கண்டே பிடிக்கமுடியாத கைலாசா என்ற தனி நாடு, அதற்கான கரன்சி, தங்க நாணயம், ரிசர்வ் வங்கி, அந்த நாட்டுக்கான சட்டதிட்டங்கள், கொள்கைகள் ,இது உலகில் உள்ள அனைத்து இந்துக்களுக்குமான தேசம்….இங்கே முக்கிய பதவிகளுக்கான வேலை வாய்ப்புகள்…போன்ற அறிவிப்புகள்… என்று அதிரடியாக கலக்கிக் கொண்டிருக்கும் நித்தியானந்தாவின் உண்மை நிலை என்ன என்பதை இந்தக் கட்டுரை அம்பலப்படுத்துகிறது.
உலகமே கொரோனா பிரச்சினையில் துவண்டு கொண்டிருக்க, குழந்தைகள் கடத்தல்,பாலியல் புகார்,கொலைவழக்கு ஆகியவற்றில் தேடப்படும் குற்றவாளியாக அறியப்பட்டவரான நித்தியானந்தாவால் எப்படி இவ்வாறு பிரம்மாண்டமான அறிவிப்புகளை வெளியிட முடிகிறது என்பது இருக்கட்டும் இன்னும் அவரை எங்களால் நெருங்க முடியவில்லை என்று சொல்லும் இந்திய அரசின் கையாலாகாத்தனத்தை என்னென்பது?
தலைமறைவும், தனிநாடும்!
தன் மீதான புகார்களில் இருந்து தப்புவதற்காக சென்ற ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவிலே இருந்து ரகசியமாக வெளியேறினார் நித்தியானந்தா! முதலில் அவர் ஈகுவடார் நாட்டுக்ககான ஒரு தீவை சொந்தமாக வாங்கி அதற்குத் தான் கைலாசா என்ற பெயர் வைத்துள்ளார் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால், ஈகுவாடர் நாடோ அவர் எங்களிடம் கேட்டார். ஆனால், நாங்கள் எந்தத் தீவையும் அவருக்குத் தரவில்லை என அறிவித்தது. பிறகு அவர் கரிபியன் கடலில் பர்படாஸ் என்ற பெயர் கொண்ட சிறிய தீவில் தற்காலிகமாக தன் குழுவினருடன் தங்கியுள்ளதாக ஆங்கில ஊடகங்கள் எழுதி வந்தன!
பிறகு நித்தியானந்தாவே ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் அவர் சிஷ்யர்களுடன் கடற்கரையில் சிம்மாசனத்தில் வீற்றிருந்தார். தான் கைலாசா என்ற ஒரு புது நாட்டை உருவாக்க இருப்பதாக அறிவித்தார். மேலும் அவ்வப்போது அதிரடியாக யூ டியுப்பில் ஏதாவது பேசி கவனத்தை ஈர்க்கிறார்! இப்போது அவரது யூடியூப் பேச்சுகள் அனைவரும் விரும்பும் ஒரு எண்டர்டெயிண்மெண்டாகிவிட்டது.
கதிகலக்கும் கைலாசா!
கைலாசாவிற்கென்று நித்தியானந்தா ஒரு வெப் பக்கத்தை உருவாக்கினார்! உடனே அது பல லட்சம் மக்கள் பார்வையிடும் இணையதளமானது! அந்த தளம் நித்தியானந்தாவை புனித தன்மை வாய்ந்த ஸ்ரீ நித்தியானந்த பரமசிவ பகவான் என்றது! அதில் அவர், ’’நான் இந்து சமயத்தை மறுமலர்ச்சி செய்ய வந்தவனல்ல, புத்தாக்கம் செய்ய வந்தவன்’’ என அறிவித்துக் கொண்டார்.
மேலும், அந்த இணையதளம், ‘’இது இந்துத்தவத்தை கடை பிடிக்கும் இந்துக்களுக்கன சொர்க்கம்! இந்துக்களை அதன் எதிரிகளிடமிருந்து போராடி காப்பாற்றும் நாடு! இது பாரம்பரியமான சனாதன தர்மத்தை பின்பற்றும் வாழ்க்கை முறைக்கான தேசம் என்றும் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டது. இதனால், இந்துக்கள் பலருக்கு இதன் மீதான ஈர்ப்பு கூடியது. இந்த அறிவிப்புக்கு பின்பான ஒரு சில நாட்களிலேயே அந்த தேசத்தில் வாழவிரும்பி பல லட்சம் பேர் விண்ணப்பிக்க தொடங்கினர்.
நன்கொடைகள் குவிந்தன!
