எதிரி இல்லாத கட்சிகள் என்றும் நிலைத்ததில்லை!

-சாவித்திரி கண்ணன்

அரசியலில் எந்த ஒரு கட்சியும் தோன்றுவதற்கும், நிலைப்பதற்கும் நிச்சயமாக ஒரு எதிரி தேவை!

எதிரியை அடையாளப்படுத்தாதவர்கள், தங்கள் அடையாளத்தை இழந்து அழிந்துவிடுவார்கள்!

இருதுருவ அரசியலின் ஈர்ப்பே உலகை இயக்கிக் கொண்டுள்ளது!

அமெரிக்காவில் குடியரசு கட்சியும், ஜனநாயக கட்சியும் அடிப்படைத் தன்மையில் வேறுபட்டவை!

ஜனநாயகக் கட்சி பன்மைத்துவ தன்மை கொண்டது. கறுப்பர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்டவர்களை அரவணைத்து செல்லும் கட்சியாக உள்ளது! குடியரசுக் கட்சி வெள்ளையின மக்களின் உயர்வு, தாழ்வு கொள்கையை உள்வாங்கிய கட்சியாகும்! ஜார்ஜ்புஷ், ரொனால்டு டிரம்ப் ஒரு எக்ஸ்டீரிம் என்றால் ஒபாமாவும், ஜோபைடனும் அதற்கு எதிரானவர்களாக இருக்கும் வரை தான் அவர்களுக்கு அங்கு மக்களிடையே மதிப்பு!

தமிழகத்தில் திமுக நிலைபெற்றதற்கான காரணம் அன்றைய தினம் உயர்சாதியினர் ஆதிக்கத்தில் இருந்த காங்கிரசுக்கு மாற்றாக சாமானிய மக்களின் அதிகாரமாக அது உணரப்பட்டது தான்! உயர்சாதி ஆதிக்க எதிர்ப்பு, தேசியத்தின் பெயரால் தமிழ் அடையாளம் கரைந்து போவதற்கு எதிர்ப்பு, பக்தியின் பெயரிலான மூட நம்பிக்கைகளுக்கு எதிர்ப்பு..போன்றவற்றோடு தமிழ் மறுமலர்ச்சி, சுயமரியாதை மீட்பு , எளியவர்களுக்கான அடையாளம் ஆகியவற்றை அது சாத்தியப்படுத்தியது. ஆகவே, நின்று நிலைபெற்றுவிட்டது!

இந்தியாவின் பெரும் தலைவர்களில் ஒருவராக கருதப்பட்டவர் ராஜாஜி! அவர் நேருவின் சோசலிசத்துடன் கருத்து மாறுபட்டு காங்கிரசில் இருந்து விலகி சுதந்திரா கட்சி கண்டார்! அது இந்திய அளவில் காங்கிரசுக்கு எதிர் கட்சியாக விளங்கியது! அதை ஒரு விதத்தில் மதவாதம் இல்லாத பாஜகவாக மதிப்பிடலாம்! அதை அவர் சரியாக கட்டமைத்திருந்தால் தற்போது பாஜக என்ற கட்சியே தோன்றி இருக்காது. அடிப்படையில் திமுகவிற்கு நேர் எதிர் கொள்கை கொண்ட சுதந்திரா கட்சி 1967ல் திமுகவுடன் கூட்டணி கண்டது. நேருவை எதிர்க்கத்துணிந்த – நேருவே வியந்த – மாபெரும் ஆளுமையான ராஜாஜி தன்னுடைய கொள்கைக்கு ஒவ்வாத சந்தர்ப்பவாத கூட்டணி காரணமாக காணாமல் போய்விட்டார்! அந்தக் கூட்டணியால் திமுக தான் பலனடைந்தது.

 

அதிமுகவின் பலம் என்பது திமுகவின் ஊழல்கள், அராஜகங்கள், கலைஞரின் குடும்ப அரசியல்…ஆகியவையே! மொத்ததில் திமுக எதிர்ப்பில் தான் அது உயிர் வாழ்கிறது! திமுக,அதிமுக இரண்டையும் ஒன்று சேர்க்க அந்த காலத்தில் பட்நாயக் என்ற தலைவர் முயற்சி செய்தார்.அப்படி இணைந்தால் அதில் தான் காணாமல் கரைந்து போய்விடுவோம். கருணாநிதி தான் பலன் பெறுவார். அதிமுகவிற்கான சமூகத் தேவையை நிறைவேற்றும் வாய்ப்பை காங்கிரஸ் பயன்படுத்தி மேலெழுந்துவிடும் என்று கருதி எம்.ஜி.ஆர் அதை தவிர்த்துவிட்டார். திமுகவிற்கு மாற்றாக அதிமுகவிற்கு ஒரு நிரந்தர பங்கு பாத்திரம் இருப்பது தான் நமக்கும் பாதுகாப்பானது. தேசிய கட்சியான காங்கிரஸ் தமிழகத்தில் புத்துயிர் பெற வேண்டாம் என்று கருணாநிதியும் அந்த யோசனையை தவிர்த்துவிட்டார்.

