அரசு வங்கிகளை அழித்தால் மக்கள் பணத்திற்கு பாதுகாப்பில்லை!

- மாயோன்

இந்தியாவில் ஏழு தனியார் வங்கிகளும்,ஏகப்பட்ட வெளி நாட்டு வங்கிகளும் அனுமதிக்கப்பட்டும் கூட, பொதுதுறை வங்கிகள் மக்கள் செல்வாக்கோடு திகழ்கின்றன. இதை விரும்பாத மத்திய அரசு பொதுதுறை வங்கிகளை ஒன்றோடு ஒன்று இணைத்தல்,ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்தல்,சேவைகளுக்கு தடை ஏற்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் அரசு வங்கிகளை செல்வாக்கிழக்க வைத்து, தனியார் வங்கிகளை மக்களிடம் திணிக்க முயற்சிக்கிறது. இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன..? 10 லட்சம் பேர் பங்கேற்றுள்ள வங்கி ஊழியர்கள் போராட்டம் ஏன் ?

இன்றும் நாளையும்( மார்ச் 15,16)  10 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள் .நாடு தழுவிய இப்போராட்டத்தின் நோக்கம் குறித்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் (தமிழ்நாடு) அகில இந்திய செயலாளர் .கிருட்டினன் நம்மிடம்  விளக்கினார். இப்போராட்டம் தொடர்பாக ” அறம்” இணையதள இதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:

“கடந்த ஆண்டு இதே மார்ச் மாத கடைசியில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நோய்த்தொற்று இன்னும் முழுமையாக  அகல வில்லை என்பதால் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்னும் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படவில்லை.

உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வங்கி உள்பட அனைத்து நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன . முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள பொதுமக்களும் தொடர்ந்து அறிவுறுத்தப் படுகிறார்கள் .

இந்த நோய்த்தொற்று மற்றும் ஊரடங்கு ,நாட்டு மக்களுக்கு பொருளாதார ரீதியாக மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ,கீழ்த் தட்டு மற்றும்  நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அதானி, அம்பானி போன்ற பெருநிறுவனமுதலாளிகளின்  சொத்து மதிப்பு இதே காலகட்டத்தில் இரண்டு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த முரண்பட்ட நிலையை ஆய்வு செய்யவேண்டிய அவசியம் இந்த நாட்டு மக்களுக்கு உள்ளது. இந்த முரண்பாட்டுக்கு காரணமான சட்ட- திட்டங்கள் மத்திய அரசின் செயல்பாடுகளை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

வங்கித் துறையை சீர் செய்யப் போகிறோம் என்கிற பெயரில் மத்திய அரசு கடந்த சில வருடங்களாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் நாட்டை அபாய நிலைக்கு இட்டுச்செல்லக் கூடியதாக உள்ளன.

பொருளாதார சீர்திருத்தம் என்கிற பெயரில் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதில்தான் அரசு  மும்முரமாக உள்ளது.

தனியார்மயம் எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை நாட்டு மக்களுக்கு சுட்டிக்காட்டுவதுதான் எங்கள் போராட்டத்தின் முதன்மையான நோக்கம்.

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட்டுவிட்டு அங்கு ஏற்படும் பிரச்சினைக்கான உண்மையான காரணங்களை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யக் கோரி வருகிறோம்.

வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட  1969- ம் ஆண்டுக்குப்  பிறகு வங்கித் துறையில் ஏற்பட்ட மகத்தான மாற்றத்தை நாடறியும். அதுவரை ஒரு சில தனியார் வங்கிகளால் ஏற்பட்டு வந்த  பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு ,வங்கி என்பது நம்பிக்கையின் அடையாளமாக மாறியது.

கடைக்கோடி தொழிலாளிகள் தொடங்கி செல்வந்தர்கள் வரை தங்களுடைய சேமிப்பு பணத்தை வங்கியில் பாதுகாப்பாக வைக்கத் தொடங்கினர்‌.

இதன் விளைவாக வங்கியில் முதலீடுகள் குவிந்தன.சாமானிய மக்கள், விவசாயிகள் மாணவர்கள், பெண்கள் …என்று சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்கும்   அவரவருடைய தேவைக்கேற்ப கடனுதவியை வங்கிகளால் வழங்க  முடிந்தது.

சிறு ,குறு வணிக நிறுவனங்களும் பெரிய நிறுவனங்களும் வங்கிகளுடன் கைகோர்த்து வளர்ந்தன.

