பெயர் மட்டுமா, எழுத்தும் இமையம் தான்!- சாகித்திய அகாதமி விருது ! 

-பீட்டர் துரைராஜ்.

சமூகத் தளத்தில் அழுத்தப்படும் பெண்களின் உணர்வுகளை மிகுந்த உயிர்ப்போடு பதிவு செய்வதில் வல்லவர். பாசம், பரிவு, பரிதவிப்பு, காதல், மோதல், பொறாமை, ஆற்றாமை..அனைத்தும் கொண்ட போலித்தனமில்லாத எளிய மனிதர்களை – அவர்களின் ஆன்மாவை – தனது எழுத்தில் வெளிச்சமிட்டு காட்டி 30 ஆண்டுகளாக எழுதி வருபவர் இமையம்!

வெ.அண்ணாமலை (1964) என்ற இயற்பெயரைக் கொண்ட இமையத்தின்”செல்லாத பணம்”  நாவலை,  2020 ஆண்டுக்கான விருதுக்கு, சாகித்திய அகாதமி தேர்ந்தெடுத்து உள்ளது. இதற்கு ஒரு இலட்ச ரூபாய் பரிசும், பட்டயமும் வழங்கப்படும்.

கொலைச் சேவல், சாவுசோறு, மண்பாரம், வீடியோ மாரியம்மன் போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும் இமையம் எழுதியுள்ளார்.

“இன்னொரு முறை இமையம் பெண்களை மையப்படுத்திய ஒரு நாவலைப் படைத்துள்ளார். இன்னொரு முறை நமது மனசாட்சியை உலுக்குகிறார் ” என்று MIDS பேராசிரியர் லக்‌ஷ்மணன்

2018 ல்  இமையத்தின்  ஐந்தாவது நாவலான ‘செல்லாத பணம்’   வெளிவந்த போது குறிப்பிட்டார்.

”இந்த நாவல் எப்படி இருக்கிறது?” என்று திரைப்பட உதவி இயக்குனரான       சா.ரு.மணிவில்லனைக்  கேட்டோம்.

“தலைமையாசிரியரின் மகளான, பொறியியல் படித்த ஒருத்தி, ஒரு ஆட்டோ ஓட்டுநரை திருமணம் செய்து கொள்கிறார்.குடி, அடி, வறுமை காரணமாக தீக்குளித்த அவளை கோரிமேடு மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். இதுதான் கதை. வழக்கம்போல இமையம் உரையாடலை நாவல் முழுவதும் விரிவாக வைத்திருக்கிறார். நாள்தோறும் மருத்துவமனையில் நாம் காணும் பாத்திரங்கள் நாவலில் வந்து செல்கின்றன ” என்றார்.

‘பர்மா அகதி குடும்பத்தைச் சார்ந்த ஒருவனை குடிகாரனாக, பெண்கள் மீது வன்முறை நிகழ்த்துபவனாக, பொறுப்பற்றவனாக  சித்தரிப்பது தவறாகத் தென்படவில்லையா’  என்று கேட்டோம். “குடிப்பதும், அடிப்பதும் எல்லா குடும்பங்களிலும் நடப்பதுதான்.பர்மா அகிதிக்  குடும்பத்தை எதேச்சையாகக்  கூட இமையம் வைத்து இருக்கலாம். அதை நாம் பெரிதுபடுத்த வேண்டியதில்லை. 85 சத தீக்காயங்களோடு படுக்கையில் இருக்கும் தன் மகளை எவ்வளவு செலவு செய்தாவது காப்பாற்ற நினைக்கும்  அவளது அப்பா, அவர்கள் திருமணம் செய்த காலத்தில் உதவி செய்திருந்தால் இந்த மரணம் நடந்திருக்குமா என்ற கேள்வி எழுகிறது. இந்த நாவலில் தலைமையாசிரியரின் மாணவன் காவல்நிலையத்தில் பேசுவது என்பதெல்லாம் அரசியலில் அறம் எவ்வளவு வீழ்ச்சி அடைந்துள்ளது, என்பதைக் காட்டுகிறது”  என்றார் மணிவில்லன்.

“இந்த நாவல் பரிசுக்கு வந்த உகந்த நாவலாக எனக்கு தெரியவில்லை. இதைவிட அவருடைய ‘பெத்தவன்’ கதை நன்றாக இருக்கும் ” என்றேன். “இந்தக் கதை சமகாலக் குடும்பங்களை சித்தரிக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் செல்லாத பணத்தை நான் திரைப்பட மாக எடுப்பேன்.

