கொரானாவை மீறி 15 கோடி பேர் பங்கேற்கும் ஹரித்துவார் கும்பமேளா!

-சாவித்திரி கண்ணன்

இந்தியாவின் மாபெரும் நிகழ்வான ஹரித்துவார் கும்பமேளா ஏப்ரல் ஒன்று தொடங்கி முப்பது நாட்கள் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக தற்போதே உத்திரகாந்த் மாநிலத்தின் ஹரித்துவாரில் 32 லட்சம் பேர் வந்து குழுமியுள்ளனர். இந்த 30 நாட்கள் நிகழ்வில் 12 முதல் 15 கோடி வரைக்குமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 12 வருடங்களுக்கு மட்டுமே நடக்கும் கும்பமேளா என்பதால் மக்களின் எதிர்பார்ப்பும், ஆர்வமும் எல்லை மீறியதாகவே இருக்கும் என நம்பப்படுகிறது!

இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது என சொல்லப்படுகிறது. மாகாராஷ்டிரத்தில் ஒரே நாளில் 30,000 பேர் பாதிக்கப்படுவதான செய்திகள் வருகின்றன. இதனால் இரவு நேர ஊரடங்கு சில இடங்களில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஹரித்துவாரில் பெரும் மக்கள் திரள் கூட அனுமதித்தால் கொரானா பாதிப்பு எல்லை கடந்து எகிறிவிடும் என்ற எச்சரிக்கை மருத்துவத் துறை தரப்பில் தொடர்ந்து அரசுக்கு சொல்லப்பட்டு வருகிறது.

கட்டுக்கடங்கா கூட்டம், கட்டுப்படுத்த முடியாத அரசாங்கம்..! உணர்ச்சிகரமான பக்திப் பரவசம்..என்ன நடக்கப் போகிறது..ஹரித்துவாரில்? கொரானா பரவலை தடுக்க என்ன செய்யப் போகிறது அரசாங்கம்..?

முதலில் மருத்துவத் துறையின் இந்த எச்சரிக்கையை சீரியசாக எடுத்துக் கொண்டு கும்பமேளாவிற்கு வருபவர்கள் கொரானா நெகடிவ் மருத்துவ சான்றிதழை காட்ட வேண்டும் என்றது உத்திரகாண்ட் அரசு. ஆனால்,மட்டுமீறிய கூட்டம் வரும் போது அதை கேட்கமுடியாது என்பது விரைவில் தெரிய வந்ததும் அந்த அறிவிப்பு வாபஸ் ஆனது.

ஆனால், உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்னென்னவோ கறாரான விதிமுறைகள் எல்லாம் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்றனர். ஆனால், அதில் எது ஒன்றையுமே பின்பற்ற சாத்தியமில்லை என்பது அனுபவமாயிற்று. கண்மூடித்தனமான பக்தர்கள், ஆக்ரோசமான அகோரிகள்..போன்றோர்களின் முன்பு எதுவுமே எடுபடவில்லை. உதாரணத்திற்கு முகக் கவசம் இல்லாமல் யாரும் நடமாடக் கூடாது என சட்டம் போட்டார்கள். ஆனால், அகோரிகளோ, முழு உடலையும் மூடாமல் நிர்வாணமாக அலைகின்றனர். கையில் சூலாயுதம் போன்றவைகளை வைத்திருக்கும் அவர்களை நெருங்கவே அதிகாரிகள் அஞ்சுகிறார்கள்.

கடைசியாக 2010ல் கும்பமேளா நடந்த போது சுமார் 10 கோடி பக்தர்கள் திரண்டனர். தினமும் லட்சக்கணக்கானோர் புனித நீராடினார்கள் எனினும் ஏப்ரல் 14 அன்று ஒரே நாளில் மட்டும் ஒரு கோடி பக்தர்கள் கங்கையில் குளித்தனர். இப்படிப்பட்ட சமயங்களில் நெரிசல்களில் ஒவ்வொரு கும்பமேளாவிலும் பலர் சாவது வாடிக்கையான நிகழ்வாகவும் உள்ளது. கங்கை படுபயங்கரமாக அசுத்தமாகிவிடுவதும், அதுவே நோய் தொற்றலுக்கு காரணமாகிவிடுவதும் தவிர்க்க முடியாத நிகழ்வுகளாக உள்ளன.

