கேஜ்ரிவாலும், யோகேந்திரயாதவும், கமலிடமிருந்து ஏன் விலகினர்?

-சாவித்திரி கண்ணன்

ஒருவரின் யோக்கியதையை அவருடைய கூட்டாளிகளை வைத்து முடிவுக்கு வரலாம்! கமலிடமிருந்து அரவிந்த் கேஜ்ரிவாலும்,யோகேந்திர யாதவும், ’’வேண்டாம் ஐயா உம்ம சங்காத்தம்’’ என்று ஒதுங்கி போனதற்கான பின்ணணிகளை அலசுகிறது இந்தக் கட்டுரை!

தன்னை நேர்மையாளராக தானே பிரகடனப்படுத்திக் கொண்டவர் கமலஹாசன்!

வருமானத்திற்கு நேர்மையாக வரி கட்டுபவராகவும் சொல்கிறார்!

நேர்மையான ஆட்சியை தன்னால் தான் தரமுடியும் என்கிறார்!

ஒருவர் நேர்மையாளரா…? என்பதை பொதுவாக அவருடைய கூட்டாளிகளைக் கொண்டே ஒரு தெளிவுக்கு நாம் வரமுடியும். கட்சி தொடங்கும் போது அரவிந்த் கேஜ்ரிவால், மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி, பினராய் விஜயன்..போன்றோரை சந்தித்து பேசி, ஊடகங்களுக்கு புகைப்படங்கள் தந்து தன் இமேஜை கட்டமைக்க முன்றார் கமல்!

ஆனால், தற்போது அவர் சாதியக் கட்சிகளான ஐ.ஜே.கே மற்றும் ச.ம.க.வுடன் மட்டுமே கூட்டணி கண்டுள்ளார்!

கமலஹாசன் முதலில் கட்சி தொடங்கிய போது டெல்லி சென்று கேஜ்ரிவாலை சந்தித்து மதுரைக்கு அழைத்து வந்து மீட்டிங் போட்டார்! அவர் தான் தனக்கு ரோல்மாடல் என்றும் சொன்னார்! அப்படிப்பட்ட ஆம் ஆத்மி கட்சியுடன் அவரால் ஏன் தொடர்ந்து செயல்படமுடியாமல் போனது? என்று நாம் ஆம் ஆத்மியின் தமிழக வட்டாரத்தில் விசாரித்த போது, ’’கமலஹாசன் கட்சியுடன் இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திப்பதாக இருந்தது. அதற்கான பேச்சுவார்த்தையும் எங்களுக்குள் நடந்தது. ஆனால், என்ன காரணத்தாலோ அரவிந்த் கேஜ்ரிவால், கமலஹாசன் கட்சியுன் இனி எந்த தொடர்பும் வேண்டாம்’’ என்று சொல்லிவிட்டார் என்றனர்!

 

இது தொடர்பாக நாம் தில்லி வட்டாரத்தில் கேட்ட போது, கமலஹாசனின் நடவடிக்கைகள், அவரது கட்சி பல விவகாரங்களில் காட்டும் அணுகுமுறை காரணமாக ம.நீ.மவுடன் கூட்டணி உறவு ஊஜிதமாகப் படவில்லை எனவே தவிர்த்துவிட்டோம்’’ என சொன்னார்கள்!

சென்ற நாடாளுமன்ற தேர்தலில் கமல் கட்சியுடன் யோகேந்திர யாதவின் சுயராஜ்யா கட்சி கூட்டணி வைத்திருந்தது. தற்போது அவர்களும் கமலஹாசனிடமிருந்து விலகிவிட்டனர்.

இது தொடர்பாக நாம் சுயராஜ்யா கட்சியின் தமிழக தலைவரான தோழர்.பாலகிருஷ்ணனிடம் பேசிய போது, ’’தமிழகத்திற்கான ஒரு மாற்று அரசியல் சக்தியாக கமலஹாசனை நாங்கள் அன்று கருதியது உண்மை தான். ஆனால், பாஜக அரசின் பல மக்கள் விரோத சட்டங்கள் மற்றும் செயல்பாடுகளில் அவர் காட்டும் மெளனம் எங்களை யோசிக்க வைத்தது. இந்திய தலைநகர் தில்லியில் விவசாயிகள் போராட்டத்தை தலைமையேற்று AIKCC  நடத்துகிறது. மக்கள் நீதி மய்யம் இதில் எங்களோடு கைகோர்க்கவில்லை. அவர் ரொம்பவே பல விவகாரங்களில் விலகி செல்வதாகத் தெரிந்தது. இது தொடர்பாக அவருக்கு எடுத்துச் சொன்னாலும் பொருட்படுத்துவதாக இல்லை. இன்றைக்கு இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்றியாக வேண்டும் என்றால், பாஜகவிற்கு எதிரான நிலைபாடு என்பது ஒருமித்த அடிப்படையிலும், வெளிப்படையாகவும் இருக்க வேண்டும். இதற்கு கமலஹாசன் சரிப்பட்டு வரவில்லை என்பது எங்கள் அனுபவம். ஆகவே, அவரிடமிருந்து முற்றாக விலகிக் கொண்டோம்’’ என்றார்.