கடந்த 2008 -ஆம் ஆண்டு உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார சரிவால் வளர்ச்சி அடைந்த நாடுகள்கூட  ஆட்டம் கண்டன. அப்போது நம் நாடு  தாக்குப்பிடித்து நின்றதற்கு காரணம்  நாட்டின் வலுவான முதுகெலும்பாகத் திகழ்ந்த  பொதுத்துறை வங்கிகளும் பொதுத்துறை நிறுவனங்களுமே ஆகும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஊடாடிக் கொண்டிருக்கும் சமூக நீதிதான் நம் நாட்டின் காலம் காலமாக  மடைமாற்றமாகி வந்துகொண்டிருக்கும் சமுதாய ஏற்றத்தாழ்வுகளை சீர்செய்ய வல்ல அருமருந்தாகும். இத்தகைய  சமூக நீதியை நிர்மூலமாக்கும் உள் நோக்கம்  கொண்ட- தேச விரோத திட்டம் தான் தனியார்மயமாக்கல் என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உழைக்கும் ஏழை, எளிய, விவசாய தொழிலாளர்கள், பாட்டாளி மக்களுக்கு பொதுத்துறை வங்கிகளால் மட்டுமே உதவ முடியும்  என்பதற்கு ஜன்தன் வங்கி கணக்கு தொடக்கம்  சிறந்த சான்று .அரசின் நலத்திட்டங்கள், உதவிகள் மக்களுக்கு சிந்தாமல் சிதறாமல் சென்று சேர்வதற்காக  தொடங்கப்பட்ட  இந்த கணக்குகளில் 97% பொதுத்துறை வங்கிகளில் தான் உள்ளது.

இவற்றின் எண்ணிக்கை 42 கோடி  ஆகும்.

பாட்டாளி ஏழை,  மக்கள் ஏற்றம் காண வேண்டும், அதன் மூலம்தான் நாடு உயர்நிலையை அடையும் என்ற சிந்தனை  தனியார் வங்கிகளுக்கு இருக்க வாய்ப்பே இல்லை . அவர்கள்  லாபத்தில் மட்டுமே குறியாக இருப்பார்கள். அப்படிப் பட்டவர்களால் ஏழை எளிய மக்களுக்கு சேவையும் வேலை வாய்ப்பும் எப்படி கிடைக்கும்.?

பெருமுதலாளிகள் சிலர் ஏமாற்றியதன் விளைவாக தனியார் வங்கிகள் பல திவால் நிலைக்கு சென்று ,அந்த வங்கிகளில் ஏழை எளிய மக்களின் சேமிப்புப் பணம் இருப்பதை  கருத்திற்கொண்டு, அப்படிப்பட்ட 38 தனியார் வங்கிகளையும் பொதுத்துறை வங்கிகள்  பாதுகாத்ததை நாடு அறியும்.

சமூக வளர்ச்சிக்கு  உதவ  தனியார் வங்கிகள் எந்த அளவு பங்களிப்பு செய்து உள்ளன என்ற புள்ளி விவரங்களை ஆராய்ந்து பார்த்தாலே, இவற்றின்  வளர்ச்சியில் நாட்டுக்கு எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் என்பதை  நாட்டு மக்களால் புரிந்து கொள்ள முடியும்.

பொதுத்துறை வங்கிகள் சந்திக்கும் வாராக்கடன் பிரச்சினையை மத்திய அரசு கடுமையான சட்ட திட்டங்கள் மூலமாகவும், உரிய அணுகுமுறை மூலமாகவும் சீர் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம் .இந்த வகையில் உள்ள 9 லட்சம்  கோடி வாராக் கடனை வசூலிக்க உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கவில்லை .இனியாவது இது தொடர்பான நடவடிக்கைகளை உரிய வகையில் செய்திடல் வேண்டும்.

சிறிய வங்கிகளை பெரிய வங்கிகளோடு  இணைப்பதும் தனியார் மயமாக்குவதன் மூலமாகவும் இதுபோன்ற பிரச்சினையை சரி செய்ய முடியாது.

பத்து வங்கிகள் இருந்த இடத்தில் நான்கு வங்கிகள் இருப்பது மக்களுக்கு எப்படி பலன் தரும் ? போதுமான பணியாட்களை புதிதாக நியமிக்காமல் இப்படிச்  செய்வது  வங்கிப் பணிகளை  முடக்கம் செய்வதோடு,  எதிர் மறைவான விளைவையே ஏற்படுத்தும்.

ஏழை எளிய மாணவர்களுக்கு ஒரு பக்கம் கல்விக்கடன் வழங்கிக் கொண்டும் படித்து முடித்து தொழில் தொடங்கிய இளைஞர்களுக்கு முதலீட்டுக்கான கடனுதவியை செய்துகொண்டும் அடித்தட்டில் வசிக்கும் சிறு வணிகர்களுக்கு உதவிக்கொண்டும்.. இப்படி சமூகத்திற்கான  பணிகளை செய்து கொண்டே அதிக லாபத்தை பொதுத்துறை வங்கிகள்  ஈட்டி  வருகின்றன .

