராட்ட ஊர்வலத்தின் மீது போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்து, ஆகஸ்ட் 8 அன்று, பெருந்தலைவர் காமராஜர் தலைமையில் நடைபெறும் மௌன ஊர்வலத்திற்கு அனைவரும் வருமாறு அழைப்பு விடுத்து ‘நாளை மீண்டும் ஊர்வலம்’ என்ற தலைப்பில் கவியரசு கண்ணதாசன் எழுதிய கடிதத்தின் ஒரு சிறுபகுதி :
என் அருமை சகோதரர்களே, சென்னையில் போலீசார் நடத்திய அட்டூழியங்களை பத்திரிகைகளில் பார்த்திருப்பீர்கள். பட்டணத்து மக்கள் மெச்சத்தக்க வகையில், நாகரீகமாகவும், அமைதியாகவும் ஊர்வலத்தில் சென்றவர்களை போலீசார் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதில் நூற்றுக்கணக்கானோரின் மண்டை உடைந்தன. ரத்தம் சொட்ட சொட்ட எழ முடியாமல் சாலையில் கிடந்தவர்களை மேலும், மேலும் தாக்கினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த தோழர்களை தலைவர் காமராஜர் அவர்கள் பார்த்து பதறிப் போனார். அதுமட்டுமா? நாலாம் தேதி ஞாயிற்றுக்கிழமை கண்டன மௌன ஊர்வலம் நானே தலைமை தாங்குகிறேன் என்றார் காமராஜர். நடக்கப் போவது மௌன ஊர்வலம். ஊர்வலத்தின் முன்னாள் தலைவர் காமராஜ், சி.எஸ் உள்ளிட்ட தலைவர்கள் முன்செல்வார்கள்.
லட்சக்கணக்கில் கூடுங்கள். இனி நம்மை எவனும் எதுவும் செய்ய முடியாது. துடித்தெழுந்து வாருங்கள். தோள்தட்டி வாருங்கள். நமது உயிரினும் இனிய தலைவர் தலைமை தாங்கும் ஊர்வலத்தில், ‘கடல் எழுந்ததோ, படை எழுந்ததோ’ எனக் காட்ட வாருங்கள்.
நீதி கேட்கும் கண்ணகி கடற்கரையில் நிற்கிறாள். நாமோ, நீதி கேட்பதற்கு ஊர்வலமாக அவளை நோக்கிப் போகிறோம்.
தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் புறப்படும் அந்த மௌன ஊர்வலம், மவுண்ட் ரோடு ரவுண்டானா, வாலாஜா ரோடு, திருவல்லிக்கேணி ஹைரோடு, பைகிராப்ட்ஸ் ரோடு வழியாக திலகர் கட்டத்தை அடையும்.
நான் அழைத்த அழைப்புக்;கெல்லாம் ஓடோடி வந்த என் அருமை தோழர்களே,
இப்போது நான் அழைக்கவில்லை, நம் தெய்வமே அழைக்கிறது. நம் அருமை தலைவர் உங்களை அழைக்கிறார். கூடுங்கள், கூடுங்கள், இதுவரை காணாத கங்கை நதி பிரவாகம் போல் கூடுங்கள்.
நதி முன்னோக்கிச் செல்லும், நாமும் முன்னோக்கியே செல்வோம்.
நாளை ஞாயிற்றுக்கிழமை. மாலை 4.00 மணி. தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானம். இடையில் இருப்பது ஒரே நாள்.’தலைவர் அழைத்தார், 24 மணி நேரத்தில் கூடினோம்’ என்பதைக் காட்டுங்கள். புறப்படுங்கள், புறப்படுங்கள்.
அன்பன், கண்ணதாசன்.
என்பதான இந்தக் கடிதம் நவசக்தியில் 3.8.1968 அன்று வெளிவந்தது.

அந்த ஊர்வலத்தில் மாணவனாக இருந்த நான் பங்கேற்றது நினைவுக்கு வருகிறது. அப்போது மவுண்ட் ரோடில் அண்ணா சிலை அருகே அந்த ஊர்வலம் வந்த போது வெறும் காலணி சத்தம் தான் கேட்டது இன்றும் எனக்கு நினைவுக்கு வருகிறது. என்னுடைய கணிப்பின்படி 50,000 பேருக்கு மேலாக அந்த மௌன ஊர்வலத்தில் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று தி.மு. கழகத்தினரால் தாக்கப்பட்டு பலியான தேவதாஸ் மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து இந்த மௌன ஊர்வலத்தை காமராஜர் தலைமையில் நடத்தினார். கண்ணதாசன் தமது கடிதத்தின் மூலம் அனைவரையும் அணி திரட்டினார். 1967 இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு காங்கிரஸ் கட்சியினரிடையே உருவான எழுச்சிக்கு இந்த மௌன ஊர்வலம் சாட்சியாக இருந்தது.
