தேமுதிக ஒரு தேவையில்லாத கட்சி..!

-சாவித்திரி கண்ணன்

தேடி கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் உள்ள ஒரு கட்சிக்குத் தான் எத்தனை தெனாவட்டு..?

ஒன்னும் இல்லாமலே எப்படி கெத்துகாட்டுவது என்பதற்கு இன்று தேமுதிகவை மிஞ்ச நாட்டில் வேறு கட்சி இல்லை!

காலி பெருங்காய டப்பா எப்படியும் கொஞ்ச நாளைக்கு வாசனை வீசிக்கிட்டுத் தான் இருக்கும்! ஆனால், சமையலுக்கு பயன்படாது!

அது போலத்தான் தேமுதிக! இது ஒரு வேத்துவேட்டு! வெடிக்கிறது மாதிரி சின்ன தீப்பொறி வந்துட்டு தானா அணைந்துவிடும்..!

”234 தொகுதிகளிலும் எங்கள் வேட்பாளர்களை நிறுத்துவோம். எங்க தயவில்லாமல் யாராலும் தமிழ் நாட்டில் ஆட்சி அமைக்க முடியாது. எங்களுக்கு கெஞ்சி பழக்கமில்லை, இப்போதும் எங்களுக்கு 10% வாக்குகளுள்ளது..!’’

இப்படியெல்லாம் பேசினாலும் தனியா நிற்கமாட்டாங்க! 2016 தேர்தலில் வாங்கிய ஓட்டு 2.4% தான்! அனேகமாக நின்ற 104 தொகுதிகளிலும் டெபாசிட் போய்விட்டது என்று நினைக்கிறேன்!

இந்த லட்சணத்துல வேட்பு மனு தாக்கல் செய்யச் சொன்னா கட்சிக்காரனுக்கு எப்படி தைரியம் வரும்? சும்மா பேருக்கு ஒரு சிலர் தான் தாக்கல் செய்தனர். கூட்டணி ஏற்பட்டால் தான் அவங்களும் நிற்பாங்க..இல்லாட்டி மெல்ல ஜகா வாங்கிடுவாங்க…!

ஆன போதிலும் நாளுக்கு ஒரு பேச்சு, சவடால், மிரட்டல் என்ற பாணியில் கட்சி நடத்தி வருகிறார் பிரேமலதா!

41 தொகுதிகள் கேட்டு 23 தொகுதிகளுக்கு இறங்கி வந்துள்ளார்களாம்!

அடடா.., என்ன பெருந்தன்மை! இந்தக் கட்சிக்கு அதிமுகவில் எத்தனை சீட் கொடுத்தாலும் அனைத்திலும் தோற்றுவிடுவார்கள்! வேண்டுமானால், அதிமுக தாங்கள் ஜெயிக்கவே முடியாது என நினைக்கும் ஒரு சில தொகுதிகளை தேமுதிகவிடம் தள்ளி கழித்து கட்டலாம் என நினைக்கும் பட்சத்தில் கூட்டணியில் சேர்க்கலாம்!

பாமக இருக்கும் கூட்டணியில் நாங்க இருக்கமாட்டோம் என்று வாய்விட்டாச்சு..! அப்புறம் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% இடஒதுக்கீட்டை எதிர்த்தாச்சு! இது போதாதா..? தேமுதிகவை தோற்கடிக்கும் வேலையை கூட்டணிக்குள் இருந்தே பாமக கச்சிதமாக செய்துவிடும்!

சசிகலா வந்தால் போய் ஒட்டிக்கலாம் என்று புகழ்ந்தெல்லாம் பேசி ஆதரித்து பார்த்தார்கள். சசிகலா இவர்களை சந்திக்கவே விருப்பம் காட்டாததோடு, அரசியலில் இருந்தே ஒதுங்கிவிட்டார். கமலஹாசன் இவங்களை கன்சிடரே பண்ணவில்லை! தினகரன் திரும்பியும் பார்க்கவில்லை! இன்றைய தினம் தேமுதிகவிற்கு ஓரளவு மதிப்பு கொடுத்து அனுசரித்து போகக் கூடிய ஒரே கட்சியாக அதிமுக மட்டுமே உள்ளது! இதைக் கூட புரிந்து கொள்ளாமல் அடிக்கடி எடுத்தெறிந்து பேசி வந்தால், கூட்டணியில் தொகுதி கிடைத்தாலும் அதிமுக தொண்டன் ஒத்துழைப்பு கிடைக்காது!

ஒரே குடும்பத்தில் நான்கு பேர் சட்டமன்றத்திற்கு போட்டியிடும் கட்சி என்றால், அதுவும் தேமுதிக தவிர வேறு யாருமில்லை! கணவன், மனைவி, மகன், மச்சினன் ஆகியோருக்கு மட்டுமே நான்கு தொகுதிகள் போய்விடுகிறது.

அரசியல் அரிச்சுவடியே தெரியாத விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஏகத்தும் எல்லாரையும் எடுத்தெறிந்து பேசுகிறார்! அச்சு அசல் அம்மா மாதிரியே ஆங்காரம் இருக்கிறது!

