லஞ்சத்தை நம்பும் அரசியல்வாதிகள், ஊழலுக்கு உதவும் அதிகாரிகள் என்பதாக தமிழக அரசு நிர்வாகம் அதகளப்பட்டுள்ளது..அதிகாரமென்பதே பொதுப் பணத்தை சூறையாடக் கிடைத்த லைசென்ஸாக கருதும் மனநிலை சில அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் உள்ளது! அரசியல்வாதிகளுக்கு தோதாக சட்ட, திட்டங்களை வளைத்து சதி செய்து சம்பாதிக்கும் வழிமுறைகளை செய்வதற்கென்றே அதிகாரிகள் கூட்டம் காத்துக் கிடக்கிறது. நெடுஞ்சாலைத் துறையில் நூதனமாக நிகழ்த்தப்பட்டு வரும் ஊழல் சதிகளை விளக்கினால் நெஞ்சே வெடித்துவிடும்..!
2011 முதல் இன்று வரை எடப்பாடி பழனிச்சாமி தான் நெடுஞ்சாலைத்துறையை நிர்வகிக்கிறார்!
‘’மனுக்களைக் காகிதங்களில் எழுதி வாங்கி, பெட்டிகளில் போட்டு பூட்டி வைக்கிறார் ஸ்டாலின்; ஆனால் நான் பொத்தானைத் தட்டினால் மனுவுக்கு நடவடிக்கை கிடைக்கும் அளவிற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறேன்’’ என்று தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிர்வாகத்தில் செயல்பாட்டினை உயர்த்தி இருப்பதாக மார் தட்டுகிறார் முதல்வர் பழனிச்சாமி.
’ஆன்லைன் டெண்டர், ஆன்லைன் டெண்டர்’ என்று வாய் கிழியப் பேசும் எடப்பாடி பழனிசாமி, ‘டெண்டர் திறக்கப்படுவதற்குமுன் எந்தெந்த ஒப்பந்தக்காரர்கள் டெண்டர் போட்டிருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது என்றெல்லாம் முழங்குகிறார்!
ஆனால், தமிழக நெடுஞ்சாலைத்துறையில் நடக்கும் எல்லா டெண்டர்களுக்கும் காகிதச் சான்றிதழ்களையே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்பந்தக்காரர்கள் கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளதே!
வைப்புத் தொகையை அதிகாரிகளிடம் நேரில் வந்து கொடுக்க வேண்டும் என்று டெண்டர் நோட்டிசில் சொல்லப்பட்டிருக்கிறதே!
இவை எல்லாம் எதற்காக? அப்பொழுதுதான் ‘எந்த ஒப்பந்தக்காரரிடமிருந்து அந்தச் சான்றிதழை வாங்கிக் கொள்ள வேண்டும்; எந்த ஒப்பந்தக்காரர் கொண்டு வரும் சான்றிதழை வாங்கக் கூடாது’ என்ற பட்டியலை அதிகாரிகளுக்கு அனுப்பி, அதன் மூலமாக யார் தனக்கு சரியாகப் பங்கினைக் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு டெண்டரைக் கொடுக்க முடியும். இந்தத் திருப்பணியை கடந்த 10 ஆண்டுகளாகத் தொய்வில்லாமல் செய்து, தொடர்ந்து முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிற எடப்பாடி பழனிசாமி ‘ஸ்டாலின் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தவில்லை’ என்று குற்றம் சாட்டுவது நகைப்பிற்கு இடமானது.
ஆன்லைன் டெண்டர் மூலம் தங்கள் எஜமானர் சொல்லும் ஒப்பந்தக்காரருக்கு ஒப்பந்தம் கொடுத்து அந்த ஒப்பந்தக்காரரிடமிருந்து பர்சென்டேஜில் கமிஷன் அடித்துக் கொண்டிருக்கிறார்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள். அரசியல்வாதி கை நீட்டும் ஒப்பந்தக்காரருக்கு ஒப்பந்தத்தைத் தருவதற்கு முன், அரசியல்வாதிகளுக்கும் தங்களுக்கும் மக்கள் பணத்தை முடிந்த அளவில் தாராளமாக ஒதுக்கிக்கொள்ள என்னென்ன முன்னேற்பாடுகளை இந்த அதிகாரிகள் செய்கிறார்கள் என்பதைக் கூறினால், ஆச்சரியத்தில் ஆழ்ந்து போவீர்கள்.