1891 ஆம் ஆண்டு நடந்த கும்பமேளாவில் காலரா காரணமாக 1,69,013 பேர் இறந்துள்ளனர். பிறகு மீண்டும் 1945 ல் நடந்த கும்பமேளாவில் 77,345 பேர் அன்றைய காலரா பரவலால் இறந்துள்ளனர். இதையெல்லாம் சுட்டிக் காட்டி கொரானா தீவிரமாகும் போது, இந்த மெகா கும்பமேளா தேவையா..? என்று யாரும் கேட்க முடியாத ஒரு சூழல் உள்ளது. அப்படி நடத்தாவிட்டால் நாட்டுக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சமும் இந்துக்களிடையே நிலவுகிறது! ஆகவே, மிகுந்த கட்டுபாடுகள் கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டது. ஆனால்., நடைமுறையில் எதுவும் சாத்தியப்படவில்லை மக்கள் திரள் பெரும் வெள்ளமென திரண்டு வரும் இடங்களில் டெஸ்டுகள், தனிமைபடுத்தல்கள் முற்றிலும் சாத்தியமில்லை என்பதே நடைமுறை அனுபவமாக உள்ளது.

சரி, மாநில அரசு என்ன ஏற்பாடுகள் செய்துள்ளது என கேட்கப்பட்டதற்கு, ‘’ஏற்கனவே, 389 பொதுக் கழிப்பறைகள் உல்லன. மேலும் கூடுதலாக 217 உருவாக்கப்பட்டுள்ளது! அதே சமயம் தற்காலிக கழிப்பிடங்கள் 11,807 உருவாக்கப்பட்டுள்ளது. 1,670 பாத்ரூம்களும் உருவாக்கப்பட்டுள்ளது. 6,674 சிறுநீர் கழிப்பிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளது’’ என அரசு தெரிவித்துள்ளது. இவை கூடப் போகும் 15 கோடி மக்கள் தொகைக்கு மிகக் குறைவான ஏற்பாடுகளே! அங்குள்ள ஓட்டல்கள்,லாட்ஜ்களில் அதிகபட்சம் ஐந்தரை லட்சம் பேர் மட்டுமே தங்க முடியும் என தெரிய வருகிறது. மற்றவர்களுக்கு பல்லாயிரக் கணக்கில் டெண்டுகள் போட்டுத் தரப்படவுள்ளது. பலரும் திறந்த வெளி கழிவிடங்களையே பயன்படுத்துவர் என்பதே யதார்த்தம்!

சென்ற ஆண்டு இதே மாதம் சுமார் 2,000 பேர் பங்கு கொண்ட தப்லிக் ஜமாத்தின் ஆன்மீக மீட்டிங் டெல்லி நிஜாமுதீனில் நடந்தது. அரசு எச்சரிக்கையை மீறி அது நடத்தப்பட்டதால் அவர்கள் தான் இந்தியா முழுமையிலும் கொரானாவை பரப்பிவிட்டனர் என்று குற்றம்  சாட்டப்பட்டது. பல இந்து அமைப்புகளும், இஸ்லாமிய துவேஷ பத்திரிகைகளும் வெறுப்புணர்வு பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டனர். இதனால் முஸ்லீம்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாயினர்.

முஸ்லீம்களைக் கண்டாலே அஞ்சும் அளவுக்கு வெறுப்பு பிரச்சாரம் வீரியம் அடைந்தது. தினமணி போன்ற இதழில் மன்னிக்க முடியாத குற்றம் என ஆவேஷமாக தலையங்கம் எழுதப்பட்டது. நாடெங்கும் பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்கள் தப்லிக் ஜமாத்துடன் தொடர்பு இருந்ததாக சந்தேகிக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டனர். பிறகு, இதையெல்லாம் தடுக்கத் தவறிய அரசை உச்ச நீதிமன்றம் கண்டித்தது எல்லாம் கூட நிகழ்ந்தது. அந்த சம்பவங்களை ஒரு முறை நாம் நினைவில் நிறுத்தி பார்த்துக் கொள்வது நல்லது. அப்படிப்பட்ட பத்திரிகைகளும் அரசும் தற்போது எப்படி நடந்து கொள்ளப் போகின்றன என்பதையும் நாம் பார்க்கத் தான் போகிறோம்.

இந்த வருடம் தமிழகத்தில் இருந்து சென்று கலந்து கொள்ள நினைப்பவர்கள் ஒன்றுக்கு பல முறை யோசித்து முடிவு எடுக்க வேண்டுகிறோம். முடிந்த வரை அதிக கூட்டம் கூடுவதை தவிர்ப்பது அனைத்து விதத்திலும் நல்லதே! தகவல் தொழில் நுட்ப வசதி வளர்ந்த நிலையில் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் நாம் இருந்த இடத்தில் இருந்தே காண முடியும்.பிறகு சாவகாசமாக ஒரு நாள் அங்கு சென்று வரலாம். இந்த அறிவுரையை இந்து மதத் தலைவர்கள் மக்களுக்கு எடுத்துச் சொல்லி கூடுமான வரை கூட்டத்தை குறைப்பது உத்தமான செயலாக இருக்கும். எல்லாவற்றையும் கடந்து, எந்த அசம்பாவிதங்களும் இல்லாமல் கும்பமேளா இனிதாக நடந்து முடிய வேண்டும் என்று நாம் நன்மையே நினைப்போமாக!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time