அரசியலை தொழிலாக கொள்வது அசிங்கமா…கமல் ?

-சாவித்திரி கண்ணன்

‘அப்பப்பா..என்ன மாதிரி புனிதமானவருய்யா கமல்…’ அப்படின்னு நாம் புளகாங்கிதமடைவோம்னு அவர் நினைக்கிறாரு போல!

”அரசியல் எனக்கு தொழில் இல்லை. என் தொழில் சினிமா. நான் வெற்றி பெற்றாலும் நடிக்கச் செல்வேன்.அந்த சம்பாத்தியத்தில் வாழ்வேன்’’ என்கிறார் கமல். இதன் மூலம் அரசியலை தொழிலாக எடுத்துக் கொண்டு இயங்க முடியாத அவரது மனநிலை நமக்கு நன்றாகவே தெரிய வருகிறது!

முதலாவதாக அரசியலைத் தொழிலாகக் கொள்வதை இழிவாக கருதும் மனநிலையில் இருந்து அவர் விடுபட வேண்டும்! முதலில் தனக்குத் தானே சூட்டிக் கொண்ட புனித பிம்பத்தில் இருந்து கமலஹாசன் விடுபட்டு, யதார்த்தங்களை உணர முன்வர வேண்டும்.

‘எனக்குத் தொழில் கவிதை’ என்றானே பாரதி!

எது ஒன்றை நாம் நம் வாழ்வியல் ஆதாரமாகக் கொள்கிறோமோ…, அதுவே தொழிலாகும். எந்த ஒன்றால், இந்த சமூகத்தை பயனுறச் செய்து, அதற்கு பிரதிபலனாக இந்த சமூகம் நம்மை வாழ்விக்கிறதோ.., அதுவே தொழில்.

காமராஜரும், அண்ணாவும் அரசியலைத் தொழிலாகக் கொண்டவர்கள் தான்!

நீங்கள் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கி அதன் தலைவராகிவிட்ட பிறகு, அரசியலை உங்கள் தொழிலாக ஏற்க மறுப்பது மட்டுமின்றி, ”வெற்றி பெற்றாலும், நான் சினிமாவில் நடிக்கச் செல்வேன். ஏனென்றால், சினிமா தான் என் தொழில். அரசியல் எனக்கு கடமை, தொழிலல்ல,’’ என்று வார்த்தை ஜாலம் செய்கிறீர்கள்! எவர் ஒருவருக்கும் தொழிலே முதல் கடமையாகும்! அந்த வகையில் சினிமாவைத் தான் முதல் பிரியாரிட்டியாக நீங்கள் கருதுவதாகத் தெரிகிறது.

ஒருவர் எம்.எல்.ஏ வாக ஆகும் பட்சத்தில, சம்பந்தப்பட்ட தொகுதி மக்களுக்கு முழுமையாக தன் நேரத்தை அர்ப்பணிக்க கடமைப்பட்டவர். தினசரி காலை இரண்டு, மூன்று மணி நேரம், மாலை இரண்டு மூன்று மணி நேரம் மக்கள் தன்னை சந்திக்க நேரம் ஒதுக்கணும். மற்ற நேரத்தில் மக்கள் கவனப்படுத்திய விவகாரம் சம்பந்தமாக அரசு அலுவலர்களை, அதிகாரிகளை தொடர்பு எடுத்துப் பேசணும். தொகுதியில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளணும். அந்த தொகுதி மக்களின் நல்லது கெட்டதுகளில் தலை காட்டணும். ஆக, இது முழு நேரத் தொழில்.

சட்டமன்றம் கூடும் நாட்களில் சபைக்கு செல்ல வேண்டும். அதற்கு முன்பு தமிழக மக்களை பாதிக்கும் ஒவ்வொரு பிரச்சினைகளையும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காக தமிழகம் முழுமையிலும் உள்ள மக்கள் அமைப்புகளுடன் இடையறாது தொடர்பில் இருக்க வேண்டும். என்னைப் போன்ற பத்திரிகையாளர்கள் எழுதும் கட்டுரைகளை நிறைய வாசிக்க வேண்டும். , நீங்கள் ஒரு தொகுதிக்கு எம்.எல்.ஏ வானாலும் கூட, ஒரு கட்சித் தலைவர் என்ற வகையில் ஒட்டுமொத்த தமிழக மக்களின் குரலாக ஒலிக்க வேண்டும். இதற்காக நீங்கள் 24 மணி நேரத்தை முழுமையாக ஒதுக்கினாலும் போதாது. ஆனால், நீங்களோ..சர்வ சாதரணமாக, ’’நான் நடிக்க போய்விடுவேன். அது தான் என் தொழில்.அரசியல் என் தொழிலல்ல’’ என்கிறீர்கள்.