முறைப்படுத்தப்பட்ட ஊழல்; விதிகளை வகுக்கும் அதிகாரிகள்
கடந்த 10 ஆண்டுகளாக, ஊழலும், முறைகேடுகளும் இவ்வாறுதான் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டு மிகச் சரியாக நடைபெற்று வருகிறது. ஊழலை முறைப்படுத்துவதற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் என்னென்ன ஏற்பாடுகள் செய்கிறார்கள் என்பதை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
பணிகளை ஒப்பந்தம் விடுகிற முறை மோசம் என்றால்,
பணிகளை தேர்ந்தெடுக்கும் முறை அதைவிட மோசமானது.பணியின் தரமோ படுமோசமானது!
ஒரு மழைக்கே பொளபொளத்துப் போகும் சாலைகளும் உண்டு! வெகு சீக்கிரம் பிளந்து, சிதைந்து, குற்றுயிரும், குலையுருமாகிப் போகும் சாலைகளும் உண்டு! இதனால், விபத்துகளும், உயிரிழப்புகளும் நடக்கின்றன.
# எல்லா எம்.எல்.ஏ-க்களுக்கும் கமிஷன் தொகை சேர வேண்டும் என்பதற்காக, அவசியமோ இல்லையோ எல்லா சட்டமன்றத் தொகுதிகளிலும் வேலைகள் இருப்பதாக அதிகாரிகள் பட்டியலிடுவார்கள். இதனால்தான் எப்போதும் நெடுஞ்சாலைத்துறை நிதி ஒதுக்கீடு தொகுதி வாரியாக 234 தொகுதிகளுக்கும் பிரித்து கொடுக்கப்படுகிறது.
# அந்த வேலைகள் அவசியமாக, அதுவும் அவசரமாக நடைபெற வேண்டும் என்பதற்காக போக்குவரத்து இல்லாத சாலைகளில் போக்குவரத்து அதிகமாக இருக்கிறது என்றும் மண்ணின் தன்மை மோசமாக இருக்கிறது என்றும் பொய்யாக சான்றிதழ் வழங்கி மதிப்பீடு தயாரிப்பார்கள். சில லட்சங்களில் முடிய வேண்டிய பணிகள் கூட, பல கோடிகளுக்கு கூட்டி காட்டப்படுவது இப்படித்தான்.
# சாலை பணிகளுக்கான மதிப்பீட்டில் தேவை இருக்கிறதோ இல்லையோ, ஒப்பந்தக்காரருக்கு லாபம் தரும் இனங்களைச் சேர்த்து மதிப்பீட்டு தொகையை அதிகப்படுத்துவார்கள்
# அரசிடமிருந்து நிதியைப் பெற்றால்தான் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து தாங்களும் பெருமளவில் கமிஷன் பார்க்கமுடியும் என்பதற்காக போக்குவரத்தே இல்லாத சாலைகளை வலுப்படுத்துதல், இரு வழிச் சாலைகளை நான்கு வழி சாலைகளாக அகலப்படுத்துதல் போன்ற சாலை வேலைகளுக்கும், போக்குவரத்தே இல்லாத பாலங்களுக்கும் (உதாரணம்: கோவை காந்திபுரம் முதல் அடுக்கு மேம்பாலம், மதுரை காளவாசல் மேம்பாலம்) நிதி பெற்று தேவையற்ற வேலைகளை முடிப்பார்கள்.
