’’அப்பாடா ஒழிந்தது…’’ என்று பெற்றோர்களை பெரு மூச்சுவிட செய்ததும்
’’ஐயோ பறிபோகிறதே…’’ என இளைய சமுதாயத்தை கதறவைத்திருப்பதும்…வேறு,வேறு அல்ல! ஒன்றே!
அது தான் பப்ஜி போன்ற ’டென்சண்ட் கேம்ஸ்’! தடை செய்த செய்தி!ஆனால் அப்படி பெற்றோர்கள் நிம்மதி பெருமூச்சு விடமுடியாது என்ற வகையில் இந்திய நிறுவனமான பெங்களூரைச் சேர்ந்த என்கோர் கேம்ஸ் FAU-G என்ற பெயரில் ஒரு மொபைல் விளையாட்டைக் கொண்டு வர உள்ளதாம்!
அழிவிற்கான விளையாட்டு
விளையாட்டு என்றால் உடலும்,உள்ளமும் ஒருங்கே இசைந்து மகிழ்வது, நண்பர்களோடு தோழமை கொண்டு வளர்வது என்று நாம் நம்பிய காலமெல்லாம் மலயேறிவிட்டதோ என்று சொல்லதக்க அளவில் மொபைல் கேம்ஸ் வந்து பிள்ளைகளை சமீபகாலமாக அடிமைப்படுத்தி வருகிறது.
பல மணி நேரங்கள் ஒரே இடத்தில் அமர்ந்து செயல்பாடுகளற்று மொபைலைப் பார்த்தவண்ணம் இளம் தலைமுறை தன்னைத் தானே சிறுகச் சிறுக அழித்துக் கொள்கின்றது. இடையிடையே அலறல் சத்தம் வேறு, ’’ம்ம்..அவனை விடாதே கொல்..’’ ‘’சூட்,சூட்…’’ ‘’அப்பா …ஒழிந்தான்’’’
2016,2017 தொடங்கி அறிமுகமான இந்த மாதிரி விளையாட்டுகள் சிறுவர்கள் தொடங்கி இளைஞர்கள் வரையில் பெருந்திரளானவர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதாகும்!
இந்தியாவில் மட்டும் சுமார் 20 கோடிக்கும் அதிகமானோர் இந்த விளையாட்டை தரவிறக்கம் செய்து விளையாடி வருகின்றனர்! கல்லூரி மாணவர்களில் சுமார் 60 சதவிகிதத்தினரும், தனியார் பள்ளி மாணவர்களில் சுமார் 80 சதவிகிதத்தினரும் இந்த விளையாட்டில் ஆர்வம் காட்டி வருவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது!
இதில் ஈடுபட்டுள்ள இளசுகளில் 35% பேர் இதற்கு அடிமையாகி, இது இல்லாமல் வாழமுடியாது என்ற நிலைமைக்கு சென்றுள்ளார்கள்! அதாவது இவர்கள் ஒரு நாளின் பெரும்பகுதியை – அதாவது பத்துப் பனிரெண்டு மணி நேரங்களை – இந்த விளையாட்டில் தான் செலவிடுகின்றனர்!
அதிகரிக்கும் இளம் மன நோயாளிகள்
இரவு முழுமையும் இந்த விளையாட்டில் இருந்துவிட்டு பகலில் தூங்குபவர்கள் அல்லது பகலில் தூக்க கலக்கத்துடன் வளைய வருபவர்கள் என இவர்களை சொல்லலாம்! ஒரு பள்ளி மாணவனிடம் பேசும் போது அவன் அதிகாலை மூன்று மணிவரை இதை விளையாடிவிட்டு பிறகு எட்டு மணிக்கு எழுந்து வேக,வேகமாக பள்ளிக்கூடம் சென்றுவிடுவேன் என்றான்!
