சாராயம், மின்சாரம், தகிடுதத்தம் தங்கமணி வெல்வாரா..?

-சாவித்திரி கண்ணன்

ஒரு பக்கம் மதுவாலும், மற்றொரு பக்கம் மின் துறையில் 1,73,000 கோடி நஷ்டத்தாலும் தமிழகமே தள்ளாட காரணமானவர் அமைச்சர் தங்கமணியே! இந்த வகையில் தங்கத் தமிழகத்தை தகரத் தமிழகமாக மாற்றியதில் தன்னகரில்லா சிறப்பிடம் தங்கமணிக்கு உண்டு!

சாதாரண அதிமுக ஒன்றிய செயலாளராக இருந்த தங்கமணி இன்று ஒட்டு மொத்த நாமக்கல் மாவட்டத்தையும் விலைபேசி வாங்கும் அளவுக்கு செல்வச் செழிப்பில் மலைபோல விஸ்வரூபமெடுத்து கரன்சிகளைக் கொண்டு வெற்றியை கைப்பற்ற துடிக்கிறார்…!

குமாரபாளையம் தொகுதி ஏழை,எளிய உழைப்பாளி மக்கள் நிறைந்த தொகுதி! ஒரிரு கைத்தறிகளையோ, விசைத்தறிகளையோ வைத்துக் கொண்டு நாளெல்லாம் பாடுபட்டு கஞ்சியோ, கூழோ உண்டு கவரவத்துடன் வாழும் மக்கள் நிறைந்த ஊர்! இன்றோ, அவர்கள் வாழ்க்கையும் தறிகெட்டு உள்ளது!

ஜி.எஸ்டி வரி ஒருபுறம் சிதைத்தது ஜவுளித் தொழிலை! கொரோனா மறுபுறம் கொன்றது வாழ்வாதாரத்தை! அந்த நேரத்திலும் அமைச்சர் வேலுமணி அதானியுடன் சேர்ந்து கல்லா கட்டுவதில் தான் குறியாக இருந்தார். ஒரு யூனிட் மின்சாரம் ஓபன் மார்க்கெட்டில் 4.55 பைசாவிற்கு தாராளமாக கிடைக்கிறது. அதை தருவதற்கு நான், நீ என்று உள்ளூரிலேயே பல பேர் காத்துக்கிடக்க, அதானியிடம் ஒபன் டெண்டரே இல்லாமல் ஏழு ரூபாய் ஒரு பைசாவிற்கு சோலார் மின்சாரம் 645 மெகாவாட் கொள்முதல் செய்தார். அதுவும் 25 வருடத்திற்கான ஒப்பந்தம் வேறு. அந்த சோலார் இன்று ஒரு யூனிட் ரூ 2.90 க்கு குறைந்துவிட்ட நிலையிலும், அதானியிடம் அதே பழைய ரூ7.01க்கு தான் வாங்கப்பட்டு வருகிறது. தொழிலதிபர் அதானி மோடிக்கும், அமித்ஷாவிற்கும் வேண்டப்பட்டவர் என்பதால், இதன் மூலம் தங்கமணி மத்திய ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கும், நெருக்கத்திற்கும் உரியவராகிவிட்டார்.

” நாகப்பட்டிணம் மாவட்டம் பிள்ளை பெருமாள் நல்லூரில் ஒரு தனியார் மின் உற்பத்தி நிலையம். 330 மெகாவாட் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. வெளி மார்க்கெட்டில் ரூ3.50க்கு பெற முடிந்த ஒரு யூனிட் மின்சாரம் அவர்களிடம் ரூ 11.85 லிருந்து ரூ 21.80 பைசா வரையிலும் வாங்கப்பட்டுள்ளது! அதுவும், இவர்கள் கடந்த ஐந்தாண்டாக மின் உற்பத்தி செய்து தராத நிலையிலும், அவர்களிடமிருந்து மின்சாரம் துளியளவும் பெறாத நிலையிலும்- அவர்களுடனான ஒபந்தம் 2016 லேயே முடிந்துவிட்ட நிலையிலும், அவர்களுக்கு வாங்காத மின்சாரத்திற்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இந்த மாதிரியான பற்பல முறைகேடுகளால் தமிழக மின்சாரத் துறையை 1,73,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் தள்ளிவிட்டார் தங்கமணி’’ என்கிறார். தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பின் தலைவர் காந்தி.

