வருத்தப்பட்டனர் மக்கள்- திருத்தப்பட்டது தேர்தல் அறிக்கை!

-சாவித்திரி கண்ணன்

திமுக தேர்தல் அறிக்கை குறித்த நல்லவை, தவிர்த்திருக்க வேண்டியவை, விடுபட்டவை, ஆபத்தானவை ஆகிய அனைத்தையும் அலசி ஆராய்ந்து நேற்று அறம் இணைய இதழில் எழுதி  இருந்தோம். அது பெரிய அளவு வைரலானது. பத்திரிகையுலக நண்பர்கள் பலரும் தொடர்பு கொண்டு நல்ல விஷயங்களை கவனப்படுத்தி உள்ளீர்கள். இதை திமுக தலைமையின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். நிச்சயம் விடுபட்ட ஒரு சில அம்சங்கள் சேர்க்க வாய்ப்புள்ளது என்றனர். இதையடுத்து வேறு சில திமுக நண்பர்களும் தோழமை உணர்வுடன் பேசினர். நாம் சுட்டிக்காட்டியது போலவே எட்டுவழிச் சாலை போராட்ட அமைப்புகளும், இஸ்லாமிய அமைப்புகளும், மீனவ அமைப்புகளும் திமுக தலைமையின் கவனத்திற்கு விடுபட்ட அம்சங்களை கவனப்படுத்தி இணைக்க வேண்டியுள்ளனர்.

பாஜகவின் பாதிப்புகளுடைய திமுகவின் தேர்தல் அறிக்கை

இதைத் தொடர்ந்து இதில் ஈகோ பார்க்காமல் திமுக தேர்தல் அறிக்கையில் கூடுதலாக ஐந்து அம்சங்கள் சேர்க்கப் பெற்றுள்ளன. திமுகவின் இந்த ஜனநாயகப் பண்பை வரவேற்கிறோம். புதிதாக சேர்க்கப்பட்ட அந்த ஐந்து வாக்குறுதிகளாவன;

  1. விவசாயிகளுக்கு எதிரான சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்பட மாட்டாது.
    2. அதானியின் காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது.
    3. இந்திய குடியுரிமை திருத்த சட்டம் 2019-ஐ திரும்பப் பெற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
    4. இந்திய முகாம்களில் தங்கி இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு, இந்திய குடியுரிமை வழங்கிட வலியுறுத்தப்படும்.
    5. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை 2020 நிராகரிக்கப்படும்.

மகிழ்ச்சி. ஆனபோதிலும், இவை போதுமானவையல்ல. மேலும் இதை சொன்னபடி திமுக தொடர்ந்து உறுதி காட்டுகிறதா…? என எங்களைப் போன்ற ஊடகத் துறையினர் கண்காணிப்போம்.

காட்டுப்பள்ளியில் விரிவாக்கப்பட்டு வரும் அதானியின் துறைமுகத்திட்டத்தால் மீனவ கிராமங்களை இல்லாமலாக்கும் நிலைமை தோன்றியுள்ளதும், அதைத் தொடர்ந்து தமிழக மீனவ சமுகமே போர்க்கோலம் பூண்டுள்ளதையும் அலட்சியப்படுத்தமுடியாது.

இது ஒரு புறமிருக்க தமிழகத்தை சீரழிக்கும் மது உற்பத்தியும், விற்பனையும் கட்டுப்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை திமுக தரவில்லை.

மேலும் எதிர்க்கப்பட வேண்டிய மத்திய அரசின் பல மக்கள் விரோத சட்டங்கள்,திட்டங்கள் விவகாரத்தில் வேண்டாம் என உறுதியான நிலைபாடு எடுத்து அறிவிக்காமல் ‘’வலியுறுத்தப்படும்’’, ‘’தொடர்ந்து வலியுறுத்தப்படும்…’’ என்ற மேம்போக்கான வாக்குறுதிகள் சுமார் 45 க்கு மேற்பட்ட விவகாரங்களில் சொல்லப்பட்டுள்ளன என்பதையும் கவனப்படுத்தி வைக்கிறோம்.

முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும்,ஆவண செய்யப்படும் எனவும் சுமார் 30 க்கு மேற்பட்ட இடங்களில் சொல்லப்பட்டுள்ளதை நோக்கும் போது, மேற்படி விஷயத்தையும் நாங்கள் சுட்டிக் காட்டிவிட்டோம் என்ற அளவிலே திருப்திபட்டுக் கொள்கிறார்களோ என்று சந்தேகம்வருகிறது.

அடுத்த முறையாவது திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் போது ‘’நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்ற ஒரு பொத்தாம்பொதுவான ஜால்ஜாப்பு வார்த்தையை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்பது என் தாழ்மையான விண்ணப்பமாகும். ஏனெனில்,சுமார் 200 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் இந்த வார்த்தை வந்துள்ளது. நடவடிக்கை எடுக்கப்படும் என்பது எப்படி வாக்குறுதியாகும்? ‘’இது தவறு, ஆகவே தவிர்க்கப்படும். மாற்றாக இது நிறைவேற்றப்படும்’’ என திட்டவட்டமாகச் சொல்லுங்கள். சொல்லப்படும் வாக்குறுதியில் நம்பகத்தன்மை இருக்க வேண்டாமா?

ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது திமுக தலைமை தேர்தல் அறிக்கை வீரியம் குறைந்ததாகவும், வேகம் மட்டுப்பட்டதாகவும் உள்ளது. 81 வயதான டி.ஆர்.பாலு போன்ற முதியவர் தலைமையில் வேறு எப்படியான அறிக்கையை எதிர்பார்க்க முடியும்?

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time