செலவோ அதிகம்! பயனோ குறைவு! காவிரி – குண்டாறு  இணைப்பு திட்டம்! மாற்று என்ன? 

-அ.வீரப்பன் (தலைமைப் பொறியாளர்-ஒய்வு)

தமிழ்நாடு தண்ணீர் பற்றாக்குறை மாநிலம். ஆயினும்,  காவிரியிலும், தாமிரபரணியிலும் இரண்டாண்டு அல்லது  நான்காண்டுகளுக்கொருமுறை பெருமழை பெய்து மிகையான வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. இக்கூடுதல் மிகை வெள்ளப் பெருக்கு ஏறக்குறைய 260 டிஎம்சி அளவுக்கு ஏற்பட்டு – பயனின்றி வீணே கடலில் கலக்கின்றது. காவிரியில் மட்டும் இந்த கூடுதல் வெள்ளப் பெருக்கு நான்காண்டுகளுக்கொருமுறை 100 டிஎம்சிக்கு மேலிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டின் நீர்வள வல்லுநர்களும், சமுதாய அக்கறையாளர்களும் தமிழ்நாட்டின் ஆறுகளில் கிடைக்கும் மிகை வெள்ள நீரை வீணே கடலுக்குள் விடாமல் அவற்றை வறண்ட பகுதிகளுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று நீண்ட காலமாகக் கோரிவருகின்றனர்.

எனவே, இந்திய அரசின் முயற்சியினால் தேசிய நீர்வள மேம்பாட்டு முகமை 1980 ஆம் ஆண்டில் வடக்கே உள்ள 14 நதிகளை ஒன்றோடு ஒன்று இணைக்கலாம் தெற்கே 16 நதிகளை இணைக்கலாம். இவற்றின் மூலமாக இந்நதிகளில் பெருமழை பெய்து மிகை வெள்ளம் ஏற்படும் போது – இந்த மிகை வெள்ள நீரை நீர் குறைந்த பகுதிகளுக்குத் திருப்பி வறட்சியைக் தணிக்கலாம் என்றும், தென்னாட்டில் மகாநதி – கோதாவரி – கிருஷ்ணா – பெண்ணையாறு – காவிரி – வைகை – குண்டாறு என்ற இணைப்புக் கால்வாய் ஒன்று ஏற்படுத்தலாம் என்று கருத்து தெரிவித்தது.

இதன்படி காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத்திட்டத்தில்,

முதல் கட்டம் : காவிரி (கட்டளை) முதல் தெற்கு வெள்ளாறு வரை!                         –

இரண்டாம் கட்டம் : தெற்கு வெள்ளாற்றிலிருந்து வைகை நதி வரை!

மூன்றாம்; கட்டம்: வைகை நதியிலிருந்து குண்டாறு வரை !                                           –   3

மொத்தம் –  259.98 கி.மீ

 இப்போதைய பொதுப்பணித்துறையின் திட்ட அறிக்கை தெரிவிப்பது என்ன?

எனினும் ஒடிசா, ஆந்திரா, தெலங்கானா மாநில அரசுகள் இத்திட்டத்திற்கு  ஒப்புதலளிக்காத நிலையில் தமிழ்நாட்டிலுள்ள காவிரி – வைகை மற்றும் குண்டாறு நதிகளை – இணைத்து இவற்றில் பெருமழையின் போது கிடைக்கும் கூடுதல் மிகை வெள்ளநீரை தமிழ்நாட்டின் புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் போன்ற வறட்சிப் பகுதிகளுக்குத் திருப்பலாம் எனத் தமிழக அரசு கொள்கை முடிவெடுத்தது!

