பணம்,அதிகாரம்,அராஜகம்..வேலுமணி வெற்றி பெறுவாரா…?

-சாவித்திரி கண்ணன்

அதிமுக அமைச்சரவையில் ஒருவருக்கொருவர் ஊழலில் சளைத்தவர்கள் இல்லை தான்! என்றாலும் அதில் வேலுமணிக்கு ஒரு தனித்துவமான இடம் உண்டு!

அதிகாரம் என்பதை கேள்விகளுக்கு அப்பாற்பட்ட அடக்குமுறையாகவும் கையாளத் தெரிந்த ஒரு அராஜவாதி வேலுமணி. பணம்,அதிகாரம்,அடக்குமுறை ஆகிய முப்பெரும் ஆயுதங்களுடன் தன்னை எதிர்ப்பவர்களை எந்த எல்லைக்கும் சென்று தாக்கக் கூடியவர். இதற்கு பத்திரிகை துறையிலேயே பல உதாரணங்கள் உள்ளன. கமலஹாசனைக் கூட கப்சிப் ஆக்கிய அனுபவமும் அவருக்குண்டு…!

தமிழ்நாட்டிற்கு யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் என்று சொல்லிக் கொள்ளட்டும். ஆனால், கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டத்திற்கு வேலுமணி தான் முதல்வர். அங்கு அறிவிக்கப்படாத ஒற்றை அதிகார மையம்!

‘காவல்துறையா? அது எனக்கு ஏவல் துறை தான்’ என்பது அவரது நம்பிக்கை!

தாசில்தார் ஆபீஸ் தொடங்கி கலெக்டர் ஆபீஸ் வரை அவர் நினைத்தது நடக்க வேண்டும்.! சொன்னதை கேட்க  வேண்டும். ”ஐயோ.. இது சட்டத்திற்கு புறமானதாச்சே…, ம்கூம் இந்த அநீதிக்கு நான் உடன்படமாட்டேன்’’ என்று டயலாக் பேசி அவருக்கு மாறாக யாரும் நடந்தால் 24 மணி நேரத்தில் டிரான்ஸ்பரை சந்திக்கத் தயாராக வேண்டும். கலக்டரே, ஆனாலும் இதற்கு விதிவிலக்கல்ல! கோவை மாவட்ட கலெக்டர் அர்ச்சனா படநாயக் இப்படித்தான் அதிரடியாக இடமாறுதலுக்கு உள்ளானார்!

ஏன்?, எதற்கு? இது நியாயமா? என எதுவுமே அவரை பொறுத்த வரை செல்லுபடியாகாது.

சட்டங்களுக்கு அப்பாற்பட்டவர். சட்டங்களை மீறுவதற்காகவே அமைச்சர் ஆகி இருக்கிறேன் என்பதே அவரது பாணியாகும்.

”சார், இது வனப் பகுதி. இது பசுமைப் பகுதி இங்கே வியாபார நிறுவனமோ, தொழிற்சாலையோ கூடாது’’ என்றால், அங்கு அதை கட்டிமுடிக்காமல் ஓயமாட்டார்!

கோவை மாநகர் எப்படி பராமரிக்கப்படுகிறது..? என கேட்டால், ‘’குண்டும் குழியுமான சாலைகள், குப்பைகளின் தேக்கம், நாற்றமெடுக்கும் சாக்கடைகள், நலம் கெட்ட வாழ்க்கை…’’ என கோவைவாசிகள் புகார்பட்டியல் வாசிக்கிறார்கள். ’’இந்த புகாரெல்லாம் சொல்ல வேண்டாம். ஓட்டுக்கு எவ்வளவு பணம்? வாங்கிட்டு பேசாம எஞாய் பண்ணு என்கிறார் வேலுமணி! தொழில் நகரமான கோவையில் சமீபகாலமாக புதிய பெரிய தொழிற்சாலைகள் எதுவும் வரவில்லை. வேலுமணிக்கு கப்பம் கட்ட அவர்களுக்கு விருப்பமில்லை என்பதே உண்மை!

கோவை மாவட்டத்தில் எந்த போலீஸ் ஸ்டேசனில் இருக்கும்  எஸ்.பியும், இன்ஸ்பெக்டரும் வேலுமணி பேச்சை மீறமுடியாது. பொள்ளாச்சி விவகாரத்தில் இளம்பெண்களை பாலியல் வக்கிரத்திற்கு ஆளாக்கிய அதிமுக இளைஞர்கள் மீதான எந்த புகாரையும் போலீஸ் பொருட்படுத்தவில்லை என்றால், அது அமைச்சர் வேலுமணியின் கோபத்திற்கு ஆளாகிவிடுவோமோ என்ற பயம் தான். ‘’நான் சொன்னதை மட்டும் கேள் உனக்கு என்ன ஆனாலும் நான் இருக்கேன்’’ என்று அமைச்சர் சொல்லியதைக் கேட்டு நடந்ததால் தான் கோவை மாவட்ட  எஸ்.பி.பாண்டியராஜ் அசிங்கப்பட்டு போனார். பெண்கள் இயக்கங்களின் இடைவிடாத போராட்டத்திற்கு பிறகு பாண்டியராஜை அங்கிருந்து தூக்கியே ஆக வேண்டும் என்று வந்தவுடன் அருகில் உள்ள நீலகிரிக்கு டிரான்ஸ்பர் வாங்கி பக்கத்திலேயே வைத்துக் கொண்டார் வேலுமணி.!

