எடப்பாடியில் கூட வெற்றியை எட்ட முடியாத நிலை ஏன்..?

-சாவித்திரி கண்ணன்

அதிர்ஷ்டவசமாக முதல்வரானது, ஜெயலலிதா இல்லாமலே நான்காண்டு ஆட்சியை நடத்த முடிந்தது, பெரிய பிளவுகளின்றி கட்சியை கொண்டு சென்றது, அடுத்த முதலமைச்சராகவும் தன்னை அறிவித்துக் கொண்டு களம் காண்பது… எல்லாம் சரி தான்! ஆனால், தன் சொந்த தொகுதியான எடப்பாடியில் வெற்றி பெறுவது எளிதாக தெரியவில்லையே! எங்கெங்கிலும் எடப்பாடி பழனிச்சாமியின் மீதான எரிச்சல் தெரிகிறதே..!

பல்லாயிரக்கணக்கில் கோடிகளை இறைக்கலாம், ஆட்சி பலம் உதவலாம்,அடியாட்கள் படையை இறக்கலாம்..ஆனால், விரக்தியடைந்திருக்கும் மக்கள், வாழ்வாதாரம் தொலைத்த மக்கள், அனுபவ ரீதியாக எடப்பாடி பழனிச்சாமியை அளந்து வைத்திருக்கும் மக்களை வெறும் பணபலத்தாலோ, சாதி பலத்தாலோ சமாதானப்படுத்த முடியாது என்றே தோன்றுகிறது!

எடப்பாடி என்பது ஒரு காலத்தில் பசுமை எழில் பூத்துக் குலுங்கிய பூமி! ஒரு காலத்தில் என்பதை எடப்பாடி அரசியலில் கால் பதிக்க தொடங்கிய காலகட்டம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இன்று அந்த பூமி வறண்டு கொண்டுள்ளது. ஆறு,குளம்,சிற்றோடைகள்,பசுமை பூத்துக் குலுங்கும் வயல்கள், மா,வாழை,தென்னை, நெல், கரும்பு, மஞ்சள் விளையும் இந்த பூமி இப்ப சுகமாயில்லே!

# காவேரிக் கரையோரம் உள்ள எடப்பாடியில் தண்ணீர் பற்றாகுறை தலைவிரித்தாடுகிறது! ஆழ்துளை பம்பு போட்டு விவசாயம் செய்ததில் இப்போது நிலத்தடி நீர்வளமும் குறைந்து போய்விட்டது!

# விவசாய நிலத்தில் உயர் அழுத்த மின்கம்பிகள்,கோபுரங்கள் அமைத்ததன் மூலம்விவசாயிகள் பாடு சொல்லிமாளாது.போதாக்குறைக்கு எண்ணெய் குழாய் பதிக்கும் வேலைகளும் கடும் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் அமல்படுத்தப்படுவதால் விவசாயிகள் கொந்தளிப்பில் உள்ளனர்.

# நீர் நிலைகளான ஏரி,குளங்கள் சரியாக பராமரிக்கபடாததாலும், தூர் வாறலில் நடக்கும் ஊழல்களாலும் அதுவும் சரியான நிலையில் இல்லை!

# மா பயிடும் விவசாயிகள் சமயங்களில் விளை பொருள் விற்பனையாகாமல் பெரும் நஷ்டமடைவதிருந்து தடுக்க மாம்பழ ஜீஸ் தயாரிக்கும் நிறுவனம் நிறுவப்படும் என்ற சென்ற தேர்தலில் தந்த வாக்குறுதியை சுத்தமாக மறந்துவிட்டார் எடப்பாடியார்!

# எடப்பாடியை ஓட்டியுள்ள போடி நாயக்கன்பட்டி ஏரி ஆக்கிரமிக்கப்பட்டு, இறைச்சி கழிவுகளால் நிரம்பி,இன்னொரு கூவமாக சீரழிவது தொடர்பாக பலமுறை புகார் தந்தும் பயனில்லை!

# கைத்தறி, விசைத்தறி நெசவில் பாரம்பரியமாக ஈடுபட்டுவரும் சுமார் ஐம்பதாயிரம் குடும்பங்களை உள்ளடக்கியது இந்த தொகுதி! அவர்களின் வாழ்நிலை முன்னெப்போதும் இல்லாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது! நூல் விலையேற்றம், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் மலை போல் தேங்கி விற்பனையாகாமல் இருக்கும் துணிகள்! கொள்முதலில் கோஆப்டெக்ஸ் செய்யும் ஊழல்கள் ஆகியவற்றால் எளிய நெசவாளிகளில் பலர் தொழிலையே கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

# ’’நெசவாளர்களுக்கான சந்தையை உருவாக்குவதற்காக இந்த பகுதியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்’’ என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

# எடப்பாடியில் தொழில் வேலை வாய்ப்பை பெருக்க சிப்காட் அமைக்கப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை!

# காவிரிக் கரையோரமான பூலாம்பட்டியில் ஒரு பொழுதுபோக்கு பூங்கா ஏற்படுத்தி தர வேண்டும் என்ற தொகுதி மக்களின் எதிர்பார்ப்பும், ஏக்கமும் எடப்பாடியாருக்கு ஏனோ ஒரு பொருட்டாகவே படவில்லை!

