செழித்தது விவசாயம், சீரழிந்தன நெல்மணிகள்!

சாவித்திரி கண்ணன்

ஒரு பக்கம் பசித்த வயிறுகள்!

மற்றொரு பக்கம் பாழாகும் நெல்மூட்டைகள்….!

இது தான் தமிழக விவசாயிகள் வருடாவருடம் சந்திக்கும் அவலங்களாகும்!

கொரோனா காலக் கொடுமையில் அனைத்து தொழில்களும் முடங்கி கிடக்கின்றன! வியாபார நிறுவனங்கள் விரக்தியில் உழல்கின்றன! ஆயினும், இந்த நேரத்தில் அனைவரையும் மகிழ்விக்கும் செய்தியாக விவசாய விளைச்சல் மட்டும் வீழ்ந்திடாமல் தாக்குபிடித்துவிட்டது. இயற்கையின் துணையை நம்பி விவசாயிகள் போட்ட உழைப்பு வீண் போகவில்லை! ஆனால், தயாரான நெல்லை உரிய காலத்தில் கொள்முதல் செய்யாததாலும், தகுந்த முறையில் பாதுகாக்காததாலும், பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள், பல நூறு டன் நெல்மணிகள் ஆங்காங்கே வீணாகி வருவது கஷ்டப்பட்டு விளைவித்த விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது…!

கடலூர் மாவட்ட விருதாச்சலம் அடுத்த கொடுமனூர் கிராமத்தில் சமீபத்தில் விவசாயிகள் சொர்ணவாரி பருவத்தில் விளைந்த 10,000 மூட்டை நெல்லை பல நாட்கள் அரசு கொள்முதல் செய்யாமல் விட்டதில் பாழாயிற்று! கடலூர் மாவட்டத்தில் வருடாவருடம் இது போன்ற கொடுமைகள் பரவலாக அரங்கேறி வருகின்றன!

குமரி மாவட்டத்தில் விவசாயிகள் கன்னிப்பூ நெல் அறுவடை முடிந்து கொள்முதலுக்காக காத்திருக்கிறார்கள்!

திருவள்ளுர் மாவட்டத்தில் சுமார்1.45 லட்சம் ஹெக்டேரில் நெல் விளைகிறது.ஆனால்.இந்த நெல்லை கொள்முதல் செய்வதற்கு போதுமான கொள்முதல் நிலையங்கள் கிடையாது! சமீப காலமாகத் தான் புதிதாக சில கொள்முதல் மையங்களை திறந்து வருகிறார்கள்!

கண்ணீரில் காவேரி டெல்டா

காவேரி டெல்டா பகுதி மாவடங்களில் உள்ள விவசாயிகளிடம் பேசிய போது, ’’விவசாயம் என்பது இன்றைக்கு அதிக செலவும் கடுமையான உழைப்பும் தேவைப்படும் ஒரு தொழில்! நீங்க சாப்பிடுகிற அரிசி சாதாரணமாக வந்துடலை! டிராக்டரை கொண்டு மூன்று முறை ஓட்டுவதற்கான உழவுக் கூலி,வரப்பு சீர் செய்வதற்கான செலவு, நிலத்தை சமன்படுத்துவதற்கான செலவு, நாத்து தயார் செய்வதற்கான செலவு, களை எடுப்பதற்கான செலவு, மோட்டார் பம்பு செட்டுக்கான மூலதன செலவு, மின்சார செலவு,அறுவடைக் கூலி இத்தனையும் எதிர்கொண்டால் தான் நெல்மணிகளை எடுக்க முடியும்.ஆனால்,இப்படி பாடுபட்டு எடுத்த நெல்மணிகள் சீந்துவாரின்றி சீரழிவது தான் வேதனையாக இருக்கிறது’’ என்கிறார்கள்.

எப்படி வீணாகின்றன?