இந்த அறிவிப்புகள் பெரிய நன்கொடைகளை நித்தியானந்தாவிற்கு பெற்றுத் தந்தது. நன்கொடைகளை அள்ளுவதற்குத் தான் அவர் இப்படி ஜகத்தால தகிடுதத்த அறிவிப்புகள் தந்ததே! இதையடுத்து தான் அவர் ஹாங்காங் நாட்டின் சர்வதேச நிதி மையத்தில், 2019 அக்டோபர் மாதம் கைலாசா லிமிடெட் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை பதிவு செய்துள்ளார். அதற்கு அந்த நாட்டின் ஸ்டான்லி தெருவில் உள்ள முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் அமெரிக்கா,இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பத்துக்கு மேற்பட்ட நிறுவனங்களை உருவாக்கியுள்ளார். குறிப்பாக அமெரிக்காவின் மிக்சிகன்,மின்னசோட்டா,பென்சில்வேனியா,,பீட்ஸ்பர்க் உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த நிறுவனங்களை உருவாக்கியுள்ளார். பணம் வசூலிக்கவென்று பல தன்னார்வ நிறுவனங்களையும் உருவாக்கியுள்ளார். இவை அனைத்தையும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் கைலாயா என்ற ஒரே நிறுவனத்தின் கீழ் கொண்டுவரக் கூடிய ஒரு நிறுவனத்தையும் இந்த ஏப்ரல் மாதம் பதிவு செய்துள்ளார்.
இதன்படி அவருக்கு குவிந்த நன்கொடைகளை கொண்டு பிறகு விநாயகர் சதுர்த்தியன்று ,வியப்பு தரும் அறிவிப்புகளை நித்தியானந்தா வெளியிட்டார். கண்ணைப் பறிக்கும் ஐந்து வகையான பொற்காசுகள் காலணா,எட்டணா என்ற பழைய காலப்படி உருவாக்கப்பட்ட நாணயங்களை அறிமுகப்படுத்தினார்.அதே போல வெளி நாடுகளோடுகளுடன் பொருளாதார தொடர்புக்கு என்று ஒன்று,இரண்டு,மூன்று,நான்கு,ஐந்து மற்றும் பத்து டாலர்கள் வரை அறிமுகப்படுத்தியுள்ளார்.
Also read
அவர் அறிமுகப்படுத்திய ரூபாய் நோட்டுகள் குண்டி தொடைக்கக் கூட பயன்படாது! ஆனால் அந்த ஒரு டாலரானது 11.56 கிராம் எடை கொண்ட தங்கம் என்ற வகையில் இந்திய மதிப்பில் சுமார் 58,000 ரூபாய் பெறுமானமாகிறது. ஆக,அந்த நாணயத்திற்கு மதிப்பில்லை! ஆனால், தங்கம் எங்கும் விலைபோகுமல்லவா?
16 அமைச்சகங்கள்! பதவிக்கு தேவை ஆட்கள்!
கைலாசா நாட்டிற்கு 16 அமைச்சகங்களை அறிவித்தார் நித்தியானந்தா! உள்துறை பாதுகாப்பு,பொருளாதாரத் துறை, வணிகத் துறை,வீட்டு வசதித் துறை,கல்வித் துறை,ஞானமார்க்க சமூக கட்டமைப்பு துறை, மனித வளத் துறை,இறையாண்மைத் துறை,தொழில்நுட்பத் துறை…உள்ளிட்ட அனைத்து துறைகளுக்குமே செகரட்டரி, துணை செகரட்டரி,எக்சிகியூட்டிவ் அதிகாரி, நிர்வாக அதிகாரிகள்,பகுதி நேர தன்னார்வலர்கள் விண்ணபிக்க கோரிடும் விளம்பரம் ஒன்றையும் வெளியிட்டார். அதற்கு டாலர்கள் கணக்கில் ஊதியங்களை நிர்ணயித்தார். இதை பார்த்த பலருக்கும் உடனே அந்த நாட்டிற்கு செல்லும் ஆவல் பிறந்தது.
உண்மை என்ன?
கைலாசா என்ற நாடு இருக்கிறாதா? இருந்தால் அதன் இருப்பிடம் எங்கேயுள்ளது? அதை மற்ற நாடுகள் அங்கீகரித்துள்ளனவா? என பல கேள்விகள், சந்தேகங்கள் மக்களிடம் நிலவுகின்றன! உண்மையில் நித்தியானந்தா சொல்லும் கைலாசா என்பது ஒரு இணையத்தளத்தால் கட்டமைக்கப்பட்டுள்ள நாடாகும்! அதற்கென்று நிலப்பரப்பு எதுவுமில்லை! ஆனால்,உலகின் பல நாடுகளில் அவருக்கு அபரிமிதமான சொத்துக்கள் உள்ளன! அந்த சொத்துகளை பாதுகாக்கவும்,மேலும் பெருக்கவும் அவருக்கு தேவை சிறந்த மார்க்கெட்டிங் மனிதர்கள்! அதற்காக தான் கைலாசா ஆசை காட்டி பதவிகள் அறிவித்து தூண்டில் போடுகிறார்! இதில் குடிமகன்களாக விரும்புபவர்கள் இணையத்தின் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய முடியும்! இணையத்திலேயே அவர் அந்த நாட்டின் குடிமகன் தான் என்பதற்கான அத்தாட்சி சான்றிதழையும் தரவிறக்கம் செய்யலாம்! ஆனால், அங்கு போகத் தான் வாய்ப்பில்லை!