# பூலாம்பட்டியில் இருந்து ஈரோடு நெருஞ்சிபேட்டைக்கு ஆற்றுப்பாலம் ஓர் அவசியம் தேவை என்ற கோரிக்கை ஐம்பது வருடங்களாக வடிவம் பெறவில்லை.

# 1989,1991,,2011,2016 என்று நான்கு முறை எம்.எல்.ஏ வாய்ப்பு பெற்றும்,முதலமைச்சராகவே இருந்தும் ஏன் எடப்பாடியாரால் இவற்றை நிறைவேற்றிக் கொடுக்க முடியவில்லை என்றால், அவர் நோக்கம் முழுமையும் காண்டிராக்ட்,கரப்ஷன்,கமிஷன்..என்பதிலேயே சதா சர்வ காலமும் இருக்கும் போது பொதுமக்கள் குறித்த சிந்தனை தான் எப்படி வரும்?

# நெடுஞ்சாலைத் துறை காண்டிராக்டுகளை சம்பந்திக்கும், உறவினர்களுக்கும்,பினாமிகளுக்கும் தருவது! ரோடு காண்டிராட்டில் 10% மாக இருந்த கமிஷனை 30% உயர்த்தி, தரக்குறைவான ரோடுகளைப் போட்டது, கொரானா காலத்திலும் தேவையில்லாத பகுதிகளுக்கு 12,000 கோடிகள் நெடுஞ்சாலை பணிகளுக்கு, ஒதுக்கி மனசாட்சியில்லாமல் பணம் பார்த்தது..என சொல்லி மாளாது!

# சந்தையில் ஒரு டன் தார் ரூ23,146 விற்ற போது, அரசுக்கான தார் கொள்முதலை ரூ41,360க்கு செய்ததன் மூலமாக, தார் கொள்முதலில் மட்டுமே ஆயிரம் கோடி ஊழல் செய்தவர் எடப்பாடியார்!

# இதே போல பொதுப் பணித்துறையை தன் குடும்பத்திற்கான பொன்முட்டையிடும் வாத்தாகக் கருதி தமிழகத்தின் நீர் நிலைகளையெல்லாம் நிர்மூலமாக்கிய சாதனையாளர் தான் எடபாடி பழனிச்சாமி!

# எல்லாவற்றுக்கும் உச்சமாக சாதி ஆணவத்துடன் இவர் தொகுதியில் உள்ள எளிய மக்களிடம் நடந்து கொண்ட சம்பவங்கள் ஏராளம்! அவ்வளவு ஏன்? தற்போதைய ஆட்சியையே தன் சாதிஜனத்தில் உள்ள பெருமுதலாளிகளுக்கான ஆட்சியாகத் தான் நடத்திக் கொண்டுள்ளார் பழனிச்சாமி. தன் சாதியில் உள்ள ஏழைகளின் மீது கூட அவர் கரிசனம் காட்டியதில்லை.

# இந்த தொகுதியில் வன்னியர்கள் கணிசமாக உள்ளனர். அதனால் தான் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணியை தேடிச் சென்று உருவாக்கினார்.ஆனால், இந்த முறை வன்னியர்கள் ராமதாசின் மீதான கோபத்தாலும், திமுக வேட்பாளர் சம்பத்குமார் வன்னியராக இருப்பதாலும் எடப்பாடிக்கு வாக்களிக்க வாய்ப்பில்லை என தெரிய வருகிறது.

# திமுக வேட்பாளர் சம்பத்குமார் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தீரம் காட்டிய இளைஞர், எம்.சி.ஏ படித்த விவசாயி! துடிபான களச் செயற்பாட்டாளர்.ஆகவே, செல்வ கணபதியாலும், உதயநிதி ஸ்டாலினாலும் ஒரு மனதாக விரும்பி பரிந்துரை செய்யப்பட்டு தேர்வாகியுள்ளார்.

மேற்படி நாம் விவரித்துள்ள அம்சங்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக இருப்பதால், புதிய இளம் வேட்பாளர் சம்பத்குமாருக்கான வாய்ப்பு இருப்பதாகத் தான் இன்றைய நிலவரப்படி சொல்ல முடிகிறது!

தனக்கான பின்னடைவை  எடப்பாடியும் ஒரளவு ஊகித்திருப்பார். ஆகவே, தன் தோல்வியை தவிர்க்க, அவர் எவ்வளவு பணத்தையும் அள்ளி இறைக்கவும், எவ்வளவு பெரிய பிரம்மாஸ்த்திரத்தை ஏவிடவும் (அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் போல) தயார் நிலையில் தான் உள்ளார். ஏற்கனவே தொகுதியில் உள்ள கட்சிக்காரர்களுக்கு பணம் அபரிமிதமாக தரப்பட்டுள்ளது. மேலும் தருவதற்கும் ஏற்பாடாகியுள்ளது. இவ்வளவையும் மீறி எடப்பாடி தொகுதி மக்கள், பொது நலன் கருதி, எடப்பாடி பழனிச்சாமியை தவிர்ப்பதில் உறுதிபாடு காட்டுகின்றனர் என்பது ஆரோக்கியமான அம்சமாகவே தெரிகிறது!

-சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time