ஒவ்வொரு கட்சி உயிர்த்திருக்கவும் ஒரு சமூக,அரசியல் வரலாற்றுத் தேவை இருக்கிறது! ஒரு சித்தாந்தம், கொள்கை கொண்ட குறிப்பிட்ட மக்கள் திரளின் ஆசை,அபிலாசைகள் உள்ளது! அப்படி ஏதாவது இந்தக் கட்சி உயிர் வாழ்வதற்கான சமூக.,அரசியல் காரணிகள் ஏதாவது உள்ளதா என்று தலை வெடிக்க சிந்தித்துப் பார்த்தும் எனக்கு விடை ஒன்றும் கிடைக்கவில்லை. தெரிந்தவர்கள் சொன்னால் நலம்.

2005 ல் இந்த கட்சி உதயமான போது, இரு திராவிட இயக்கத்தையும் ஏற்க முடியாத மனநிலை கொண்டவர்கள் இதை ஒரு மாற்றாகக் கருதி ஆதரித்தார்கள். 2011ல் அதிமுகவுடன் இணைந்ததன் மூலம் அந்த தகுதியையும் இழந்துவிட்டது தேமுதிக. தீடிரென்று கிடைத்த 29 எம்.எல்.ஏக்கள், எதிர்கட்சி அந்தஸ்து ஆகிய வாய்ப்பை சரியாக பயன்படுத்த தெரியாத கட்சியாக அது வெளிப்பட்டுவிட்டது! ஆகவே, அந்த கட்சியின் முக்கியஸ்தர்கள், விஜயகாந்தின் விசுவாசிகள் அனைவரும் கிட்டதட்ட அதில் இருக்க முடியாமல் விலகிவிட்டனர். 2011 ல் எடுத்திருக்க வேண்டிய மூன்றாவது அணி என்ற முயற்சியை 2016 ல் எடுத்தது தேமுதிக. அந்த தேர்தல் முடிவுகள் அக் கட்சி தேய்பிறையாகி வருவதை நன்கு தெளிவு படுத்திவிட்டது!

அஸ்தமனத்தை நோக்கி தேமுதிக!

கட்சி சுருங்கி போனதற்கு எல்லாவற்றையும் விட முக்கிய காரணம் விஜயகாந்தின் உடல் நலம் பாதிக்கப்பட்டது தான்! எந்த ஒரு கொள்கை இல்லாவிட்டாலும் கூட, அந்தக் கட்சியின் ஒரே ஈர்ப்பு விஜயகாந்த் தான்! அவரது படங்கள், அவர் செய்த தான தர்மங்கள், அவரை நேசிக்க கூடிய ஒரு மக்கள் திரள்! இது மட்டுமே தேமுதிகவின் பலம்! விஜயகாந்த் தற்போது செயல்படமுடியாத நிலையில் உள்ளார். அவரால் தெளிவாக பேசவும் முடியவில்லை.அவருக்கு தேவைப்படுவது பூரண ஓய்வு! அது தான் அவருக்கு நல்ல உடல் நலத்தை கொடுக்கும். இனி ஆக்டிவ் பாலிடிக்ஸ் செய்வது அவரது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல! இதுவே மக்கள் பார்வையாக உள்ளது.

பிரேமலதா தன் அரசியல் ஆதாயத்திற்காக விஜயகாந்தை வருத்தி, அரசியல் பிரச்சாரத்திற்கு அழைத்து வருவார் எனில் அது மக்கள் மத்தியில் எதிர்மறை விளைவுகளையே அக் கட்சிக்கு ஏற்படுத்தும்!

ஒரு தேர்தல் பொதுக் கூட்டத்தில் அவர் பேச முடியாமல் குளறி பேசியதைக் கண்டு தாய்மார்கள் கண்ணீர் வடித்தனர்! ”இந்தப் பொம்பள ஏன் இந்த மனுசனை வெளியில் இட்டாந்து இந்த பாடுபடுத்துது! வூட்ல வச்சு நெல்லா அவரை கவனிக்கறதவுட்டுட்டு அரசியல் தேவையா..?’’ என்று சில பெண்கள் கமெண்ட் அடித்தார்கள்!

ஆக, ”பாவம்யா கேப்டன்..! எப்படி பாய்ந்து,பாய்ந்து எதிரிகளை பந்தாடிய மனுசன்! அவரை இந்த கோலத்தில் பார்க்கவே மனசு தாங்கலை..’’ என்பது தான் மக்கள் குரலாக உள்ளது.

கேப்டன் வழி நடத்தமுடியாத இந்த கட்சிக்கு எதுக்காக ஓட்டுப் போடணும்? என்பது தான் கடந்த காலத்தில் அக் கட்சியை ஆதரித்த மக்களின் எண்ணமாக உள்ளது! விஜயகாந்த் ஆக்டிவாக இருந்தால் இன்று விஷயமே வேறாக இருந்திருக்கும்! விஜயகாந்த் ஆக்டிவாக இல்லாத தேமுதிகவை தன் வீராப்பு பேச்சுக்களால் மேலும் வீழ்த்திவிட்டார் பிரேமலதா! அந்த கட்சியை மக்கள் எப்போதோ அரசியலில் இருந்து அப்புறப்படுத்திவிட்டனர்! தேர்தல் என்பதையே பணவசூலுக்கான ஒரு அரசியல் சூதாட்டமாக அர்த்தப்படுத்திக் கொண்டு அலம்பல் செய்யும் பிரேமலதாவின் அரசியல், அஸ்த்தமனத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது என்பதில் சந்தேகமேயில்லை!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time