இப்படிப்பட்ட பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சிப்பதை தேச விரோத செயல் என்று சொல்லாமல் எந்த வார்த்தையை பயன்படுத்துவது.!

மத்திய அரசின் இத்தகைய செயல்பாட்டைக் கண்டித்து தான் இன்று  நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர் சங்கங்கள் ஒரு குடையின் கீழ் திரண்டு இப்போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றன.

பொதுத்துறை வங்கிகளின் அனைத்துப் பிரிவு ஊழியர்கள், பாரம்பரிய பின்னணி கொண்ட தனியார் வங்கிகளின் ஊழியர்கள், மற்றும் வட்டார ஊரக வங்கிகளில் பணிபுரியும் ஊழியர் ஊழியர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

இந்தப் போராட்டம் குறித்து முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவித்து உள்ளோம். இதனால் ஏற்படும் சிரமங்களை நாட்டின் எதிர்காலம் கருதி பொறுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறோம்.

” வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை  எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்.”( குறள்-435)

பொருள் :

தீங்கு நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கை நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல அழிந்துவிடும்.!

தனியார்மயம்  சமூகநீதிக்கு மட்டுமல்ல, ஏழை -எளிய ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கிடைத்துவரும் வேலைவாய்ப்பையும் நீர்த்துப்போகச் செய்துவிடும். இந்த மகா தீங்கை- தேசவிரோத அணுகுமுறையை உள்ளேவரும் முன்பே தடுத்து அதை அகற்றி நாட்டைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய  கடமையை நாட்டுமக்கள்  செய்தாக வேண்டும்.

தேச விரோத பாதையில் தன்னிச்சையாகப் பயணித்துக் கொண்டிருக்கும் பாஜக அரசுக்கு  இப்போராட்ட வெற்றியின் வாயிலாகவும் வருகிற நான்கு  மாநில தேர்தல் முடிவு  வாயிலாகவும்  தக்க பாடத்தைப் புகட்டுவார்கள்” என்று நம்புவதாக க.கிருட்டிணன் தெரிவித்தார். வார்த்தைக்கு வார்த்தை சுதேசி பற்றியே பேசி  ஆட்சிக்கு வந்தது பாரதீய ஜனதா கட்சி. மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, ஏற்கனவே இருந்த காங்கிரஸ் அரசை விட தனியார்மயத்தை புகுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது.

இத்தகைய  செயல்பாடு அண்மைக்காலமாக மிகத் தீவிரமாக உள்ளது . பொதுத்துறை வங்கிகளையும் ,பொதுத் துறை இன்சூரன்ஸ் நிறுவனத்தையும் தனியார்மயமாக்கும் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன .அதோடு இந்தியாவின் மாபெரும் மக்கள் நிறுவனமான எல். ஐ சி. யின்  ஒரு பகுதி பங்குகளை தனியாருக்கு விற்கும் நடவடிக்கையிலும்  மத்திய பாஜக  அரசு தீவிரமாக உள்ளது.

மத்திய அரசின் தனியார்மய ஆதரவு போக்குக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர் சங்கங்கள், பொதுத்துறை இன்சூரன்ஸ் ஊழியர் சங்கங்கள் ,எல்ஐசி ஊழியர் சங்கங்கள் அணி திரண்டுள்ளன.

இந்த அமைப்புகளின் ஒருமித்த முடிவுபடி வங்கி ஊழியர் சங்கங்களின் போராட்டம் தற்போது நடைபெற்றுக் கொண்டுள்ளது.

பொதுத்துறை இன்ஷூரன்ஸ் ஊழியர்களின் போராட்டம் வருகிற 17-ஆம் தேதியும்  எல்ஐசி ஊழியர் சங்கங்களின் வேலை நிறுத்தம் வருகிற 18-ஆம் தேதியும் நடைபெறுகிறது.

நாட்டின் முதுகெலும்பாகத் திகழும்  பொதுத்துறை வங்கி மற்றும்   இன்சூரன்ஸ் நிறுவனங்களில்  பணிபுரியும் தொழிலாளர்களின்  வாழ்வாதார சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டும் அல்ல இது. நாட்டின் எதிர்காலம்  தொடர்புடையது, தனியார்மயம் என்ற அபாயகர பாதையில் இருந்து நாட்டைக் காப்பாற்றியாக வேண்டிய  காலகட்டம் இது.

எனவே, ஒட்டுமொத்த நாட்டு மக்களும் பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டு, இந்த நான்கு நாட்கள் போராட்டத்தினால் ஏற்படும் சிரமங்களை பொறுத்து இப்போராட்டம் வெற்றி பெற உறுதுணையாக இருக்கவேண்டும் என்று  நாட்டு மக்களுக்கு இந்த  சங்கங்களின் தலைவர்கள் அனைவரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time