இலவச அறிவிப்புகளால் கட்டமைக்கப்படும் சூது அரசியல்!

-சாவித்திரி கண்ணன்

”குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் தருகிறேன்’- ஸ்டாலின்.

”அப்படியானால் நான் 1,500 உடன் ஆறு காஸ் சிலிண்டர்கள் தருகிறேன்’’- எடப்பாடி பழனிச்சாமி.

இப்படி இன்னும் என்னென்னவெல்லாம் தரப்போகிறீர்கள்….?

இலவச அறிவிப்புகள் அந்தந்த அரசியல் கட்சிகளின் தன் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகிறது!

நாம் நிராகரிக்கப்பட்டுவிடலாகாது என்ற பயத்தைக் காட்டுகிறது.

மக்கள் நம்பிக்கையை பெறுவதற்கு வேறு எந்த தகுதியும் அவர்களிடம் இல்லாததைக் காட்டுகிறது!

தமிழ் நாட்டின் கடன்சுமை ஏற்கனவே ஐந்தரை லட்சம் கோடிகளாய் உள்ள நிலையில், அதற்கான வட்டியே அரசின் மொத்த வருமானத்தில் கணிசமான பங்கை களவாடும் நேரத்தில், ஆளாளுக்கு இலவச அறிவிப்புகள் தருவது நாட்டின் நிதி நிலைமையை படுகுழியில் தள்ளுகிற அயோக்கியத்தனமான அறிவிப்புகளாகும். இந்த சுமையை இவர்கள் கொள்ளையடித்து சேகரித்து வைத்துள்ள தங்கள் சொந்த பணத்தில் இருந்து எடுத்து கொடுக்கப் போவதில்லை மக்கள் தலையிலே தான் இது விடியும்!

அதி மேதாவியாக தன்னைக் காட்டிக் கொண்டு, அற்பத்தனமான சூது அரசியலை நடத்த துணிந்தவர் கமலஹாசன்! மூன்று பெண்களை கைபிடித்து மூவரையும் நட்டாற்றில் விட்ட நாயகனான இவர் முட்டாள்தனமாக அறிவித்ததே, ”இல்லத்தரசிகளுக்கு மாதாமாதம் அரசு சம்பளம் தருவோம்’’ என்பதாகும்! கமலஹாசன் சொல்லிய வார்த்தையை, இரு பெரிய திராவிடக் கட்சிகளும் தங்கள் தேர்தல் வாக்குறுதியாக தந்துள்ளன! தன் மனைவி, மக்களை காப்பாற்ற வேண்டியது ஒவ்வொரு ஆண்மகனின் அடிப்படை கடமை! அப்படிக் காப்பாற்றுவதற்கான வேலை உத்திரவாதத்தை ஆணுக்கோ,பெண்ணுக்கோ அளிப்பது தான் அரசின் கடமை! தமிழக வேலை வாய்ப்பு அலுவலங்களில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் வேலை கேட்டுப் பதிவு செய்துள்ளனர்! அவர்களுக்கு வேலை தருவதற்கு என்னென்ன தொழிற்சாலைகளை ஏற்படுத்தலாம் அல்லது ஏற்படுத்த உந்து சக்தியாக இருக்கலாம் என்பதை விடுத்து, ஏன் ஓசி அறிவிப்புகள்?

ஏற்கனவே தரப்பட்ட இலவசங்கள் சமூகத்தில் பெரும் பின்னடைவையே ஏற்படுத்தி உள்ளன!

போக்குவரத்து தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட 7,000 கோடி ரூபாயை திருப்பித் தருவதற்கு துப்பற்ற நிலைமையில் அரசு கஜானா இருக்கும் போது, ஓட்டு பொறுக்கித் தனத்திற்காக என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பொது பணத்தை எடுத்து அள்ளிவிடலாம் என்ற துணிச்சல் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது…?

தமிழகத்தின் துப்புறவு தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர் கெளரவமான சம்பளம் இல்லாமல் அத்துக் கூலிகளாக காண்டிடாக்டர்களிடம் கொத்தடிமைகளாக வேலை செய்கின்றனர். அவர்களே நமது சுகாதாரத்தின் தூதுவர்கள். அவர்களிடம் கடும் உழைப்பை பிழிந்தெடுத்துவிட்டு, அவர்களை வறுமை கோட்டிற்கு கீழ் அழுத்தி வைத்துள்ளது தொடர்பான குற்ற உணர்வே இல்லாமல் இருக்கிறதே இந்த சமூகம்! அவர்கள் தன்மானத்துடன் வாழ்வதற்கான வேலை உத்திரவாதத்தை தரத் திரானியற்றவர்கள் ஓசியாக பணம் தருவதாக வாக்குறுதி தருவதேன்?