இப்படிப்பட்ட மாணவர்கள் பள்ளியில் பாடத்தை கவனிக்க முடியாமல் குறைந்த மதிப்பெண் எடுப்பவர்களாகவும்,இறுதி ஆண்டு தேர்வில் தோல்வி காண்பவர்களாகவும் உள்ளனர். சதா சர்வகாலமும் இதை விளையாடுவதால் தலைவலி, கண்எரிச்சல் இவற்றுடன் மூர்க்கத்தனம்,கோபம்,வன்முறையில் ஆர்வம் உள்ளவர்களாகவும் இவர்கள் மாறிவிடுகின்றனர் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்! சமீபகாலமாக இந்த இளம் மன நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துவருவதாகவும் மனநோய் மருத்துவர்கள் கூறுகின்றனர்!
பணம் விளையாடுகிறது
இந்த விளையாட்டின் மூலம் மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் இளைஞர்கள் உள்ளனர். அதே சமயத்தில் இதில் லட்சக்கணக்கில் பணத்தை தொலைப்பவர்களும் உள்ளனர்! தான் வாழும் சமூகத்தின் நலனுக்கோ வளர்ச்சிக்கோ எந்த விதத்திலும் பலனளிக்காதது மட்டுமல்ல, இளம் சமுதாயத்தின் உளவியலையே பாதிப்படைய வைத்து தான் இப்படியான அதீத பணப் புழக்கம் நடக்கிறது.
இந்த விளையாட்டுக்காக அம்மா,அப்பாவின் பணத்தை திருடுவது, வங்கி சேமிப்பை பெற்றோர்களுக்கு தெரியாமல் சூறையாடுவது,வீட்டில் உள்ள பொருள்களை யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்று அடகுவைப்பது என இளைய சமுதாயம் சோரம் போயுள்ளதை நினைத்தால் நெஞ்சு கொதிக்கிறது.
உச்சகட்ட வன்முறைகள்
’’டேய் எந்த நேரமும் இந்த விளையாட்டா…?’’
’’சதா சர்வகாலமும் இதை விளையாடினால் உன் எதிர்காலம் என்னாவதுடா’’
’’உன்னை சுற்றி இருப்பவர்கள் அனைவரையும் மறந்துபோகுற அளவுக்கு, யார் எக்கேடுகெட்டாலும் எனக்கென்னங்கிற அளவுக்கு விளையாடுறியே மகனே..’’
’’படிக்க மாட்டேங்கிற, எந்த ஒரு வேலையும் செய்யமாட்டேங்கிற வீட்டுக்காக,என்ன கேட்டாலும் கோபப்படுகிற… நியாயமாடா…”
இதெல்லாம் இந்த விளையாட்டை விளையாடும் சிறுசுகள் இருக்கும் வீடுகளில் தினசரி கேட்க்ககூடிய பெற்றோர்களின் குரல்களாகும்!
இதில் கோபமடைந்து பெற்றோர்களை சகோதர சகோதரிகளை கொலை செய்த இளைஞர்கள் அனேகம்! தங்களைத் தாங்களே தற்கொலை வழியாக அழித்துக் கொண்டவர்களும் அனேகம்!
எந்த ஒரு மக்கள் நல அரசும் இந்த மாதிரி பேரழிவு விளையாட்டை அனுமதிக்க மாட்டார்கள்! ஒரு நாட்டின் மிகப் பெரிய செல்வமே அதன் இளைய சமுதாயத்தின் ஆற்றல்கள் தான்! அந்த ஆற்றலை நிர்மூலமாக்குகிற இந்த விளையாட்டை எப்படி அனுமதித்தது நம் அரசாங்கம்! சரி,அனுமதித்த பிறகாவது நடைபெறும் நிகழ்வு போக்குகளைக் கருதி தடை செய்திருக்கலாமே… அதுவும் செய்யவில்லை.இப்போதோ, இந்த அநீதியை தானே முன் நின்று செய்வதென அரசே முடிவெடுத்துள்ளது தான் கொடுமையிலும் கொடுமை!
