ஆம் ஆத்மியை அழிக்கத் துடிக்கிறதா பாஜக அரசு…?

-சாவித்திரி கண்ணன்

ஏற்கனவே மிகக் குறைந்த அதிகாரங்களோடு இயங்கியதே டெல்லி அரசு! அந்த குறைந்தபட்ச அதிகாரத்தையும் இல்லாமலாக்க ஒரு மசோதா! தொடர்ந்து, மத்திய அரசுக்கான அதிகாரங்களை அதிகப்படுத்திக் கொண்டும், மாநில அரசு அதிகாரங்களை குறைத்தும் வருகிற பாஜக அரசின் மூர்க்கத்தனத்திற்கு இது சிறந்த உதாரணம். உண்மையில் இது ஆம் ஆத்மி மீது மட்டும் தொடுக்கப்பட்ட தாக்குதலல்ல! ஜனநாயகத்தின் மீதும், கூட்டாட்சி தத்துவத்தின் மீதும் நடக்கும் தொடர் தாக்குதல்! இதை எப்படி எதிர் கொள்ளப் போகிறோம்…?

பாஜகவின் அனைத்து தந்திரோபாயங்களையும் மீறி கவிழ்க்கவோ, மிரட்டவோ வாய்ப்பில்லாமல் ஒரு நேர்மையான ஆட்சியை இந்திய தலைநகரில் தந்து கொண்டிருப்பது அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லியின் ஆம் ஆத்மி அரசாங்கமாகும். இரண்டு சட்டமன்ற தேர்தல்களிலும் அசுரத்தனமான மக்கள் ஆதரவுடன் ஆம் ஆத்மியையே மக்கள் தேர்ந்தெடுத்தனர். 2015 ல் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 ஐ வென்றதென்றால், 2020 தேர்தலிலோ 62 இடங்களை கைப்பற்றியது. மத்தியில் ஆட்சி செய்தும் பாஜகாவால் ஒற்றை இலக்கத்திலேயே வெற்றி பெற முடிந்தது.

ஊழலை பெருமளவு ஒழித்தது. எளிய மக்களின் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றியது. அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளை மிஞ்சிய தரமான கல்வியையும், அரசு மருத்துவமனைகளில் தரமான சூழலையும்,சிறப்பான சிகிச்சைகளையும் உறுதிபடுத்தியது, குடிநீரை தட்டுபாடின்றி வழங்கியது, மின்கட்டணத்தை நியாயமாக வசுலித்தது..ஆகியவற்றில் ஆம் ஆத்மியின் சேவை மிகவும் பிடித்துப் போனதால், பாஜக ஆதரவாளர்களே மாநில ஆட்சிக்கு ஆம் ஆத்மியின் சேவையை இழக்கக் கூடாது என நினைக்கும் போக்கு உள்ளது!

இத்தனைக்கும் காவல்துறை அதிகாரம் டெல்லி அரசுக்கு கிடையாது. நீதிமன்ற அதிகாரமும் கிடையாது. நிலத்தின் மீதான அதிகாரமும் கிடையாது. உயர்பதவி வகிக்கும் அதிகாரிகளை தன்னிச்சையாக நியமனம் செய்யவோ, மாற்றவோ கூட அதிகாரமில்லை. இவையெல்லாம் மத்திய அரசுக்கே உள்ளது. அத்துடன், மற்ற செயல்பாடுகளுக்கும் கூட துணைநிலை ஆளுனரின் இசைவு தேவை என்ற கிடுக்கிப்பிடி வேறு. இதனால் சில நேரங்களில் கேஜ்ரிவால் ரோட்டில் இறங்கி போராடிய சம்பவங்களும் கூட நிகழ்ந்தன. இவ்வளவையும் கடந்து ஒரு நல்லாட்சி தரும் ஆம் ஆத்மி அரசை சகித்துக் கொள்ள மனமில்லாமல் நீதிமன்றத்தின் துணையுடன் மத்திய அரசு தற்போது ஒரு சட்டம் இயற்றி டெல்லி அரசை முற்றிலுமாக முடக்கியுள்ளது!

முன்னதாக, இப்படியாக ஆம் ஆத்மி அரசை முடக்கும் நீதிமன்றத் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வால் வழங்கப்பட்டிருந்தது என்பது கவனத்திற்கு உரியது.

இந்த சட்டத்தின் பெயர் டெல்லி அரசு தேசியத் தலைநகர் பிரதேச திருத்த மசோதா- 2021 என்பதாகும்.

உச்ச நீதிமன்றம் வகுத்தளித்த அரசியல் சாசன முறைப்படியான நிர்வாகத்தை கருத்தில் கொண்டு இந்த மசோதா மேலும் மாநில அரசின் பொறுப்புகளுக்கு விளக்கம் அளிப்பதாக மத்திய அரசு இந்த மசோதா குறித்து தெரிவித்துள்ளது.

