இழுத்துக் கொண்டு ஓடினால் பணமும், தங்கமும் பரிசாமே…!

-சாவித்திரி கண்ணன்

”சார், உண்மையா? திமுக தேர்தல் அறிக்கையில இப்படி சொல்லி இருக்காங்களா..? நீங்க திமுக தேர்தல் அறிக்கை பற்றி அவ்வளவு விலாவாரியாக எழுதினீங்களே..இதை எப்படி கவனிக்காமல் விட்டீங்க..’’ என்று பதறியவாறு  இரண்டு நாட்களாக எனக்கு வாட்ஸ் அப்பிலும், போனிலுமாக பலர் கேட்ட வண்ணம் உள்ளனர்! பகீரென்றது..இந்த விஷமத்திற்கான வித்து எங்கிருந்து… எப்படி விழுந்தது.. .? என்று பார்ப்போம்;

”இது ரொம்ப ஓவரா இருக்கே இப்படி சொல்ற கட்சி ஆட்சிக்கு வந்துட்டால் நாமெல்லாம் எப்படி கவரவத்துடன் வாழறது’’ என்று டீ கடையில் சூடு பறக்க விவாதம் செய்தவர் கைகளில் தினமலர் பேப்பர்! தினமலரின் தேர்தல் களம் எனப்படும் தேர்தலுக்காக கொண்டு வரப்படும் சிறப்பு மலரின் முதல் பக்கத்தில் ’’திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதியால் கொந்தளிப்பு’’ என்ற பெயரிட்டு, பிராமண சங்கத் தலைவர் தொடங்கி எட்டு சாதியப் பற்றாளர்களிடம் காரகாரசாரமாக பேட்டி வாங்கியும் போட்டிருந்தது தினமலர். திமுக தேர்தல் அறிக்கை குறித்த அந்த அம்சத்தை குதர்க்கமான வழிகளில் புரிந்து கொண்டு அவர்களும் தினமலரின் நோக்கத்திற்கு ஏற்ப.

# இது அமுங்கி கிடக்கும் ஆணவக் கொலைகளை அதிகப்படுத்தும்

# இது ஆபத்தானது, புதுப் புதுப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

# இது சாதிய மோதலை அதிகரிக்கும்.எந்த சமூகமும் இதை ஏற்காது.

# அய்யகோ….சமூக அமைதியை கெடுக்க கூடாது.

# விபரீதம் புரியாத அறிவிப்பு,ஆகவே உடனே வாபஸ் வாங்க வேண்டும்.

# அமைதி பூங்காவான நாட்டை சீர்குலைக்கும் முயற்சி.

# இத்தைய திட்டங்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

# இது இந்து சமூகத்தை ஒன்று சேரவிடாமல் தடுக்கும் திட்டம்.

என குமுறி தீர்த்துள்ளனர். இவ்வளவு தூரத்திற்கு ஒன்றரைப் பக்கத்திற்கு எதிர் கருத்துகளை விலாவாரியாக போட்டுவிட்டு, காங்கிரஸ் கோபண்ணாவிடமும், திமுக கான்ஸ்டண்டைன் ரவீந்திரனிடமும் ஏழெட்டு வரிகளில் சிறு விளக்கம் வாங்கப்பட்டு பிரசுரித்திருந்தது தினமலர். அதாவது பெரு நெருப்பை பற்ற வைத்துவிட்டு, இரண்டு சொம்பு தண்ணீரை இறைத்துவிட்டும் செல்லும் குயுக்தி அரசியலை தினமலர் திட்டமிட்டு செய்கிறது! இதற்கு பிறகே சமூக வலைத் தளங்களில் திமுக, காங்கிரஸுக்கு எதிரான கொந்தளிப்புகள், குமுறல்கள் அணிவகுத்து மக்களை குழப்ப தொடங்கிவிட்டது.

உண்மையில் இது தான் திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

இதே போல காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும், கலப்பு திருமண ஜோடியில் ஒருவர் தாழ்த்தப்பட்டவர் அல்லது பழங்குடியினத்தவராக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு மூன்று லட்சம் தரப்படும் என்றும், ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்றப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இவற்றில் எந்த கெடு நோக்கமும் இல்லை. தீண்டாமை கொடுமைக்குள்ளாகும் சமூகத்தை அரசு அங்கீகரிப்பதன் மூலம் தீண்டாமைத் தீமைகளை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கலாம் என்று தான் தோன்றுகிறது. ஏனெனில், இன்றும் தீண்டாமையில் இருந்து விடுபட முடியாதவர்களாக பலர் உள்ளனர்.

