பிரசாந்த் கிஷோரை மீறி உதயநிதிக்கு சீட்..எதனால்..?

-சாவித்திரி கண்ணன்

பிரசாந்த் கிஷோர் திமுக தேர்தல் வெற்றிக்கு பொறுப்பு ஏற்றவுடன் கூறிய முதல் நிபந்தனை ”உங்க கட்சி மேல குடும்ப ஆதிக்க கட்சி என்ற பெயர் பரவலாக உள்ளது. ஆகவே, தேர்தல் வரை உங்கள் குடும்பத்தில் யாருக்கும் அரசியல் முக்கியத்துவம் தரும் எந்த நகர்வுகளும் இருக்கக் கூடாது” என்றார். ஆனால், பிரசாந்த் கிஷோர் பொறுப்பெடுக்கும் முன்பே இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பு உதயநிதிக்கு வழங்கப்பட்டு விட்டது. அவர் பொறுப்பேற்றது முதல் அன்று திமுகவின் ஆலோசகராக இருந்த சுனில் தான் அவரது புரமோசன்களை கவனித்துக் கொண்டார்.

பிரசாந்த் கிஷோர் வந்தவுடன் கட்சி விளம்பரங்களில் உதயநிதி போட்டோக்கள் ஸ்டாலினுக்கு இணையாக வருவதை கடுமையாக ஆட்சேபித்தார். இது உங்க கட்சியை மீளமுடியாத வீழ்ச்சிக்கு தள்ளிவிடும் என்று கூறி உடனே அதற்கு முற்றுபுள்ளி வைக்கச் சொன்னார். ஸ்டாலினும் அவ்வாறே, ”கட்சி பேனர்,போஸ்டர், விளம்பரம் ஆகிய எதிலும் பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் என்னுடைய புகைபடங்களைத் தவிர வேறு யாருடைய புகைப்படத்தையும் பயன்படுத்த வேண்டாம்” என வெளிப்படையாகவே அறிக்கை வெளியிட்டு அதை முடிவுக்கு கொண்டு வந்தார். அப்படி பிரசாந்த் கிஷோர் பேச்சை எந்த விதத்திலும் மீறாமல், அவர் கிழித்த கோட்டை தானும் தாண்டாமல், கட்சியினரையும் தாண்டவிடாமல் கட்டுப்படுத்தி இருந்தார் ஸ்டாலின்.

ஆனால், உதயநிதியை நிற்க வைக்க வேண்டாம் என்ற பிரசாந்த் கிஷோரின் எச்சரிக்கையை தற்போது மீறிவிட்டார் ஸ்டாலின்! மீறி நிற்க வைத்தால், நாளை ஏற்படும் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல!  நாளை ஏதாவது மோசமான பின்விளைவுகள் ஏற்பட்டால் என் மீது பழியை போடக் கூடாது. அப்படி போட்டால், இதை பிரஸ்மீட் வைத்து கூட நான் ஓபனாக சொல்லிவிடுவேன் என்றும் பிரசாந்த் எச்சரித்துவிட்டார். ஆனாலும், அந்த எச்சரிக்கையை ஸ்டாலின் மீறிவிட்டார்.

இதற்கு என்ன காரணம் என நாம் திமுக வட்டாரத்தில் விசாரித்த போது கூறியதாவது;