Also read
நாட்டை குறித்தும்,தான் வாழும் சமூகம் குறித்தும் எந்த அக்கரையுமற்ற ஒரு இளைய சமுதாயம் உருவாவதை சுயநல அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமாக பார்க்கிறார்களோ…என்னவோ…!
நமது அரசும் சீனாவின் மீதுள்ள கோபத்திற்காகத் தான் இதை தடை செய்ததேயன்றி, நாட்டின் நலன் கருதியல்ல! ஆகவே,சீனா விட்ட இடத்தை இந்தியக் கம்பெனி பிடிக்கப் போகிறது. அரசின் கொள்கை நிலைபாடு மாறாதவரை இந்த நாட்டுக்கோ,சமூகத்திற்கோ பாதுகாப்பு கிடைக்கப் போவதில்லை!
காந்தியவாதியான ஜே.சி.குமரப்பா மூன்று விஷயங்களை வலியுறுத்துவார்.
# தனிப்பட்டவர்களின் எந்த தொழிலாலும் நாட்டின் நலன்கள் பாதிக்க அனுமதிக்கலாகாது.
# எந்த தொழிலை அல்லது செயலை ஒருவன் செய்தாலும் அதனால் ஏற்படக் கூடிய சமூக விளைவை கவனத்தில் கொள்ளவேண்டும்.
# மற்றவர்களின் அழிவால் பெறக் கூடிய செல்வம் பாவகரமானது.
தீமை விளையாட்டு தேசபக்தியாக மாறவுள்ளது!
பப்ஜிக்கு மாற்றாக பாவ்ஜி என்ற கேமை இந்திய நிறுவனமே அறிமுகப்படுத்தி அக்டோபர் இறுதியில் வெளியிட உள்ளதாக தெரிகிறது! இந்தியப் பிரதமரின் தற்சார்பு இந்தியா திட்டத்தின்படி இந்த விளையாட்டை தாங்கள் அறிமுகப்படுத்த உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மாதிரி விளையாட்டுகள் இந்திய இளைய சமூதாயத்தை சுயசிந்தனைகளற்று மழுங்கடிக்கிறது என்பதை நன்கு உணர்ந்த நிலையில் ஒரு இந்திய நிறுவனமே இதை செய்யத் துணிவது தற்சார்பு இந்தியா அல்ல! தற்கொலை இந்தியா என்பதே சரியாகும். இதை ஒரு சாதரண விளையாட்டிலிருந்து தேசபக்தி விளையாட்டாக மாற்றியது மிகப் பெரிய கொடுமையாகும்! என்பது மட்டுமல்ல! அதாவது இந்தியாவின் எதிரி நாடுகளாக கருதக் கூடிய நாடுகளுக்கு எதிரான ஒரு யுத்தக் களமாக இந்த விளையாட்டை வடிவமைத்து வருவதாக அந்த நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார். ஆக, இந்த விளையாட்டை விளையாடுவது வன்முறை எண்ணங்களை வளர்க்கும்,தீமையானது என்ற உறுத்தல் கூட இல்லாமல் இனி இந்த விளையாட்டே ஒரு தேசபக்தியின் சின்னமாக பார்க்கக் கூடிய ஆபத்து தோன்றவுள்ளது!
ஒரு அழிவுப் பாதையைக் கூட ஆக்கபூர்வமான பாதையாக கருதும் மாயத் தோற்றத்தை உருவாக்கி இளைஞர்களை சூறையாடத் துணிந்துள்ளது நம்மை ஆளும் அரசு! இதன் மூலம் கிடைக்கும் பல ஆயிரம் கோடி பணத்தின் இருபது சதவிகிதத்தை நாட்டுக்காக பாடுபட்ட இந்திய ராணுவ வீரர்கள் நலனுக்கு பயன்படுத்தப் போவதாக கூறியிருப்பதன் மூலம் தங்கள் செயலுக்கு அந்த நிறுவனமும் அரசும் நியாயம் கற்பித்துவிட முடியாது.
Leave a Reply