‘பெத்தவன்’ நாவலை மு. களஞ்சியம் ‘முந்திரிக்காடு’ என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளார்; விரைவில்  வெளியாகும். கடந்த 20 ஆண்டுகளில் நடைபெற்றுள்ள பல்வேறு ஆணவக் கொலைகளை உள்ளடக்கி ‘பெத்தவன்’ சிறுகதையை இமையம் எழுதியுள்ளார்.  ஊரே ஒன்று திரண்டு இத்தனை ஆண்டுகள், தான்  வளர்த்த மகளை கொலை செய்ய வேண்டும் என்று நிர்பந்திக்கும் போது,  தன் மகளாவது  நன்றாக வாழட்டும் என்று, அவள் விரும்பும் பையனோடு அவளை அனுப்பி வைத்து, தற்கொலை செய்து கொள்ளும்  ஒரு தந்தையை இந்த கதையில் காண்கிறோம். இது  ஒருவிதத்தில் ஆதிக்க சாதியினரின் மனோநிலையில் ஏற்படும் வீறலாகவே  நான் பார்க்கிறேன்” என்றார் மணிவில்லன்.

செல்லாத பணம்’ குறித்து

“இது தற்கொலையா? கொலையா? தற்கொலை என்றால், தற்கொலைக்குத் தூண்டியவர்கள் யார்? கொலை என்றால் கொலை செய்தவர்கள் யார்? நான்கு, ஐந்து வயதில் இரண்டு குழந்தைகளை அனாதியாக்கிவிட்டு இறந்துபோகத் துடித்த அந்தப் பெண்ணின் மனசுக்குள் இருந்த ஆறாத் துயரத்திற்கு யார்? எது காரணம்? நிமிடத்திற்கு ஒரு ரூபம் எடுக்கும் மனத்தை இமையம் துல்லியமாகக் காட்டுகிறார். நாவலுக்குள் பார்வையாளர்களாக வந்துபோகும் சின்னசின்ன கதாபாத்திரங்கள் நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் தங்களின் சொந்தக் கதைகள்மூலம் நகர்த்தி செல்கிறார்கள். அவசர சிகிச்சைப் பிரிவின் வாசலில் நின்றிருக்கும் செக்யூரிட்டியின் கூச்சலும் மௌனமும்கூட கதையின் முக்கியமான பகுதிகள்தான் ” என்கிறார் நாவலாசிரியரான அ.வெண்ணிலா. இவர் கங்காபுரம், சாலாம்புரி போன்ற நாவல்களை எழுதியவர்.

அம்பேத்கர் நூற்றாண்டு விழா சமயத்தில் வெளியான ‘கோவேறு கழுதைகள்’ நாவல்  மூலம் தமிழுக்கு அறிமுகமான இமையத்தின்  கதைகளில் வரும்  உரையாடல்கள் வலுவானவை. இந்த நாவல் மூலம்தான் புதிரை வண்ணார்கள் என்ற ஒரு சமூகம் இருப்பதே மற்றவர்களுக்கு தெரிய வந்தது. ‘வெறும் பிரச்சினையை மட்டுமே ‘கோவேறு கழுதைகள்’ பேசுகிறது; அதற்கான தீர்வுகளை நாவல் சொல்லவில்லை’ என்ற விமர்சனமும் இந்த நாவல் மீது உண்டு. புதிரை வண்ணார்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு துணி வெளுக்கும் சமூகம். இரவு நேரங்களில் மற்ற வீடுகளில் சோறு வாங்கி தங்கள் வாழ்வை நடத்தியவர்கள்.இப்படி ஒரு பிரச்சினை இருப்பதைக் காட்டுவதே ஒரு படைப்பின் வெற்றிதான்.

‘எங் கதை’ நாவலை நான் ரசித்துப் படித்து இருக்கிறேன்.இந்த நாவலில் கதாநாயகனான விநாயகம் விதவையான கமலாவையே சுற்றிவருகிறான். திருமணம் செய்துகொள்ளவில்லை. அவளுடைய எல்லா தேவைகளையும் நிறைவேற்கிறான். ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்து அவளை கொலை செய்யும் அளவுக்குப் போகிறான்.

“முதலில் படிக்கும்போது பள்ளியில் எழுத்தராக இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் விதவையுடன் உறவு கொண்டுள்ளவனை நாயகனாக இமையம் சித்தரிக்கிறாரே என்று நினைத்தேன்.ஆனால் நாவலின் இறுதியில் அவளை கொலை செய்யும் நிலைக்குச் சென்று திரும்புவது மூலம் நாயகன் மேன்மை அடைகிறான். இதில் கதாநாயகி கூற்றாக, அவள் பார்வையில் ஒரு காட்சி கூட வராது” என்கிறார் சா.ரு.மணிவில்லன.

‘செடல், ஆறுமுகம் உள்ளிட்ட ஐந்து நாவல்களையும், பல்வேறு சிறுகதைகளையும் இமையம் எழுதியிருக்கிறார். 30 ஆண்டுகளாக,  சமகாலப் பிரச்சினைகளை தொடர்ந்து எழுதிவரும், சாதாரண குடும்பத்தில் தோன்றிய  இமையத்திற்கு விருது கிடைத்தமைக்கு அறம் சார்பில் வாழ்த்துக்கள்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time