தேர்தல் அறிக்கைகளும், உள்ளாட்சி அதிகாரங்களும்!

-எஸ்.நந்தகுமார்

ஒரு நண்பர் எங்களிடம் இப்படிக் கேட்டார். “உள்ளாட்சித் தேர்தலின் போதுதானே உள்ளாட்சிகளுக்கான கோரிக்கைகளை வைக்கவேண்டும்? இப்போது சட்டமன்றத் தேர்தலுக்கு ஏன் வரிந்து கட்டிக்கொண்டு வரிசையாக உள்ளாட்சிக்கான கோரிக்கைகளை வைத்துக் கொண்டே இருக்கிறீர்கள்?” என்று.

தன்னாட்சி, அறப்போர், Institute of Grassroots Governance (IGG), மக்களின்குரல் (Voice of People) மற்றும் தோழன் போன்ற  இயக்கங்கள் வெளியிட்ட உள்ளாட்சிகளுக்கான அதிகாரப்பரவல் தேர்தல் அறிக்கையை,  அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு நேரில் சந்தித்தும், சமூகஊடகங்கள் மூலமாகவும் நாங்கள் தொடர்ந்து கொண்டு சேர்த்து வருவதனால் நண்பர் இப்படிக் கேட்டிருக்கக்கூடும்.

மாநிலஅரசின்பொறுப்பு

உள்ளாட்சி பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளுக்கான அதிகாரங்கள், உள்ளாட்சி நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள், கிராமசபையை வலுப்படுத்துவது, உள்ளாட்சிகளுக்குத் திட்டங்கள் மற்றும் நிதிவழங்குவது உள்ளிட்டவற்றை உள்ளாட்சிகளுக்கு அளிக்கும் அதிகாரம் முழுமையாக மாநிலஅரசிடம்  தான் இருக்கிறது என்பதை நண்பரிடம் விரிவாக விளக்கிய போது புரிந்து கொண்டார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில், கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில், உள்ளாட்சிகளுக்கான கோரிக்கைகள் எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெற்றுள்ளன என்பதை அலசுகிறது இந்தக்கட்டுரை.

மாற்றம் கண்ட மீனங்காடி

மீனங்காடி என்ற கிராம ஊராட்சி கேரளத்தின் வயநாடு பகுதியில் இருக்கிறது. தேசியஅளவில் இக்கிராமஊராட்சி அறியப்பட்டதற்குக் காரணம், புவிவெப்பமயமாதலுக்கு பெரும்அச்சுறுத்தலாக இருக்கும் கரியமிலவாயுவை  வெளியேற்றாமல் முழுவதும் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கும்  சுற்றுச்சூழல் நேச  கிராமமாக அது இருப்பதால் தான் ! (India’s only Carbon Neutral Village Panchayat). சூரிய மின்சக்தி விளக்குகள், பேட்டரி வாகனங்கள், இயற்கைவழி வேளாண்மை எனச் சுற்றுச்சூழல் நேசமுறைகள் மூலம் படிப்படியாக ஊராட்சியில், கரியமிலவாயுவைக் குறைத்து சாதனை படைத்திருக்கிறது, இக் கிராமஊராட்சி.

உலகம்சூடாகிக்கொண்டிருக்கும்போது, உலகநாடுகள் புவிவெப்பமயமாதல் பற்றி மாநாடுகள் போட்டுப் பேசிக் கொண்டிருக்கும் போது அதற்கானத் தீர்வை ஒரு ஊராட்சி சாத்தியப்படுத்தியிருக்கிறது கேரளத்தில்!  1990 முதற்கொண்டு உள்ளாட்சிகளை வளர்த்தெடுக்கக் கேரளத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும்  முயற்சிகளின் பலனாகத்தான் மீனங்காடியைப் பார்க்கிறோம்.

ஊராட்சிகளில் தெருவிளக்கு போடுவதற்குக் கூட ஒப்பந்ததாரரைச் சென்னையில் தேர்வுசெய்து, தமிழகத்தின் கிராம ஊராட்சிகளில் உள்ள  கோடிக்கணக்கான தெருவிளக்குகளுக்கு ஒரேஒரு ஒப்பந்ததாரரைக் கொண்டிருக்கும் மாநிலமாக நாம் சீரழிந்து இருக்கிறோம் என்பதை உணரும் போதுதான்  உள்ளாட்சிகளுக்கான கோரிக்கைகள் எவ்வளவு முக்கியம் என்பது நமக்குப் புரியும்.

உள்ளாட்சிகளில்கவனம்செலுத்தவேண்டும்!