# பல சாலை பணிகளையும் ஒன்று சேர்த்து பேக்கேஜ் என்ற முறையில் தொகுத்து பெரிய ஒப்பந்தக்காரர்களுக்கு மட்டுமே வேலைகள் என்பதை உறுதிசெய்து, அந்தப் பெரிய ஒப்பந்தக்காரர்கள் சிண்டிகேட் அமையுமாறு பார்த்துக் கொள்வார்கள், தலைமைப் பொறியாளர்கள். பல பணிகளை ஒன்று சேர்த்து தொகுப்பதன் மூலம் சிறியதாகவோ, பெரியதாகவோ தாங்கள் விரும்புகிற வகையில் அந்த சாலைகள் தொகுப்பினை பேக்கேஜ் அமைப்பார்கள். ஒவ்வொரு ஒப்பந்தக்காரருக்கும் இருக்கும் ஒப்பந்தம் எடுப்பதற்கு இருக்கிற தகுதியைப் பொறுத்து, அந்த பேக்கேஜிங் அளவை மாற்றுவார்கள். தாங்கள் விரும்புகிறவர்கள் வேலைகளை எடுக்கிற வகையில் ஒப்பந்தத்தை நடத்துவதற்காக தலைமைப் பொறியாளர்கள், கண்காணிப்புப் பொறியாளர்கள், கோட்டப் பொறியாளர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து மொத்தமாக விதிகளை வளைப்பார்கள்
# ஒப்பந்தங்கள் ஆன்லைன் மூலமாக நேர்மையாக நடக்கின்றன என்று சொல்லிக்கொண்டே, அந்தச் சான்றிதழ் இந்தச் சான்றிதழ் என்று அதிகாரிகளைப் பார்த்து வாங்கி வரச்சொல்லி, யார் அதிகமாகப் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே டெண்டர் என்பதை கண்காணிப்புப் பொறியாளர்கள் உறுதி செய்வார்கள்!
# ஒரு மாவட்டத்திற்கு இரண்டு அல்லது மூன்று பெரிய ஒப்பந்தக்காரர்கள் மட்டுமே பணிகளை எடுக்க வழி வகுத்து, அவர்களிடம் பேரம் பேசுவதை எளிதாக்குவார்கள். ஒப்பந்தக்காரர்கள் எண்ணிக்கை குறைந்து போன காரணத்தால் போட்டியாளர்கள் தங்களுக்கிடையே பேசி அவருக்கு இந்த வேலை, இவருக்கு இந்த வேலை என்று முடிவு செய்துகொள்வதன் மூலமாக அரசுக்குக் கிடைக்க வேண்டிய லாபம் அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்கள் என்ற வகையில் மூன்று பிரிவாகப் பிரித்துக்கொள்வார்கள்!
# ஒப்பந்தப் புள்ளிகளை ஒவ்வொரு பணிக்கும் இரு ஒப்பந்தக்காரர்கள் மட்டுமே தருவதற்கும், அந்த இருவரில் ஒருவரான மேலிடம் சொன்ன ஒப்பந்தக்காரர் மதிப்பீட்டுப் பணியை 0.01% குறைத்து முடித்துத் தருவதாக ஒப்பந்தம் கோருவதற்கும் இன்னொருவர் மதிப்பீட்டை விடக் கொஞ்சம் அதிகமாக விலைப்புள்ளி தருவதற்கும் இந்த கண்காணிப்புப் பொறியாளர்கள் ஏற்பாடு செய்வார்கள்.
# டெண்டர்கள் போடும்போது பொய்யான ஆவணங்களை இணைக்கிற ஒப்பந்தக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், வழக்கையும் சரியாக நடத்தாமல், அவர்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வருவது போன்று கோப்புகளை கண்காணிப்புப் பொறியாளர்கள் தயாரிப்பார்கள்!
# ஒப்பந்தப் பணிகளுக்கு தொழில்நுட்ப உதவியாளர்கள் பலரை நியமித்ததாக கணக்கு காட்டி ஒப்பந்தக்காரர் கூடுதலாக பில் தொகை பெறுவதற்கு அதிகாரிகள் பொய் சான்றிதழ் வழங்குவார்கள் !