அதாவது, ‘நான் நேர்மையாளராக்கும். அதனால், நான் அரசியல் மூலமாக பணம் ஈட்டமாட்டேனாக்கும்’ என்பதை பெருமை பொங்க அடிக்கடி பீற்றிக் கொள்கிறீர்கள். எம்பியோ, எம்.எல்.ஏவோ மக்கள் பணி செய்வதற்காகத் தான் அவர்களுக்கு அரசாங்கம் சார்பில் வாழ்க்கை தேவைகளுக்காக சம்பளமாக பணம் தரப்படுகிறது. ஏனென்றால், சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் நேரத்தை முழுமையாக மக்களுக்கு செலவிட தரப்படும் கொடையே அது. அதுவே கிட்டதட்ட ஒரு லட்சமாகும்.

‘இதெல்லாம் எனக்கு எம்மாத்திரம்..? எனக்கு அரசியல் கட்சி நடத்த கூடுதல் பணம் தேவை’ என்று நீங்கள் கருதும் பட்சத்தில் மக்களிடமே இயக்க நிதி என்று பெறலாம். அப்படி மக்களிடம் கையேந்தி பெற்று, அதற்கு முறையாக செலவு செய்து கணக்கு காட்டலாம். இது தான் பொது வாழ்க்கைக்கு வந்தவர்கள் செயல்பட வேண்டிய  இலக்கணமாகும். பச்சைமுத்து போன்ற தவறான தொழில் அதிபர்களிடம் ரகசியமாக பணம் பெறுவதைவிட, மக்களிடம் பெற்று, மக்களுக்காக வாழ்வது தவறில்லை. இழிவில்லை. உன்னதமான வாழ்வியலே இது தான்!

‘ஐம்பது வருடங்களாக சினிமாவில் கொடிகட்டி பறந்து, பல சாதனைகள் செய்து சம்பாதித்தது போதும். இதற்கு மேல் எனக்கு தேவையில்லை’ என்ற மனநிலை உங்களுக்கு எப்போது அரசியல் கட்சி தொடங்கினீர்களோ…, அப்போதே ஏற்பட்டிருக்க வேண்டும். கடந்த மூன்றாண்டுகளில் தமிழகம் முழுக்க குறுக்கும், நெடுக்குமாக மக்களை தேடிச் சந்தித்து, பல அனுபவங்களை கிரஹித்து இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, பிக்பாஸ் என்றும், இந்தியன் இரண்டாம் பாகம் என்றும் நடிக்கச் சென்றது பொறுப்பற்ற செயலாகும். இன்னுமே அப்படித் தான் நான் இருப்பேன் என்றால், உங்களை நம்பி இயக்கத்தில் சேர்ந்தவர்கள், உங்களுக்கு ஓட்டுபோட்டவர்கள் ஆகியவர்களை விட நீங்கள் பணத்தையே பிரதானமாகக் கருதுவதாகத் தான் பொருள்!

மீண்டும் சொல்கிறேன். ”நான் அரசியலில் சம்பாதிக்கமாட்டேன். நேர்மையாளனாக்கும். அதனால் நடித்து தான் வாழ வேண்டியிருக்கிறது’’ என்று சொல்வது உங்கள் பொறுபின்மைக்கு நீங்கள் பூசிக் கொள்ளும் புனிதச் சாயமாகும்! ’’ ”முதலமைச்சருக்குரிய சம்பளப் பணம் வேண்டாம். எனக்கு ஒரு ரூபாய் சம்பளம் போதும். நான் அரசியலுக்கு தொண்டு செய்யவே வந்தேன்…’’ என்று சொன்ன ஜெயலலிதாவையெல்லாம் பார்த்தவர்கள் தான் மக்கள்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time