சமூக இயக்கங்கள் ஒன்றிணைந்து வெளியிட்ட உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அறிக்கையின் முகப்பு அட்டையில் இந்த வாசகத்தைப் பார்க்கமுடியும்.

“மத்தியில்கூட்டாட்சி!

மாநிலத்தில்சுயாட்சி!

உள்ளாட்சியில்தன்னாட்சி!”

பேரறிஞர்அண்ணா அவர்கள் மிகத்தீவிரமாக முன்னெடுத்த கோரிக்கையான மாநிலசுயாட்சி கோரிக்கையை இன்றும் உயிர்ப்போடு வைத்திருக்கும் தமிழ்நாடு, கூட்டாட்சி  தத்துவத்தினை வலியுறுத்துவதில் பலமாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் தமிழ்நாடு, இயல்பாகவே உள்ளாட்சிகளில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால்,  நிதர்சனம் வேறாக உள்ளது.

திமுக, அஇஅதிமுக, மதிமுக, மக்கள் நீதி மய்யம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி,  பாஜக உள்ளிட்ட மாநில மற்றும்தேசிய கட்சிகள் வெளியிட்ட 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிக்கைகளில் உள்ளாட்சிகளுக்கான வாக்குறுதிகள் என்ன கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் கொண்டே,  தமிழகத்தில் உள்ளாட்சிகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம்.

உள்ளாட்சிகளின் அதிகாரங்களை  தங்கள் கைகளிலேயே வைத்துக்கொள்ளும்  ‘அரசியல்

கட்சிகளின் உள்ளாட்சி வாக்குறுதிகளைப் பரிசீலிக்கும் போது ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கிராமப்புற உள்ளாட்சிகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளால் மேற்கொள்ளப்படும் அடிப்படை வசதிகளான வீடுகள் கட்டித்தருதல், பொதுச்சுகாதாரம், சாலைவசதி, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், வேளாண் நிலங்கள் மற்றும் வேளாண் உற்பத்தி பெருக்கம் & பாதுகாப்பு, ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களின் நலன் ஆகியவை சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகள் திட்டமிட்டுச் செய்து முடிக்க வேண்டிய பணிகள்.  இப் பணிகளைச் செய்வதற்கு உள்ளாட்சிகளுக்கு அதிகாரம் வழங்கும் சட்டங்களை இயற்றுவது தான் மாநில அரசிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறதே தவிர உள்ளாட்சிகள் செய்யவேண்டிய பணிகளை மாநிலஅரசு தன்னுடையகையில் எடுத்துக்கொள்வதை அல்ல.

ஆனால், தமிழக அரசியல் கட்சிகள் உள்ளாட்சிகளை சுயமாகத் திட்டமிட்டுச் செயல்படும் மூன்றாம் அரசுகளாக வளர்த்தெடுக்க விரும்புவதில்லை. சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள், அரசு பிரதிநிதிகள் ஆகியோரின் கட்டளைக்கு அடிபணியும் இன்னுமோர் அரசு அலுவலகமாகத்தான் உள்ளாட்சிகள் பார்க்கப்படுகின்றன.

பிரதான கட்சிகள் உட்படப் பல கட்சிகள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இந்த மனோபாவம் வெளிப்பட்டுள்ளதைப் பார்க்கமுடிந்தது.

பெயரளவிற்குக் கூட உள்ளாட்சிகளை உள்ளடக்காத அதிமுக

உள்ளாட்சிகள் வசமுள்ள வீடுகள் அமைத்துக் கொடுக்கும் பணிகளைக் கூட அதிமுக விட்டு வைக்கவில்லை. அதை மாநில அரசே செய்யும் என்கிறது அறிக்கை!

மாநிலம் முழுமைக்கும் ஒரேமாதிரியான வீடுகள்கட்ட உத்தரவிடுவது, ஒரே மாதிரியான நிதிஒதுக்கீடு செய்வது எனஅனைத்தும், களத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத கையறுநிலைக்குச் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளைத் தள்ளுகிறது. இது ஒரு உதாரணம் மட்டுமே. இது போலத்தான் பல விஷயங்களில் கட்சிகளின் அணுகுமுறை இருக்கிறது.