இதன்படி – 260 கிமீ நீளமுள்ள இணைப்புக் கால்வாய் வெட்டி இணைக்கலாம் என்றும், அதன் முதற்கட்டமாக காவிரியின் கட்டளை நீரொழுங்கியிலிருந்து புதுக்கோட்டைக்குத் தெற்கே உள்ள தெற்கு வெள்ளாறு வரை (பூசத்துறை) -118.45கிமீ தொலைவுக்கு    ரூ.8277 கோடி  திட்டச்செலவில் காவிரியில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை  கிடைக்கும் 8.59 டி.எம்.சி வெள்ள மிகை நீரைத் திருப்பலாம் என விரிவான திட்ட அறிக்கை தயாரித்தது.

கர்நாடகத்திற்கு தடுக்கும் உரிமை இல்லை

தற்போது இதற்கான விரிவான மதிப்பீடு ரூ.6941 கோடியில் தயாரிக்கப்பட்டு ,   கடந்த 21-02-2021 அன்று இத்திட்டத்திற்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார். இத்திட்டத்திற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால்  காவிரி நதிநீர் நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு இவற்றின்படி ,  காவிரியாற்றின் குறுக்கே புதிய நீர்த்தேக்கம்  கட்டித் தண்ணீரைத் தேக்கக்கூடாது மற்றும் புதிதாக பாசன பரப்பை கூட்டக் கூடாது என்று தான் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவிரி – வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தில் காவிரியின் குறுக்கே எந்த நீர்த்தேக்கமும் கட்டப்படவில்லை. காவிரி டெல்டா பாசனப் பரப்பை ஒரு சிறிதும் கூடுதலாக்கவுமில்லை.

காவிரியின் வெள்ள மிகை நீரை வானம்பார்த்த ஏரிகள், கண்மாய்கள் , ஊருணிகளுக்குத் திருப்பி நிலத்தடி நீர் செறிவூட்டத்திற்கே பயன்படுத்தப்படுகிறது. எனவே கர்நாடக அரசின் எதிர்ப்பு வெறும் பூச்சாண்டி காட்டும் வேலையே. (கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு நீர்த்தேக்கம் கட்டத் தமிழ்நாடு அரசு எதிர்ப்பதால்). கர்நாடக அரசு நீதிமன்றம் செல்வதற்கு எந்தக் காரணமும் இல்லை.

அரசுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகள் எவை ?

இந்த விரிவான முதல்கட்டத் திட்ட அறிக்கையில்  பல குறைபாடுகள் உள்ளன. திட்டத்தைச் செயற்படுத்தும் போது வேறு சில சங்கடங்களும் ஏற்படும்.

6000 கன அடி  வினாடி நீரை 20.40 மீட்டர் அகலம்    (படுகை மட்டத்தில்) – 38.40 மீ (தரை மேல் மட்டத்தில்) 5மீ ஆழமும் கொண்ட திறந்த கால்வாய் வழியாக 16 நாட்களில் 8.59 டிஎம்சி தண்ணீர் செல்லுமாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு மிக நீண்ட  தொலைவிற்குத் திறந்த கால்வாயின் மூலம் கொண்டு செல்லப்படும் நீர் – கடைசியிலுள்ள பகுதிகளுக்கு – நீர் ஆவியாதல் மற்றும் செல்லும் வழியில் திருடப்படுதல் ஆகியவற்றால் – போய்ச்சேராது. நீரிழப்பு மிகுதியாக ஏற்படும்!. 16 நாட்களில் எல்லா ஏரிகள் – கண்மாய்கள் – ஊருணிகளை நிரப்பி நிலத்தடி நீரை முற்றிலும் செறிவூட்டவும் இயலாது. நிலத்தடி நீரைச் செறிவூட்டக் குறைந்தது 30 முதல் 50 நாட்கள் தேவைப்படும்.

மேலும் கால்வாயினை உருவாக்க – சில இடங்களில் 30 மீட்டர் முதல் 37.95 மீ (124.50 அடி) வரை ஆழமாகத் தோண்ட வேண்டியிருக்கிறது. அத்துடன் வேறுசில பகுதிகளில் 10 மீட்டர் உயரம்               (32.88 அடி) வரை மண்ணைக் கொட்டி நிரப்பிக் கால்வாய்க் கரையினை அமைக்க வேண்டி உள்ளது. இதனன்றி இரண்டு இடங்களில் 10கி.மீ நீளமுள்ள சுரங்கங்களையும் வெட்ட வேண்டி வருகிறது. இதனால் திட்டச் செலவு கூடுகிறது; செயற்படுத்தும் காலமும் 8 ஆண்டுகளாகிறது.

