நீதித்துறையின் மீதான பாலியல் புகார்களை நிராகரிப்பதா?

சாவித்திரி கண்ணன்

’’இவர் குற்றமற்றவர், புகாருக்கே முகாந்திரமில்லை.’’ என  விசாரணை செய்யாமலே உடனே தூய்மை சான்றிதழ் அளித்து விடுவிக்கப்பட்டுள்ளார் மத்தியப் பிரதேச நீதிபதி ஒருவர்!

மாவட்ட நீதிபதி ஒருவரால் தான் பாலியல் பாதிப்புக்கு ஆளானதாக நீதித்துறை சார்ந்த பெண்ணின் வழக்கை விசாரித்த மத்தியப் பிரதேச நீதிமன்றம்  அந்த நீதிபதி மீது ஒழுங்கு விசாராணை நடத்த உத்தரவிட்டது.

அந்த நீதிபதியோ, ’’என்னை விசாராணை செய்யக் கூடாது இது என் பதவி உயர்வை பாதிக்கிறது’’ என உச்ச நீதிமன்றத்தில் முறையிடுகிறார்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, ‘’ நீபதிகளின் பதவி உயர்வின் போது இந்த மாதிரியான புகார்கள் தெரிவிப்பது வழக்கமாகிவிட்டது….என கோபமாகக் கூறியதுடன்,அந்த நீதிபதியின் மீதான விசாரணைக்கு உடனே தடையும் விதித்தார்.அத்துடன் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் பதிவாளர் ஜெனரல் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று உத்திரவிட்டுள்ளார்!

இந்தியாவில் யார் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானாலும், அவர் வகிக்கும் பதவி,சமூக அந்தஸ்த்து ஆகியவற்றை வைத்தே அது விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்பது ஒரு தொடரும் துரதிர்ஷ்டமாக உள்ளது.

இதற்கு முன்னதாக பாலியல் குற்றசாட்டுக்கு உள்ளான நமது முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வழக்கை விசாரித்தது அவரது சக நீதிபதிகளான எஸ்ஏ பாப்டே,இந்துமல்கொத்திரா,மற்றும் இந்திரா பானர்ஜி!

அந்த விவகாரத்தில், அந்த புகார் அணுகப்பட்ட விதம்,புகார் தந்த பெண் நடத்தப்பட்ட அணுகுறை…போன்றவை நீதித்துறையின் மீதான சாதாரணமக்களின் நம்பிக்கையை கேள்விக்கு உள்ளாக்கியது…’’ ரஞ்சன் கோகாய் குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டதை எதிர்த்து பெண் வழக்கறிஞர்களே போராட்டம்  செய்தனர்.

பணி செய்யும் இடத்தில் பெண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சினைகளை எப்படி விசாரிக்க வேண்டும்என்று விசாகா கமிட்டியில் தந்துள்ள வழிமுறைகள் ஏன் இந்த வழக்கில் பின்பற்றப் படவில்லை என நீதித்துறை வட்டாரங்களே கவலை தெரிவித்தன. அது தான் தற்போதும் நடக்கிறது.

நீதிபதிகள் கைது செய்யப்படுவதில்லை.

சட்டத்திற்கு முன்னாள் அனைவரும் சமம் என்று நமது அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இது ஓரளவு உண்மை தான்!

நமது நாட்டில் சர்வ வல்லமையுடன் திகழ்ந்த பிரதமரான இந்திராகாந்திக்கு எதிராகத் திர்ப்பு வந்து,அவர் கைதாகி சிறைப்பட்டார்.

முதலமைச்சர்களாக இருந்த லாலுபிரசாத், ஜெயலலிதா, கருணாநிதி போன்றவர்களும் கூட,கைதாகி சிறைப்பட்டுள்ளனர்.

ஆனால்,ஊழல் குற்றசாட்டுக்கோ,பாலியல் புகாருக்கோ உள்ளான எந்த ஒரு நீதிபதியும் இது வரை சுதந்திரம் பெற்றதிலிருந்து தண்டிக்கப்பட்டதில்லை.