மதிமுக உருவான போது தமிழக அரசியலில் பெரும் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்பட்டவர் வைகோ! அவரது வீழ்ச்சியும் எதிரி யாரென்று சரியாக அவர் அடையாளம் காணத் தவறியது தான்! இன்னொரு திமுகவாக அவர் தன் கட்சியை கட்டமைத்தார்! அதே சமயம் அதிமுகவுடன் கூட்டணியும் கண்டார்! ” பழைய திமுக இருக்க, எதுக்கு புது திமுக?” என அவரோடு வெளியே வந்த பலர் மீண்டும் திமுகவிற்கே திரும்பிவிட்டனர்!

இடைப்பட்ட காலங்களில் சற்று பலவீனமாகப் போன திமுகவானது இன்றைக்கு பலம் பெற்று திராவிடத் தீயாக எழுவதற்கு பாஜக தான் நெய் ஊற்றிவிட்டது. பாஜகவின் மத ரீதியிலான அரசியலை ஆபத்தாக உணரும் தமிழக மக்களின் ஒரே ஆபத்பாந்தனாக திமுக நம்பப்படுகிறது. தங்களின் தனித்துவமான கலாச்சாரத்தையும், வாழ்க்கை ஆதாரங்களையும் பாஜக அழித்துவிடும் என தமிழகத்தின் பெரும்பாலான மக்கள் ஆழமாக பயப்படுகின்றனர். அவர்கள் அதை எதிர்க்க திமுகவை பலப்படுத்துவதே சரியாக இருக்குமென்று நம்புகின்றனர். ஆக, இன்று திமுகவின் முதல் எதிரி, பாஜக தான்! அந்த பாஜக தான் காங்கிரசிற்கும் தமிழகத்தில் ஒரு புத்துணர்ச்சியை தந்துள்ளது! கம்யூனிஸ்டுகளையும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது!2019 தேர்தலில் இதை நாம் நன்கு உணரமுடிந்தது!

இதையெல்லாம் ஏன் இங்கு விவரிக்கிறேன் என்றால்,  ஆழமாக நேசிக்கவும், மூர்க்கமாக எதிர்க்கவும் ஒரு கொள்கை சார்ந்த அணுகுமுறை இல்லாத அரசியல் கட்சிகள் காலப் போக்கில் காணாமல் போய்விடும்! நேசிப்பதிலும் உறுதிப்பாடு இருக்க வேண்டும். எதிர்ப்பதிலும் உறுதிப்பாடு இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களும், அவர்கள் சார்ந்த அமைப்புகளுமே காலத்தின் தேவையாக நிலைப்பார்கள்!

தேமுதிக இன்று தேய்பிறையானதற்கு காரணம் அதற்கு ஓட்டுபோட்ட மக்களின் ஆசை, அபிலாசை, நோக்கங்களை அது உணரத் தவறியதே! 2005 ஆம் ஆண்டு அந்தக் கட்சி ஆரம்பிக்கபட்ட போது தமிழகத்தில் அதிமுக தான் ஆட்சியில் இருந்தது! அன்று அதிமுகவை எதிர்த்து, அதே சமயம் திமுகவையும் ஆதரிக்க முடியாமல் போனவர்களின் நம்பிக்கைக்குரிய மாற்றாக அது உணரப்பட்டது! அதனால் அடுத்த ஆண்டு நடந்த தேர்தலிலேயே அந்த கட்சிக்கு 8.4% வாக்குகள் கிடைத்தன! அது 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 10.3% மாக உயர்ந்தது.