இவற்றைத் தவிர 4122.54 ஏக்கர் நிலங்களை  கையகப்படுத்திட ரூ.1486.90 கோடி செலவு செய்ய வேண்டிஉள்ளது.

இந்த 118.45 கிமீ நீளமுள்ள கால்வாய் செல்லும் வழியில் இடையில் குறுக்கிடும் சிற்றாறுகள், பாலங்கள், மாநிலச் சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளை இவற்றைக் கடந்து செல்ல 117 குறுக்கு கட்டுமானங்கள் மற்றும் 134 குறுக்கு வடிநிலக் கட்டுமானங்கள் (இரயில்வே பாலங்கள் உட்பட) தேவைப்படுகின்றன. இவற்றின் கட்டுமானச் செலவு மட்டும் ரூ.983.34 கோடியாகும்.

10 கிமீ நீளமுள்ள இரண்டு சுரங்கங்களை ஏற்படுத்தச் செலவு ரூ.1585.50 கோடி.                                               திட்டச் செலவு ரூ.7677 கோடி.  தற்போது விரிவான மதிப்பீடு  ரூ.6941 கோடிக்கு பொதுப்பணித்துறையால் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த இணைப்புக் கால்வாய் திட்டத்தினால் 25,011 ஏக்கர் நிலங்களுக்கு நீர்ப்பற்றாக்குறை நீங்கும். மேலும் 1,04303 ஏக்கர் நிலங்களின் பாசனத்தை நிலைப்படுத்தும். இவற்றால் மொத்தவருவாயாக (செலவுபோக) ரூ.208.10 கோடி கிடைக்கும் எனத் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறந்த வெளிக் கால்வாய் முழுமையும் (118.45 கி.மீ) 1:2:4 என்ற காங்கிரீட் கலவையால் 100 மிமீ கனத்திற்கு மேலுறை  செய்யப்படும். ஓடும் தண்ணீரில் இந்த மேலுறை பாதிப்படைய வாய்ப்புகள் மிகுதி. 50 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துழைக்க இந்தக் காங்கிரீட் மேலுறையை  30 தரக் காங்கிரீட் 12மிமீ கனத்தில் செய்யவேண்டும். இதற்கெல்லாம் மிக அதிக செலவாகும்!

எனவே, திட்டச் செலவினைக் குறைக்கும் மாற்று வழிவகைகளைக் கண்டாக வேண்டும்.  தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கம் செலவு குறைந்த சிறந்த மாற்றுத்திட்டங்களைத் தயாரித்து அளிக்கிறது.

மாற்றுத் திட்டத்தின் மேன்மையான கூறுகள்

எனவே இந்த வெள்ள மிகை நீரை (8.59 டிஎம்சி) திறந்த கால்வாய்க்குப் பதிலாக – மூடிய பெரிய உறுதிபெறு காங்கிரீட் மற்றும் எக்குக் குழாய்கள் மூலமாக  மாநில  நெடுஞ்சாலைகள் – மாவட்ட பெருஞ்சாலைகளின் ஒரு ஓரமாக  எடுத்துச் செல்லலாம். இதிலும் மேடான இடங்களில் இறைவை நிலையங்கள் அமைத்துத் தண்ணீரை மேலேற்றவும் செய்யலாம். இத்துடன் வழியிலுள்ள ஏரிகள், கண்மாய்கள் மற்றும் ஊருணிகளை நிரப்புவதற்குத் தேவையான உட்கட்டமைப்புகளை பகிர்ந்தளிக்கும் தொட்டிகள், கிளைக் குழாய்கள் பதித்தல் உருவாக்க வேண்டும்.

