அமமுக – தேமுதிக! பலன் யாருக்கு? பாதிப்பு யாருக்கு?

-சாவித்திரி கண்ணன்

அதிமுக கூட்டணிக்குள் நுழைய முடியாத – கைவிடப்பட்ட இரு கட்சிகள் – கை கோர்த்துள்ளன!

இருவருக்கும் உள்ள ஒற்றுமை இருவருமே அதிமுகவால் பாதிக்கப்பட்டவர்கள். அந்த வகையில் அதிமுகவை எதிரியாக கருதுபவர்கள்! எனவே, எதிரிக்கு எதிரி நண்பன் என கை கோர்த்துள்ளனர்! மற்றபடி இரு தரப்புக்கும் இடையே இணக்கமோ, புரிதலோ, நட்போ முன் எப்போதும் இருந்ததில்லை.

இந்த வகையில் தன் நட்பு சக்தி யார்? எதிரி யார் என்ற தெளிவில்லாத கட்சியாகவே இன்னும் தேமுதிக உழன்று கொண்டுள்ளது என்பது நிருபணமாகிறது.

இரு கட்சித் தலைவர்களும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளாமல் இந்தக் கூட்டணி சாத்தியப்பட்டுள்ளது! பிரேமலதாவை சந்திப்பதில் தினகரனுக்கு ஈகோ இருந்திருக்க வாய்ப்புள்ளது. அதிமுக அமைச்சர்களைப் போல வீடு தேடிச் சென்று பேசினால், நாளை மேடையில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் இப்படியும் பேசலாம்; ‘’எங்கள் வீடு வந்து கெஞ்சி கூட்டணிக்கு கூப்பிட்டவர் தானே தினகரன்’’ என அந்தப் பொடிப் பயல் சொல்லக் கூடிய நிலையை தவிர்க்கலாம் என தினகரன் யோசித்திருப்பார். ஆகவே, கடைசி வரை அவர்களுக்கு ஒரு முக்கியத்துவம் கொடுத்த மாதிரியாகிவிடக் கூடாது என சந்திப்பையே தவிர்த்துவிட்டார். கூட்டணி ஒப்பந்த பரிமாற்றம் கூட இரண்டாம் கட்டத் தலைவர்கள் மட்டத்திலேயே நடந்து முடிந்துவிட்டது…! இந்த வகையில் தேமுதிகவை எப்படி டிரீட் பண்ண வேண்டும் என்பதற்கு அவர் ஒரு முன்னுதாரணம் காட்டிவிட்டார் என்று கூடச் சொல்வேன்.

 

தேமுதிக தனக்கு பத்து சதவிகித வாக்கு வங்கி இப்போதும் உள்ளதாகக் கூறிய கட்சி. ஆனால்,அந்த கட்சி நான்கரை சதவிகித வாக்கு வங்கி கொண்ட அமமுகவின் தலைமையை ஏற்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டது ஒரு பலவீனம். அத்துடன் தினகரனை முதல்வராக்க உழைப்போம் என பேச நேர்ந்தது அந்தோ பரிதாபம்!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்பதும், மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி என்பதும் தினகரனின் நோக்கம். தேமுதிக என்ற 10% வாக்கு வங்கியை கொண்டிருந்த கட்சியை பலவீனப்படுத்தியவரும், பல வழக்குகளைப் போட்டு அலை கழித்தவருமான ஜெயலலிதாவின் பெயரிலான கட்சியிடமே தேமுதிக தஞ்சமடைந்துள்ளது. பொதுவாக அமமுகவின் பலம் என்பது முக்குலத்தோர் சமூகமே. அதனால் அவர்கள் தனித் தொகுதிகளுக்கு நிற்பதற்கு ஆள் தேடிப் பிடித்து நிற்கவைத்த கட்சியாகும். அது போல வட தமிழகத்தில் வன்னியர்கள் மிகுந்துள்ள பகுதிகளில் அதற்கு சுத்தமாக செல்வாக்கில்லை. ஆகவே தேமுதிக வந்ததும் தனித் தொகுதிகள் இருபத்தி மூன்றையும், வட தமிழகத்தின் பெரும்பாலான தொகுதிகளையும் தேமுதிகவின் தலையில் கட்டி தப்பித்துக் கொண்டது.

விஜயகாந்த் மதுரை மண்ணுக்கானவர். தென் தமிழகத்தில் தான் அவரது நாயுடு சமூக வாக்குவங்கியும் உள்ளது. ஆனால், தேமுதிகவிற்கு தென் தமிழகத்தில் 12 தொகுதிகளை மட்டுமே தினகரன் தந்துள்ளார். கோவில்பட்டியில் தேமுதிகவின் வாக்கு வங்கியை நம்பித் தான் தினகரன் களம் காண்கிறார் என்றால், அது மிகையில்லை.