இதன்படி, டெல்லி என்பது மாநிலம் அல்ல. எனவே மாநில அரசுக்கு சொந்தமான அதிகாரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட யூனியன் பிரதேசத்திற்கும் இருக்குமென்ற யூகமே தவறு.  டெல்லி என்ற தேசிய தலைநகரம் நடப்பு அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் ஓர் மாநிலத்தின் அந்தஸ்த்தை பெற  ஒருபோதும் வழியில்லை. டெல்லி அரசாங்கம் என்பதன் பொருள் துணைநிலை ஆளுநர் என்பவர் தானேயன்றி, மக்கள் தேர்ந்தெடுத்த அரசல்ல. என மசோதா தெளிவாகக் கூறிவிட்டது.

#  காவல்துறை, பொது ஒழுங்கு மற்றும் நிலம் போன்றவையின் அதிகாரங்கள் பிரத்யேகமாக மத்திய அரசுக்கு மட்டுமே உரியது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு இந்த அதிகாரங்களை செயல்படுத்துவதில் எந்த பங்குமில்லை.

#  மாநில மற்றும் அதனை ஒத்துள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள அதிகாரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசால் செயல்படுத்தப்படும். ஆயினும், மத்திய அரசுக்கு (சட்டபிரிவு 239 AA (3)(b) யின் கீழ் சட்டபிரிவு 246(4) சமமாக கருதப்படுகிறது) ஆயினும், தேசிய தலைநகர பிரதேசத்தின் அனைத்து தளங்களிலும் சட்டப்பூர்வமான அதிகாரம் மத்திய அரசிடம் இருக்கும்.

#  இந்த அதிகாரங்கள் தொடர்பான நிர்வாகம் மற்றும் சட்டபூர்வ அதிகாரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசிடம் இருக்கும். அதே வேளையில் இது தொடர்பான அதிகாரத்தை மத்திய அரசும் கொண்டிருக்கும்.தேவைப்பட்டால், மாநில அரசின் அதிகாரங்களை மத்திய அரசு ரத்து செய்ய்யலாம்.

#   எந்த ஒரு அதிகாரத்தையும் பயன்படுத்துவது அல்லது செயல்படுத்துவது பற்றி துணைநிலை ஆளுநருக்கு தெரிவிக்க வேண்டியது டெல்லி அரசின் கடமை.

#  துணைநிலை ஆளுநருக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு ஏற்பட்டால் மத்திய அரசு பஞ்சாயத்து செய்யும். மத்திய அரசின் அதிகாரமே மேலோங்கியதாகும். தேசிய தலைநகரின் நலனில் தேர்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு முக்கியத்துவம் வழங்கும் அதே வேளையில் மத்திய அரசே முதன்மை பெறும்.

ஆக, சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்த புதிய மசோதா மூலம் டெல்லி அரசின் அன்றாட நிகழ்வுகள், முடிவுகள், செயல்திட்டம்..என எது ஒன்றை டெல்லி மாநில அரசு முன்னெடுத்தாலும் துணை நிலை ஆளுநரின் அனுமதி பெறாமல் செய்ய முடியாது.

“இந்த மசோதா டெல்லி மக்களை அவமதிக்கும் செயல். மக்கள் யாருக்கு வாக்களித்தார்களோ அவர்களிடமிருந்து அதிகாரத்தைப் பறிக்கும் திட்டமிட்ட சதியே இந்த மசோதா. மக்களால் தோற்கடிக்கப்பட்ட பாஜக மக்களை ஏமாற்றுகிறது” என்று கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார்.

ஆகவே, டெல்லி மக்கள் மீதான மாபெரும் அவமதிப்பு என்று கெஜ்ரிவால் இதனை விமர்சித்துள்ளார். ஆனால், ஒட்டுமொத்த ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி தத்துவத்திற்க்கான மாபெரும் அவமானம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்!

டெல்லி மக்களின் நம்பிக்கையை இழந்த பாஜக அரசு கொல்லைப்புறம் வழியாக டெல்லி மாநில அதிகாரங்களைப் பறிக்கப்பார்க்கிறது, இது டெல்லி மக்களை ஏமாற்றும் செயல் என்று கெஜ்ரிவால் காட்டமாக விமர்சித்துள்ளார். ஏற்கனவே பாண்டிச்சேரி காங்கிரஸ் அரசை இவர்கள் பாடாய்படுத்தியதை நாம் அறிவோம். இது ஏதோ ஆம் ஆத்மியின் மீதான அழித்தொழிப்பு முயற்சி மட்டுமல்ல. உண்மையில் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் இந்த மசோதா ஒரு எச்சரிக்கை மணி தான்!

ஜனநாயகத்திலும், ஒருங்கிணைந்த கூட்டாட்சி தத்துவத்திலும் முற்றிலும் நம்பிக்கையற்ற மூர்க்கத்தனமானவர்களின் கையில் இந்தியாவின் அதிகாரம் சிக்கியுள்ளது என்பதற்கு இந்த சட்டத்தை விட சிறந்த உதாரணம் இருக்கமுடியாது. ஆக, இந்தியாவின் அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றுபட வேண்டிய தருணம் வந்துவிட்டது. மக்களவையில் நிறைவேறிய இந்த மசோதாவை மாநிலங்களவையில் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு தடுக்க வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time