உதயநிதியை பொறுத்த அளவில் அவர் 2018 வரை அரசியல் களத்திற்கு வருவது பற்றியே யோசிக்கவில்லை. அதற்கு முன் ஊடகங்களுக்கு அளித்த பல பேட்டிகளில் அவர் இதை கூறியுள்ளார். அவர் லயோலாவில் படித்தார். ஆனால், திராவிட இயக்க சித்தாந்தங்கள் பற்றி படிக்க ஆர்வம் காட்டவில்லை. படித்த பிறகு முதலில் பவுலிங் சென்டர் வைத்தார்.அதன் பிறகு சினிமா தயாரிப்பில் இறங்கினார். அவர் காதலித்து கைபிடித்த மனைவி கிருத்திகாவும் சினிமா தயாரிப்பு, இயக்கம்,சோஷியல் வொர்க் ஆகியவற்றில் ஆர்வம் காட்டினார். அதன் பின் உதயநிதி நடிக்கவும் செய்தார். ஸ்டாலின் உதயநிதியை அரசியலுக்கு வரும்படி நிர்பந்திக்கவில்லை. ஆனால், சமீபகாலமாக ஸ்டாலினுக்கு சற்று உடல் நிலை தளர்ந்துவிட்டது. சுமார் 50 ஆண்டுகளாக அவர் களத்தில் கட்சி வேலை பார்த்தவர். இப்போதும் அவர் அதிக கள வேலைகளை செய்கிறார். இதனால் உடல் சோர்வு அதிகமாகிறது. அவருக்கு நம்பகமான உற்ற துணையும் அமையவில்லை.

இந்தச் சூழலில் தான் துர்கா ஸ்டாலின் மகனை அப்பாவிற்கு துணையாக கொஞ்சம் பொறுப்பு எடுத்துக்கோடா,,,என்று மகனை வற்புறுத்த ஆரம்பித்தார். அம்மாவின் வேண்டுகோளுக்காக கட்சி வேலைகளில் உதயநிதி ஈடுபாடு காட்டி வந்தார். உதயநிதி களத்திற்கு வந்து கட்சிக்காரர்களிடம் கலகலப்பாக பழகினார். ஒவ்வொருவரின் உழைப்பு, அனுபவம் ஆகியவற்றை வைத்து சீனியர்களை மதித்தார், அவரை எல்லோருக்குமே பிடித்துவிட்டது.அவருக்கு இளைஞர் அணி பொறுப்பு கொடுக்க சொல்லி கட்சியினரே சொன்னார்கள்.அதையடுத்து தனது 41 வயதில் 2019ல் அவர் இளைஞர் அணி பொறுப்புக்கு வந்து துடிப்புடன் செயலாற்றினார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் நன்றாக பிரச்சாரம் செய்தார். தர்மபுரி வேட்பாளர் டாக்டர். செந்தில் உதயநிதியின் தேர்வு தான்! வியூகம் வகுத்து அன்புமணியின் வெற்றியை செல்வகணபதியின் துணையுடன் வீழ்த்தினார். செந்தில் மிகச் சிறப்பாக பாராளுமன்றத்தில் செயல்பட்டு உதயநிதியின் தேர்வுக்கு நியாயம் கற்பித்தார். உதயநிதியும் இந்த இடைப்பட்ட மூன்றாண்டுகளில் கட்சியின் சகலமட்டத்திலும் தன் தொடர்புகளை வலுப்படுத்திக் கொண்டு அப்பாவின் சுமைகளை பகிர்ந்து கொண்டார்.

”கட்சியின் சித்தாந்தங்களை படிப்பதிலும் திராவிட ஆய்வாளர்கள் செந்தலை கெளதமன், சுபவீரபாண்டியன் ஆகியோர் மூலம் செவி வழி கேட்டு உள்வாங்குவதிலும் ஆர்வம் காட்டுகிறார். தான் கற்றதோடு இளைஞர் அணியினர் பலரும் சித்தாந்த தெளிவும், உறுதியும் பெற ஏற்பாடுகளை செய்கிறார்.ஆகவே உதய நிதியின் வருகை கட்சியினர் மத்தியில் ஒரு நம்பிக்கையும், புத்துணர்வையும் உருவாக்கியுள்ளது.. உதய நிதியை பொறுத்த வரை அவர் திணிக்கப்பட்டவர் என்ற உணர்வு யாருக்குமே ஏற்படவில்லை. உண்மையில் அவர் இன்று கழகத்திற்கு தவிர்க்க முடியாதவராக ஆகிவிட்டார்’’ என்கிறார் திராவிட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாநில செயலாளர் மா.உமாபதி.