‘நான் தருகிறேன் நீ வாங்கிக் கொள்’’ என்பதே மன்னராட்சி மனோபாவமாகும்! நீ யார் தருவதற்கு? இது மக்கள் பணம்! இதை மேலும் வளர்த்து பெருக்குவதற்கு தான் அரசின் தலைமை பொறுப்பு உங்களுக்கு வழங்கப்படுகிறது! இருப்பதை காலி செய்வதற்கு அல்ல! நீங்கள் வெளிநாடுகளிடம் கடன் பெற்று – இல்லையில்லை மக்களை அடமானம் வைத்து – நாட்டின் நிதி நிலைமையை மேலும் மோசமாக்குவதற்கு அல்ல, உங்களுக்கு தரப்போகும் ஆட்சி அதிகாரம்!

தரக்கூடிய ஒவ்வொரு கடனுக்கும் பின்னணியில் வெளிநாடுகள் வைக்கும் நிபந்தனைகள் என்ன? இந்த நாட்டின் முதல் தரமான உற்பத்தி பொருள்களை குறைந்த விலைக்கு வெளிநாடுகளிடம் தர வேண்டும் அல்லது அவர்களின் தேவையற்ற உற்பத்தி பொருட்களை நாம் இறக்குமதி செய்து நமது மக்கள் தலையில் கட்ட வேண்டும். இதற்கு நீங்கள் கமிசன் பெற்று கொழுக்க வேண்டும் இது தானே இது நாள் வரை நடந்து கொண்டுள்ளது. இவர்கள் ஊழலில் கொழுப்பதை மக்கள் பொருட்படுத்தாமல் இருக்கவே அரசியல்வாதிகள் இலவசங்களை அறிவிக்கிறார்கள். ஓட்டுக்கு பணம் தருவது குற்றமென்பது போல இதுவும் ஒரு குற்றம். அதுவும் ஆட்சி அதிகார பலத்துடன் செய்யும் குற்றமே!

இல்லதரசிகள் வீட்டில் இருந்தே உழைத்து ஆயிரமோ, ஐயாயிரமோ சம்பாதிக்கதக்க உற்பத்தி சார்ந்த திட்டங்களை அறிமுகப்படுத்தினால் அது வீட்டும், நாட்டுக்கும் ஒரு சேர நன்மை தருவதாகும். ”என் நாட்டை ஓட்டாண்டியாக்கி, எனக்கு ஓசியில் தரப்படும் பணம் தேவையே இல்லை’’ என்று மக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்யாவிட்டால், இந்த அரசியல்வாதிகள் தமிழகத்தை படுமோசமான நிலைக்கு தள்ளிவிடுவார்கள்!

எல்லோருக்குமே பணம் தேவையான ஒன்று தான்! அது ஓசியில் கிடைப்பது அவமானம், உழைப்பால் பெறுவதே தன்மானம்! சுயமரியாதை இயக்கத்தின் வழியே வந்த திராவிட இயக்கங்கள் தங்களின் வெற்றிக்காக மக்களின் சுயமரியாதையை காவு கொடுக்கக் கூடாது. இதை நீதிமன்றம் தடுக்க முடியுமா… தெரியவில்லை.  நீதிமன்றங்கள் இவற்றை கடந்த காலங்களில் கண்டித்ததுடன் நின்றுவிட்டன!

மக்கள் மன்றம் ”சீச்சி, வேண்டாம் பொதுப் பணம், அதை ஊதாரித்தனமாக கையாளதே…’’ என்று சொல்லும் துணிச்சல் பெற வேண்டும்! இந்த உண்மைகள் மக்களுக்கும் நன்கு தெரிந்துள்ளது. இலவசங்களை தருபவர்களை மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்க தெளிந்துள்ளனர். ’’சும்மா தரவில்லை சுய ஆதாயத்திற்கு தான் தருகிறார்கள். எல்லாம் நம்ம தலையில் தான் விடியப் போகுது…’’ என்று மக்களுக்கு தெரியாமல் இல்லை! தடுக்கத்தான் யாருமில்லை. தூக்கி தரப்படும் இலவசங்கள் நம் கையைக் கொண்டு நம் கண்ணை குத்திக் கொள்ளச் செய்யும் சூது அறிவிப்புகளே!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time