தமிழகத்தில் சுமார் 1400 நெல் கொள்முதல் நிலையங்கள் இருக்கின்றன! ஆனால்,தேவைப்படுவதோ மூன்றாயிரம்! ஆயினும் இருப்பவையே கூட பல இடங்களில் சரியான காலத்தில் திறந்து செயல்படுவதில்லை! திடீரென்று சில இடங்களில் ’’இனி,செயல்படாது மூடப்பட்டுவிட்டது’’ என்று அறிவிக்கப்படும்! அங்குள்ள விவசாயிகள் திணறிப் போவார்கள்! பக்கத்து ஊர் சென்று அங்குள்ள மையத்தில் கொடுக்கலாம் என்றால்,அங்குள்ள விவசாயிகள் நாங்களே அறுவடை முடிந்து நாள் கணக்கில் காத்துக் கிடக்கிறோம், நீங்கள் வேறு வருகிறீர்களே…என்று விசனப்படுகிறார்கள்! காரணம் இடப் பற்றாகுறை,ஆள் பற்றாகுறை என்று ஒவ்வொரு நெல்கொள்முதல் மையங்களும் பணிச் சுமையால் பிதுங்கி வழிகின்றன!

நெல்லை அறுவடை செய்து எடுத்து வரும் விவசாயிகள் இந்த மையங்களுக்கு வெளியே நாள் கணக்கில் காத்திருப்பார்கள்! ஐந்து நாட்களில் வேலை முடிந்தால் அது அதிர்ஷ்டம்! ஆனால்,பத்து நாட்கள் தொடங்கி இருபது நாட்கள் வரையிலும் காத்து கிடப்பது பல இடங்களில் சர்வ சாதாரணம்! அந்த நேரங்களில் மையங்களுக்கு வெளியே சாலையில் வரிசையாக நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து காத்திருப்பார்கள்! இன்னும் சிலர் அப்படியே சாலையோரம் கொட்டி தார் பாய் அல்லது பிளாஷ்டிக் சீட் கொண்டு மூடி வைத்திருப்பார்கள். திருடர்கள் மற்றும் கால் நடைகளிடமிருந்து இவற்றை காப்பாற்றுவதற்காக அங்கேயே இரவும்,பகலும் படுத்திருப்பார்கள்! இந்தச் சூழலில் மழை வந்தால் அனைத்தும் நனைந்துவிடும். பிறகு ஈரத்தில் அவை முளைவிடத் தொடங்கும். இதனால் இவர்கள் பேரிழப்பை சந்திக்க நேர்கிறது! தற்போது இது தான் நேர்ந்துள்ளது!

முன்பட்ட குறுவை சாகுபடி

காவிரி டெல்டா பகுதியில் மாத்திரமே சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலத்தில் முன்பட்ட குறுவை சாகுபடி இந்த ஆண்டு சிறப்பான விளைச்சல் தந்துள்ளது.ஜூன் தொடங்கி அறுவடை நடந்து வருகிறது! அறுவடையான நெல்லை உடனே கொள்முதல் செய்யாமல் விவசாயிகளை அதீதமாக காத்திருக்க வைத்துவிட்டனர். இதனால்,தென்மேற்கு பருவ மழை வந்து கொள்முதலுக்காக காத்திருக்கும் நெல்லை நனைத்துவிட்டன! நனைந்த ஈரநெல்லை அதிகாரிகள் கொள்முதல் செய்யமாட்டார்கள் என்பதால் பாடுபட்டு செய்த பயிர் சாகுபடி பாழாகிறதே என விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள்! ’’உரிய காலத்தில் உடனடியாக நெல்கொள்முதல் நடந்திருந்தால் இப்படி வீணாகி இருக்காது’’ என்பது தான் விவசாயிகள் வைக்கும் வாதம்!

அவலத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள்!

