திருப்போரூர் கந்தசுவாமி கோயில் சொத்துக்கள் கொள்ளை போகிறதா…? உண்மை என்ன?

திருப்போரூரான்
tiruporur-kandhaswamy-kovil

சென்னைக்கருகில் உள்ள புகழ்பெற்ற திருப்போரூர் கந்தசுவாமி கோயில் சொத்துகளை அபகரிக்கும் முயற்சிகள் நடக்கின்றன! அதை தடுத்து காப்பாற்றும் முயற்சிகளும் வேகம் கொண்டுள்ளன! கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் உள்ள மெத்தனங்கள்,தனிப்பட்ட சிலரின் பேராசைகள் இவற்றுக்கிடையே அதை காப்பாற்றுவதற்கான சட்டங்கள் உருவாக்கப்பட்டதும்,அதையும் மீறி சில தவறுகள் நடப்பதையும் பாரபட்சமின்றி பேசுகிறது இந்தக் கட்டுரை!

மன்னராட்சி ஒழிக்கப்பட்ட பிறகு இந்துக்கோவில்களும், அவற்றின் சொத்துக்களும் ஒரு குறிப்பிட்ட வம்சத்தாராலும், பிரிவினராலும் பராமரிக்கப்பட்டு வந்தது. இச்சமயத்தில் கோவில் நகைகள் திருட்டுத்தனமாக வெளியில் விற்கப்பட்டன. அதேபோன்று நிலங்கள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டன. இதையடுத்து 1817ஆம் ஆண்டு அரசுப்பொருட்களை ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின்படி கோவில் சொத்துக்கள் கொண்டுவரப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டன!  மேலும், கோயிலின் வருவாய் குறித்து கண்காணிக்க வருவாய் வாரியம் என்ற அமைப்பும் உருவாக்கப்பட்டு இதன் மூலம்  வருவாய் உள்ள கோயில்கள் உள்ள ஊரில் அரசின் சார்பில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். மேலும், தற்போதுள்ள அறங்காவலர் குழுக்கள் போன்ற உள்ளூர் ஜமீன்தார்கள், நாட்டாமைகள் அடங்கிய குழுக்களும் அமைக்கப்பட்டது. ஆனால், இந்த நிர்வாகிகளும், குழு உறுப்பினர்களும் சேர்ந்து கோயில் சொத்துக்களை அத்துமீறி அனுபவித்தனர்.

பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்தபோது 1959ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் 1959 என்ற சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டம்தான் இன்று வரை கோயில் சொத்துக்களையும், நகைகளையும் பாதுகாக்க உதவி வருகிறது. இந்த சட்டத்தில் ஒரு சில ஓட்டைகளும், கொள்ளை அடிக்கும் நோக்கத்துடன் செயல்படும் அதிகாரிகளும் இருந்தாலும் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் காப்பாற்றப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சட்டம் உருவாகவில்லை எனில் தனிநபர்களிடத்தில் சிக்கி இந்த நிலங்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கும். இந்த சட்டம்தான் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் கோயில் சொத்துக்கள் பராமரிப்பு குறித்த தெளிவை உருவாக்கிய முன்னோடியான சட்டம் என்றும் கூறலாம்.

அண்மையில் வெளியிடப்பட்ட மெட்ராஸ் உயர்நீதிமன்ற இடைக்கால உத்தரவுக்கு முக்கியமானது. சென்னையைச் சேர்ந்த சேஷாத்ரி என்ற வழக்கறிஞர் நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கில் சென்னையை ஒட்டி பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள திருப்போரூர் கந்தசுவாமி கோயில் சொத்துக்களையும், கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் உள்ள ஆளவந்தார் நாயக்கர் அறக்கட்டளை நிலங்களையும் அரசியல் பின்புலம் உள்ள கும்பல் போலி ஆவணங்கள் மூலம் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், ஆகவே, இவற்றைக் காப்பாற்ற நீதிமன்றம் தக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனவும் அவர் கோரி இருந்தார்.

இந்த வழக்கின் முதற்கட்டமாக நீதிமன்றம் சில கேள்விகளை எழுப்பியது. இது குறித்த விரிவான அறிக்கையை இந்து சமய அறநிலையத்துறை தாக்கல் செய்ய வேண்டுமென்றும், அதுவரை இந்த சொத்துக்கள் குறித்து பத்திரப்பதிவு எதுவும் மேற்கொள்ளக்கூடாது என்று திருப்போரூர் சார்பதிவாளருக்கு உத்தரவிட்டு உள்ளது.