இந்த மாற்றுக் குழாய் வழி திட்டப் பணியில் தனியார் நிலங்களைக் கையகப்படுத்தல் மிகக் குறைவாக இருக்கும். இடையில்  வரும் குறுக்குக் கட்டுமானங்கள் பெருமளவில் குறையும். மிக ஆழமாகத் தோண்டவும் மிக உயரமாகக் கரைகளை அமைக்கவும் தேவையில்லை. சாலை  மட்டத்திலிருந்து   3 மீட்டர் – 4 மீட்டர் ஆழம் வரை தோண்டிக் குழாய்களைப் பதித்து எளிதாகக் கொண்டு செல்லலாம். இறைவை இயந்திரங்களைப் பயன்படுத்தி எக்குக் குழாய்கள் மூலமாக நீரை இறைத்தனுப்புவதால் – நீரின் வேகம் 1.18 மீஃவிநாடிக்குப் பதிலாக 3.00 முதல் 4.00 மீ  விநாடிக்கு இருக்குமாறு எடுத்துச் செல்லலாம்.

மூடிய உறுதிபெறு காங்கிரீட் மற்றும் எக்குக் குழாய்களின் வழியாக நீரைக் கொண்டு செல்வதால் இத்திட்டத்தின் கடைசி பகுதி வரையில் உள்ள அனைத்து  நீர் நிலைகட்கும் விரைவாக தண்ணீர் கொண்டு செல்வது உறுதிப்படுத்தப்படும்.  ஆவியாதல் மற்றும் இடைவெளித் தண்ணீர் திருட்டு முற்றிலுமாகத் தடுக்கப்படும். மேலும், இதனால் தனியார் நிலங்கள் கையகப்படுத்தல் மிகமிகக் குறையும்.

இதனால் குறையும் திட்டச் செலவுகள்.

நிலம்  கையகப்படுத்தல்  – ரூ.1486.90 கோடி

குறுக்கு நீர்க் கட்டுமானங்கள்  – ரூ.983.34 கோடி

10கி.மீ தொலைவுள்ள 2 சுரங்கங்கள் – ரூ.1585.50 கோடி

புதிய மாற்றுத் திட்டத்தால் மொத்தமாக ரூ.4,000.00 கோடி வரை எளிதாக மிச்சப்படுத்தலாம். நிறைந்த பயன்கள்,குறைந்த செலவு, விரைந்தும் முடிக்கலாம்!

பொது நலன் கருதி, அரசுக்கு எங்களின் அன்பான வேண்டுகோள்:

இந்த மாற்றுத் திட்ட விவரங்கள் பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலாளருக்கும் , தமிழக முதல்வருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.  சம்பந்தப்பட்ட துறைகளின் தலைமைப் பொறியாளர்களுக்கும்மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

எனவே கூடுதல் செலவு (ரூ. 6941 கோடி) பிடிக்கும் அரசுத் திட்டத்தைக் கைவிட்டு இரண்டு,மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றத்தக்க மாற்று குழாய்கள் வழித் திட்டத்தைச் (ரூ.3175 கோடிக்குள்) செயற்படுத்தும் வகையில்  திட்ட அறிக்கையில் மாற்றங்கள் செய்ய அறிவுறுத்துமாறு தநாபொபது மூத்த பொறியாளர் சங்கத்தின் சார்பில் வேண்டுகோள் அனுப்பட்டுள்ளது.

கட்டுரையாளர்கள்;

பொறிஞர். முனைவர். அ. வீரப்பன் (முன்னாள் சிறப்புத் தலைமைப் பொறியாளர் பொதுப்பணித்துறை)

பொறிஞர்;. ந. கைலாசபதி (முன்னாள் இணைத் தலைமைப் பொறியாளர் பொதுப்பணித்துறை)

பொறிஞர்;. வெ. சக்திவேல்

தமிழ்நாடு பொதுப் பணித்துறை  மூத்த  பொறியாளர்  சங்கம், சென்னை – 600 106

தொலைபேசி: 72000 79289

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time