கடந்த பத்தாண்டுகளில் ஒரு யூனிட் மின்சாரத்தைக் கூட கூடுதலாக உற்பத்தி செய்யவில்லை, தமிழக மின்துறை! தமிழக மின் பயன்பாட்டில் தமிழக அரசின் பங்களிப்பு வெறும் 30 சதவிகிதம் தான்! மற்றவை சிறிது மத்திய அரசிடமிருந்தும், பெருமளவு தனியாரிடமிருந்தும் தான் கொள்முதல் செய்யப்படுகிறது. மின்சாரத்துறையின் ஒவ்வொரு அசைவிலும், கமிஷன், கரப்ஷ்ன் என்று ஊழல்மயப்படுத்தி மின் துறையை மீள முடியாத கடனில் தள்ளியுள்ளார் தங்கமணி.

மின் துறையில் பணியாற்றும் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு சரியாக சம்பளம் தரமுடியாத நிலைமை தோன்றியுள்ளது. அவர்கள் சரண்டர் செய்த விடுமுறை நாட்களுக்கான ஊதியத்தை தர மறுக்கிறார்கள். பல்லாயிரம் தொழிலாளர்களை பத்தாண்டுகளாக பணி நிரந்தரப்படுத்தாமல் ஒப்பந்த தொழிலாளர்களாக அடிமாட்டுச் சம்பளத்திற்கு வைத்துள்ளனர்.

இன்றைக்கு தமிழக மக்களின் மிகப் பெரும் பிரச்சினையாக இருக்கும் தாறுமாறான மின்கட்டணத்திற்கும், தாங்க முடியாத மின்கட்டணத்திற்கும் காரணமானவர் தங்கமணி தான். முன்னூற்று சொச்சம் மின்கட்டணம் கட்டிய குடும்பம் தற்போது 1,500 அளவுக்கு கட்ட வேண்டியதாகிவிட்டது. ஸ்லாப் அமைப்பு முறையால் மக்கள் திணறுகிறார்கள். மின்கட்டணம் கட்டமுடியாமல் பல சிறு,குறுந்தொழில்கள் சிதைந்து போயுள்ளன. ஆகவே, தன் தொகுதியில் மட்டுமின்றி, அதிமுகவுக்கு தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தங்கமணியால் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் உயர் அழுத்த மின் கோபுரங்களையும், மின் கம்பிகளையும் விவசாய நிலங்களில் அமைத்துள்ளதால் விவசாயமும், விவசாயிகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஹைவோல்ட் மின்சாரம் நிலத்தின் கீழ் விவசாய பணிகளை செய்யமுடியாத அளவுக்கு வீரியமாக இருப்பதால் விவசாயிகளும்,கால் நடைகளும் உடல் நலிவுற்று தவிக்கின்றனர். அந்த உயர் அழுத்த மின் கம்பிகளின் கீழ் டியூப் லைட்டை பிடித்துக் கொண்டு நின்றால் பல்ப் தானாக எரியும் அளவுக்கு கதிர்வீச்சு உள்ளது!

இதற்கு மாற்றாக கேரளாவில் செய்வதை போல நிலத்திற்கு அடியில் உயர் அழுத்த மின்கம்பிகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்று விவசாயிகள் போராடி வருகின்றனர். இதற்கு தமிழக அரசும், தங்கமணியும் செவி சாய்க்கவே இல்லை. இதன் விளைவை கண்டிப்பாக இந்த தேர்தலில் சந்தித்தேயாக வேண்டும்.