‘’தலைமை நீதிபதி மீது புகார் தந்த பெண்ணும்,அவரது குடும்பமும் சந்தித்த தொல்லைகள்,அடக்குமுறைகள் நாம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டது..’’என்று விமர்சனம் வைத்தனர் இந்திரா ஜெய்சிங், சுதா ராமலிங்கம் போன்றதில்லி முதல் சென்னை வரையுள்ள பெண்வழக்கறிஞர்கள்.

இதில் தில்லி பெண்வழக்கறிஞர்களோ தலைமை நீதிபதிக்கு எதிராக கொதித்து போராட்டமே நடத்தினார்கள்.

நீதிபதிகளின் மீதான பாலியல் புகார்கள்

மத்தியபிரதேச நீதிபதி எஸ்.கே. கங்குலி மீதான ஒரு பாலியல் குற்றச்சாட்டும் ராஜ்யசபா வரை சென்று முன்று நீதிபதிகளால் விசாரிக்கப்பட்டு, ’’முகாந்திரமில்லை’’ எனதள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.

2013 ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு புகார் நீதிபதி ஸ்வதந்தேர்குமார் மீது ஒரு பெண்  வழக்கறிஞரால் வைக்கப்பட்டது. அப்போது சம்பந்தப்பட்ட நீதிபதி ஓய்வு பெற்றுவிட்டதைகாரணம் காட்டி,‘’ஓய்வு பெற்ற நீதிபதிகள் மீதான வழக்கை விசாரணைக்கு ஏற்கமாட்டோம்’’ எனக் கூறிவிட்டது உச்சநீதிமன்றம்.ஆனால்,விதி விலக்காக ராஜஸ்தான் நீதிபதி அருண்மதன் என்பவர் மீது ஒரு பெண் மருத்துவர் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டைஅன்றைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியான ஜி பி பட்நாயக் விசாரித்து,அருண் மதனை பதவி விலக வைத்தார்.

நீதித்துறையில் நிராகரிக்கப்படும் பெண்களின் பிரதிநிதித்துவம்

இந்தியாவில் அரசியல் உள்ளிட்ட எல்லா துறைகளிலும் ஆண்களின் ஆதிக்கம் சற்றே தளர்ந்தாலும், நீதித்துறையில் மட்டும் அது மேலோங்கியே உள்ளது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது.

காரணம், பிரதமராக,குடியரசுத் தலைவராக,மக்களவைத் தலைவராக பெண்கள் வரமுடிந்த நமது நாட்டில், இது வரை ஒரு பெண் கூட உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக முடியவில்லை. சுதந்திரத்திற்கு பிறகான46 தலைமை நீதிபதிகளில் யார் ஒருவரும் பெண்ணில்லை. உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக 1989ல் பாத்திமா பீவி பதவி ஏற்றார்..

நாடெங்கும் மொத்தமுள்ள  670  உயர்நீதிமன்ற நீதிபதிகளிலே 73 பேர் மட்டுமே பெண் நீதிபதிகளாக உள்ளனர். அதேபோல இது வரையிலுமான உச்ச நீதிமன்றத்தின் 229 நீதிபதிகளிலே  7 பேர் மட்டுமே பெண்கள்! அதாவது வெறும் 3%  பிரதிநிதித்துவம் மட்டுமே!

நீதித்துறையில் பெண்களின் பிரதி நிதித்துவம் குறைவாக உள்ளதே ஒரு மிகப் பெரிய சமூக அநீதி தான்! அந்த அநீதி களையப்படும் போது தான் பாலியல் ரீதியாக சமநீதியை ஆண் நீதிபதிகள் ஏற்கிறார்கள் என்ற நம்பிக்கை பிறக்கும்! தானே பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபடக் கூடிய நீதிபதியிடம் நாளை பாலியல் பாதிப்புக்கு உள்ளான பெண்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்?

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time