அதேபோல, நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் 1968 இல் காமராஜர் போட்டியிட்ட போது, கவியரசு கண்ணதாசன் எழுதிய பாண்டவர் படையே அணி திரண்டு வா என்ற தலைப்பிட்ட கடிதத்தின் சில பகுதிகள் :
இந்த போர்க்களத்தில் உங்கள் பங்கு என்ன?
நாகர்கோவிலுக்கு போய் செலவுக்காகவோ, தேவைகளுக்காகவோ தேர்தல் அலுவலகத்திற்கு செல்லக் கூடாது.
உங்கள் பணத்தை செலவு செய்து உங்கள் சேவையை தர வேண்டும்.
தங்குமிடம் எல்லாக்கும் தர இயலாது. அது சின்ன நகரம். வசதி இல்லாதது.
அருமையான தென்னந்தோப்புகள் உண்டு. தேன் போல் இனிக்கும் நீர் நிறைந்த தடாகங்கள் உண்டு. தோப்பில் உறங்கி, தடாகத்தில் குளித்து, புனித யாத்திரை செல்பவர்களைப் போல், ‘சேவை … சேவை…’ என்றே அலைய வேண்டும்.
சபரிமலைக்கு போகிறவர்களுக்குத் தங்குமிடத்தை ஐயப்பனா ஏற்பாடு செய்கிறான் ?
நமக்கு இதுதான் திருவிழா!
இந்த விளக்கு எரிந்தால் தான், உங்களுக்கும், எனக்கும், இந்த சமுதாயத்திற்கும் எதிர்காலம்.
ஜமக்காளமும், தலையணையும் கொண்டு செல்லுங்கள். கூட ஒரு போர்வையும் வைத்துக் கொள்ளுங்கள்.
அங்கே எல்லா கிராமங்களும் நமது கிராமங்களே. எங்கு சென்றாலும் உங்களை வரவேற்பார்கள்.
தெய்வங்களும், தர்மங்களும் தோற்ற பின்னே, மனித வாழ்வுக்கு ஏது ஜீவனாம்சம்?
எத்தனை நல்ல உள்ளங்கள் இந்த பூமியில் உண்டோ, அத்தனையையும் நான் நாகர்கோவிலில் பார்க்க வேண்டும்.
புறப்படுவது எப்போது? நாளையா, மறுநாளா? லட்சக்கணக்கில் புறப்படுங்கள்.
சென்னை ஊர்வலத்தில் திரண்டது போல் திரளுங்கள்.
அன்பன், கண்ணதாசன்.
என்று முடியும் அந்த கடிதம் நவசக்தி நாளேட்டில் 26.12.1968இல் வெளி வந்தது.

இந்த கடிதத்தை படித்த காங்கிரஸ் கட்சியினர் ஆயிரக்கணக்கில் நாகர்கோவிலில் காமராஜருக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய குவிந்தார்கள். எங்கு பார்த்தாலும் காங்கிரஸ் கட்சியினர் கூட்டம் கூட்டமாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். பெருந்தலைவர் காமராஜர் அந்த இடைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றார்.
அதேபோல, பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா நெருங்குகிற போது நவசக்தியில் அவரைப் பற்றி கடிதம் எழுத ஆரம்பித்து விடுவார். அப்படி எழுதப்பட்ட ஒரு கடிதத்தின் சில பகுதிகள் :
நாம் காமராஜர் என்னும் தெய்வத்தின் குழந்தைகள். அந்த கருணை முனிவனின் சீட கோடிகள். எந்த ஸ்தானத்தில் அவன் நின்றாலும் அதன் முதற்படிகட்டில் நாம் நிற்போம்.
காமராஜை விட்டுவிட்டு இந்தியாவின் அரசியல் தன் எதிர்காலத்தை தேடிக் கொள்ள முடியாது. ஆகவே, நம் எதிர்காலத்தை அவனிடம் ஒப்படைத்து, அவனை வழிபடுவோம் வாருங்கள்.
நாளை அவன் பிறந்தநாள். ஆலயங்களில் அவனுக்காக வேண்டுங்கள்.