கமலஹாசனோடு ஆரம்ப காலத்தில் மிக நெருக்கமாக கைகோர்த்து பயணித்தவரான திராவிட இயக்க பற்றாளரான செளரிராஜனாலும் கமலோடு தொடர்ந்து பயணிக்க முடியவில்லை. இடதுசாரி சிந்தனையாளரான பாரதிகிருஷ்ணகுமாராலும் முடியவில்லை! இது குறித்து அவர்கள் இருவருடனும் நான் விரிவாக பேசியதன் சாராம்சத்தை சொல்வதென்றால், ’’நாம் நினைக்கும் ஆரோக்கியமான மாற்று அரசியலுக்கானவரல்ல கமல்! எந்த வெளிப்படைத் தன்மையும் இல்லாமல், ஹிட்டன் அஜந்தாவுடன் காய் நகர்த்துபவரோடு எங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து பயணிப்பது எப்படி சாத்தியப்படும்?’’ என்பதே!

மேற்படி விஷயங்களோடு தற்போது மக்கள் நீதிமையத்தின் மாநில பொருளாளர் திருப்பூர் சந்திரசேகரின் அனிதா டெக்ஸ்காட் நிறுவனத்தில் நடந்த ரெய்டில் வெளியான செய்தியையும் இணைத்து பார்ப்போம்.

அரசியல்வாதியாக இருக்கும் ஒருவர் தொழில் அதிபராக இருப்பது தவறல்ல. ஆனால், அவர் இல்லாத தொழிற்சாலைக்கு தமிழக அரசிடம் 450 கோடி ஆர்டர் பெற்று, அவுட்சோர்சிங் செய்து தந்துள்ளார்! அதுவும் தமிழகத்தில் ஆகப் பெரிய ஊழல்வாதியாக அறியப்பட்ட விஜயபாஸ்கரின் சுகாதாரத்துறையிடம் ஆர்டர் பெற்றுள்ளார். கமிஷன்,கரப்ஷன் இல்லாமல் விஜயபாஸ்கரோடு எந்த டீலிங்கும் நடத்தமுடியாது! சந்திரசேகர் நிறுவனத்தில் கணக்கு காட்டாத பணம் ரொக்கமாக 11.5 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. நேர்மையாளர் கட்சியின் பொருளாளர் யோக்கியதை எப்படி என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்!

கமலஹாசன் தான் நேர்மையாளர் என்றால், முதலில் வெளிப்படைத் தன்மையாக இருக்க வேண்டும். அதாவது தான் எந்தெந்த படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார்? அதற்கு எவ்வளவு வருமான வரி கட்டினார் என்பதை இது வரை அவர் சொல்லவே இல்லை! ஆனால், தான் சரியாக வருமான வரி கட்டிவிட்டதாக பொத்தாம் பொதுவாக சொல்கிறார். திறமையான ஆடிட்டர் வாய்த்தால், உலக மகா திருடன் கூட வருமான வரித்துறையிடம் உத்தமர் பட்டம் பெறலாம் என்பது அனைவருக்குமே தெரிந்த ரகசியம் தான்!

கமலஹாசன் தான் கட்சியை நடத்துவதற்கும், தேர்தலை எதிர் கொள்வதற்குமான பணத்தை யாரிடமிருந்து பெறுகிறார்? எவ்வளவு பெறுகிறார்? என்பதெல்லாம் அந்த இயக்கத்தில் இருப்பவர்களுக்கே மர்மமான விஷயமாக உள்ளது. அரவிந்த் கேஜ்ரிவால், யோகேந்திர யாதவ் போன்றவர்கள் இந்த நன்கொடை பெறும் விவகாரங்களில் மிக வெளிப்படைத் தன்மையுடன் தங்கள் இயக்கங்களை நடத்தி வருபவர்கள். ஆகவே, தன்னைத் தானே பல விதங்களிலும் ஒளித்து வைத்துக் கொண்டுள்ள கமலஹாசனுடன் உண்மையான பொதுநலவாதிகள் நீண்ட காலம் பயணிக்க முடியாது என்பது தொடர்ந்து நிருபணமாகி வருகிறது!

-சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time