திருப்போரூர் கந்தசுவாமி கோயிலை பொறுத்தவரை சுமார் 400 ஆண்டு காலத்திற்கு முன்னர் உருவாக்கப்பட்ட இந்த கோயிலுக்கான நிலங்கள் பெரும்பாலானவை அப்போதைய ஆற்காடு நவாப் முகமது அலி என்பவரால் தானமாக அளிக்கப்பட்டன என்பதற்கு செப்புப்பட்டயங்கள் ஆதாரமாக உள்ளன. ஆற்காடு நவாப்பின் மனைவி உடல் நலம் குன்றியபோது அவரை குணப்படுத்தி யதற்கு பிரதிபலனாக இந்த தானம் வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு தானம் வழங்கப் பட்டதற்கு நன்றிக்கடனாக திருப்போரூர் கந்தசுவாமி கோயிலின் உள்ளே கல் தூண் ஒன்றில் ஆற்காடு நவாப் முகமது அலி மற்றும் அவரது மனைவியின் உருவம் செதுக்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம்.

திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு சுமார் 700 ஏக்கர் நன்செய், புன்செய் நிலங்கள் ஆற்காடு நவாப்பால் தானமாக அளிக்கப்பட்டதாக கல்வெட்டுகளும், பட்டயங்களும் தெரிவித்தாலும், கடந்த 1984ஆம் ஆண்டு கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட தகவல் ஒன்றில் தற்போது கோயில் நிர்வாகத்தின் கீழ் 617 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலங்களும் பெரும்பாலும் உள்ளூர் மக்களால் விவசாயப் பணிகளுக்காக குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இவ்வாறு ஆற்காடு நவாப்பால் தானமாக கொடுக்கப்பட்ட விவசாய நிலங்கள் தவிர்த்து திருப்போரூர், தண்டலம், கருநிலம், சிட்லபாக்கம், மண்ணடி, மயிலாப்பூர், புரசைவாக்கம், யானைகவுனி, திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் ஏராளமான வீட்டுமனைகள், கட்டிடங்கள் காலிமனைகள் உள்ளன. இவை கோயில் பக்தர்களால் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளன. வாரிசு இல்லாதவர்கள் தங்களின் சொத்துக்களை கோயிலுக்கு வழங்குவது நமது வழக்கத்தில் உள்ள ஒன்றாகும்.

திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் தற்போது வரை இந்து சமய அறநிலையத்துறை கண்காணிப்பில் இருந்தாலும் அவை உள்ளூர் விவசாயிகளிடமே உள்ளன. முன்பெல்லாம் பொறுப்பாக கோயிலுக்கு நெல்லையோ அல்லது நிலத்தில் விளைவித்த கரும்பு, வேர்க்கடலை உள்ளிட்டவற்றையோ குத்தகைக்கு ஈடாக கொடுத்து வந்தனர். காலப்போக்கில் குத்தகை கொடுப்பதை நிறுத்தி விட்டனர். கோயிலுக்கு பிரசாதக்கடை ஏலம், வாகன நிறுத்த ஏலம், உண்டியல் வருவாய், மொட்டை அடித்து முடி சேகரிக்கும் ஏலம் போன்றவற்றால் கணிசமான வருவாய் கிடைத்து வந்ததால் விவசாயிகளிடமிருந்து குத்தகைத் தொகையை பெறுவதில் நிர்வாகம் அக்கறை காட்டவில்லை என்பதே உண்மை.

ஆனால், கோயில் நிலங்கள் முறைகேடாக விற்பனை செய்யப்படுகிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். 1998ஆம் ஆண்டுக்கு முன்பு வரை கோயில் நிலங்கள் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான என்று குறிப்பிட்டே விற்பனை செய்யப்பட்டு வந்தன. அவை தடையின்றி பத்திரப்பதிவும் செய்யப்பட்டும் வந்தன. அவற்றை வாங்குபவருக்கும், விற்பவருக்கும் பதிவு செய்யப்படும் சொத்து கோயிலுக்கு சொந்தமானது, அதை நாம் பராமரித்து விவசாயம் செய்து அனுபவிக்கும் உரிமை மட்டுமே உண்டு என்பது தெரிந்தே இருந்தது. 1998ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போது கோயில் நிலங்கள், வக்ப் வாரிய நிலங்கள், அறக்கட்டளை மற்றும் மடங்களின் நிலங்கள் போன்றவற்றை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டு இன்றுவரை நடைமுறையிலும் உள்ளது.

