ஷாக்கடிக்கும் ஒரு லட்சம் கோடி மின் துறை ஊழல் !

-மாயோன்

ஊழல், ஊதாரித்தனம், கமிஷன், கையூட்டு ஆகியவற்றின் மூலம் தமிழக மின்வாரியத்தை மீள முடியாத ஒன்றரை லட்சம் கோடி கடனில் தள்ளியுள்ளது அதிமுக அரசு! தற்போது இதை மத்திய அரசின் தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கையை ஆதாரமாக காட்டி, தமிழக மின் துறை முறைகேடுகளை அறப்போர் இயக்கம் அம்பலப்படுத்தியுள்ளது!

அறப்போர் இயக்கம் அதிமுக அரசின் பல்வேறு ஊழல்களை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் கொடுத்துப் பார்த்தது. அவர்களிடமிருந்து வந்த ஒரே பதில் “விசாரிக்கிறோம்” “விசாரிக்கிறோம்” அதை தவிர எந்த நடவடிக்கையும் இல்லை.

சிபிஐயிடம் சென்று முறையிட்டால் , அவர்கள் சொல்வது  மத்திய அரசின் பணம் சம்பந்தப்பட்டிருந்தால் நாங்கள் விசாரிப்போம். இது மாநில அரசு சம்பந்தப்பட்டது மாநில போலீசாரிடம் சென்று முறையிடுங்கள்”!

லோக் ஆயுக்தாவிடம்  முறையிடலாம் என்றால் அவர்களுக்கு எப்ஐஆர் போடும் அதிகாரமே இல்லாத வகையில் செய்து வைத்துள்ளார்கள்.

இந்த நிலையில் தமிழக மின்சாரத் துறையின்  ஒரு லட்சம் கோடி ஊழலை கண்ணுற்ற  அறப்போர் இயக்கத்தினர்  பத்திரிகையாளர்கள் மூலம் மக்களின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளனர்.

இந்த மெகா ஊழல் குறித்து சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடந்த  பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன்,  ஊழலுக்கு முக்கிய ஆதாரமான  மத்திய அரசின் தலைமை கணக்கு தணிக்கையாளரின் அறிக்கையையும்  அவர் வெளியிட்டு பேசியதாவது;

” தமிழக மின்சார துறை தனியார்களிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்ய  நீண்ட கால  ஒப்பந்தங்களை போட்டுள்ளது. இவற்றின்  கால அளவு 2013ம் ஆண்டு முதல் 2028 ஆம் ஆண்டு வரை 15 ஆண்டுகாலம் ஆகும்.

கடந்த எட்டு ஆண்டுகளில் ,இந்த ஒப்பந்தங்களில்  பல்வேறு சட்ட மீறல்கள் நடைபெற்றுள்ளன. சந்தை மதிப்பைவிட இரண்டு மடங்கு அதிக விலைகொடுத்து மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தால் இதுவரை ரூ 54 ஆயிரம் கோடி மக்கள் பணத்தை  இழந்து விட்டோம். இனியும் விழித்துக்கொண்டு இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யாவிட்டால் மேலும் ரூ 46,000 கோடியை இழந்து விடுவோம் .

இந்த ஊழல் முறைகேட்டுக்கு மின்சார துறை அமைச்சர் தங்கமணி, இதே துறையின் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பொறுப்பாளிகள் ஆவர்.

மின்சாரம் கடந்த 5 ஆண்டுகளாக சந்தையில் ஒரு யூனிட்டுக்கு ரூ 2.5 முதல் ரூ 3.5 வரையில் எளிதாக கிடைக்கிறது!  ஆனால், நம்முடைய தமிழக அரசு சட்ட விரோத ஒப்பந்தங்கள் மூலம் தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒரு யூனிட் ரூ.4.9  முதல் ரூ.6 வரையில் கொடுத்து கொள்முதல் செய்துள்ளது.

இந்திய அரசின் தலைமை கணக்கு தணிக்கையாளர் 2013 ஆம் ஆண்டு முதல் 2018 வரை தனியாரிடமிருந்து தமிழக மின்சாரத்துறை கொள்முதல் செய்ததில் ஏற்பட்ட இழப்பு கிட்டத்தட்ட ரூ 30 ஆயிரத்து 72 கோடி என்று தெரிவித்துள்ளது.

இந்த தணிக்கை அறிக்கை தமிழக அரசால் இதுவரை சட்டசபையில் தாக்கல் செய்யப்படவில்லை. அறப்போர் இயக்கம் இன்று இந்த தணிக்கை அறிக்கையின் நகலை மக்கள் நலன் கருதியும் தமிழக மின்சாரத்துறை நலன் கருதியும் வெளியிட்டுள்ளது.