உள்ளாட்சித்துறையை ஒட்டுமொத்த ஊழலாட்சித் துறையாக மாற்றிய அவருடைய வல்லமையை இதற்கு முன் தமிழகம் கண்டதில்லை.

பிளீச்சிங் பவுடரா? பினாயிலா..? தெருவிளக்கிற்கான பல்பா..? எல்லாவற்றிலும் அதீத கமிஷன்,கரப்ஷன் தான். நூறு ரூபாய்க்கான பொருளை 120 அல்லது 140 என்று உயர்த்தி கணக்கு எழுதி ஊழல் செய்ததெல்லாம் அந்தக் காலம்! 20 வாட்ஸ் எல்.இ.டி பல்ப் பொருத்தி இணைப்பு தர ரூ 4,151 செலவு  கணக்கு காட்டும் துணிச்சல் வேலுமணியைத் தவிர்த்து வேறு யாருக்கும் வராது! அதாவது உள்ளபடியே ஆகும் செலவைக் காட்டிலும் பல மடங்கு தான் எது ஒன்றிலும்! தமிழகம் முழுக்க 12 ஆயிரத்து சொச்சம் ஊராட்சிகள், 152 நகராட்சிகள், 15 மாநகராட்சிகள் எனும் போது எத்தனை ஆயிரம் கோடிகள் இழப்பு வரும் என யோசித்தால் தலையே கிறுகிறுக்கும்.

சென்னை மாநகராட்சி என எடுத்துக் கொண்டால் அபரிதமான வருமானம் வரும் நகராட்சி. 2010 ஆம் ஆண்டு செலவைக் காட்டிலும் கூடுதல் வருமானமாக 914 கோடி ரூபாய் ஈட்டிய மாநகராட்சி, தற்போது 3,000 கோடி கடனில் தத்தளிக்கிறது.

உள்ளாட்சி அமைப்புகள், அதற்கான அதிகாரப் பரவல் என்றாலே வேலுமணிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்துவிடும். உள்ளாட்சி தேர்தலை எவ்வளவு நாட்களுக்கு நடத்தாமல் தள்ளிப் போட முடியுமோ..அத்தனை தகிடு தத்தங்களையும் செய்தார்! கடைசியில் உயர் நீதிமன்றம் கடுமையாக எச்சரித்த பின்னரே நடத்தப்பட்டது. அதுவும் ஒரு பகுதி நடத்தப்பதோடு சரி! கடந்த இரண்டாண்டுகளாக பஞ்சாயத்துகளின் கிராம சபைக் கூட்டங்களை நடத்தக் கூட அனுமதியற்ற சர்வாதிகார போக்கு நிலவுகிறது.

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 1000 கோடி ஊழல்! சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை போடுவதில் 600 கோடி ஊழல்! உள்ளாட்சி காண்டிராக்டுகளை எடுத்துச் செய்வதற்கு என்றே ஏழட்டு பினாமி நிறுவனங்களை உறவினர்கள் மூலமாக வைத்திருக்கிறார் என வேலுமணியின் பலதரப்பட்ட ஊழல்களை அறப்போர் இயக்கம் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது. திமுகவும் பல ஆதாரங்களை சேகரித்து கவர்னரிடம் புகார் மனு கொடுத்துவிட்டது. உயர் நீதிமன்றத்தில் அப்பாவு வழக்கும் தொடுத்தார்.எதற்கும் அசரவில்லை வேலுமணி. மத்திய பாஜக ஆட்சியாளர்களின் விசுவாசமான செல்லப்பிள்ளைகளில் ஒருவராம்! அதனால், அவர் மீது துரும்பு கூட விழாத வண்ணம் பாஜக மேலிடம் பார்த்துக் கொள்வதாக ஒரு பேச்சு உள்ளது!

