பாஜகவின் பாதிப்புகளுடைய திமுக தேர்தல் அறிக்கை!

-சாவித்திரி கண்ணன்

கவனப்படுத்த வேண்டிய பல புதிய நல்ல வாக்குறுதிகள் உள்ளன! அத்துடன் இலவச மயக்க , மருந்துகள் அதிகமாகவே உள்ளன! இத்துடன் சொல்ல பயந்த விஷயங்களுமுள்ளன! திசைமாறிப் பயணிக்கும் திமுகவின் மிக ஆபத்தான அறிவிப்புகளும் உள்ளன…ஆட்சிக்கு வருவதற்கு முன்பே பாஜக பயம் இப்படி இருக்குமென்றால்..,

திமுக தேர்தல் அறிக்கை குறித்த விரிவான அலசல்;

முதலில் பாராட்ட வேண்டிய அம்சங்களை பட்டியலிடுவோம்;

# புதிதாக 2 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

# தமிழக தொழில் நிறுவனங்களில் 75 சதவிகிதம் வேலைகள் தமிழர்க்கே வழங்க சட்டம்,

#  தனித் துறை உருவாக்கப்பட்டு, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.

# அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் மக்கள் குறைகேட்கும் முகாம்கள் நடத்தப்படும்.

# ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா கொண்டு வரப்படும்.

# சேவை பெறும் உரிமை சட்டம் கொண்டு வரப்படும்.

# இயற்கை வேளாண்மைக்கு என தனி துறை ஏற்படுத்தப்படும்.

# தென்னையின் இயற்கை பானமான நீராவுக்கு ஊக்கம் தரப்படும்.

# மரபணுமாற்று தொழில் நுட்ப அனுமதி மறுக்கப்படும்.

# மீத்தேன் திட்டம் தடுக்கப்படும்,

# பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாத்து லாபத்தில் இயங்க செய்வோம்.

#  தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவை கொண்டு வரப்படும்.

#  சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

#  பொங்கல் திருநாள் மாபெரும் பண்பாட்டு திருநாளாக மாநிலம் முழுவதும் நடத்தப்படும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும்.

#  வேலை வாய்ப்பு அலுவலகங்கள் இளைஞர்களின் திறன் பயிற்சி மையங்களாக செயல்படும்.

#  ஐந்து ஆண்டுகளில் 50 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.

# அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.

பாஜகவின் பாதிப்பை கொண்ட ஆபத்தான அம்சங்கள்;

இந்தியா முழுமையும் பலம் பெற்று வரும் இந்துத்துவ அரசியல் திமுகவையும் பாதித்துள்ளதோ என எண்ண வைத்த வாக்குறுதிகள்!

# புகழ்பெற்ற இந்துக் கோவில்களுக்கு ஆன்மிக சுற்றுலா செல்ல 1 லட்சம் பேருக்கு தலா 25 ஆயிரம் வழங்கப்படும்.  இது இந்துக்களின் ஓட்டுவங்கியை குறிவைத்து வழங்கப்பட்ட மதவாத அரசியல் அணுகுமுறையாகும்.அதாவது பாஜகவிற்கு போட்டியாக தானும் இந்துத்துவா அரசியலை அரசு பலத்துடன் செய்ய திமுக முனைகிறது.இது மிகப் பெரிய நிதிச்சுமையை அரசுக்குத் தரும்.கண்டிப்பாக தேவையற்றது.

கிராமப்புற பூசாரிகளின் ஊதியமும் ஓய்வூதியமும் அதிகரிக்கப்படும் என்பதும் இந்துத்துவாவின் தாக்கமே! விஸ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளால் உருவாக்கப்பட்டதே கிராம பூஜாரிகள் என்ற அமைப்பு! இந்த கிராம பூஜாரிகள் வழி மூட நம்பிக்கை மீட்டெடுப்பை செய்யவே இந்துத்துவ அமைப்புகள் முயன்றன. இதில் அரசு தலையிட வேண்டியதில்லை. கிராம பூஜாரிகளுக்கு ஓய்வூதியம் என்றால், வண்ணார்,குயவர்,நாவிதர்.. உள்ளிட்ட மற்றவர்கள் எல்லாம் தேவையற்றவர்களா..? முதியவர்களுக்கான ஓய்வூதியம் இவர்களுக்கும் பொருந்தும் போது தனியாக எதற்கு?

# இந்து ஆலயங்கள் புனரமைப்பு, குடமுழுக்கு பணிக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதும் தவறான அறிவிப்பே! இந்து கோவில்கள் விவகாரத்தில் அதற்கான துறை இது வரை என்ன செய்ததோ, அதை இன்னும் அக்கறையோடு செய்தால் போதுமானது. புனரமைப்புக்கு செலவிடுவது சரி தான். ஆனால், குடமுழுக்கு போன்றவை பக்தர்களின் கைங்கரியத்தில் நடப்பவை. அதற்கு எதற்கு அரசுப்பணம் ஆயிரம் கோடி! இந்துக்களுக்கு இப்படி செய்வதை நியாயப்படுத்த தேவாலயங்கள்,மசூதிக்கும் ரூ2,00 கோடி அள்ளி இறைக்க வேண்டியதாகிவிட்டது போலும்!