ஆனால், கோயில் நிலங்கள் விற்கப்படுவதாக வரும் தகவல்கள் எத்தகையவை என்று பார்த்தால் பெரும்பாலான விவசாயிகள் தங்களது குத்தகை நிலங்களை வேறு நபர்களுக்கு கைமாற்றி விடுவதுதான். மழை பொய்த்ததாலும், சுற்றிலும் வீட்டுமனைகள் உருவாகி விட்டதாலும், இக்காலத் தலைமுறை விவசாயத் தொழிலை கற்கவும், செய்யவும் முன் வராததாலும் நிலங்கள் பலவும் கரம்பாகவே உள்ளன. விவசாயமும் இல்லை, கோயிலுக்கு குத்தகையும் கட்ட முடியாத நிலை, 3 தலைமுறையாக இந்த நிலத்தில் விவசாயம் செய்து விட்டு வெறுமனே வெளியே போவதை விட யாருக்காவது விற்று லாபம் பார்க்கலாம் என்ற நினைப்பில் பதிவு செய்யப்படாத ஆவணமாக பலருக்கும் விற்பனை செய்கின்றனர். சென்னைக்கு அருகில் இவ்வளவு குறைந்த விலையில் நிலம் கிடைக்கிறதே என்ற ஆசையில் பலரும் இந்த நிலங்களை வாங்கிப்போட தொடங்கி உள்ளனர். கோயில் நிர்வாகம் கேட்டால் இயற்கை விவசாயம் செய்யப்போகிறேன் என்று கூறி உரிய குத்தகைத் தொகையை கட்டவும் தயாராக இருக்கின்றனர்.

இது ஒருபுறம் இருக்க திருப்போரூர் கோயில் ஆதீனம் பெயரில் உள்ள சொத்துக்கள் அவருடைய தனிப்பட்ட சொத்துக்கள் என்றும் அவற்றை அவர் தனிப்பட்ட முறையில் விற்பனை செய்யலாம் என்றும் ஒரு முயற்சி நடந்தது. இந்த நில விற்பனையில் அப்போதிருந்த அறநிலையத்துறை செயல் அலுவலரும் இதற்கு உடந்தையாக இருந்தார் என்பதுதான் காலக்கொடுமை.                 இப்படி கோயில் செயல் அலுவலரும், மடத்து பரம்பரை அறங்காவலர்கள், ஆதீனங்களும் சேர்ந்து கொள்ளை அடிப்பது ஒருபுறம் இருக்க உண்மையான அக்கறையுடன் கோயில் சொத்துக்களை காப்பாற்ற அதிகாரிகள் பலரும் உழைக்கிறார்கள் என்பதே உண்மை.

திருப்போரூர் கோயில் செயல் அலுவலராக இருந்த பாலகிருஷ்ணன் என்பவர்தான் கோயில் சொத்துக்கள் தற்போது யார், யாரிடம் இருக்கின்றன, அதன் மூலம் கோயிலுக்கு என்ன வருவாய் வருகிறது என்பதை ஒரு ஆவணமாக உருவாக்கினார். அப்போதுதான் தனியார் கல்லூரி ஒன்று கோயில் நிலத்தை எடுத்துக் கொண்டு ஒரு குறிப்பிட்டத் தொகையை கோயில் பெயரில் டெபாசிட் செய்துள்ளது தெரிய வந்தது. அந்த கல்லூரி நிர்வாகத்திற்கு தற்போதைய நில மதிப்பை கணக்கிட்டு கூடுதல் தொகை டெபாசிட் செய்ய நோட்டீஸ் அனுப்பினார் அந்த அதிகாரி.

அதேபோன்று ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று கோயில் சொத்துக்களை தங்களது சொத்தாக கணக்கு காட்டி பின்னால் உள்ள தங்களது நிறுவன சொத்திற்கு சாலைகளை அமைத்து வீட்டு மனைகளையும், அடுக்குமாடி குடியிருப்புகளையும் உருவாக்கியது. இதையும் அந்த அதிகாரி கண்டுபிடித்து கடுமையான நெருக்கடி கொடுத்தார்.

தற்போது வரை திருப்போரூர் கந்தசுவாமி கோயிலின் சொத்துக்கள் முறையாக பாதுகாக்கப்பட்டு வந்தாலும் ஒரு குறிப்பிட்ட சொத்து பட்டா பெயர் மாற்றம் செய்யப் பட்டதுதான் இந்த வழக்குக்கு மூலதாரமாக கூறப்படுகிறது. வள்ளி தேவஸ்தானம் என்ற பெயரில் இருந்த ஒரு 2 ஏக்கர் 51 சென்ட் நிலத்தினை வள்ளியம்மாள் என்று பெயர் மாற்றம் செய்து வள்ளியம்மாளின் வாரிசுகள் என்ற பெயரில் அவற்றை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளதாகவும், சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் அதிபருக்கு இதில் தொடர்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான மூல ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு நிலத்தை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மற்றபடி 630 ஏக்கர் நிலங்கள் உள்ளூர் மக்களிடம் குத்தகை அடிப்படையில் உள்ளன. இவற்றை விற்பனை செய்ய முடியாது என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியும். ஆனால் இவ்வாறு பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வரும் நிலங்கள் தங்களுக்கே சொந்தம் என்று கூறி விவசாயிகள் கோயிலுக்கு எதிராக செங்கல்பட்டு நீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், அனைத்து நிலங்களும் கோயிலுக்கே சொந்தம் என்று தீர்ப்பு வந்து விட்டது. ஆனால், விவசாயிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

