ஊரடங்கு காலத்தில் உதித்த மனிதநேய சக்திகள்.!

மாயோன்

அறம் என்றால் என்ன? என்ற வினாவிற்கு மிகச் சிறப்பாக அர்த்தம் சொன்ன பண்டை நூல் திருக்குறள்தான். வள்ளுவத்தை அடிப்படையாகக்கொண்டு எழுந்து நிற்கும் தமிழ்ச்சமூகத்தில் மனிதநேய சக்திகளுக்கு பஞ்சம் இருக்குமா?

இயற்கை சீற்றங்களால் தமிழகம் பாதிக்கப்படும் போதெல்லாம் பல்லாயிரக்கணக்கான உதவும் கரங்கள் இம்மண்ணில் தோன்றி  சமூகப்பணி ஆற்றியதை அனைவரும் அறிவோம்.

குறிப்பாக 2015 ஆம் ஆண்டு சென்னை மாநகரம் பெரு வெள்ளத்தில் தத்தளித்த போது பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் களமிறங்கி ,ஆற்றிய பணிகளை உலகமே பார்த்து வியந்தது .

ஓர் ஊருக்கு, மாநிலத்திற்கு அல்லது நாட்டுக்கு பிரச்சினை என்றால் அண்டை பகுதிகளிலிருந்து உதவி கிடைக்கும். ஆனால் கொரோனா  போன்ற பெருந்தொற்று உலகையே புரட்டிப் போடும் போது, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், போன்ற வலுவான கட்டமைப்பு கொண்ட நாடுகளே கலகலத்துப் போகும்போது இந்தியா போன்ற மக்கள் தொகை நிறைந்த வளரும் நாடு எப்படி தாக்குப் பிடிக்க போகிறதோ? என்ற அச்சம் கலந்த எண்ணம் ஐநா போன்ற உலக நலத்திற்காக செயல்படும் சர்வதேச அமைப்புகளுக்கு ஏற்பட்டன .

ஆனால், இந்த மண்ணிற்கே இயல்பான மனிதநேயம் மக்களைக் காக்கும் கேடயமாக நிற்பதை உலகம் பார்க்கிறது.

தமிழகத்தில் கன்னியாகுமரி முதல் திருத்தணி வரை கோடியக்கரையில் இருந்து நீலகிரி வரை தெருவுக்கு தெரு சமூகப் பணிகள் நடைபெற்றன. இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு இயன்றதை வழங்கி பசிப்பிணி நம் சமூகத்தில் தலை எடுக்காமல் பார்த்துக் கொண்டனர்.

ஊரடங்கு அமல் தொடங்கி ஐந்து மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், சென்னையில் செயல்படும் “உதவும் கைகள்” என்ற  நண்பர்கள் குழு, தொடக்கம் முதல் தொய்வின்றி இயங்கும் தன்னார்வ அமைப்புகளில் ஒன்றாகும்.

சுமார் 225 பேர் இதில் அங்கம் வகித்து சிறப்பான சமூகத் தொண்டாற்றி வருகின்றனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட 24.03. 2020 அன்று இக்குழுவினர் தங்களை சமூக ஊடகங்களில் அறிமுகப்படுத்திக் கொண்டபோது, தனிமையில் வசித்த வயதானவர்கள் தொலைபேசி, வாட்ஸ் அப் மற்றும் முகநூல் மூலம் இந்த குழுவினரை தொடர்பு கொண்டு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளைதரும்படி கேட்டு பயனடைந்தனர்.

அதன்பிறகு வருவாய் தடைபட்ட தினக்கூலி தொழிலாளர் குடும்பங்களில் இருந்து உணவுப் பொருட்கள் கேட்டு அழைப்புகள் வந்தன.

தமிழக அரசு வழங்கிய குடும்பத்திற்கு 1000ரூபாய் போதுமானதாக இல்லை .குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு அதுவும் இல்லை.

உதவும் கைகள் குழுவில் இருந்த நண்பர்கள் சென்னை மாநகரம் முழுவதும் பரவலாக இருந்ததால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு பொருட்களை  வழங்குவது எளிதாக இருந்தது .

பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 5 கிலோ அரிசி ஒரு கிலோ பருப்பு, எண்ணெய் மளிகைப் பொருட்கள் அடங்கிய பைகள் வழங்கப்பட்டன. இதுவரை 10,000 க்கு மேற்பட்ட வீடுகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

புரசை வெங்கடேஷ், லயோலா மணி,அருள்காணிக்கைராஜ், தினேஷ் ,செம்மஞ்சேரி விவேகானந்தன், கண்ணகி நகர் பாலமுருகன், பெரும்பாக்கம் ஜெயகுமார்,பிரேம் பத்திரிக்கையாளர் பிரகாஷ் ,நந்தகுமார் ராஜேஷ் ,செந்தில் போன்ற தன்னார்வலர்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களை அடையாளம் கண்டு உணவுப்பொருட்களை கொண்டு சேர்த்த வண்ணமிருந்தனர்

டாக்டர் சங்கர பாரதி நாராயணசாமி, மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் நண்பர்கள் ,குரு தினகர் சிவகுமார் ,கோவை கிரிஷ், அன்பு ராஜா(இரயில்வே) பத்திரிக்கையாளர்கள் டி. சுரேஷ்குமார், இளமதி ,முருகானந்தம் கல்வியாளர் ராஜசேகர், சிவசங்கர் ,திருமதி சங்கீதா சிவசங்கர், ராஜாராம் ,மீடியா லிங்க் வாசு, கோபாலகிருஷ்ணன், முதலானவர் ஏழை எளிய மக்களுக்கு உணவுப்பொருள் வழங்குவதற்காக தொடர்ந்து நிதி வழங்கிய வண்ணம் உள்ளனர்.