இவையெல்லாம் மதவாத அரசியல் மாயை திமுகவிற்குள் ஊடுருவியதை தான் காட்டுகிறது. இந்துக்களை விமர்சிப்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்பதை ஏன் திமுகவினர் சொல்லாமல்விட்டார்கள் எனத் தெரியவில்லை.

இவ்வளவு இந்துத்துவ ஆதரவு நிலைபாடு எடுக்க முடிந்த திமுகவால் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி ஆகியவற்றை தமிழ் நாட்டில் அமல்படுத்தவிடமாட்டோம் எனச் சொல்ல தைரியமில்லையே! கலைஞருக்குப் பிறகு திமுக திசைமாறி பயணிக்கத் தொடங்கி இருப்பதையே இந்த அறிக்கை உணர்த்துகிறது. சிறுபான்மையினரை பாதிக்க கூடியதோ அல்லது மற்ற மதத்தவரை தாழ்வாக நடத்துவதையோ அனுமதிக்காத ஒரு சமய சமத்துவம் தமிழகத்தில் பேணப்படும் என்ற வாக்குறுதி தந்திருக்கலாமே!

# ”எட்டு வழிச்சாலையை தமிழகத்தில் செயல்படுத்த அனுமதிக்கமாட்டோம்’’ என சொல்லும் ஆண்மை இல்லையே? ஏன் சுற்றி வளைத்து பொத்தாம் பொதுவாக விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் விவசாய உற்பத்தியை பாதிக்க கூடிய – விளை நிலங்களை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுவதை எதிர்ப்போம் என்கிறீர்கள்..! விவசாயிகளை ஒப்புதல் பெற வைக்கும் கலைகள் அமல்படுத்திடத் தான் அரசு  பலம் இருக்கிறதே!

# 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ராஜிவ்காந்தி கொலை தொடர்பான எழுவர் விடுதலை பற்றியோ, வீரப்பன் தேடுதல் வேட்டையில் கைதாகி 32 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஐவர் பற்றியோ.,20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய கைதிகளின் விடுதலை குறித்தோ அறிக்கையில் எதுவும் இல்லை.

# பத்து ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சி அமைப்புகள்,பொதுப்பணித் துறை, மின்சாரத்துறை ஆகியவற்றில் பணி புரியும் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துவோம் என்ற வாக்குறுதி இல்லை.

# நீட் தேர்வை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி அனுப்பி வலியுறுத்துவார்களாம். அதாவது, அதிமுகவைப் போல எதிர்ப்பது போல பாவனை காட்டுவதாக உத்தேசமா…?

இலவசங்களால் நாட்டை இழி நிலைக்கு கொண்டு செல்லும் அறிவிப்புகள்:

# ரேசன் அரிசி அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு எடப்பாடி ரூ 2,500 தந்ததற்கு போட்டியாக ரூ 4 ஆயிரம் வழங்கப்படும் என்பதில் இருக்கிறது அதிமுகவிற்கும், திமுகவிற்கும் உள்ள ஒற்றுமை!

# மாடுவளர்க்கும் விவசாயி பால் கொள்முதல் விலை கட்டுபடியாகவில்லை என போராடி வருகிறான். மற்ற தனியார் நிறுவனங்கள் பாலை அதிக விலைக்கு தந்து கொண்டுள்ளன. ஆனால், யாரும் கேட்காமலே ஜூன் 3, கலைஞரின் பிறந்தநாள் முதல் ஆவின் பால் லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்படும் என்கிறீர்கள்!

#  மக்களின் நலத்தை கருத்தில் கொண்டு பெட் ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படுமாம்.! பெட்ரோல்,டீசல் விலையை இந்திய அரசே கூட, இன்று தீர்மானிக்க முடியாது.ரிலையன்ஸ் அம்பானி தான் தீர்மானிக்கிறார். தமிழக அரசு வரியை சற்று குறைக்க முடியும் அவ்வளவே. இதற்கு மாறாக தமிழகத்தில் பெட்ரோல், டீசல் ஆகிவற்றை உற்பத்தி செய்ய தமிழக அரசு திட்டமிடும் எனக் கூறி இருக்கலாம்.

# நியாய விலைக் கடைகளில் மாதம் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாகத் தரப்படும். இதுவும் யாரும் கோரிக்கை வைக்காத தேவையற்ற ஓட்டு பொறுக்கி அறிவிப்பாகும்.

# சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் என்பதும் தேவையற்றது. இவற்றை நியாய விலையில் வழங்க முன்வந்தாலே போதுமானதாகும்.

# விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் வாங்க 10 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும் என்பதும் ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்கிட 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் கடைந்தெடுத்த ஓட்டுபொறுக்கித்தனமாகும். விவசாயிகளுக்கு தடையற்ற மின்சாரத்தை உறுதி செய்வதும், ஆட்டோ உரிமையாளர்களிடம் அநியாயமாக வசூலிக்கும் பலதரப்பட்ட வசூல்களுக்கு முற்றுபுள்ளி வைப்பதுமே போதுமானது.

# அரசு கல்லூரி மணவர்களுக்கு கைக்கணினி தருவதை ஏற்க்கலாம். ஆனால், பள்ளி மாணவர்களுக்கு கைக்கணினி வழங்கப்படுவது அவசியமற்றதாகும்.

# சிறுகுறு விவசாயிகளின் கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றால், அப்புறம் கூட்டுறவு வங்கிகள் எப்படிச் செயல்படும்?

# அரசு உள்ளூர் பேரூந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி வழங்கப்படும். எதற்கு இது? பொம்பளைங்க ஓட்டை பொறுக்கத் தானே அந்த அறிவிப்பு..? போக்குவரத்துதுறை ஊழியர்களிடம் பிடித்தம் செய்து தராமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 7,000 கோடியை உடனே திருப்பித் தருவோம் என சொல்ல தைரியம் இல்லையா?

அதிமுக அரசால் 9 லட்சம் கோடி கடன் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு குடிமகன் தலையிலும் ஒன்றேகால் லட்சம் கடன் உள்ளது ஆகவே, கடன் சுமையை சீர் செய்ய பொருளாதார உயர் மட்டக் குழு அமைக்கப்படும் என வக்கனையாக கூறுகிறது திமுக தேர்தல் அறிக்கை . ஆனால், தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள இவ்வளவு இலவசங்களை வழங்க இன்னும் எவ்வளவு கூடுதல் கடன்களை வாங்க உத்தேசித்துள்ளது…திமுக? .என்பதையும் சேர்த்தே சொல்லி இருக்கலாம்! ஏற்கனவே இருக்கும் கடனை இன்னும் இரண்டு மடங்கு அதிகரிப்பதாகவே உள்ளது திமுகவின் தேர்தல் அறிக்கை!

ஊழல் செய்த அதிமுக அமைச்சர்கள் மீது விசாரணை கமிஷன் அமைப்பார்களாம்! சபாஷ்! இதே போல கடந்த திமுக ஆட்சியில் ஊழல் செய்த அமைச்சர்கள் மீது குண்டர் சட்டம் உள்ளிட்டவற்றை பாய்ச்சி ஜெயலலிதா செய்த பேர அரசியல் தான் நினைவுக்கு வருகிறது! அதையே நீங்கள் திருப்பி செய்வீர்கள் போலும். ஆனால், ஊழலற்ற ஆட்சிக்கு திமுக உத்திரவாதம் தருவதை நம்ப வேண்டுமென்றால், இன்றைய அமைச்சர்களோடு கைகோர்த்து ஊழலில் பங்கு பெற்ற துரைமுருகன் மீது விசாரணை பாயுமா? கடந்த ஆட்சியில் ஊழல்புகார்களுக்கு உள்ளான அனைத்து திமுக அமைச்சர்களையும் இந்த அமைச்சரவையில் தவிர்க்கும் திட்டம் ஒன்றை செயல்படுத்துங்கள் போதும்!

தமிழக அரசின் மது விற்பனை வெறித்தனத்தால் தமிழகம் சீரழிந்து கிடக்கிறது. மதுக் கொடுமையால் இந்தியாவிலே அதிக விதவைகள் உள்ள மாநிலமாக உள்ளது. பள்ளிக்கூட மாணவர்கள் வரை மதுக் கலாச்சாரம் பரவி வருகிறது. இதை தடுக்கவோ, மாற்றவோ தேர்தல் அறிக்கையில் ஒன்றுமில்லை. 2016 தேர்தலில்,  நான் வந்தால் முதல் கையெழுத்து மதுவிலக்கு அமல்படுத்த போடுவேன்’’ என்றார் கலைஞர். அதிமுகவோ மது விற்பனை படிப்படியாக குறைக்கப்படும் என்று சொல்லியது. ஆனால், அதை அமல்படுத்தவில்லை. அரசு மதுவிலக்கை கொண்டு வந்தால், மது உற்பத்தி ஆலைகளை நாங்களும் மூடிவிடுகிறோம்’’ என்றனர் திமுகவின் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர். இந்த தேர்தல் அறிக்கையில் ஏன் மது ஆலைகளை மூட வைப்பது குறித்து எதுவும் இல்லை. தேர்தல் அறிக்கை குழுவின் தலைவரே மதுபான ஆலையின் உரிமையாளர் டி.ஆர்.பாலுவாம்? சொல்வதற்கு என்ன இருக்கிறது…? விதியே, விதியே தமிழ்ச்சாதியை என்ன செய்ய நினைத்தாயோ..?

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time