2011 ல் அந்தக் கட்சி தன் நேச சக்திகள் யார்? எதிரி யார் என கணிக்கத் தவறியது. அன்று அது காங்கிரஸ் மற்றும் பல சிறிய கட்சிகளோடு கூட்டணி கண்டு தேர்தலை எதிர் கொண்டிருந்தால், அதன் வாக்கு சதவிகிதம் கூடியிருக்கும்! ஆனால், அதிமுகவுடன் கூட்டணி கண்டது. அதனால், அந்த தேர்தலிலேயே அதன் வாக்குவங்கி 7.9% ஆக விழுந்தது. 29 எம்.எல்.ஏக்கள் அதற்கு கிடைத்ததோ, எதிர்கட்சி அந்தஸ்த்து கிடைத்ததோ அதற்கு வளர்ச்சியல்ல! ஆனால், அதை வளர்ச்சி என தேமுதிக புரிந்து கொண்டது தான் அறியாமை!

அதன் பிறகான ஒவ்வொரு தேர்தலிலுமே தன் எதிரியை அடையாளம் தெரியாமல் அது கைகுலுக்கியது! எந்த பாமகவை அதன் கோட்டைக்குள்  நுழைந்து வீழ்த்தினாரோ கேப்டன், அந்த பாமகவுன் பாஜக சகவாசத்தால் 2014ல் கைகுலுக்கினார்! அதனால்,மேலும் அவரது வாக்குவங்கி சரிந்து 5.2% ஆனது! 2016ல் திமுக, அதிமுக என மாறி, மாறி கூட்டணி கண்டு வந்த அண்டிப் பிழைக்கும் ஆகச் சிறிய கட்சிகளுடன் கூட்டணி கண்டது தேமுதிக! அது அந்த கட்சியின் வாக்குவங்கியை 2.4% ஆக்கிவிட்டது!

2019 ஆம் ஆண்டு மீண்டும் தன்னுடைய பிரதான எதிரியான அதிமுக,பாமகவுடன் கூட்டணி கண்டு இன்னும் கரைந்துவிட்டது. அதன் பிறகாவது தேமுதிக, தன் பாஜக, அதிமுக, பாமக சகவாசத்தை முற்றிலும் தவிர்த்த ஒரு அரசியலை கண்டெடுத்து இருக்க வேண்டும்! ஆனால், தன்னை பலவீனப்படுத்திய எதிரியிடமே மடிப்பிச்சை ஏந்தும் அரசியலை அது மேற்கொண்டது! அதிமுகவுடனான தேமுதிகவின் உறவு முறிந்ததை ஏன் அந்த கட்சித் தொண்டர்கள் வேட்டுவெடித்து கொண்டாடினார்கள் என ஒரு கணம் யோசித்தால் அவர்களின் விருப்பத்திற்கு மாறாகத் தான் தலைமை கடந்த தேர்தல்களில் எல்லாம் அதிமுக,பாமக,பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தது என்ற உண்மை பளிச்சென விளங்கும்! சினிமாவில் எதிரியை சரியாகத் தீர்மானித்து பாய்ந்து,பாய்ந்து தாக்கிய விஜயகாந்த் அரசியலில் கடைசி வரை எதிரியை சரியாக வரையறுக்கத் தெரியாமல் சறுக்கிவிட்டார்.

இதே தான் தாமகவிற்கும் பொருந்தும். அதுவும், 1996 ஆம் ஆண்டு அதிமுகவை எதிர்த்து உருவானது தான்! அந்த அதிமுகவுடன் அது 2001ல் உறவு கொண்டதன் மூலம் தான் கரைந்து காணாமல் போனது. அந்தக் கட்சி இடையில் காங்கிரசில் ஐக்கியமானது. பிறகு ஜி.கே.வாசனின் தனிப்பட்டவிருப்பு,வெறுப்பு காரணமாக மீண்டும் தோற்றம் பெற்றது. அது 2016 ஆம் ஆண்டு 26 தொகுதிகளில் நின்று வெறும் அரை சதவிகித (0.5) வாக்குகளை மட்டுமே பெற்றது! அந்தக் கட்சி உயிர்பித்திருப்பதற்கான எந்த ஒரு சமூக காரணங்களும் கிடையாது. ஆனால், அது அதிமுகவில் 12 சீட்டுகள் கேட்டு பிடிவாதம் செய்கிறது. சீட்டு கிடைத்தால் அனைத்திலுமே தோற்கும்! காங்கிரசை தாய்வீடாகக் கொண்ட- பாஜகவை எதிர்க்கும் பாரம்பரியத்தில் வந்த தொண்டர்களை பெற்றுள்ள – தமாகவானது பாஜகவின் மோடியோடு கைகோர்த்து தற்கொலை பாதையில் தடுமாறி நிற்கிறது! தற்போது அதிமுகவின் நிழலில் அது தன் அஸ்த்தமனத்தை எதிர்நோக்கியுள்ளது!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time