கலங்க வைக்கும் கடைசி வைஸ்ராயின் மனைவி !

-பீட்டர் துரைராஜ்

இந்திய- பாகிஸ்தான் பிரிவினை காலகட்டத்தின் அரசியல் நகர்வுகள், சுதந்திரம் கிடைத்த சூழல், அகதி முகாம், அதிகார மாற்றம், மௌண்ட் பேட்டன், காந்தி மரணம், இலட்சக்கணக்கான   மக்களின் இடப்பெயர்வு குறித்து மட்டுமின்றி மவுண்ட் பேட்டன் மனைவி எட்வினாவிற்கும், நேருக்குமான – வெளியில் சொல்லப்படாத – அந்தரங்க உறவுகள் எப்படி ஆச்சரியம் தரத்தக்க வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது என்பதை பார்க்க வேண்டும்…!

‘The last Vicereine’ என்ற நூல், இந்தியா – பாகிஸ்தானின் எழுபதாவது  சுதந்திர ஆண்டு விழாவின்போது வெளிவந்த  ஆங்கில நூல். “கடைசி வைஸ்ராயின் மனைவி” என்ற பெயரில் நற்றிணை பதிப்பக வெளியீடாக கடந்த ஆண்டு(2020) தமிழில் வெளிவந்துள்ளது. ரியனான் ஜென்கின்ஸ் ஸேங் (Rhiannon Jenkins Tsang) என்ற பெண்மணி எழுதிய இந்த நாவலை பத்மஜா நாராயணன்  மொழிபெயர்த்துள்ளார். இதற்காக  சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருதை, வாசகசாலை கடந்த ஆண்டு (2020) பத்மஜா நாராயணனுக்கு  வழங்கியுள்ளது.

இந்திய-பாகிஸ்தான் பிரிவினை காலம் குறித்த எண்ணற்ற நூல்கள் வெளிவந்துள்ளன. இந்த நூலும் கொந்தளிப்பான அந்தக் காலக் கட்டத்தைதான் (1946- 1948) பேசுகிறது; ஆனால், இந்தியா மீது பரிவு கொண்ட  ஒரு ஆங்கில மாது பார்வையில் பேசுகிறது. எனவே மேல்மட்டத்தில் நடந்த,  வெளியில் சொல்லப்படாத பல சம்பவங்கள் இதில் வருகின்றன. இது நாவல்தான். ஆனாலும் கதாப்பாத்திரங்கள் வழியாக, வரலாற்றுச் சம்பவங்கள் பேசப்படுகின்றன. இதை படித்து  முடிக்கையில் இது நாவலா, வரலாறா  என்று பிரித்துணர்வது கடினம்.  நூலாசிரியர் நம்மை வைஸ்ராய் இல்லத்திற்கும், யார்க் சாலைக்கும் (இப்போது மோதிலால் நேரு சாலை)  அழைத்துச் செல்கிறார். வரலாற்றின் மூலச் சுவையை  உணரும்  வண்ணம்  (376 பக்கம்/ ரூ430)  நூல் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.

மௌண்ட்பேட்டன்  தன் மனைவி எட்வினா, மகள் பமீலா இவர்களோடு இந்தியா வந்து வைஸ்ராயாக பொறுப்பேற்றுக் கொள்கிறார். மௌண்ட் பேட்டன், எட்வினா இவர்களுக்குள் இணக்கமான உறவு இல்லை. மேற்கத்திய கல்வி பெற்ற, ஜனநாயக விழுமியங்கள் மீது நம்பிக்கை கொண்ட,   இந்தியாவின் இடைக்கால பிரதமர் நேருவிற்கு, எட்வினா ஏற்கனவே அறிமுகம் ஆனவர். எட்வினா- நேரு இவர்களுக்குள் ஒரு நெருக்கமான புரிதல் இருந்திருக்கிறது. இது குறித்தும் இந்த நாவல் பேசுகிறது.

எட்வினாவுடன் பள்ளியில் படித்த அவரது வகுப்புத்தோழியான  லெட்டி வாலஸ் (கற்பனைப் பாத்திரம்),  அவரது உதவியாளராக, அவரோடு இந்தியா வருகிறார். அவர் சொல்வது போலத்தான் கதை நடக்கிறது. அவருக்கு  மௌண்ட் பேட்டன் – எட்வினா இவர்களுக்குள் இருந்த பூசல், நேரு- எட்வினா இவர்களுக்குள் இருந்த பழக்கம், அதிகார மாற்றம்  குறித்து தெரிந்திருக்கிறது. வைஸ்ராயின் மனைவியான எட்வினாவின் உதவியாளராக இருந்த அவள் தன்னுடைய கடிதங்கள், நாட்குறிப்புகள் வாயிலாக அன்றைய வரலாற்றைச் சொல்லுகிறாள். வித்தியாசமான பல சம்பவங்கள் இந்த நாவல் வழியாக நமக்கு உணர்த்தப்படுகின்றன. வாசிப்பு அனுபவத்தை தரும் நூல் இது.

இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக இருந்த மௌண்ட் பேட்டன் மனைவி எட்வினா இறந்த போது (1960), பிரதமராக இருந்த நேரு,  இந்தியாவின் போர்க்கப்பலை அனுப்பி, சாமந்தி மலர்களைக் கடலில் தூவி இறுதி மரியாதை செய்தார்.