# பணிகள் நடைபெறுகிற வேலை தளங்களுக்கு ஆய்வுக்குச் செல்கிற தலைமைப் பொறியாளர்கள் எவ்வளவு மோசமாக பணிகள் நடைபெற்றாலும், கலவையின் கனத்தைக் குறைத்து சாலைகள் போடப்பட்டாலும், அரசியல்வாதிகளுக்கு வேண்டப்பட்ட ஒப்பந்தக்காரர்கள் என்பதால் பேசாமல் வந்து ஊழலை ஊக்குவிப்பார்கள்
# பணிகள் முடிந்த பிறகு, சந்தையில் பொருள்களின் விலை கூடியிருந்தாலும், குறைந்திருந்தாலும் ஒப்பந்தக்காரருக்கு எது சாதகமாக இருக்குமோ அதற்கேற்றவாறு பில் தயாரித்து, பல கோடி அரசு பணத்தை ஒப்பந்தகாரர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் அவலத்தை கோட்டப் பொறியாளர்கள் அரங்கேற்றுவார்கள்
# சாலை பராமரிப்புக்கு என்று ஒதுக்கப்படும் பணத்தையெல்லாம் ஒரு டெண்டரும் இல்லாமல் நினைத்தவர் பெயரில் பில் தயாரித்து, எல்லோருமாக பிரித்து எடுத்துக் கொள்கிற பொல்லாத வேலையை கண்காணிப்புப் பொறியாளர்களும், கோட்டப் பொறியாளர்களும் செய்வார்கள்!
# சிறிய ஒப்பந்தங்கள் கோட்டம் அளவில் கோரப்படும். கோட்ட அளவில் ஒப்பந்தங்கள் கோரும் நடைமுறை எதற்காகவென்றால், அவசரமாகச் செய்ய வேண்டிய சிறிய பணிகளை சிறிய ஒப்பந்தக்காரர்கள் வைத்துச் செய்து முடிப்பதற்காகத்தான். இப்படி ஒரு ஏற்பாடு இருப்பதால் அதைப் பயன்படுத்தி, பல நூறு கோடி மதிப்புள்ள பணிகள் 10 லட்சம், 10 லட்சம் ஆகப் பிரிக்கப்பட்டு, கோட்டம் அளவில் ஒப்பந்தங்கள் கோரப்பட்டு யாருக்கும் தெரியாமல் வேண்டியவர்களுக்கு மட்டும் ஒப்பந்தம் வழங்கப்பட்டு, அனைவரும் பங்கு பிரித்துக் கொள்வார்கள்.
10 ஆண்டுகளில் சத்தமில்லாமல் 30,000 கோடி ரூபாய் கொள்ளை!
தோராயமாக ரூபாய் 10 ஆயிரம் கோடிக்கு நெடுஞ்சாலைத்துறையில் ஆண்டுதோறும் டெண்டர்கள் நடக்கின்றன. அந்த காலத்தில் எல்லாம் தயங்கித் தயங்கி 10% கமிஷன் பெற்றார்கள். அதிமுக ஆட்சியாளர்கள் அதை 30% ஆக்கிவிட்டார்கள். அதிகாரிகள்தொடங்கி அரசியல்வாதிகளில் பல தளத்திலும் இவை பகிரப்படுகின்றது! இவ்வாறாக, ஆண்டிற்கு 3,000 கோடி பொதுப் பணத்தை சூறையாடுகிறார்கள்!. 10 ஆண்டுகளில் மொத்தம், 30,000 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு கொள்ளையடிக்கப்பட்ட பணிகளின் தரமோ படு மோசமாக உள்ளது. அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கொள்ளையடித்த 30 ஆயிரம் கோடியில் அரசு பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்தி இருக்கலாம்! நாட்டிற்கும்,வீட்டிற்கும் கேடு செய்யும் டாஸ்மாக்கையே மூடிவிடலாம்.
