அதிமுகவின் அடேங்கப்பா தேர்தல் அறிக்கை…!

-சாவித்திரி கண்ணன்

எப்படியாவது வெற்றி பெற்றால் போதும் பிறகு பார்த்துக்கலாம் என்ற தவிப்பு ஒவ்வொரு இலவச அறிவிப்பிலும் பிரதிபலிக்கிறது. தேர்தல் தோல்வி  பயத்தின் உச்சம் அதிமுக தேர்தல் அறிக்கையில் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது!

தமிழக அரசின் வருமானத்திற்கும் அதிகமான செலவாகக் கூடிய இலவசங்களை அறிவித்த ஒரே கட்சி என்ற சிறப்பு வரலாற்றில் அதிமுகவிற்கு நிலைக்கும்! உலகின் மிகப் பெரிய கடனாளி நாடாக தமிழகத்தை மாற்றி காட்டுகிறோம் என்பதை உங்கள் அறிக்கை சொல்லாமல் சொல்கிறதே..!

அதிமுக தேர்தல் அறிக்கை குறித்த ஒரு அசத்தலான அலசல்;

அப்பப்பா அடுக்க முடியவில்லை! முக்கியமானவற்றை மட்டும் பட்டியல் இடுகிறேன்!

# சொந்த வீடில்லாத அனைவருக்கும் இலவச வீடு.

# ஒவ்வொரு குடும்பத்திற்கும் வாஷிங் மெஷின்.

# இலவச சூரிய மின்சக்தி அடுப்பு.

# மாதம் தோறும் ரூ 1,500 பெண்களுக்கு ரேசன் அட்டைக்கு தரப்படும்.

# ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் இலவசமாக தரப்படும்.

# வீட்டிற்கு இரண்டு கொசு வலைகள் இலவசம்.

# விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ7,500.

# மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியும் இலவசம்.

# 200 மில்லி பால் தினசரி மாணவர்களுக்கு தரப்படும்.

# மாணவர்களுக்கு 2கி.பி.டேட்டா இலவசம்.

# பெண்களுக்கு நகர பஸ்ஸில் 50% கட்டணம் தள்ளுபடி.

# பால் விலை ரூ 2 குறைக்கப்படும்.

# கல்விக் கடன்கள் தள்ளுபடி.

# அரசு கேபிள் இணைப்பு இலவசம்.

# அம்மா பசுமை வீடு கட்ட ரூ3,40,000 மானியம்(ஓசி)

# ஆட்டோ வாங்க ரூ 25,000.

# கிராம பூஜாரிகளுக்கு ஓய்வூதியம் அதிகரிக்கப்படும்.

# எல்லா மதங்களின் ஆன்மீக சுற்றுலாவிற்கும் ஓசியாக சென்று வர பணம் தரப்படும்.

இன்னும் நிறைய இருக்கு..சொல்ல முடியல மன்னிச்சுடுங்க.

இவ்வளவு இலவசம் தருகிறீங்க சரி, ஆனால் ஜனங்க எதிர்பார்க்கும் பணமே இல்லாத ஒன்றை உங்களால் தரமுடியும் என்று சொல்ல முடியவில்லையே..! அது தான் நேர்மையான ஆட்சி நிர்வாகம்! அதை உங்களால் தரமுடியும் என்பதை நீங்கள் உங்கள் கடந்த கால ஆட்சியின் மூலம் நிரூபித்து இருந்தீர்கள் என்றால், போதும்.., வேறு எந்த இலவச அறிவிப்புகளுக்குமே அவசியம் இருந்திருக்காது.

இப்பவே தமிழகத்தை ஐந்தரை லட்சம் கோடி கடனில் தள்ளியது போதாது என்று இன்னும் மீளவே முடியாத கடனில் தள்ளக் கூடிய ஒரு ஆட்சியைத் தான் அதிமுக வெற்றி பெற்றால் தரமுடியும்! ஆக, தமிழகத்தை அப்படியொரு ஆபத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்றால், அதிமுகவிற்கு ஓட்டுப் போடுவதை தவிர்ப்பது தான் ஒரே வழியாகும்!

போன தேர்தலில் வீட்டுக்கு ஒரு செல்போன் தரப்படும் என்று சொன்னதாக ஞாபகம். பால் விலை குறைப்பதாக கூறியதும் நினைவில் உள்ளது. அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷனை தர்ய்வோம் என்றும் சொல்லி இருந்தீர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக மதுக் கடைகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு ஐந்தாண்டுகளில் மூடப்பட்டுவிடும் என்றும் சொன்னீர்கள். அதெல்லாவற்றையும் எப்படி அம்போவென்று விட்டீர்களோ..அந்த நிலைமை தான் இந்த அறிவிப்புகளுக்கும் நடக்கும்.

சட்டியில் இருந்தால் தானே தட்டில் போட முடியும்? ஏற்கனவே கஜானாவை துடைத்து வைத்துவிட்டீர்களே..! அப்படியும் உங்களுக்கு இப்படி அறிவிக்க முடிகிறது என்றால் எவ்வளவு பொறுப்பின்மை அல்லது பித்தலாட்டம் கொண்டவர்கள் நீங்கள்!

இவ்வளவு தான் வெளி நாடுகளில் இருந்து கடன் பெற முடியும் என்று ஒரு அளவு உள்ளது. அதற்கு மேல் உங்களால் வாங்க முடியாது. இதை ஆளும் பாஜக அரசாலும் மீற முடியாது. நீங்க இது வரை ரேசனில் தந்து கொண்டிருக்கும் ஓசி அரிசிக்கே உலை வைக்க துடித்துக் கொண்டுள்ளது பாஜக அரசு!

இந்த தேர்தல் அறிவிப்பில் எனக்கு பிடித்த ஒரு அறிவிப்பு எல்லா நீர் நிலைகளின் கரைகளிலும், புறம்போக்கு நிலங்களிலும்  பனைமரங்கள் வளர்க்கப்படும் என்ற அறிவிப்பு தான். அதே சமயம் அந்த பனை மரப்பயன்களை மக்கள் பெறமுடியாதபடி சட்டங்கள் போட்டு வைத்துள்ளீர்களே…!

மற்றபடி கொள்கை சார்ந்த அறிவிப்புகள் அது இல்லை, இது இல்லை என நான் பட்டியல் போடப் போவதில்லை

ஏனென்றால், உங்கள் ஒரே கொள்கை பாஜக அரசு சொல்வதை அமல்படுத்துவது ஒன்றே என்பதை தமிழக மக்கள் அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளனர்.  உங்கள் அடிமை மனோபாவத்தை மாற்றிக் கொண்டு ஆண்மையுடன் ஒரு நிர்வாகத்தை தருவோம் என்ற ஒற்றை வார்த்தை உங்களால் சொல்ல முடிந்திருந்தால் போதும், தமிழக மக்கள் உங்கள் அறிவிப்புகளை கொஞ்சமாவது பொருட்படுத்தி இருப்பார்கள்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்.

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time