நம்ப முடியவில்லை! ஆனால்,சொன்னவர்கள் வன்னியர் சங்க முன்னோடி அமைப்பினர்! வன்னியர்கள் செல்வாக்குள்ள 110 தொகுதிகளில் நடத்தப்பட்ட கள ஆய்வில் தெரிய வந்தது என்னவென்றால், ஒரு காலத்தில் பாமகவின் மீது வன்னியர்களுக்கு இருந்த ஈர்ப்பு தற்போது முற்றிலும் இல்லாமல் போய்விட்டது என்பது தானாம்! வன்னியர் சமூக நற்பணி மன்றம் என்பது வன்னியர் சங்க முன்னோடியான ஏ.கே. நடராஜன் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. இதில் வன்னியர் சங்கத்தின் மிக முக்கிய பிரமுகர்கள் குறிப்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ் ஆபீசர்கள், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள்,டாக்டர்கள் பலரும் உள்ளனர். இந்த அமைப்பின் திண்டிவனம் செயலாளராக இருந்தவர் தான் டாக்டர்.ராமதாஸ்! இதை சோஷியல், சொசைட்டி, சர்வீஸ் என்ற அர்த்ததில் ‘டிரிபிள் எஸ்’ என்றும் அழைப்பார்கள். இவர்கள் சென்னையில் அண்மையில் ஒரு பெரிய தனியார் ஹோட்டலில் கூடி விவாதித்தார்கள்! இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது தொடர்பாக அந்த அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:
வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது தொடர்பாகவும்,பாமகவின் மீதான மக்கள் மதிப்பீடு தொடர்பாகவும் நாங்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரு கள ஆய்வு மேற் கொண்டோம். வன்னியர்களிடையே நிகழ்த்தப்பட்ட இந்த சர்வேயில், ’’இந்த முறை கண்டிப்பாக நாங்கள் பாமகவிற்கு ஓட்டுபோட மாட்டோம்’’ என பெரும்பாலான வன்னியர்கள் தெரிவித்தனர். இது ஒரு வகையில் எங்களுக்கு ஷாக்காக இருந்தது. அதற்கான காரணங்களாக அவர்கள் சொல்லியவற்றை நாங்கள் வரிசைப்படுத்தினோம்!
# 20 சதவிகிதம் இருக்குற ஒரு சமுதாயத்திற்கு 10.5% பெரிசா! இத வாங்குனதுக்கு வாங்கமலே இருந்துருக்கலாம்!
# இட ஒதுக்கீடாம்! அத்த வாங்கி என்ன பண்றது..! கடந்த பத்து வருஷத்துக்கும் மேல எத்தனை வன்னியருக்கு அரசு வேலை கெடைச்சிருக்கு… அரசு உத்தியோகம்கிறதே இல்லாம போயிட்டு இருக்கு! வயித்தெறீச்சலை கிளராதீங்க…!.
# டாக்டர் என்ன பண்ணிட்டாருன்னு சர்வே பண்ண வந்துட்டீங்க..! கேட்டா தாங்க மாட்டீங்க சும்மா போயிடுங்க..!
# டாக்டர் முன்ன மாதிரி இல்லைங்க..அன்னிக்கு இருந்த ராமதாஸ் வேற, இன்னைக்கு இருக்குற ராமதாஸ் வேற! ரொம்ப சுயநலமாயிட்டாரு..!
# வன்னியர் சங்க கல்வி அறக்கட்டளை என்றார்கள். எத்தனை ஏழை வன்னியர்களை படிக்க வச்சிருப்பாங்க..வசதியுள்ளவங்களுக்கு தான் வாய்ப்பு தந்தாங்க!
# டாக்டரும் சரி, அவர் புள்ள அன்புமணியும் சரி, சமூகத்துல யாராவது உதவின்னு போனா லேசுல சந்திக்க மாட்டாங்க..யாரையாவது புடிக்கலைன்னா நாயே..,பேயேன்னு எடுத்தெறிஞ்சு பேசுறாங்க..அதுவும் அன்புமணி ரொம்ப மோசங்க…!
# ரொம்ப சொத்து சேர்த்துட்டருங்க..கணக்கு,வழக்கேயில்ல! குடும்பம் தான் அவருக்கு முக்கியமாச்சு!
# நாங்கள்ளாம் கண்ணை மூடிட்டு நம்ம சமூக தலைவர்னு ஆதரிச்சதால தான ஒவ்வொரு தேர்தலிலும் நம்மை வச்சு கூட்டணி கட்சிகளிடம் பேரம் பேசுகிறார்! அவருக்கென்ன சூட்கேஸை வாங்கிறார்..!
