பாஜகவின் ஊதுகுழலான பாமகவின் தேர்தல் அறிக்கை!

-சாவித்திரி கண்ணன்

இது பாமகவின் தேர்தல் அறிக்கையா? அல்லது பாஜகவின் தேர்தல் அறிக்கையா? என மீண்டும் அட்டைப்படத்தை பார்க்க வேண்டியதாகிவிட்டது! ஒரு வேளை பாஜகவே இதை டிராப் பண்ணி கொடுத்திருக்கலாமோ… என்றும் தோன்றியது!

தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி,ஸ்டாலின்,கமலஹாசன் வரை தேர்தல் தேதி ஆரம்பிப்பதற்கு முன்பே தெருத்தெருவாக பிரச்சாரத்தில் இறங்கி செயல்பட, தேர்தல் அறிக்கை நிகழ்விற்கு கூட வெளியே வர பயந்து கொண்டு, காணொலியில் தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிஜிட்டல் அரசியல் தலைவர்கள் இந்தியாவிலேயே டாக்டர்.ராமதாஸும், அன்புமணி ராமதாதாஸுமாகத் தான் இருப்பார்கள்!

பொதுவாக பாமகவின் தேர்தல் அறிக்கைகள் கடந்த காலங்களில் மிக ஆழமாக தமிழக மக்கள் நலன் சார்ந்து வெளிப்பட்டுள்ளது! ஆனால், தற்போதைய தேர்தல் அறிக்கையோ அதன் பாஜக விசுவாசத்தை தெளிவாக பிரதிபலிப்பதாக உள்ளது! பாஜகவின் மனம் கோணாமல் எப்படி தேர்தல் அறிக்கை உருவாக்கலாம் என அதிமுகவினரே கூட பாமக அறிக்கையை பயில்வதன் மூலம் பாடம் பெறலாம்!

விவசாயிகளையும், விவசாயத்தையும் கடுமையாக பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை தமிழகத்தில் அமலாக்கவிடமாட்டோம் என்று சொல்ல முடியாத தேர்தல் அறிக்கையாக இது உள்ளது! அத்துடன் வட தமிழக விவசாய பெருங்குடி மக்களை கடுமையாக பாதிக்கும் எட்டு வழிச்சாலையை போட மாட்டோம் என்ற உத்திரவாததையும் பாமகவால் தர முடியவில்லை! அப்படியானால் கோர்ட்டுக்கு போனதெல்லாம் ஒரு நாடகமா? நீதிமன்றங்கள் அரசை மீறி இன்று நியாயம் வழங்குவதில்லை என்று தெரிந்தே பாமக, ’’நாங்க நீதிமன்றத்திற்கு போய் எதிர்த்தோமாக்கும்’’ என்ற அளவோடு அந்த சப்ஜெக்டை முடித்துக் கொண்டனர்! எட்டு வழிச்சாலையை எதிர்க்காத எந்த கட்சியும் வட தமிழகத்தில் வாக்காளர்களின் நம்பிக்கையை பெற முடியாது. இது பாமகவிற்கு நன்கு தெரியும். ஆனால், பாஜகவின் நம்பிக்கையை பெறுவதே அதற்கு போதுமானதாக தெரிகிறது!

அடுத்ததாக நீட் தேர்வு விவகாரத்திலும் நீட்டி முழக்கி குழப்பி உள்ளது பாமக! நீட் வேண்டாம் என்று உச்ச நீதிமன்றத்தை தான் நாடுவார்களாம்! மத்திய அரசை நிர்பந்திக்க மாட்டார்களாம். மேலும் ஒரிடத்தில் ஒன்பதாம் வகுப்பில் இருந்து மாணவர்களுக்கு தேசிய அளவிலான நுழைவு தேர்வுக்களை எதிர்கொள்ள சிறப்பு பயிற்சி கொடுப்போம் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிடபட்டிருப்பதானது, நீட் உள்ளிட்ட அனைத்து தேர்வுகளையும் பாமக ஏற்பதாக தெளிவுபடுத்திவிடுகிறது!

தமிழ் நாட்டில் ஒரு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என கூறும் தேர்தல் அறிக்கை பொதுதுறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுவதை எதிர்ப்போம், அவற்றை காப்போம் கூறத் தயாரில்லை என்றால் எப்படி? அரசு மற்றும் பொதுதுறை நிறுவன வேலைவாய்ப்புகளை காலி செய்து கொண்டிருக்கும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு, இல்லாத வேலைக்கு இடஒதுக்கீடு பேசுவது ஏற்புடையதா..?

தமிழகத்தில் மின் உற்பத்தி தனியாருக்கு தரப்பட்டதில் இருந்து மின்கட்டணம் தாறுமாறாக உயர்த்தப்பட்டுவருகிறது. ஆனால், இது தொடர்பாக பாமக தேர்தல் அறிக்கையில் வாய் திறக்க மறுத்துள்ளது.

ராஜிவ்காந்தி கொலைவழக்கில் சம்பந்தப்பட்ட எழுவரின் விடுதலைக்காக ஒரு சம்பிரதாயத்திற்காகவாவது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட பாமக, வீரப்பன் தேடுதல் வேட்டையில் கைது செய்யப்பட்டு, 32 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள 60,70 வயதிற்கு மேற்பட்ட எளிய தமிழர்களை பற்றி வாய் திறக்கவேயில்லை.

அதே போல இஸ்லாமியர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட சி.ஏ.ஏ, என்.ஆர்.சி ஆகியவை அமலாக்கம் குறித்த எந்த மாற்று கருத்தையும் தெரிவிக்க பாமக மறுத்துள்ளதானது அதன் பாஜக மீதான விசுவாசத்தை தெளிவாகவே காட்டுகிறது!

ஸ்மார்ட்சிட்டி எனப்படும் நாசகார இயற்கை அழிவு திட்டங்களை தேர்தல் அறிக்கை ஆதரிப்பது போன்ற தொனி தெரிகிறது. தமிழகத்திற்கு நான்கு தலை நகரம் என பாமக நகர்த்தும் காயானது தமிழகத்தை நான்காக துண்டாடி, அதில் ஏதேனும் ஒன்றையாவது அடையமுடியாதா என பல காலமாக கனவு கண்டுவரும் ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ சக்திகளின் அஜந்தாவிற்கான செயல்வடிவமாகவே தெரிகிறது.

இதனால் தான் பாமக என்றாலே இது வரை எட்டிக்காயாக பழித்து வந்த தினமலர் பாமகவின் தேர்தல் அறிக்கையை முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியாக வெளியிட்டு ஜோர் என பாராட்டியதோடு இரண்டு முழுப்பக்கத்திற்கு பாமகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டதோடு, தொடர்ந்து பாமகவை பாராட்டிய வண்ணம் உள்ளது! தினமலரால் அள்ளி அரவணைத்து உச்சி முகரப்படும் நிலைக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டுவிட்ட பிறகு நாம் பாமகவின் தேர்தல் அறிக்கை குறித்து வேறென்ன சொல்லிவிடமுடியும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time