தெய்வமே, பல்லாண்டு காலம் எங்கள் தலைவனை எங்களுடன் வைத்திரு என்று திருப்புகழ் பாடுங்கள்.
அவன் இல்லையேல் ஏழைக்கு வாழ்வில்லை. அவன் இல்லையேல் தேசத்திற்கு எதுவுமே இல்லை. அவனை வழிபடுவோம். அவன் புகழ் பாடுவோம். வாருங்கள், வாருங்கள்.
இதுபோன்ற கடிதங்களை நவசக்தியில் எழுதி, காமராஜருடைய 66-வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடுகிற வகையில் காங்கிரஸ் கட்சியினரிடையே உணர்ச்சிகளை ஊட்டி வளர்த்தவர் கவியரசர் கண்ணதாசன்.

பெருந்தலைவர் காமராஜரின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு 1974 ஜூலை 14 இல் நவசக்தி நாளிதழில் கவியரசர் கண்ணதாசன் எழுதிய கவிதையின் ஒரு பகுதி :
அன்புத் தலைவனே, ஆனந்த பவனுக்கு அரசிளங்குமரனே, இனிய நண்பனே, இந்திய மக்களின் இதயங் கவர்ந்த ஏந்தலே, எவ்வளவோ பதவிகளும், வசதிகளும் தேடி வந்தாலும், எவ்வளவோ ஆனந்தமாக இருக்க வேண்டிய நீ, நாட்டிற்காகவே அனைத்தையும் துறந்தாய். வருங்காலம் நீ எழப்போகும் காலம். நாடு வாழப்போகும் காலம். அதோ, அந்த காலம் என் கண்ணுக்கு தெரிகிறது.
நாடு உன்னைவிட்டு எங்கேயும் சென்றுவிடவில்லை. உனக்கு கொஞ்ச நாள் ஓய்வு தந்தது, அவ்வளவு தான்.
இதோ, இரவு கலையப் போகிறது, பகல் வரப்போகிறது. ஏழை இதயங்கள் உன் வரவை எதிர்நோக்குகின்றன.
இன்னும் பல்லாண்டு ஆரோக்கியத்தோடும், சுறுசுறுப்போடும் நீ வாழ வேண்டும். என் கண்ணன் உன்னை வாழ வைப்பான் என்று அந்த கடிதம் முடிகிறது. இப்படித் தான் காங்கிரஸ் கட்சியினரை காமராஜர் தலைமையில் அணி திரட்ட கவியரசர் கண்ணதாசன் இத்தகைய கடிதங்களை எழுதி உணர்ச்சிகளை ஊட்டினார்.

இன்று எனக்கு 74 வயதாகிறது. அன்று 1968 -இல் கல்லூரியில் புகுமுக வகுப்பில் படித்து வந்தேன். அப்போது கடிதம் பத்திரிகையை 10 பைசா கொடுத்து வாங்கியதோடு, நவசக்தி, நாத்திகம், ஜெயபேரிகை, ஜெயகொடி, போல்ஸ்டார் ஆகிய இதழ்களைப் படித்து காங்கிரஸ் கட்சி மீதும், காமராஜர் தலைமை மீதும் பற்றுகொண்டு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் முழுநேர ஊழியராக செயல்பட்டு வருகிறேன்.
அந்த காலகட்டத்தில் என்னைப்போல் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியில் ஈர்க்கப்பட்டதற்கு கவியரசர் கண்ணதாசனும் மேற்கூறிய காங்கிரஸ் ஆதரவு இதழ்களுமே முக்கிய காரணம். ஆனால், இன்றைக்கு இருக்கிற காங்கிரஸ் கட்சியினர் எத்தனைபேர், கவியரசர் கண்ணதாசன் நினைவை போற்றுகிறார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால், கவியரசர் கண்ணதாசன் அவர்களது புகழை பரப்ப வேண்டிய பெரும் கடமையும், பொறுப்பும் காங்கிரஸ் கட்சியினருக்கு இருக்கிறது. அதை காங்கிரஸ் கட்சியினர் செய்கிறார்களா என்று பார்க்கிறபோது மிகுந்த ஏமாற்றமும், வேதனையும்தான் மிஞ்சுகிறது.
