இபிஎஸ், ஒபிஎஸ் யார் கை ஓங்கும்?

சாவித்திரி கண்ணன்

ஒரு கட்சிக்குள் இரு தலைவர்கள்!

இருவருமே ஒருவரை ஒருவர் காலி பண்ணத் துடிக்கிறார்கள்!

இருவருக்குமே கட்சி மீதும் அக்கரையில்லை! ஆட்சி நிர்வாகத்திலும் அக்கரையில்லை!

இருவருமே பாஜகவின் பதந்தாங்கிகள்! இருவருமே தலைவனுக்குள்ள எந்தப் பண்பு நலனும்,தலைமை குணமும் அறவே இல்லாதவர்கள்

இருவருக்குமே சுய அடையாளம் கிடையாது!

இருவருமே பொதுச் சொத்தை சூறையாடுவதில் மன்னர்கள்! இருவருமே சுயநலத்தின் உச்சம்!

இருவருமே சசிகலா வந்தால் சரணாகதி அடையக் காத்திருப்பவர்கள்!

ஆட்சி அதிகாரம் மட்டுமே இருவரையும் இணைத்துள்ளது! அத்துடன் பாஜகவின் நிர்பந்தத்தால் மட்டுமே இவர்கள் இணைப்பு இறுக்கி பிடித்து காப்பாற்றப்பட்டு வருகிறது! திமுகவை தடுக்க பாஜகவிற்கு கிடைத்த கருவி தான் அதிமுக!

பொதுமேடைகளில் பேசுவதில் ஓபிஎஸ் கொஞ்சம் பரவாயில்லை! சுயமாக பேச முடிந்தவர். எடப்பாடி எழுதி கொடுத்ததைக் கூட சரியாக படிக்க முடியாதவர்!

ஆனால்,ஆட்களை பணத்தால் வளைத்துப் போடுவதில் இபிஎஸ் கில்லாடி!ஆட்சி அதிகார பலத்தில் தனக்கான செல்வாக்கை அதிகப்படுத்துவதோடு ஓபிஎஸ்சை டம்மியாக்குவதில் குறியாகவுள்ளார்.

அந்த வகையில் பன்னீர்செல்வத்தின் பல ஆதரவாளர்களைக் கூட தன்பக்கம் ஈர்த்துள்ளார்! அவ்வளவு ஏன்? திமுகவில் கூட தனக்கு சாதகமான ஆட்களை வைத்திருப்பவர் தான் எடப்பாடி!

கட்சி பொறுப்பில் ஓபிஎஸ் எடப்பாடியை விட ஒருபடி மேலாக உள்ளார் என்றாலும் கூட ஓபிஎஸ் தன்னிச்சையாக சிறிதளவு கூட செயல்படமுடியாதவாறு எடப்பாடி செக் வைத்துள்ளார்.

கொட நாடு கொலை வழக்கில் சம்மந்தப்பட்டவர் இபிஎஸ்! அதில் இவரை அழகாக உள்ளே தள்ளமுடியும்! அது பாஜக கைகளில் ஒரு துருப்பு சீட்டாகவுள்ளது. மேலும் அதிக சொத்து சேர்த்த விவகாரத்திலும் சம்மந்தப்பட்டவர் இபிஎஸ்!

இபிஎஸ்சுக்கு கொங்கு மண்டலத்தின் வசதிமிக்க கவுண்டர்கள் உறு துணையாக உள்ளனர்.அந்த லாபி மிகவும் சக்தி வாய்ந்தது. இதற்கும் மேலாக தென்மாவட்ட முக்குலத்தோரையும் வளைத்துப் போட பார்க்கிறார்.

ஓபிஎஸ்சுக்கு அந்த அளவுக்கு லாபி செய்ய ஆளிருப்பதாகத் தெரியவில்லை! ஆயினும் தென் மாவட்டங்களில் சற்று அதரவு உண்டு!முக்குலத்தோர் மத்தியில் செல்வாக்குண்டு! ஆனால்,சசிகலா வெளியில் வந்தால் என்னாகும் என்று தெரியவில்லை! இருவராலும் சசிகலாவை விரும்பவும் முடியவில்லை, தவிர்க்கவும் முடியவில்லை!

அதிமுகவின் தற்போதைய ஆட்சியில் இல்வசதிட்ட அறிவிப்புகளுக்கு மேலாக எந்த உருப்படியான மக்கள் நலன்,விவசாயிகள் நலன்,வியாபாரிகள் நலன்,தொழிலாளர் நலன் என்ற எதிலும் அக்கரை காட்டி தங்கள் ஆதரவை இவர்கள் வளர்த்துக் கொள்ளவில்லை!

குறிப்பாக மத்திய அரசு கொண்டு வந்த தீய நோக்கமுள்ள கல்விக் கொள்கையை எதிர்க்கவில்லை! சுற்றுச்சூழல் மசோதாவை எதிர்க்கவில்லை.தமிழகத்தின் மத்திய அரசு பணியிடங்களில் எல்லாம் வட நாட்டாரைக் கொண்டு வந்து நிரப்பியபோது எதிர்க்கவில்லை.மத்திய அரசின் குடியுரிமை திருத்தமசோதாவை எதிர்க்கவில்லை.சிறுபானமை சமூகத்தவரை இரணாடாம் தரகுடிமக்களாக மாற்றும் கொடுமைகளையோ, மத திவிரவாத்தையோ ஒரு சிறிதும் எதிர்க்கவில்லை.அதிமுகவை ஹெச்.ராஜாவோ,எஸ்வி.சேகரோ ஏளனமாக பேசினால் கூட எதிர்க்கத் துணியவில்லை.இதெல்லாம் சொந்த கட்சிகாரர்களிடமே இவர்கள் மரியாதை பறிபோக வைத்துவிட்டது.

ஆட்சி அதிகாரமின்றி அதிமுகவை ஆறு மாதம் கூட இருவராலும் கொண்டு செலுத்த முடியாது. ஆட்சி காலம் முடிந்ததும் ஒரு ஆறுமாதகாலம் தமிழகத்தில் கவர்னர் ஆட்சி நடக்கும் என்ற நிலை வந்தால்,அதிமுகவிற்குள் என்ன நடக்கும் என யாராலும் யூகம் செய்ய முடியாது!

ஆக,அதிமுகவிற்கு அதை தாங்கி கொண்டு செலுத்தக் கூடிய வலிமையான ஒரு தலைவர் இல்லை!

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time