மாகாத்மா காந்தியே இதைத் தான் அதிகம் வலியுறுத்தி வந்தார். காந்தியின் வேண்டுகோளை ஏற்று அன்று அனேக பிராமண சமுகம் உள்ளிட்ட உயர்சாதியை சேர்ந்தவர்கள் தாழ்த்தப் பட்டவர்களை திருமணம் செய்து கொண்டனர். அதில் குறிப்பிடத்தக்கவர் திண்டுகல் காந்தி கிராம பல்கலைக் கழகத்தை நிறுவிய டாக்டர் செளந்திரம் அம்மையார்! பிராமணகுலத்தவரான டி.எஸ்.செளந்திரம் தாழ்த்தப்பட்டவரான ஜி.ராமச்சந்திரனை கைப்பிடித்தார். இவர்களிருவரின் லட்சிய வேட்கையில் உருவானது தான் இந்தியாவிற்கே பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் திண்டுக்கல் காந்தி கிராம் பல்கலைக் கழகம்! இவர்களைப் போல ஏராளமானவர்களை உதாரணம் சொல்லிக் கொண்டு போகலாம்! காந்தி அவர்களே ‘’என்னை தங்கள் திருமணத்திற்கு அழைப்பதாயிருந்தால்- நான் அந்த திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால் – ஜோடிகள் இருவரில் யாரேனும் ஒருவர் ஹரிஜனாக இருந்தால் மட்டுமே நான் வருவேன். அப்படிப்பட்ட திருமணத்தை நானும், என் மனைவியும் முன் இருந்து நடத்தி வைப்போம்’’ என்று சொல்லி அவ்வாறே செய்தார்!

ஆகவே, உன்னத நோக்கத்திற்கானதை கொச்சைப் படுத்தக் கூடாது. நமக்கு உடன்பாடில்லை என்றால், நமக்கான வழியில் நாம் செல்ல வேண்டுமே அல்லாது, நாம் விரும்பியபடி தான் சமூகம் இருக்க வேண்டும் என்று நிர்பந்தித்து சமூகத்தை கட்டிப் போடக் கூடாது!

கேரளாவிலும் கூட கலப்பு மணம் செய்பவர்களுக்கு அந்த அரசு ரூ75,000 ஊக்கத் தொகையாகத் தருகிறது. அந்த தம்பதிகளுக்கு அச்சுறுத்தல் இருக்கும் பட்சத்தில் அவர்கள் தற்காலிகமாகத் தங்க இடவசதியும் செய்து தரப்படுகிறது.

அவ்வளவு ஏன் தமிழக பாஜக தலைவரான எல்.முருகன் அவர்களே, ”கலப்பு திருமணத்திற்கான ஊக்கத் தொகையை ஹரியானா அரசைப் போல இரண்டரை லட்சமாக உயர்த்தி தர வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

என்னைப் பொறுத்த வரை கலப்பு திருமணத்தை விரும்புவதும்,வேண்டாம் என்று தவிப்பதும் அவரவர் விருப்பம். இரண்டுக்குமே உரிமை உள்ளது. கலப்பு திருமணம் செய்பவர்களை அரசு ஊக்குவிப்பது தவறல்ல. பாரட்டப்பட வேண்டியதே! ஆனால், அதற்கு பணம் தருகிறேன் என்பதை தவிர்க்கலாம்! இது போன்ற உன்னத விஷயத்தை பணம் கொடுத்து ஊக்குவிப்பதாக அரசே அறிவித்தால், அதை தவறான நோக்கங்களுக்கு பயன்படுத்தி, பணம் பெற்றுக் கொண்டு பிறகு திருமணத்தை முறித்துக் கொள்ளும் கெடு நோக்கம் உள்ளவர்கள் இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் வழி வகுக்கும். கலப்பு திருமணம் செய்பவர்களை அரசு அங்கீகரிக்கும், பாதுகாக்கும் என்பதே போதுமானது! அவர்களுக்கு தீங்கு விளைவித்தால் கடும் தண்டனை என்றால், அது நியாயமானது. எல்லா நல்ல நோக்கங்களையும் பணத்தைக் கொண்டு தான் ஊக்குவிக்க வேண்டும் என்பதில்லை. கலப்பு மணம் என்பது இயல்பான காதலின் விளைவாக மலரட்டும். அது பணம், நகை, பரிசு என்பதெற்கெல்லாம் அப்பாற்பட்டதாக விளங்கட்டும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time