நான் அறிந்தவரையில் இதுவரை சொல்லின் செல்வர் சம்பத், கவியரசர் கண்ணதாசன், சிறுகதை மன்னர் ஜெயகாந்தன் ஆகியோர் காங்கிரஸ் கட்சிக்கு பங்களித்தது போல நினைவு கூறுகிற வகையில் அதற்குப் பிறகு எந்த நிகழ்ச்சியும் நடைபெறவில்லையே என்ற ஏக்கமும் எதிர்பார்ப்பும் எனக்கு இருக்கிறது. ஆனால், சூழல் சரியில்லாததால் சிலவற்றை நான் மட்டுமே செய்துவிட முடியாது. அதே நேரத்தில் ‘காமராஜ் ஒரு சகாப்தம்’ என்ற நூலில் இவர்களது பங்களிப்பை நான் பதிவு செய்திருக்கிறேன். அந்த வகையில் எனது கடமையை நான் ஓரளவுக்கு செய்ததாக மனநிறைவு அடைகிறேன்.
இனிவரும் காலங்களில் இவர்களது புகழை பரப்புகிற முயற்சியில் தீவிரமாக ஈடுபடக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. கண்ணதாசன் நூற்றாண்டைப் பயன்படுத்தி கவியரசர் கண்ணதாசன் புகழை கொண்டாடுவது காங்கிரஸ் கட்சியினருடைய கடமையாகும்.
ஆ. கோபண்ணா

ஆசிரியர், தேசிய முரசு
























கண்ணதாசன் குறித்த ஆ.கோபண்ணாவின் பதிவு மிகவும் சிறப்பு.
இப்போதுதான் காங்கிரசின் தளத்துலத்தை அரசியயல் புனிதத்துவத்தை அறிந்தார் போலும். இனியாகினும் காங்கிரஸின் அரசியல் நேர்மையை அறிந்துக் கொள்ளட்டும்.
காமராஜர் ஆட்சியில் மது விலக்கு அமலில் இருந்தபோதும் கவிஞர் கண்ணதாசனுக்கு மட்டும் மது குடிக்க ஸ்பெஷல் பர்மிட் ! !காமராஜர் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் கண்ணதாசன் காங்கிரஸில் இருந்திருக்கிறார். மது பழக்கம் உடைய கண்ணதாசன் அப்போதைய அமைச்சர் கக்கனிடம் சென்று, நான் மது குடிப்பதற்கு பெர்மிட் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அவரது பேச்சை மறுதலிக்க முடியாத கக்கனும் அதற்கான பெர்மிட்டை கொடுத்திருக்கிறார். தக் பதில்: கண்ணதாசனும் பெர்மிட்டை வாங்கி வைத்துக்கொண்டு மதுவை குடித்திருக்கிறார். ஆனால் இது பூதாகரமாக வெடித்தது. அது எப்படி மதுவிலக்கு உள்ள மாநிலத்தில் கண்ணதாசன் மட்டும் குடிக்கலாம். காங்கிரஸ் கட்சிக்காரர் என்பதால் அவருக்கு மட்டும் அரசு பெர்மிட் கொடுத்திருக்கிறது என பலர் பேச ஆரம்பித்துவிட்டனர். இந்த விஷயம் டெல்லிவரைக்கும் சென்றுவிட்டது. அதனையடுத்து டெல்லியிலிருந்து காமராஜருக்கு ப்ரெஷர் போடப்பட்டிருக்கிறது. இதை இப்படியே விட்டால் சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்த காமராஜர் கண்ணதாசனிடம் குடிக்காக கொடுத்திருந்த பெர்மிட்டை திருப்பி கொடு என கேட்டிருக்கிறார். அதற்கு கண்ணதாசன் சற்றும் யோசிக்காமல் சரி உங்களிடமே திருப்பி கொடுக்கிறேன். ஆனால் அந்த பெர்மிட்டை அல்ல காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் கார்டை கொடுக்கிறேன் என ஒரே போடாக போட்டிருக்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத காமராஜர், சிறிது நேரம் யோசித்துவிட்டு சரி நீ போ நான் பார்த்துக்கிறேன் என கூறி அனுப்பியிருக்கிறார். காமராஜர் அப்படி சொன்னதற்கு ஒரு காரணம் இருக்கிறது; திராவிட கட்சிகளின் வளர்ச்சியை எதிர்ப்பதில் கண்ணதாசனின் துணையையும் காமராஜர் எதிர்பார்த்தார். அதனால் அவருக்கு அப்போது வேறு வழி தெரியவில்லை. இந்தத் தகவலை மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமார் ஒரு மேடையில் பகிர்ந்துகொண்டார். MGR TV ஹமீது (03-11-2026)