அதிமுக தேர்தல் அறிக்கையும் இதற்கு விதி விலக்கல்ல. தாங்கள் வாக்களித்து வெற்றிபெற வைத்த குடியுரிமை திருத்தச்சட்டத்தை தாங்களே திரும்பப் பெற வலியுறுத்துவோம் என்ற நகைப்புக்குரிய வாக்குறுதியைக் கொடுத்த இவர்கள், தங்கள் ஆட்சியில் நடத்தப்படாத உள்ளாட்சித் தேர்தலை நடத்துவோம் என்று பெயரளவிற்கு கூடச் சொல்லவில்லை! அந்த அளவிற்கு உள்ளாட்சிகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கிறது அதிமுக. மொத்தத்தில் அதிமுக தேர்தல்அறிக்கையில் உள்ளாட்சிக்கான வாக்குறுதிகள் பூஜ்ஜியம்.

எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய திமுக தேர்தல் அறிக்கை

2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது  ‘ஊராட்சிசபை’  என்ற பிரச்சாரம், தற்போது ‘கிராமசபை’ எனப் பெயர் வைத்து, பிறகு ‘மக்கள் கிராம சபை’ என ஊர்ஊரக பிரச்சாரம் போன்றவற்றை முன்னெடுத்து இருக்கிறது திமுக என்பதும் உள்ளாட்சித்துறை அமைச்சராகத் திரு.ஸ்டாலின் இருந்திருக்கிறார் என்பதும், திமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ளாட்சிகள் குறித்த வாக்குறுதிகள் நிச்சயம் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால், தேர்தல் அறிக்கையில் ‘முத்தானமுத்துக்கள்’ என்ற முக்கிய வாக்குறுதிகளைப் படிக்கும்போதே தெரிந்துவிட்டது உள்ளாட்சிகளுக்கு திமுக தேர்தல் அறிக்கையில் எந்த இடமும் இல்லை என்று. நடத்தப்படாத உள்ளாட்சித் தேர்தல்கள் பற்றி பத்திரிக்கையாளர் கேட்டபோது “ஏற்கனவே உள்ள உள்ளாட்சிகளை நாங்கள் கலைக்கமாட்டோம், நடத்தப்படாத உள்ளாட்சித் தேர்தல்களை உடனடியாக நடத்தி முடிப்போம்” என்ற வாக்குறுதியினை திமுக தலைவர் வழங்கியது மட்டும்தான் உள்ளாட்சிகளுக்கான வாக்குறுதியாக இருந்தது. மற்றபடி திமுக தேர்தல் அறிக்கையில் உள்ளாட்சிகளுக்கான வாக்குறுதிகள் ஏதுமில்லை.

மாவட்டங்களுக்கான வாக்குறுதிகளில் உள்ளாட்சியின் பங்கு எங்கே?

வேறு எந்த கட்சியும் வெளியிடாத அம்சமாக, மாவட்டங்களுக்கான வாக்குறுதிகள் கொண்ட தேர்தல்அ றிக்கையை திமுக வெளியிட்டிருப்பது உண்மையில் வரவேற்கத்தக்கது. ஆனால், அனைத்து மாவட்டங்களுக்கான கோரிக்கைகள் கொண்ட அந்த தேர்தல்அறிக்கையில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளின் பங்குபற்றி எந்த வழிகாட்டுதலும் இல்லை.

ஆரம்ப சுகாதார நிலையம், பேருந்து நிலையம், உடற் பயிற்சிக் கூடம், பூங்காக்கள் என நீளும் இந்தப் பட்டியலில் சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாவட்டஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம ஊராட்சியின் பங்களிப்பு இல்லாமல் பலபணிகளை முடிப்பது சாத்தியமில்லை. ஆனால், அது பற்றி தேர்தல் அறிக்கையில் எந்தகுறிப்பும் இல்லாமல், அனைத்தும் மாநிலஅரசு செய்து முடிக்கும் என்பது போல்தான் இருக்கிறதே தவிர இவற்றுக்கான பணிகளை நிறைவேற்ற உள்ளாட்சிகளை வலுப் படுத்துவோம், அவர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்துவோம் என்ற பார்வை திமுகவின் தேர்தல் அறிக்கையில்  வெளிப்படவில்லை.

திமுகவின் தேர்தல் அறிக்கையை வாசிக்கும் போது, இந்தியத் துணைக் கண்டத்தின் அதிகாரப்பரவலின் பிதாமகனாகப் பார்க்கப்படும் பேரறிஞர் அண்ணா உருவாக்கிய திமுகவா இது என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மற்றும் இடதுசாரிக்கட்சிகள் உள்ளாட்சிகளுக்கான தங்கள் வாக்குறுதிகளை மிகச் சரியாக வழங்கி இருக்கிறார்கள். எல்லாவற்றையும் விடத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தேர்தல் அறிக்கைதான் இந்த விஷயத்தில் நம்பர் ஒன்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முத்துக்கள்