ஊரடங்கு தொடக்கத்தில் சாலையோர உணவு கடைகள் கூட செயல்படாததால் அவற்றை நம்பி வாழ்ந்த தெருவாசிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இத்தகையோரை அடையாளங்கண்டு உணவு வழங்கும் பணியில் உதவும் கைகள் நண்பர்கள் ஈடுபட்டனர் .இந்த வகையில் தினந்தோறும் சுமார் 500 பேருக்கு என்ற அளவில் மொத்தம் 30,000 உணவு வகைகள் சாலையோர ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டன. இந்த அன்னதான நிகழ்வில் மனித நேயர்கள் கோமதி சங்கர் ,என். குமார் ஆகியோர் தங்களை இணைத்துக்கொண்டு பல்லாயிரம் உணவுவகைகளை குழு உறுப்பினர்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினர்.

உதவும் கைகள் குழு நிறுவனர்களில் ஒருவரான நாராயணசாமி (திரு.வி.க .பேச்சு பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் மயிலை ) முனைவர் இறையரசன்,

மாரிமுத்து மற்றும் சரவணன் ஆகியோர் பலமுனைகளில்  நின்று மக்கள் பணியாற்றினர்.

ஏழை எளிய குடும்பங்களுக்கு முகக்கவசம் வந்து சேராத ஆரம்பகட்டத்தில் முகக் கவசம் விநியோகிக்கும் பணியில் இந்தக் குழுவினர் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர் .

கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்யும் மகத்தான பணியில் SDPI தொண்டர்கள் ‌.

14 ஆயிரம் முகக் கவசங்கள் திருப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்டு சென்னை மாநகரம் முழுவதும் வினியோகிக்கப்பட்டது.

கொரோனா பற்றி பெரும்பீதி தொடக்க காலத்தில் இருந்தது.

சாதாரண சளி ,காய்ச்சல் ஏற்பட்டால் கூட மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

தனியார் மருத்துவமனைகள் காய்ச்சல் நோயாளிகளை கண்டு அலறின.

பிரச்சினை பெரிதாக  இதெல்லாம்முக்கிய காரணமாயிற்று .

மேலும் , தொற்றுக்கு ஆளான பலர் குறிப்பாக ஏழை எளிய மக்கள் எந்த மருத்துவமனைக்கு போவது? என்றகுழப்பத்தில் இருந்தனர். அவர்களுக்கு சிறந்த ஆலோசனை தேவைப்பட்டது .

இக்குழுவில் அங்கம் வகிக்கும் பத்திரிக்கையாளர் பாரதி தமிழன் நூற்றூக்கணக்கான நோயாளிகளுக்கு சிறந்த ஆலோசனைகள் வழங்கினார். உரிய  வழிகாட்டுதல்களை பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சேர்த்ததில் அவருக்குப் பெரும் பங்கு உண்டு.   உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பலரை இயல்பான சூழலுக்கு கொண்டு வந்தார். இதுபோல

பல தளங்களில் சந்தடியின்றி பணியாற்றி வருகிறார்.

இக்குழுவில் உள்ள வசந்த குமார், சிவகுரு நாதன் போன்ற ஆளுமைகள்  ஏராளமான நோயாளிகளுக்கு இரத்த தானம் பெற்றுத் தந்து அருந்தொண்டு புரிந்தவர்கள்.

பல ஏழை மாணவர்களுக்கு கல்விக் கட்டணம், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி , ஓமந்தூரார் அரசு கொரானா மருத்துவமனையில் தன்னார்வலர் பணி , போன்றவை  உதவும் கைகள் அமைப்பின் இதர  பணிகளாகும்.

மூத்தப் பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் இந்த அமைப்பின் பெரும் புரவலராக திகழ்ந்து வருகிறார். தாம்  நிதி உதவி செய்வதோடு தம் உறவினர்கள் நண்பர்கள் மூலம் இதன் நிதி நிலையை  வலுவாக வைத்துக் கொண்டதில்  அவருக்கு முக்கிய பங்கு உண்டு.

கொரோனா தொற்றால் இறந்த நோயாளிகள்   உடலை பல இடங்களில் கையாண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியது .இந்த நிலைமையில், எஸ்டிபிஐ ,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் போன்ற இஸ்லாமிய அமைப்புகள் போற்றத்தக்க பணியை செய்தன.

இந்த அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தியாக உள்ளம் கொண்ட தொண்டர்கள்

தொற்றால்  இறந்தோரின்  உடல்களை கண்ணியத்துடன் அடக்கம் செய்து வருகின்றனர்.

ஊருக்கு ஊர் இப்பணி நடைபெறுகிறது. இவர்களுடைய செயல்பாடுகள் தமிழ்நாட்டுக்கு உலக அளவில் தனி மரியாதையை பெற்றுத் தந்துள்ளன.

ஓயாத கடல் அலைகள்

போல நல்ல மனிதர்கள்,

அருமையான தொண்டு நிறுவனங்களின் பணிகள் தொடர்ந்து

நடைபெற்று வருகின்றன.

சென்னையில் நோய்த்தொற்று பரவல் குறைந்துவிட்டதாக அரசின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவித்தாலும், முகக் கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்றி கவனமாக செயல்படும்படி மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் .

அதை ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டியது அவசியமானதாகும்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time