நித்தியானந்தாவைப் பொறுத்தவரை இந்துக்கள் எங்கு இருந்தாலும் தன் நாட்டின் மக்களே! அதனால் தான் தனது நாட்டின் குடிமகன்களாக 10 கோடி ஆதி சைவர்களையும், இரண்டு பில்லியன் இந்துக்களையும் நித்தியானந்தா குறிப்பிடுகிறார்.
வாடிகன் மாடலில் கைலாசா!
கிறிஸ்த்துவர்களுக்கு ’வாடிகன்’ என்ற மிகச் சிறிய நாடும், அதன் தலைவராக போப்பாண்டவரும் இருக்கிறார்கள் அல்லவா? அதைப் போல தானும் வருங்காலத்தில் இந்துக்களின் ஒரே தலைவராக கருத்தப்பட வேண்டும் என்று நினைக்கிறார் நித்தி! இந்த நோக்கம் இந்துக்களை மட்டுமல்ல,கிருஸ்த்துவர்களையுமே அவமதிப்பதாகும். ஒரு துறவிக்கான அடிப்படை தகுதிகள் எதுமற்ற நித்தியானந்தா தான் யோகத்தின் மூலமும் சாதானாவின் மூலமும் பெற்ற அபார சில சக்திகளை வைத்து ஒட்டுமொத்த இந்து சமூகத்தையும் ஏமாற்றி வருகிறார்! துர் அதிர்ஸ்டவசமாக பாஜக அரசு இந்த போலி சாமியை கைது செய்ய மனமின்றி காப்பாற்றி வருகிறது. ஆனால்,அதே சமயம் இந்தியா மற்றும் பிரெஞ்சு அரசுகளின் தேடப்படும் குற்றவாளியாக பொது தளத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளதால் வெளிப்படையாக தான் இருக்கும் இடத்தை கூட சொல்ல முடியாதவராக உள்ளார்!
நித்தியானந்தாவின் மீதான புகார்கள்
2010 ஆம் ஆண்டு பாலியல் புகார் தொடர்பாக இவர் கைதாகி 53 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார். பிறகு ஜாமீனில் வெளி வந்தார். கர்நாடகாவின் ராம்நகர் நீதிமன்றத்தில் இவர் மீதான கொலை,சித்திரவதை,கற்பழிப்பு,மோசடி போன்ற புகார்கள் தொடர்பாக பல ஆண்டுகளாக வழக்கு நடந்து வருகிறது. அந்த வழக்குகளில் 50 முறைகளுக்கும் மேலாக ஆஜராகாமல் போக்கு காட்டி வந்தார். பிறகு அந்த நீதிமன்றத்திற்கு நேர்மைக்கு பேர் போன நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா பொறுப்பேற்றதும் நித்தியானந்தாவிற்கு கைது வாரண்டு பிறப்பித்தார்.உடனே நித்தியானந்தா தலைமறைவானார்.
குஜராத்தின் அகமதாபாத் நீதிமன்றத்தில் ஜனார்த்தன சர்மா என்பவர் தன் மைனர் மகள்கள் இருவரை நித்தியானந்தா கடத்தியதாக தொடர்ந்த வழக்கில் நித்தியானந்தா மீது இந்திய தண்டனை சட்டம் 365,,344,323,504,114 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவாகியுள்ளது. இதற்காக குஜராத் போலீஸார் இண்டர்போல் அமைப்பை தொடர்பு கொண்டு நித்தியானந்தாவிற்கு ப்ளு கார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
கைலாசாவின் அடையாளங்கள்
தேசிய விலங்கு ; நந்தி
தேசிய மலர் ; தாமரை
தேசிய மொழிகள்; சமஸ்கிருதம்,தமிழ்,ஆங்கிலம்
தேசியக் கொடி; சிவன் மலை நந்தி ஆகியவற்றுடன் நித்தியானந்தா
தேசிய நிலப்பரப்பு ; இல்லை
தேசிய தகுதி; தில்லுமுல்லு
நித்தியானந்தாவின் சொத்து மதிப்பு சுமார் 10,000 கோடி
Leave a Reply