மரணத்தை நெருங்கிய போதும் மனம் திறக்காத பெண்கள்!

- மாயோன்

துன்பங்கள் ஆயிரம், வலிகளோ அதிகம், மரணமோ வெகு நெருக்கம்…! ஆயினும் வாய் திறக்காமல் தங்களுக்குள் எல்லாவற்றையும் புதைத்துக் கொண்டு கணவனிடம் கூட பகிர்ந்து கொள்ள முடியாதவர்களாக நமது பெண்கள் இறுக்கமாக உள்ளனர் என்பதை ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் மூலம் விளக்கினார் டாக்டர்.சுரேந்திரன்..!

சென்னையில் வசிக்கும்  பெண்களுக்கு மார்பக புற்றுநோயும்  கர்ப்பப்பை வாய்ப் புற்று நோயும் அதிகளவு இருப்பது ஆய்வுகளின் மூலம் தெரிய வருகிறது.

இன்று மகளிர் தினத்தை ஒட்டி மேடைக்கு வந்து பேசிய ஆசிரியைகளை பார்த்தேன். அனைவருமே சராசரி உடல் எடையைவிட அதிக பருமன் கொண்டவராக இருந்தார்கள் . இதற்கு காரணம் உங்கள் மீது நீங்கள் கவனம் செலுத்தாதது தான்.

“எங்களுடைய அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக  ஆண்டு தோறும் இருபதாயிரம் புதிய நோயாளிகள் வருகை தருகிறார்கள்.

புற்றுநோய் அண்மைக்காலமாக அதிகரித்து காணப்படுவதற்கு முக்கிய காரணங்கள் : நம் உணவு முறையில் ஏற்பட்ட மாற்றம், புகையிலை -ஆல்ககால் பழக்கம், சுகாதாரமற்ற வாழ்க்கை முறை, உடற்பயிற்சியின்மை  ஆகியவையாகும்.

சாப்பிடும் நேரம் வந்து விட்டால்   கிடைத்த உணவை  வயிற்றுக்குள் தள்ளி விடுகிறார்கள்.எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்கிறீர்கள்.

இதன் விளைவு உடம்புபருமனாகிவிடுகிறது.

உங்களுக்காக ஒருமணிநேரம் ஒதுக்குங்கள். வாழ்க்கை துணை வருடன் நடைபயிற்சிக்கு செல்லுங்கள். அப்போது இருவரும் மனம் விட்டு   பேசுங்கள் .உடம்பும் மனதும் ஆரோக்கியமாக இருக்கும்.

35  வயதைக் கடந்த பிறகு வருடத்திற்கு ஒரு முறைகட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இந்த மருத்துவ பரிசோதனை மிகவும் எளிதானது. தமிழக  அரசின்சுகாதார மையங்கள் அனைத்திலும்  செய்யப்படுகிறது.கட்டணம் கிடையாது.

உடலில் எந்த வலியும் இல்லாமல் இதை செய்கிறார்கள். எங்கள் மருத்துவமனை சார்பில் 5 மாவட்டங்களுக்கு இந்த பரிசோதனையை செய்கிறோம். இப்பரிசோதனை ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயை கண்டுபிடிக்க உதவுகிறது.

50 சதவீத நோயாளிகள் முற்றிய நிலையில் தான் வருகிறார்கள். இதற்கு காரணம் நம்முடைய பண்பாடு -கலாச்சாரம்கூட என்பதை ஒத்துக் கொண்டேதான் தீரவேண்டும்.

கடந்த 2004ஆம் ஆண்டில் என்னால் மறக்க முடியாத ஒரு சம்பவம்.   ஒரு பெண் நோயாளி ஈரோட்டைச் சேர்ந்தவர். நடுத்தர வயது, திருமணமானவர்.படித்தவர். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் .மார்பில் ஒரு கட்டிக்காக மருத்துவமனைக்கு வந்தார் .நான் அவருடைய உடல்நிலை குறித்து விசாரித்துக் கொண்டிருந்தபோது, அவருடைய   மார்பு கட்டியிலிருந்து   புழுக்கள் வெளியில் வந்தபடி இருந்தன.கடுமையான துர்நாற்றம். இந்த அளவு முற்றவிட்டீர்களே  ஏன்?   உங்கள் கணவரிடமாவது  தொடக்கத்திலேயேசொல்லி இருக்கலாமே என்று கேட்டபோது, “இதை எப்படி வெளியில் சொல்வது என்று தயங்கிக் கொண்டு இருந்தேன்” என்று பதிலளித்தார்.

எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. ஆரம்பநிலையிலேயே வந்திருந்தால் அப்பெண்மணி கண்டிப்பாக நீண்ட காலம் வாழ்ந்திருப்பார். நான் எதற்காக அந்த நிகழ்ச்சியை இந்த இடத்தில் சொல்கிறேன் என்றால், இந்தியப் பெண்களில் பலரும் இப்படித்தான் உள்ளனர். உங்கள் உடம்புக்குள் ஒரு நோய் தொற்று இருந்தால் குடும்பத்தில் உங்கள் பெற்றோரிடம் அல்லது உங்கள் வாழ்க்கை துணைவரிம் கண்டிப்பாக  பகிர்ந்து கொள்ளுங்கள் . அந்த பகிர்வு உங்கள் உயிரை காப்பாற்றும்.உங்கள் குடும்பத்தை காப்பாற்றும்! ஏனென்றால்,குடும்பத்தின் அச்சாணியே பெண்கள் தான்!

குடும்பத்தில் இருப்பவர்களிடம் சொல்வதற்கு உங்களுக்கு தயக்கம் இருந்தால் ஒரு பெண் மருத்துவரிடமாவது  ஆலோசனை   பெற்றுக் கொள்ளுங்கள்.

புற்றுநோய் வருவதற்கு புகையிலை பொருட்கள் 40 சதவீதம் காரணியாக உள்ளன. இவை பான்மசாலா,மாவா என்று பல ரூபங்களில் உலா வருகின்றன. சாந்தி, சூப்பர் சாந்தி, சாவித்திரி என்று பெண்கள் பெயரில் விற்கிறார்கள். ஏராளமானோர் இவற்றிற்கு இரையாகி தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்கிறார்கள்.

புகை பிடிக்காத பெண்களுக்கும் ஏன் புற்று நோய் வருகிறது என்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், அவர்கள் வீட்டில் உள்ள ஆண்கள் பிடிக்கும் புகையால் அவர்கள் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது . இது “பேசிவ் ஸ்மோக்கிங் “எனப்படுகிறது. அடுத்தவரிடம் இருந்து வரும் புகையால் ஆபத்து அதிகம். எனவே வீட்டில்  புகை பிடிக்க அனுமதிக்காதீர்கள். பொது இடத்தில் யாராவது புகைப்பிடித்தால் தட்டிக் கேளுங்கள்.

புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்திக் கொள்ளும் அறிவாற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள் .அதைக் காட்டிலும் நோயை தடுக்கும் வாழ்வியல் முறைக்கு உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.

தரமான உணவை சரியான நேரத்தில் உட்கொள்ளுங்கள். தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சிக்கு ஒதுக்குங்கள் .பிறப்பு உறுப்புகளை சுகாதாரமாக வைத்துக் கொள்ள பழகுங்கள்.

சென்னை, அயன்புரத்தில் உள்ள சௌந்தரபாண்டியன் மேல்நிலைப்பள்ளி, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, சுவீட்டி புற்றுநோய் விழிப்புணர்வு அறக்கட்டளை ஆகியவை இணைந்து சென்னையில் மகளிர் தின விழா கொண்டாடின.

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் உளவியல் பிரிவு தலைவர் டாக்டர் சுரேந்திரன் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மகளிர் தின வாழ்த்துக்களை நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் தெரிவித்துக் கொண்டார்.

புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்கினார் .அப்போது அவர் பேசியவற்றைத் தான் மேலே தொகுத்து தந்துள்ளோம்.

 

 

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time