குமாரபாளையம் தொகுதி மக்களின் பல அடிப்படைத் தேவைகள் கூட இன்னும் நிறைவேற்றப்படாத நிலை நிலவுகிறது. காவிரி பாயும் விவசாய பூமி சாயப்பட்டறை கழிவு நீர் கலப்பதால் விவசாயம் வீழ்ந்துப்பட்டுள்ளது. குடிநீரும் மாசுபட்டுள்ளது. ஆகவே, இது முக்கியமான வாழ்வாதாரம் மற்றும் சுகாதாரப் பிரச்சினை. இதற்கு தீர்வாக சாயப் பட்டறைக் கழிவுகளை முறையாக சுத்திகரிக்க, மத்திய அரசும், மாநில அரசும் பெரும் நிதி ஒதுக்கியும் ஏனோ அந்த திட்டம் வடிவம் பெறவில்லை. இதிலெல்லாம் தங்கமணிக்கு ஒரு சிறிதும் அக்கரை இல்லை! பணம்,காசு,துட்டு,மணி,மணி… என்று சதா அலைபாய்பவருக்கு விவசாயம்,, வீழ்ந்தால் என்ன? நெசவு நலிந்தால் என்ன..? குடிநீர் மாசுபட்டால் என்ன? பசி பட்டினியில் ஏழை,எளியோர் துடித்தால் தான் என்ன? மகனை அரசியல் வாரிசாக்கவும், மருமகனை வசூல் ராஜாவாக்கவும், மாப்பிள்ளையை பல தொழில்களில் பினாமியாக்கவும், சம்பந்தியின் தேவைகளை சரிகட்டவுமே நேரம் சரியாகப் போய்விடுகிறது என்கிறார்கள் தொகுதிவாசிகள்.

2016 தேர்தலின் போது கரன்சிகளை அள்ளி இறைத்து அபார வெற்றி பெற்றார். அதே பார்முலாவில் இந்த தேர்தலிலும் வெற்றியை விலை பேச முடியும் என்ற அசாத்திய நம்பிக்கையுடன் அசால்டாக தொகுதியில் வளம் வருகிறார் தங்கமணி.

பாஜகவில் சீட்டுகிடைக்காததால் தனியாக களம் கண்டுள்ளார் ஓம்.சரவணா என்ற தொழில் அதிபர். பிரபல கல்வி நிறுவனங்களின் சேர்மனான இவர் கடந்த ஐந்தாண்டுகளாக தொகுதியில் தீவிரமாக களப் பணிகள் செய்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வலம் வந்த நிலையில், தற்போது துணிந்து சுயேட்சையாக களம் கண்டுள்ளார். இதனால், அதிமுக கூட்டணிக்கு கிடைக்கும் ஓட்டுகள் சற்று சேதாரமடையும் எனத் தெரிய வருகிறது!

அமமுக கூட்டணியில் தேமுதிகவின் சிவசுப்பிரமணியன் களம் காண்கிறார். இவரும் அதிமுகவிற்கு செல்லும் கணிசமான ஓட்டுகளை பிரிப்பார் எனத் தெரிகிறது.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்றார் ஜெயலலிதா. அதன்படி முதலாம் ஆண்டு 5,00 கடைகளை குறைத்தார். அவர் மறைவுக்கு பிறகு, அதே போல ஒவ்வொரு ஆண்டும் 5,00 கடைகள் குறைக்கப்பட்டு இருக்க வேண்டும். மது கலாச்சார சீரழிவின் வீரியம் மட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்! தமிழக தாய்மார்களின் கண்ணீர் துடைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், டாஸ்மாக் மது விற்பனை 30,000 கோடி ரூபாய்க்கும் அதிகமானது தான் நடந்தது. இளம் விதவைகள் இரண்டு மடங்கு பெருகியது தான் கண்ட பலன். இதற்கான விளைவையும் இந்த துறைக்கான அமைச்சர் தங்கமணி இந்த தேர்தலில் சந்தித்தே ஆக வேண்டும். இத்தனை கெடுதல்களுக்கு காரணமான ஒரு பணமுதலையை மக்கள் வீழ்த்தாமல் தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்வார்களா என்ன?

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time