தேர்தல் முடியும் வரை பெரிய அளவு ஓட்டும், உறவும் இந்த இரு கட்சி தொண்டர்களிடையே ஏற்பட வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. இன்றைக்கு அதிமுகவை ஆட்டுவிப்பதும், சசிகலாவை ஜெயிலுக்கு அனுப்பியதுமான பாஜகவை எதிரியாக நினைக்கும் மனநிலை கொண்டவர் தினகரன். பாஜகவை மிகப் பெரிய நேச சக்தியாக இன்றளவும் நினைக்கும் கட்சி தேமுதிக. ஆகவே பாஜகவும், பாஜகவும் நேருக்கு நேராக மோதும் இடங்களில் தேமுதிகவினர் எந்த அளவுக்கு அமமுகவிற்கு ஒத்துழைப்பார்கள் என்பது சந்தேகம் தான்!

தேமுதிக ஏன் மக்கள் மையத்துடன் கூட்டணி காணமுடியவில்லை என்பதற்கு கமலஹாசன் தேமுதிகவிடம், ’’எவ்வளவு தருவீர்கள்’’ எனக் கேட்டதாக பரவலாக பேசப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை. இன்றைய நிலையில் தேமுதிக கொடுக்க முடிந்த கட்சியல்ல, வாங்கும் நிலையில் உள்ள கட்சியே. ஆகவே, அந்த வகையில் தரக் கூடிய நிலையில் உள்ள தினகரனை அவர்கள் நாடியிருக்கவும் வாய்ப்புள்ளது.

தேர்தலில் வெற்றி, தோல்வி அடுத்த விஷயம். ஆனால், அதில் எந்த அளவுக்கு மக்கள் நம்பிக்கையை பெறுகிறோம் என்பதே முக்கியமாகும். கமலஹாசன் தேர்தல் என்ற தளத்தையே பணம் வசூலிப்பதற்கான களமாகக் காண்கிறாரோ என எண்ண வேண்டியுள்ளது. பச்சைமுத்து கட்சி நல்ல பணபலம் உள்ள கட்சி அவர்களை அதற்காகவே சேர்த்திருப்பார் என நம்ப இடமிருக்கிறது. ஆனால், தேமுதிகவை பொருளாதார காரணத்திற்காக இழந்திருக்கக் கூடாது. ஏனெனில், கமல் கட்சிக்கு கிராமங்களில் சுத்தமாக செல்வாக்கு கிடையாது. படித்த நடுத்தர மற்றும் உயர் வர்க்கத்தாரின் வாக்குகள் மட்டுமே உள்ள கட்சியே மக்கள் நீதி மையம். தொண்டர்கள் பலமும் குறைவு. இந்த இழப்புகளை சரி செய்ய தேமுதிக, ஒரளவு கமல் கட்சிக்கு உதவியிருக்க முடியும். ஏனெனில், விஜயகாந்தின் ரசிகர்கள் கிராமத்து அடித்தள மக்களே! அந்த வகையில் தினகரன் கூட்டணியில் தேமுதிகவின் வரவு சில தொகுதிகளிலாவது அதிமுகவின் தோல்விக்கு வழிவகுக்கும். அது தினகரன் எதிர்காலத்தில் அதிமுகவை அடிபணிய வைப்பதற்கும் கூட தோதாகலாம்.

ஆனால், அமமுகவினால் தேமுதிகவிற்கு தேர்தலில் எந்தப் பயனுமில்லை. எந்த ஒரு தொகுதியிலும் தேமுதிக வெற்றி பெறப் போவதுமில்லை. இதை தேமுதிக உணர்ந்ததால் தான் விஜயகாந்த்,சுதீஸ்,விஜய பிரபாகரன் ஆகிய மூன்று குடும்ப உறுப்பினர்களும் ஜகா வாங்கிவிட்டனர்.அதிமுகவுடன் கூட்டணி கண்டால் சுதீசும்,விஜய பிரபாகரனும் கண்டிபாக களம் கண்டிருப்பார்கள். 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்போம் என்று பிரேமலதா சொன்ன போது, ஐயோ நம்மை நிற்கச் சொல்வாரோ என பயந்த தேமுதிக நிர்வாகிகளுக்கு தற்போது ஒரளவு நிம்மதி பிறந்திருக்கும்.

எப்படிப் பார்த்தாலும், தனக்கு முற்றிலும் செல்வாக்கிலாத பெரும்பாலான தொகுதிகளை தேமுதிகவின் தலையில் கட்டுவதற்கும் மற்ற 166 தொகுதிகளில் தேமுதிகவின் வாக்குவங்கியால் கணிசமான வாக்குகளை அறுவடை செய்வதற்கும் தேமுதிக உதவக் கூடும். வாக்கு ரீதியாக அமமுகவால் தேமுதிகவிற்கு பெரிய பலன்கள் கிடைக்காவிட்டாலும் பொருளாதார ரீதியாக இந்த கூட்டணி அவர்களுக்கு பெரிதும் உதவி இருக்கலாம். ஆனால், தங்கள் வாக்கு சதவிகிதத்தில் இன்னும் சற்று சரிவையே இந்த தேர்தலில் தேமுதிக சந்திக்கும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time