தனியாரிடம் செய்து கொண்டுள்ள இந்த ஒப்பந்தங்களில் விதிகளை மாற்ற வேண்டுமென்றால் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் பெற வேண்டும் . அந்த ஆணையத்தின் ஒப்புதல் பெறாமலேயே ஒப்பந்த விதிகளை மின்சார வாரியம் மாற்றியுள்ளது.

வடநாட்டிலிருந்து மின்சாரம் கொண்டு வர கிரிட் இணைப்பு இல்லை என்று தெரிந்தும் ஐந்து மாதத்திற்குள் மின்சாரம் தர தனியாரிடம் 11 ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

கிரிட் இணைப்பு இல்லாததால் பெரும்பாலான நிறுவனங்களால் ஐந்து மாதத்திற்குள் மின்சாரம் தர இயலவில்லை‌ கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு இதே நிலைதான் நீடித்தது‌ அப்படி இருந்தும் ஒப்பந்தங்களை ரத்து செய்யாமல்  கொள்முதல் செய்தார்கள்.

2016 -17  முதல்  கிரிட் இணைப்பு வழியாக மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது.  அப்போது சந்தை மதிப்பு யூனிட்டுக்கு வெறும் ரூ 2 முதல் ரூ 3 50 வரை தான். எளிதாகவும் மின்சாரம் கிடைத்தது.

ஆனால் தனியார் நிறுவனங்களுக்கு ரூ 5 முதல் 6 வரை கொடுத்து வாங்கினார்கள்!

கடந்த ஐந்து ஆண்டுகளில் இவ்வாறு வாங்கியதில் மட்டும் ரூ 25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

சந்தை மதிப்பை விட அதிக தொகை கொடுத்து வாங்க  தமிழக மின் வாரியம் முடிவு எடுத்ததற்கு காரணமாக இருந்த அக்ஷய்குமார், ராஜகோபால் ஆகிய அதிகாரிகளையே தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினராகவும் கொண்டு வந்து ஆணையத்திடம் ஒப்புதல் பெற்றார்கள்.

ஆணையத்தின் மற்றொரு உறுப்பினராக இருந்த  நேர்மையாளர் நாகல்சாமி இந்த ஒப்பந்தத்தில் உள்ள சட்ட விரோத செயல்களை சுட்டிக்காட்டி ஒப்புதல் தர மறுத்தார் . ஆனால், அவருடைய ஆணையை வெளியிடாமல் மறைத்து விட்டார்கள். அந்த ஆணையையும் அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ளது.

தமிழக மின்சாரத்துறை ஏற்கனவே 1.5 லட்சம் கோடி கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

தமிழக மின்சார துறையின் கடன்  ஆண்டுதோறும் பெருகிவரும் நிலையில்,

இந்த மெகா ஊழலை தொடர்ந்து அனுமதித்தால்  நமது மின்துறை மீண்டுவர முடியாத துறையாகிவிடும்!

நடைபெற்றுள்ள ஊழல் தொடர்பாக துறையின் தற்போதைய அமைச்சர் தங்கமணி ,முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் சம்பந்தப்பட்ட பொது ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

அதிமுக அரசு பொறுப்பேற்றது முதல் மின் உற்பத்தி மற்றும் பராமிரிப்பு ஆகியவற்றை தனியாருக்கு தாரைவார்க்கவும், அதன் மூலம் கூடுதல் விலைக்கு மின்சாரத்தை வாங்குவதன் மூலம் கமிசன் பெறவுமாக செயல்பட்டு வருகிறது!

தமிழக மின்வாரியத்தில் பல்லாயிரக்கணகான பணியிடங்களை நிரப்பாமல், தேவைப்படும் ஊழியர்களை ஒப்பந்த முறையில் வேலைக்கு அமர்த்தி பத்தாண்டுகளாக பணி நிரந்தரம் செய்யாமல் அலைகழிக்கிறது அதிமுக அரசு!

ஊழியர்களுக்கு பதவி உயர்வுமில்லை,சம்பள உயர்வுமில்லை,பஞ்சப்படி இல்லை, போனஸோ சரி பாதியாக குறைப்பு..என பல்லாயிரம் ஊழியர்களை வாட்டி வதைத்து, மின் துறைக்கு நஷ்ட கணக்கு காட்டும் அதிமுக அரசு, மறுபுறம் மின்சாரத்துறையில் ஒரு லட்சம் கோடியை சூறையாடியுள்ளதானது ஷாக்கடிப்பதாக உள்ளது!

தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை தனியார் மூலம் ஒப்பந்த ஊழியா்களாக நிரப்புவது தொடா்பான ஒப்பந்தப் புள்ளிகளைத் தோ்வு செய்வதற்கு மின்வாரியம் ஒப்புதல் அளித்து, அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் கடுமையான உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இந்நிலையில், தனியார் மூலம் வேலைக்கு ஆள் நியமிக்கும் உத்தரவை ரத்து செய்வதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பின் வாங்கினார் என்பது நினைவுகூறத் தக்கது!

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time