64 சத்திரங்கள்

திருப்போரூர் கோயிலைச் சுற்றி உள்ள நான்கு மாடவீதிகளிலும், பிரதான தெருக்களிலும் 64 சத்திரங்கள் உள்ளன. பல்வேறு சாதி அமைப்பைச் சேர்ந்தவர்கள் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமப்படக்கூடாது என்ற நோக்கத்தில் தங்கிச் செல்வதற்காக இந்த சத்திரங்களை கட்டி உள்ளனர். இந்த சத்திரங்கள் சாதி அமைப்புகளுக்கு சொந்தமே தவிர கோயிலுக்கு சொந்தமானதல்ல. ஆனால், சத்திரங்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சொத்தினை வாடகைக்கு விட்டு அதில் வரும் வருமானத்தில் வருடத்தில் ஒரு நாள் உற்சவத்தை மேற்கொள்ள வேண்டும் என்று கட்டளை எழுதி அவற்றை கல்வெட்டில் பொறித்து வைத்துள்ளனர். காலப்போக்கில் இந்த கல்வெட்டுகள் அழிக்கப்பட்டு சத்திரங்கள் பராமரிப்பற்று போனதால் சமூக விரோதிகள் அவற்றை விற்பனை செய்து விட்டனர். இவற்றை மீட்க சம்பந்தப்பட்ட சாதி அமைப்புகளிடமோ, அறக்கட்டளை நிர்வாகங் களிடமோ எந்த ஆவணமும் இல்லாததால் வேறு வழியின்றி மீட்கும் முயற்சியை கை விட்டு விட்டனர். ஒரு சில சாதி அமைப்புகள் மட்டும் பழைய சத்திரங்களை மீட்டு சீரமைத்து பயன்படுத்தி வருகின்றனர்.

வீட்டு மனைகள்

திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்குச் சொந்தமான ஏராளமான வீட்டு மனைகள் திருப்போரூரில் உள்ளன. இவற்றில் சொந்த வீடில்லாத ஏழை மக்கள் 1 சென்ட் முதல் 5 சென்ட் வரை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி கோயில் அனுமதியுடன் மின் இணைப்பு பெற்று குடியிருந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் அடி மனை வாடகை எனப்படும் குத்தகைத் தொகையை கோயிலுக்கு செலுத்தி விடுகின்றனர். ஒரு சிலர் மட்டுமே ஏமாற்றி வருவதோடு கோயில் மனைகளில் கடைகளை கட்டி வாடகைக்கு விட்டு லாபம் சம்பாதிக்கின்றனர். இவ்வாறு வணிக நோக்கத்தில் வாடகைக்கு விட்டு சம்பாதிப்பவர்களிடம் உரிய தொகையை கோயில் நிர்வாகம் வலியுறுத்திப் பெற வேண்டும் என்பதும், வீடுகளில் குடியிருப்பவர்களிடம் கனிவு காட்ட வேண்டும் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. அதே நேரத்தில் சென்னையில் உள்ள பல சொத்துக்களுக்கு குறிப்பாக மயிலாப்பூர், புரசைவாக்கம், திருவல்லிக்கேணி, மண்ணடி, யானைகவுனி உள்ளிட்ட இடங்களில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடங்கள் கோயிலுக்கு சொந்தமானவையாக உள்ளன. இவற்றில் பெரும்பாலானவற்றை மார்வாடிகளே ஆக்கிரமித்துள்ளனர். இவற்றை கண்டுபிடித்து ஒவ்வொன்றாக கைப்பற்றும் நடவடிக்கையில் கோயில் நிர்வாகம் இறங்கி உள்ளது. இந்த சொத்துக்களை மீட்பதில் யாருக்கும் எந்த கருத்து வேறுபாடும் இருக்க முடியாது.

ஆனால், அதே நேரத்தில் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான 617 ஏக்கர் நிலமும்,ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான கடற்கரையை ஒட்டியுள்ள 13,00 ஏக்கர் நிலமும் எந்த பயனும் இன்றி  வீணாய் கிடக்கிறது. தமிழக அரசு  நினைத்தால் இந்த நிலங்களில் கல்லூரிகளை துவக்கி நடத்தலாம். அல்லது தனியார் கல்லூரிகளுக்கு கொடுத்து வருவாய் ஈட்டலாம். இப்படி தரிசாக கிடப்பதில் எந்த பயனும் இல்லை. யாராவது ஆக்கிரமிக்கவே வழிவகுக்கும்! எழுத்தறிவித்தல் ஆலயம் கட்டுவதை விட சாலச்சிறந்தது அல்லவா.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time