நேரு எட்வினாவிற்கு நிலவிய உறவை, ஒரு உதவியாளருக்கு உரிய கண்ணியத்தோடு நாவல் சித்தரிக்கிறது. ஒரு மனிதனாக நேருவின் உணர்வு குறித்து,  அவர்மீது  நமக்கு இரக்கமே வருகிறது. அவரை இந்த நூல் தப்பிதமாக சித்தரிக்கவில்லை என்றே கருதுகிறேன்.எட்வினா இறந்த அன்று, லெட்டி வாலசிடம் தன் உணர்வுகளை நேரு  பகிர்ந்துகொள்ளும் இறுதி அத்தியாயத்தில் நான் ஏறக்குறைய அழுதுவிட்டேன்.(நேரு சிறையில் இருந்த  ஒன்பது வருடத்திற்கு  ஈடான தியாகம்தானோ இதுவும் ?)

நேரு – எட்வினா கடிதங்களை பொதுமக்கள் பார்வையிட அனுமதியில்லை.நேரு, தினம் இரு கடிதங்கள் கூட எழுதியிருக்கிறார். நூலின் ஆரம்பம் முதல் இறுதிவரை இருவருக்கும் உள்ள உறவை  கவித்துவமாக படைத்துள்ளார் நூலாசிரியர். தன் துணைக்கு அவர் எடுத்துள்ள ஆதார நூல்கள், இப்படித்தான் இருந்திருக்க முடியும் என்று சொல்லுகிறதோ என்னவோ ?

இந்த நூல் எழுதியது குறித்து உங்கள் மொழி பெயர்ப்பு அனுபவத்தை சொல்லுங்கள்  என்று அதன்  பத்மஜா நாராயணனிடம் கேட்ட போது ” இந்த நூலை மொழிபெயர்க்கும்படி நற்றிணை என்னை கேட்டுக்கொண்டது.மூன்று மாதங்களில் இதனை முடித்து விட்டேன். இதனை படிக்கையில் கோபம், ஏமாற்றம் என பலவிதமான உணர்ச்சிகளுக்கு ஆளானேன். இந்தியாவைப் பற்றி ஏதும் அறியாத, இந்தியாவிற்கு வந்திராத  ராட்கிளிஃப் – இடம் இலட்சக்கணக்கான மக்களைப் பற்றி எந்த அக்கறையும் இன்றி, குறுகிய காலத்தில் இந்தியா – பாகிஸ்தான் என பிரிக்கச் செய்த ஆங்கிலேய அரசை என்னவென்று சொல்லுவது ? எட்வினா நேருவிற்கு எழுதிய கடிதத்தை லெட்டி வாலஸ் எடுத்துச் செல்லும் போது, வழிப்பறி செய்ய வைத்து, கடிதத்தைத் திருப்பித் தர ஜின்னா போடும்  நிபந்தனை பற்றிய அத்தியாயத்தை படிக்கையில் கோபம் வந்தது.

லெட்டி வாலசை மணந்துகொண்ட, நேருவோடு படித்த, அவரது பக்கத்து வீட்டுக்காரரான ஹரி ரதோர் யாராக இருக்கும் என கூகுளில் தேடிப்பார்த்தேன். இதை எழுதிய ரியனான் ஜென்கின்ஸ் ஸேங் உடன் டிவிட்டரில் தொடர்பில் இருக்கிறேன். அவரோடு பேச வேண்டும். இந்த நாவலை    மொழிபெயர்த்தது ஒரு நல்ல அனுபவம்”  என்றார். சென்னையைச் சார்ந்த பத்மஜா, பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிகிறார்.

இந்த நாவல் மௌண்ட் பேட்டன் இந்தியா வந்ததில் இருந்து தொடங்கி, அவர்கள் மீண்டும் இங்கிலாந்து திரும்புவது வரை நடக்கிறது. அக்கால  தில்லி நம் கண் முண்ணே வருகிறது. தனக்கு கிடைக்காத வாழ்க்கை, தன்னோடு வந்த லெட்டிக்கு கிடைப்பதை எட்வினாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனம் புழுங்குகிறாள். தான் பயன்படுத்திய குளிர்சாதன பெட்டியை தனக்கு அடுத்து கவர்னர் ஜெனரலாக வரும் ராஜாஜி பயன்படுத்திக் கொள்ளட்டும் என்று பெருந்தன்மையோடு மௌண்ட் பேட்டன் விடுகிறார் !

இரண்டு யானைகளை மதம் பிடிக்க வைத்து அவைகளை கவர்னர் ஜெனரலுக்கு முன் சண்டை போட வைக்கும்  ராஜாவைப் பார்க்கிறோம். மௌண்ட் பேட்டன் பதக்கங்களை எடுத்து வருவதற்காக புதுதில்லிக்கு தனிவிமானம் அனுப்பும் கதையை காண்கிறோம். ஷாஜகானிடம் தளபதியாக இருந்தவனின் வாரிசான ஜமுரத் கான், வைஸ்ராய் இல்லத்தில் பணிபுரிவதை, பிறகு  லெட்டியிடமே தங்குவதை பார்க்கிறோம். இந்தியாவைவிட்டு எட்வினாவோடு விரைவில் வெளியேற வேண்டும் என்பதற்காக, முன்னதாகவே  மாற்றப்படும்  சுதந்திர நாள் என்பவையெல்லாம் நாவலின் போக்கில் வருகின்றன.புத்தகத்தின் அட்டைப்படமும்  கதை சொல்லுகிறது.

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time