அனைத்து உள்ளாட்சிகளுக்கும் முறையான அதிகாரங்கள் மீண்டும் வழங்க உரிய நடவடிக்கைகள் மேற் கொள்வது; நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான பொதுச் சட்டத்தினை உடனடியாக உருவாக்குவது; தேர்தல்கள் நடத்தப்படாத அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உடனடியாக தேர்தல் நடத்துவது; நகராட்சிகளில் பகுதிசபை மற்றும் வார்டுகமிட்டி அமைத்தல்; தடையின்றி உரிய நிதிப்பகிர்வு; ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை சமூகங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் பெண் உள்ளாட்சி பிரதிநிதிகளின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதி செய்தல்; உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரம் வழங்கும் சட்டங்களை இயற்றுதல் உள்ளிட்ட வாக்குறுதிகளை வைத்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ‘உள்ளாட்சியில் தன்னாட்சி’ க்கான முயற்சிகள் மேற்கொள்வோம் என வாக்குறுதி வழங்கி இருப்பது மற்ற கட்சிகள் கவனிக்க வேண்டிய ஒன்று.

மாற்றுத்திறனாளிகளுக்குவாய்ப்பளிக்கும்மார்க்சிஸ்ட்!

ஊராட்சி பிரதிநிதிகளுக்கு ஊதியம், கிராமசபைக் கூட்டங்களில் மக்கள் பங்கேற்பை உறுதிப் படுத்துதல், மாநில நிதிநிலை அறிக்கையில் 30 சதவீதம் நிதி உள்ளாட்சிகளுக்கு ஒதுக்குவது, உள்ளாட்சிகளில் மாற்றுத் திறனாளிகளை நியமன உறுப்பினராக்குவது உள்ளிட்ட வரவேற்கத்தக்க வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் போல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மாநில அரசின் நிதியிலிருந்து 30 சதவீதம் வரை உள்ளாட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் உள்ளாட்சியில் ஊழலை ஒழிக்கத் தண்டனை வழங்கும் தன்னாட்சி அதிகாரங்களைக் கொண்ட ‘புகார்விசாரணை’ ஆணையம் ஒன்றும் உருவாக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளது.

மாற்றிப் பேசிய மக்கள் நீதி மய்யம்!

முதலில் கிராமப் புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கென பல முக்கிய வாக்குறுதிகளை வழங்கிய மக்கள் நீதி மய்யம், தனது இறுதி தேர்தல் அறிக்கையில் அனைத்தையும் தலைகீழாக மாற்றிவிட்டது!

உள்ளாட்சிகளுக்கு விரோதமான வாக்குறுதிகளை, அதாவது கிராமப்புற மற்றும் நகர்ப்புற முன்னேற்றத்திற்குப் பெருநிறுவனங்களின் நிதிகளைக் கொண்டு திட்டமிடுவது, நிறுவனங்களின் சமூகப்பொறுப்பு நிதிகொண்டு திட்டப்பணிகளை மேற்கொள்வது என்றெல்லாம் குறிப்பிட்டு இருக்கிறார்கள். பல முறை சுட்டிக்காட்டியும் இதுவரை அந்த தேர்தல் அறிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என்கிற போது, மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கையை உள்ளாட்சிகளுக்கு எதிரான அறிக்கையாகத் தான் பார்க்க வேண்டியுள்ளது.

மற்றபடி, மாநிலங்களுக்கே அதிகாரங்களை வழங்க மறுக்கும் பாஜக, உள்ளாட்சிகளுக்கு மட்டும் அதிகாரங்கள் வழங்குமா என்ன? உள்ளாட்சிகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிப்பது பற்றி பாஜக அறிக்கையில் ஒன்றுமில்லை.

பல மீனங்காடிகள் முளைத்துஎழும்!

இன்று காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட் போன்ற சிலகட்சிகள் உள்ளாட்சி அரசுகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளன. உள்ளாட்சிகளுக்கான கோரிக்கைகள் வலுப்பெறும் போது, வெகுமக்களின் கோரிக்கைகளாக எழும்போது, அவை தாமாகவே அனைத்து கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. உள்ளாட்சி அரசுகள் மூன்றாம் அரசுகளாகப் பார்க்கப்படும் பொதுக் கருத்து வலுப் பெறும்போது, தமிழகத்திலும் பல மீனங்காடிகள் முளைத்து எழும்! அந்தநாள் வெகு தொலைவில் இல்லை!

கட்டுரையாளர்;

எஸ்.நந்தகுமார்; பொதுச்செயலர், தன்னாட்சி

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time