நெல் கொள்முதல் நிலையங்கள் நிரந்தரமாக சில இடங்களிலும், தற்காலிகமாக சில இடங்களிலும் இயங்குகின்றன! இவை இரண்டுமே உரிய காலத்தில் திறந்து இயங்குவதில்லை! விவசாயிகள் பல முறை வேண்டுகோள் வைத்த பிறகே வருகிறார்கள்! அதிகாரிகள் சில நாட்கள் வரமாட்டார்கள்! நிரந்தர ஊழியர்கள் குறைவு! அதனால்,தற்காலிக ஊழியர்களை கொண்டு இயங்கும் நிலை! தேவையான அளவுக்கு கொள்முதல் மையங்கள் இல்லாததால் நான்கு மையங்களுக்கான நெல் ஒரே இடத்தில் வந்து குவிகிறது! முன் கூட்டியே ’இவ்வளவு பயிர் வைக்கப்பட்டுள்ளது. ஆகவே இவ்வளவு நெல் வருவதற்கு வாய்ப்புண்டு’ என கணித்து அதன்படி முன்னேற்பாடுகள் செய்து கொள்ளும் அதிகாரிகள் மிகவும் குறைவு! அதனால், கூட்டத்தையும், அளவையும் பார்த்து அதற்கு பிறகு ஏற்பாடுகளை செய்யத் தொடங்குகிறார்கள்! இதனால், காத்திருக்கும் காலகட்டம் அதிகமாகிறது. பல கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யும் நெல்லை பாதுகாப்பாக வைப்பதற்கு இட வசதி இருப்பதில்லை! நனைந்து போகும் நெல்லை உலர்த்துவதற்கான களங்களும் இருப்பதில்லை. ஆகவே நனைந்த நெல் முளைவிட்டு, நாளடைவில் நாற்றமெடுக்கும் நிலை ஏற்பட்டுவிடுகிறது.

கொள்முதல் செய்த நெல்லை சேமிப்பு கிடங்கிற்கு தினசரி அனுப்புவதற்கான வாகன வசதி கிடையாது. நாளொன்றுக்கு ஆயிரம் மூட்டை அளவுக்கு நெல்கொள் முதல் செய்யும் போது அப்படியே வெட்ட வெளியில் தான் வைக்கிறார்கள்! இவை இரண்டு மூன்று நாட்கள் காத்திருப்புக்கு பிறகு தான் சேமிப்பு கிடங்கை அடைகின்றன! இந்த காலகட்டத்தில் மழை வரும்போது கொள்முதல் செய்யப்பட்டவை நனைந்து வீணாகின்றன! ஆகவே உணவுப் பொருளை காப்பாற்றுவதில் ஏன் அரசு துரிதகதியில் இயங்குவதில்லை? என்பதே விவசாயிகளின் ஆதங்கமாகவுள்ளது.

சேதார நிலையில் சேமிப்பு கிடங்குகள்

தமிழக அரசு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு மொத்தம் 284 சேமிப்பு கிடங்குகள் உள்ளன! இவற்றின் மொத்த கொள் அளவு 12.28 லட்சம் மெட்ரிக் டன்களாகும்! ஆனால்,இவற்றில் சுமார் 70 கிடங்குகள் அரதபழசானவை! சுற்றுச் சுவர்கள் பழுதானவை! பாதுகாப்பற்றவை! மற்ற சில சேமிப்பு கிடங்குகள் தகரசீட் கொண்டு உள்ளவை! மழை பெய்யும் போது சாரல் உள்ளே விழுந்து பல நேரங்களில் நெல்மூடைகள் நனைந்துவிடும் அவலம் தொடர்கிறது. திறந்த வெளி சேமிப்பு கிடங்குகளோ இன்னும் ஆபத்தானவையாகும். அத்துடன் இங்கு பெருச்சாளிகள் தொல்லையாலும் நெல் வீணாகின்றன!

பசித்த வயிறுகளும்,பாழாகும் நெல்லும்!

இந்த ஆண்டு மே மாதம் சென்னை உயர் நீதிமன்றம் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் பாடுபட்டு விளைவித்த நெல் பாதுகாப்பற்று வீணாவதைக் கருதி தானே சூமோட்டோவாக இந்த பிரச்சினையை கையில் எடுத்தது. அதற்கு காரணம் மார்ச் மாதம் 10,000 நெல் மூட்டைகள் நெல்லையில் கோடை மழையில் நனைந்து வீணாயின! பிறகு மதுராந்தகத்தில் 50,000 த்திற்கு மேற்பட்ட நெல் மூட்டைகள் வீணாயின! ஆகவே, இப்படி பல கோடி மதிப்புள்ள நெல்மூட்டைகள் வீணாவதை தடுக்க மத்திய அரசும், மாநில அரசும் என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டன? என்று கேட்டது உயர் நீதிமன்றம்! இதற்குப் பிறகும் தற்போது தஞ்சை,திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருவண்ணாமலை, திருச்சி,காஞ்சிபுரம்,விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நெல்மூட்டைகள் பல்லாயிரக்கணக்கில் வீணாகும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன!