எல்லாவற்றையும்விடக் கொடுமை உள்ளாட்சிகளில் துப்புறவு தொழிலாளர்களாக பத்தாண்டுகளாக பணியாற்றிய போதிலும் கூட இன்னும் காண்டிராக்ட லேபர்களாக – அத்துக் கூலிகளாக – அடிமாட்டுச் சம்பளத்திற்கு பல்லாயிரக்கணகானோர் தொடர்ந்து பணியாற்றும் அவலம் தான்! ரத்தத்தை வியர்வை சிந்திய அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான கூலியைத் தான் வேலுமணியும், காண்டிராக்டர்களும் பாகம்பிரித்து பகல்கொள்ளை நடத்துகிறார்கள்! அவர்களின் சாபமும், இதற்கான பாவமும் வேலுமணியை சும்மாவிடாது.

தமிழக அரசியலை பேசும் யாராலும் வேலுமணியின் ஜனநாயக விரோத செயல்பாடுகள், ஊழல் போன்றவை பற்றிப் பேசுவதை தவிர்க்க முடியாது. ஆனால், கோவையில் களம் காணும் கமலஹாசன் இது வரை வேலுமணி குறித்த எந்த விமர்சனத்தையும் வைக்கவில்லை என்பது கவனத்திற்கு உரியது. இது குறித்து ஒரு சுவாரசியமான பின்னணி உள்ளது! 2017 ஆ ஆண்டு அதிமுக ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது..’’ என்று பொத்தாம் பொதுவாக கமலஹாசன் தெரிவித்தார். அதற்கு வேலுமணியிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு பதில் அளித்த வேலுமணி,  ”கமலஹாசன் இப்படி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் கமலஹாசன் தான் நடித்த படங்களுக்கு எவ்வளவு வரி கட்டியுள்ளார் என்பதை விளக்குவாரா? அல்லது நான்  ஆய்வு செய்ய செய்யட்டுமா…?’’ என்றார் . (ஜீலை 15 2017ல் வெளியான நாளிதழ்களைக் காண்க’) அத்துடன் கப்சிப் ஆனவர் தான் கமலஹாசன். .! ”இதோ இவ்வளவு சம்பளம் வாங்கினேன் .இவ்வளவு வரி கட்டியுள்ளேன்’’ என கமலஹாசனால் பதில் சொல்ல முடியவில்லை. இன்று வரை வேலுமணி பற்றி அவர் வாய் திறக்கவேயில்லை!

தொண்டாமுத்தூர் தொகுதியில் முதலில் ஸ்ரீநிதி என்ற பெண்ணைத் தான் வேட்பாளராக நிறுத்தினார் கமலஹாசன். ஆனால், வேலுமணி எப்படியோ மக்கள் நீதி மையத்தில் ‘லாபி’ செய்து தற்போது முஸ்லீம் ஓட்டுகள் திமுக கூட்டணிக்கு விழாத வகையில் ஷாஜகான் என்ற முஸ்லீமை நிறுத்த செய்துவிட்டார் என்பது ஊரறிந்த ரகசியமாகும். நடிகர். மன்சூர்அலிகானும் வேலுமணி விருப்பத்திற்கு அங்கு சென்றவரே! ஆனால் அங்கு பொதுமக்கள் அவரைவிடாது ”எவ்வளவு பணம் வாங்கிட்டு நிக்கிறீங்க..” என கேள்வி கேட்டதில், ’’வேண்டாம்டா சாமி, தாங்கமுடியலை.’’ என்று ஓடி வந்துவிட்டார்.

சுற்றுச் சூழல் ஆர்வலரும், ஜல்லிக் கட்டு போராட்டங்களை முன்னின்று நடத்தியவருமான கார்த்திகேய சிவ சேனாதிபதி திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவரது நேர்காணல்கள், உரையாடல்களை கவனித்த போது ஒரு தெளிவும், உறுதிப்பாடும் தெரிகிறது. அவருக்கு தொகுதி மக்கள் மத்தியில் நல்ல பெயரும் இருப்பதாக தெரிய வருகிறது. வேலுமணியின் கரன்சிகளையும், அரசு அதிகார பலத்தையும் மீறி இவர் வெற்றி பெறுவது சுலபமான விஷயமல்ல.

வேலுமணிக்கு ஆதரவான ஒரு முழுமையான அரசு கட்டமைப்பு கோவையில் நிலவுவதால் அதை மாற்றாமல் தேர்தல் நியாயமாக நடக்குமா? நடந்தாலும், அதில் தகிடுதத்தங்கள் செய்யாமல் பாதுகாக்க முடியுமா..? என்பது தான் கோவையில் தற்போது விவாத பொருளாக உள்ளது.

வேலுமணியின் தகிடுதத்தங்களை யாரைக் காட்டிலும் தொண்டாமுத்தூர் மக்கள் நன்கறிவார்கள். ஆகவே, ‘நாடு காப்பாற்றப்பட வேண்டும்’ என்ற நோக்கத்தில் நல்ல முடிவு எடுப்பார்கள் என நம்புவோமாக!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time