# எட்டுவழிச் சாலையை கொண்டு வருகிற அந்த மோடி,அமித்ஷா கூட கூட்டணி வச்சுகிட்டு..ஓட்டுகேட்டு வந்தா எப்படி..?
# தமிழ் நாட்டில் உள்ள மத்திய அரசு வேலைகளையெல்லாம் வட நாட்டுக்காரனுக்கு கொடுத்து நமக்கு நாமம் சாத்துற பி.ஜேபியை ஆதரிக்கிற அய்யாவை நாங்க எப்படி ஆதரிப்போம்!
# பெண்ணாகரம் தொகுதிக்குள்ள ஜி.கே.மணி நுழைவதே கஷ்டம், ஏன்னா, தொகுதி பக்கமே சுத்தமாக எட்டிப் பார்க்கலை! இது மாதிரியான பாமக ஆளுங்களை வாக்கு கேட்டு வரும் போது மூஞ்சிக்கு நேரா கேட்போம்… நாங்க என்ன உங்களுக்கு ஓட்டு போட மட்டும் தான் இருக்கோமான்னு கேட்போம்.
Also read
# கொரானா காலத்துல வேலை இல்லாமல், வாழ்வாதாரம் இல்லாம வன்னிய சனங்க பசியிலயும், பஞ்சத்துலயும் துடிச்சது! தைலாபுரத்துல இருந்து ஒரு உதவியும் கிடைக்கல..என்ன, ஏதுன்னு கேட்க நாதியில்ல. இன்ன வரைக்கும் டாக்டரும்,அவர் புள்ளையும் வெளியே வந்து ஜனங்கள பாக்கலை! தேர்தல்னா தான் மூஞ்சிய காட்டுவாங்க..அப்பத்தான் அவங்களுக்கு சமூகத்தின் நினைப்பே வருது! இந்த முறை கண்டிப்பாக பாடம் புகட்டுவோம்.
# பாமகவிற்கு உழைச்சவங்க பலர் அதுல இருந்து வெளியேறிட்டாங்க..! முகவை வி.ஏ.டி.கலிவரதன், திருத்தணி கோ.ரவிராஜ், முன்னாள் எடப்பாடி எம்.எல்.ஏ காவேரி, காடுவெட்டியாரின் குடும்பத்தினர் இப்படி பலர் பாமகவில இன்னைக்கு இல்லை! குருவோட அம்மாவும், தங்கையும் பேசுவதை கேட்டால் மனசுக்கு கஷ்டமாயிருக்கு!
# யார் என்ன சொன்னாலும், என்ன கொடுத்தாலும் பாமகவிற்கு எங்க ஓட்டு கிடையாது. இந்த தேர்தல் தோல்வியாவது அவங்களுக்கு இந்த பாவப்பட்ட ஜனங்க மேல அக்கரையை திருப்புதான்னு பார்ப்போம்!
வன்னிய பெருங்குடி மக்களின் வருத்தம் இப்படி இருக்கிறதென்றால், மற்ற சமூகத்தினர் பற்றி கேட்கவே வேண்டாம். வன்னிய சமூகத்திற்கும் மற்ற சமூகங்களுக்கும் உள்ள நல்லுறவை பாமகவை நடத்திய விதத்தில் டாக்டர் கெடுத்துக் கொண்டார். ஆகவே, எங்க சர்வேயின்படி, அனேகமாக போட்டியிடும் அத்தனை தொகுதிகளிலும் பாமக தோற்கவே வாய்ப்புள்ளது! இது ஒரு வகையில் எங்களுக்கு வருத்தத்தை தான் தருகிறது. அவர் எங்கள மதிக்காட்டியும் கூட, வன்னியர்களுக்கான ஒரு அரசியல் இயக்கம் செல்வாக்கு இழந்து போவதை நினைத்து ஒரு வகையில் வேதனையாகத் தான் இருக்கிறது…’’ என்றார்.
சரியான பதிவு…
ராமதாஸ் அவரது மகன் அன்புமணி ஆகியோர், உழைப்பையே மூலதனமாக வைத்து வாழ்ந்து வரும் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு
யாதொரு உதவியும் செய்யாமல் தேர்தல் வந்தவுடன் சாதிய வெறியை ஊட்டி அதில் குளிர் காயும் எண்ணத்துடன் செயல்படுகின்றனர். இது வேதனையே.