பொதுவாக இந்தியாவில் சுமார் 20 கோடி மக்கள் தினசரி ஒரு வேளை மட்டுமே உண்ண முடிந்த ஏழைகள்! இந்த கொரோனா காலமோ இந்த எண்ணிக்கையை இரு மடங்காக்கிவிட்டுள்ளது! வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழகத்தில் அரசு கொடுக்கும் அரிசியை வாங்கி உயிர்வாழும் மக்கள் அதிகரித்துள்ளனர். இந்தியாவிலேயே பொது விநியோகத் திட்டத்தில் அரிசியை முற்றிலும் இலவசமாகத் தரும்  செயலை செய்யும் ஒரே மாநிலம் நமது தமிழகம் தான்! ஆக,பசித்திருக்கும் வயிறுகள் பல கோடி இருக்க, உணவு பொருள்கள் பாழாவதை உடனே தடுக்க போர்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் அனைத்து மக்களின் விருப்பமாகும்!

விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன?

# அறுவடையான நெல்லை ஒரிரு நாட்களில் உடனே கொள்முதல் செய்ய வேண்டும்!

# கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் உலர் களங்களோடு சேர்த்து அமைக்க வேண்டும்!

# ஊழியர் பற்றாக்குறையை தவிர்க்க அந்தந்த கிராமத்திலேயே உள்ள உழவர் குழுக்களில் உள்ள இளைஞர்களை பயன்படுத்த வேண்டும்!

# நெல் அதிகமாக உற்பத்தியாகும் பஞ்சாயத்துகளில் அவர்களே சிறிய சேமிப்பு கிடங்குகளை உருவாக்கி, பராமரிக்க ஊக்குவிக்க வேண்டும்.

# அனைத்து மட்டங்களிலும் துரிதமான நெல் கொள்முதல் மற்றும் பாதுகாப்பான சேமிப்பு கிடங்குகளை உறுதிபடுத்த வேண்டும்.

# நெல் கொள்முதல் நிலையங்களில் நடக்கும் எடை மோசடி,மூட்டைக்கு நாற்பது ரூபாய் கமிஷன் ஆகியவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.

கவனிக்கதக்கவை;

# இத்தனைக்கு இடையிலும் இந்த ஆண்டு தமிழகத்தில் 28 லட்சம் டன் நெல் கொள்முதல் நடந்துள்ளது!

# கொரோனா நெருக்கடி, கடன் சுமை,தண்ணீர் பிரச்சினை, பூச்சி பிரச்சினை,எலி பிரச்சினை, உரங்களின் விலையேற்றம்,மிக அபூர்வமாக மும்முனை மின்சாரம் வரும் போது மட்டுமே உபயோகிக்க முடிந்த மின்சார பம்பு செட்டுகள்,விவசாயக் கூலிகளுக்கான பற்றாகுறை…ஆகிய அனைத்தையும் சமாளித்து விவசாயிகள் இந்த ஆண்டு சாதனை படைத்துள்ளனர்!

# ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய நிறுவனம்(எப்.ஏ.ஓ) தகவல்படி இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான உணவு பொருள்கள் அறுவடைக்கு முன்னும்,பின்னும் வீணாகின்றன.

# இந்திய உச்ச நீதிமன்றம் 2001 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் இந்திய உணவுகிடங்குகளில் பராமரிப்பின்றி, புழுத்துப் பாழாகி வீணாகும் உணவு பொருட்கள் தொடர்பாக தன் கடும் கண்டணத்தை பதிவு செய்துள்ளது!

# ஒரு கிலோ அரிசி உற்பத்திக்கு மட்டுமே 1,500 லிட்டர் தண்ணீர் தேவை.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time