கொள்ளையடித்த பணத்தில் தேர்தல் திருவிழா
அரசியல்வாதிகளுக்கு எங்கிருந்து வருகிறது பணம் என்று மக்கள் சிந்திக்க வேண்டும். இந்தக் கட்சி என்று இல்லை; எல்லா கட்சிகளும் கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைக்கின்றன….. எந்த நம்பிக்கையில்? ஆட்சிக்கு வந்து விட்டால் அதிகாரிகள் நம் பேச்சைக் கேட்டு நாம் சொல்பவர்களுக்கு டெண்டர்கள் கொடுப்பார்கள். அவர்களிடம் இன்னும் பல மடங்கு பணத்தைப் பெற்று இப்பொழுது செலவழித்ததைத் திரும்பச் சம்பாதித்து விடலாம் என்கிற நம்பிக்கைதானே! இப்படி கொள்ளையடித்ததையும்,இனி கொள்ளையடிக்க போவதையும் கொண்டே தற்பொழுது தேர்தல் நேரத்தில் அள்ளி இறைத்துக் கொண்டிருக்கிறார்கள். கலர் கலராக போஸ்டர்களும்,பேனர்களும், கட் அவுட்களும் ,நோட்டீஸ்களும், கூட்டங்களும் இன்னும் எத்தனையோ ஆடம்பரங்களும் தினமும் நடந்து கொண்டிருக்கின்றன. வாக்காளர்களுக்கு பணம் தந்து வளைக்கிறார்கள்! கட்சிக்காரனுக்கு குவார்ட்டரும், பிரியாணியும் தருகிறார்கள். ஆயினும், இப்படி சுருட்டிய பணத்தின் ஒரு சிறு பகுதியைத்தான் இப்படி செலவழிக்கிறார்கள்! இந்தச் சூழ்நிலை பாராளுமன்ற ஜனநாயகத்தின் மூன்று அங்கங்களில் ஒன்றான நிர்வாகம் என்ற பிரிவு மிகவும் பலவீனமாக போய்விட்டது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
Also read
கொள்ளையர்களை விரட்டுவோம்!
அரசியல்வாதிகள் லஞ்சத்தை நம்பியே அரசியலுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு வேண்டிய எல்லா உதவிகளும் செய்வதற்கு அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். இந்தக் கூட்டணிதான் இந்த நாட்டை பின்னுக்கு இழுத்துக் கொண்டிருக்கிறது. இந்தக் கூட்டணி வென்றுவிடாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு பொதுமக்களுக்கு இருக்கிறது. நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதிபடுத்த கடும் நிர்வாக ஒழுக்க விதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். பொதுப் பணத்தை தொடுவதற்கு நாணப்படும் அரசியல்,சமூக கலாச்சாரம் வளர்த்தெடுக்கபட வேண்டும்.
நெடுஞ்சாலை என்ற வார்த்தைக்காக நெஞ்சைப்பிளக்கும்…என்று youtube channel தலைப்பே
சொல்லுது இந்தக் கட்டுரையாளரின் மெச்சூரிட்டி பற்றி….
காலம் காலமாய் எல்லா ஆட்சியிலும் இது தொடர் நிகழ்வாய் நிகழ்வதுதான்..இவ்ளோ புள்ளி வெவரம் பெர்சண்டேஜ்..என்று எவ்ளோ மெனக்கடல்….அருமையான கட்டுரை…
ஆனால்….என்னடா எலி அம்மணமாய் ஓடுதேன்னு நெனைச்சேன்…
//இந்தக் கூட்டணிதான் இந்த நாட்டை பின்னுக்கு இழுத்துக் கொண்டிருக்கிறது. இந்தக் கூட்டணி வென்றுவிடாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு பொதுமக்களுக்கு இருக்கிறது. //
கடைசியாய் கொண்டையை மறைக்க மறந்த வரிகளால் உங்கள் அறத்தின் அஜெண்டா நிறைவேறியது கண்டு மகிழ்ச்சி….- மறக்காம பில்ல போட்டு காச வாங்கிடுங்க பாஸ்….எலக்ஷன் நேரம்!
அருமையான அறிவார்ந்த அலசல்.தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை ஊழலை மிகத்தெளிவாக ஆராய்ந்து அனைத்து மட்டங்களிலும் ஊடுருவி துணிச்சலுடன் அம்பலப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.அன்று வெளிநாட்டினர் நம் செல்வங்களையும் நம் மக்களின் உழைப்பினால் உண்டாக்கிய உற்பத்தியை சூரையாடி அடிமை படுத்தினர்.இன்றோ இதை விட மோசமான அவலம் அதிகாரிகளின் துணையுடன் நாம் நம்பி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் பச்சை துரோகம் செய்து மக்களது வரிப்பணத்தை கொள்ளை அடிப்பது கொடுமையிலும் கொடுமை.இத்திருட்டை ஒழிக்கவே முடியாது போலும்.நமக்கெல்லாம் சீனா போன்ற கம்யூனிஸ்ட் ஆட்சி முறையும்
ஊழலில் ஈடுபட்டவனுக்கு உரிய மரணதண்டனை தான் சரி.
ADMK & DMK both is following SAME.
If you desire to get much from this article then you have to apply these strategies to your won website.