”முதலில் உதயநிதி கட்சிக்குள் வரும் போது தலைவரின் மகன் என்ற எண்ணத்திற்கு மேல் வேறு முக்கியத்தும் இல்லை. ஆனால்,தற்போது அவர் ஈகோ இல்லாமல் அனைவரையும் தொடர்பு கொண்டு துடிப்புடன் இணைந்து செயலாற்றும் போது அனைவருக்குமே பிடித்தவரகிவிட்டார். ஒரு அறிவார்ந்த சோஷியல் மிடியா டீமையும் உருவாக்கி சிறப்பாகவே எல்லோரையும் வழி நடத்துகிறார்.’ என்கிறார் திராவிட இயக்க சிந்தாதந்தங்கள் மற்றும் வரலாறுகளை பதிப்பிக்கும் சிற்றரசு.

ஆகவே, சட்டமன்ற அனுபவங்களையும் உதயநிதி பெற வேண்டும் என ஸ்டாலின் உள்ளபடியே விரும்பினார். இதனால், தேவையில்லாத விமர்சனங்கள் எழக்கூடும். ஆகவே, தவிர்க்கலாம் என உதயநிதி கருதினார். ஆனால், தன்னைக் காட்டிலும் உதயநிதி பல விவகாரங்களில் ஷார்ப்பாகவும், வேகமாகவும் இயங்கும் விதம் கண்டு தான் ஸ்டாலின் இந்த முடிவுக்கு வந்தார். கட்சியினர்.,மக்கள் அனைவருக்குமே தெரிந்துவிட்டது. இனி திமுகவின் எதிர்காலம் உதயநிதி தான் என்ற பிறகு ஏன் மறைத்து தாமதப்படுத்த வேண்டும். மகன் எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரமாகத் தயாராக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தயாராகி  தன் சுமைகளை வாங்கிக் கொண்டால், நிம்மதி என்ற மன நிலையில் தான் ஸ்டாலின் உள்ளார்! என்பதே நமக்கு கிடைத்த தகவல்களாகும்.

கருணாநிதி சிறு வயதில் இருந்தே கட்சிப் பணிகளுக்கு ஸ்டாலினை தயார்படுத்தினார். ஆனாலும் ஸ்டாலின் மெல்ல,மெல்லத் தான் தயாரானார். ஒரு வகையில் ’ஸ்லோ பிக்அப்’ என்றும் ஸ்டாலினை சொல்லலாம். ஆனால், தன்னை ஒப்பிடும் போது தன் மகன் வேகமாக பல விஷயங்களை அப்சர்வ் செய்து முன்னேறி செல்வதாக ஸ்டாலின் கருதுகிறார். தன்னுடைய மகன் துணை இன்றியமையாதது என அவருக்கு மனதில் வலுவான எண்ணம் உருவாகிவிட்டது. ஆகவே தான் பிரசாந்தின் எச்சரிக்கையை அவர் மீற வேண்டியவராகிவிட்டார் என தெரிய வருகிறது!

எப்படிப் பார்த்தாலும் உதயநிதியின் வருகையும், அவருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவங்களும் எதிர்கட்சிகளின் விமர்சனத்திற்கு ஆளாகவே செய்யும்.பொதுவாக கொள்கை பற்றுள்ள குடும்பங்களில் மிகச் சிறிய வயதில் இருந்தே குழந்தைகளை கட்சி பொதுக் கூட்டங்கள், நிகழ்வுகள் ஆகியவற்றுக்கு அழைத்து வந்து இயக்க ஈடுபாட்டை வளர்ப்பார்கள். அதை ஸ்டாலின் செய்யத் தவறிவிட்டார். அப்படி செய்திருந்தால் உதயநிதிக்கு இந்த 43 வயதில் கிட்டதட்ட கால் நூற்றாண்டு கால அரசியல் அனுபவஸ்தராக இருந்திருப்பார். காலம் தாழ்ந்து வந்தாலும் களத்திற்கு தக்க தன்னை விரைந்து தயார்படுத்திக் கொண்டுள்ளார் உதயநிதி என்றே தெரிய வருகிறது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time